நித்யகல்யாணி
“தாத்தா..தாத்தா எங்கே இருக்கீங்க “என்றபடி வீட்டுக்குள் ஓடி வந்தாள் கல்யாணி. ஸ்ரீவாரி அபார்ட்மெண்டில் இருக்கும் குட்டி சுட்டிகள் எல்லாம் இன்னும் வெளியில் ஆரவாரமாக விளையாடிக் கொண்டிருந்தன.
“ என்னடா கல்யாணி.. இங்கே பால்கனியில் இருக்கேன். இங்கவாடா குட்டி “ என்றார் நித்யானந்தன். ஓடிப்போய் ஈஸிசேரில் சாய்ந்திருந்த தாத்தாவின் கையைப் பிடித்து இழுத்தாள் கல்யாணி. வங்கி ஒன்றில் தணிக்கையாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருந்த நித்யானந்தனுக்கு வயது எழுபது.
”டிவியில் சுதந்திர தின அணிவகுப்பு வருது தாத்தா பார்க்கலாம் வாங்க.”. டிவியில் அணிவகுப்பு சோஷியல் டிஸ்டன்ஸிங் படி நடந்து கொண்டிருந்தது. ”லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் என மார்ச் ஃபாஸ்ட் பழகியபடி தாத்தாவின் கைபிடித்து ஹாலுக்கு அழைத்து வந்தாள்.
மாஸ்க் அணிந்த வீரர்களின் அணிவகுப்பைப் பார்த்த தாத்தா “வருஷாவருஷம் உங்க ஸ்கூல் மார்ச் ஃபாஸ்ட்ல, கலை நிகழ்ச்சிகள்ல எல்லாம் கலந்துப்பே. இந்த வருஷம் கொரோனா வந்து கெடுத்துருச்சு “ என்றார் பேத்தியின் தலையை வாஞ்சையாகத் தடவியபடி.