எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 23 நவம்பர், 2022

அகந்தையால் தோற்ற அர்ஜுனனும் அனுமனும்

 அகந்தையால் தோற்ற அர்ஜுனனும் அனுமனும்


சிலர் தன்னால்தான் எல்லாம் நிகழ்கிறது என்றோ தன்னால் மட்டும்தான் ஒரு காரியத்தைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்றோ தலைக்கனத்தோடு நினைத்துக் கொள்வார்கள். நடப்பதெல்லாம் கடவுளின் துணையால் என்பது உணராமல் எங்கும் தான் எதிலும் தான் என அகந்தை கொண்டதால் அர்ஜுனனும் அனுமனும் தோற்றுப் போனார்கள். அது என்ன கதை என்று பார்ப்போம் குழந்தைகளே.


பாசுபதாஸ்திரம் பெறவேண்டி அர்ஜுனன் சிவபெருமானை வணங்குவதற்காக ராமேஸ்வரம் வந்தான். அங்கே கடலில் நீராடி அதன் பின் வணங்க எண்ணினான். ஆனால் அவன் செல்லும் பாதையின் குறுக்கே அனுமன் தவம் செய்து கொண்டிருந்தார். அவர் யாரென்று அறியாத அர்ஜுனன் அவரைச் சாதாரணக் குரங்கு என்று எண்ணித் துரத்தினான்.

“நான் இங்கே தவம் செய்ய எண்ணுகிறேன். நீ யார்? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” எனக் கேட்டான். அனுமன் “இந்தக் கடலில் கற்களால் பாலம் அமைத்து இலங்கை சென்று இராவணனை வென்ற கோதண்ட ராமரின் தாசன் நான். என் பெயர் அனுமன்” என்றார்.

“கோதண்ட ராமன் தன் வில் வித்தையால் ஏன் பாலம் அமைக்கவில்லை. உம்மைப் போன்றவர்களைக் கொண்டு ஏன் பாலம் அமைத்துச் சென்றார்? நானாக இருந்தால் வில்லிலேயே பாலம் அமைத்திருப்பேன்” என்று தற்பெருமையாகச் சொன்னான்.

“வில்லிலேயே பாலமா? அத்தனை சேனையும் செல்வதற்கு அது தாக்குப் பிடிக்காது என்பதால்தான் கல்லிலே பாலம் கட்டினோம். எங்கே நீ வில்லில் பாலம் அமைத்துக் காண்பி”” என்றார்.


“வில்லாளி என்றால் சகல வில் வித்தையும் தெரிந்திருக்க வேண்டுமே. இதோ நான் வில்லை வளைத்து அம்பு மழை பொழிந்து பாலம் கட்டுகிறேன். நீ வேண்டுமானால் அதில் குதித்துப் பார். தாங்குகிறதா இல்லையா என்று பார்ப்போம்.”

“எங்கள் ராமன் நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கோதண்டராமர்தான்  பெரிய வில்லாளி என்றால் நீ வில் பாலம் கட்டு. நான் அதில் குதித்துப் பாலம் மூழ்கி விட்டால் என்ன செய்வாய்?” எனக் கேட்டார் அனுமன்.

“அப்படிப் பாலம் மூழ்கினால் நான் அக்னி வளர்த்து உயிர் விடுவேன். பாலம் மூழ்காவிட்டால் நீ என்ன செய்வாய் “ எனக் கேட்டான் அர்ஜுனன்.

“பாலம் மூழ்காவிட்டால் நான் உன் ரதத்தின் கொடியில் இருந்து உனக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்வேன்” என்றார்.


போட்டி தொடங்கியது. வில்லைச் சரமாரியாக எய்து ஒன்றல்ல இரண்டல்ல நூறு யோஜனை தூரத்துக்கு அர்ஜுனன் பாலத்தைச் சமைத்துவிட்டான். வியக்கும் அழகோடு இருந்த அப்பாலத்தைப் பார்த்தார் அனுமன். மனதில் ராமரைத் துதித்தபடி பாலத்தின் நுனியில் தனது கால் கட்டைவிரலைத்தான் வைத்து அழுத்தினார். பாலம் தூள்தூளாகத் தகர்ந்து விழுந்து மூழ்கியது.

அர்ஜுனனால் நம்பவே முடியவில்லை. உடனே அக்னி வளர்த்து அதில் பாயத் தயாரானான். அனுமன் எவ்வளவோ தடுத்தும் கேட்கவில்லை. அக்னியில் இறங்குமுன் அர்ஜுனன் கண்ணனை நினைத்துப் பிரார்த்தனை செய்தான். அங்கே கண்ணன் உடனே ஒரு இளைஞனைப் போன்ற தோற்றத்தில் தோன்றினார்.

“என்ன நடக்கிறது இங்கே. ஏன் இந்த அக்னி.. அப்பப்பா என்ன உஷ்ணம்” என்று கேட்டபடி அர்ஜுனனுக்கும் அனுமனுக்கும் அருகே வந்தார். நடந்ததை எல்லாம் அர்ஜுனனும் அனுமனும் கூறினார்கள்.

“அப்படியா வில்லில் பாலமா. நான் பார்த்ததேயில்லையே. எங்கே எய்து காண்பி அர்ஜுனா. அதை அனுமன் அழித்ததையும் நான் பார்க்க வேண்டுமே. அதன் பின் நீ அக்னியில் உயிர் துறக்கலாம்” என்றார்.

உடனே ஒப்புக்கொண்டு அர்ஜுனன் கண்ணனை நினைத்துப் பிரார்த்தித்தபடி திரும்பப் விற்பாலம் சமைத்தான். “ சபாஷ். நல்ல திறமையான வில்லாளிதான் நீ” எனப் பாராட்டியபடி அனுமன் பக்கம் திரும்பிய கண்ணன் “ எங்கே நீ இதை எப்படிக் கலைத்தாய் என்று காண்பி “ எனக் கூறியபடி யாருக்கும் தெரியாமல் தன் சக்ராயுதத்தை அனுப்பிப் பாலத்தைத் தாங்குபடிச் செய்தார்.  

முன்பு பாலத்தை நொறுக்கியதால் ஏற்பட்ட கர்வத்துடன் அனுமன் ராமரை நினைக்க மறந்து அலட்சியமாகத் தன் கால் கட்டைவிரலை அப்பாலத்தின் மேல் வைத்து அழுத்தினார். ஒன்றுமே ஆகவில்லை!

வியப்புற்ற அனுமன் திரும்ப அப்பாலத்தின் மேல் ஏறி நின்றார். அப்போதும் ஒன்றும் ஆகவில்லை. அர்ஜுனனும் வந்த இளைஞனும் அவரைப் பார்த்துச் சிரிக்கக் கோபத்துடன் குதிக்கத் தொடங்கினார். அப்போதும் அப்பாலம் இம்மியும் அசையாமல் இருந்தது.


எவ்வளவு நேரம்தான் குதிப்பது. அலுத்துப் போன அனுமன் கரை ஏறினார். அர்ஜுனனிடம் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு அவன் ரதத்தில் இருந்து தான் உதவி செய்வதாகக் கூறினார்.


அந்நேரம் அங்கே வந்த அந்த இளைஞன் அனுமனின் கண்ணுக்கு ஸ்ரீராமராகக் காட்சி அளித்தார். அதைக் கண்டு புல்லரித்தது அனுமனுக்கு. அப்போதுதான் தான் செய்த தவறு புரிந்தது. ஸ்ரீராமரைத் துணைக் கொண்டபோது ஜெயித்த தான் அகந்தையால் அவரை மறந்ததும் தோற்று விட்டோம் என்பது புரிந்தது.

அதேபோல் அர்ஜுனனுக்கும் அந்த இளைஞன் கண்ணனாகக் காட்சி அளித்தான். அப்போதுதான் அர்ஜுனனுக்கும் தன் தவறு தெள்ளென விளங்கியது. கண்ணனைத் துணைக் கொண்டதால் ஜெயித்ததும் அவரை நினைக்காமல் தான் என்ற அகந்தையில் செயல்பட்டபோது தோல்வியைத் தழுவியதும் புரிந்தது.

இருவரும் தம் அகந்தை அகற்றி நட்பு பூண்டனர். எனவே நாமும் எங்கும் நாம், எதிலும் நாம் என அகந்தை கொள்ளாமல் இறைத்துணை நாடிப் போற்றி அனைத்திலும் ஜெயிப்போம் குழந்தைகளே.


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...