தாயுமானவர்களும், தந்தையுமானவர்களும் – ஆதலினால் காதல் செய்வீர்.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்றே அர்த்தம்” என்பது திரைப்பாடல். ”காதல் காதல் காதல் காதல் போயின் சாதல் “ என்கிறார் முண்டாசுக் கவிஞரும். ” கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடிகட்குக் காதல் என்பது மேடையில் காண்பதற்கு இனிப்பு இயல்வாழ்வில் கசப்புத்தான். “இல்லறவாழ்வின் அறநெறி விழுமியங்களைக் கடைப்பிடித்தல். அதுதான் சிறப்பென்று புறத்திணையில் சுட்டப்பட்டுள்ளது. அக்காலத்திலேயே பெண்களின் கல்வி வீரம் புகழ், புலமை ஆகியவற்றோடு இல்லறவாழ்விற்கு ஏற்றபடி தகவமைத்துக் கொள்ளுதல் சிறப்பித்துச் சொல்லப்பட்டுள்ளது.
அநேகக் காதல்கள் வெளித்தோற்றத்தை வைத்து மட்டுமே ஏற்படுகின்றன. காதல் இந்த வயதில்தான் வரும். இன்னாருடன்தான் வரும் என்பதெல்லாம் வரையறுக்க முடியாது. டீச்சரைப் பார்த்துப் பால்ய பருவத்தில் காதலிக்காதவர்களே இல்லை எனலாம். காதல் என்பது இயற்கைச் சுழற்சி, பருவத்தின் கிளர்ச்சி, உயிர்களின் உயிர்ப்பு, ஹார்மோன்களின் ஆர்ப்பரிப்பு.
இலக்கியமும், சினிமாவும், ஆன்மீகமும் வரலாறும் காட்டும் காதல்கள் அநேகம். ஷாஜகான் மும்தாஜ், நெப்போலியன் ஜோஸ்பின், கிளியோபாட்ரா மார்க் ஆண்டனி ரோமியோ ஜூலியட், அனார்கலி சலீம், புரூரவஸ் ஊர்வசி, சகுந்தலை துஷ்யந்தன். இவற்றில் அநேகக் காதல்கள் உண்மையானவை, மனமொத்தவை, ஆனால் நிறைவேறாதவை. அவற்றின் நிறைவேறாத் தன்மையின் சோகச் சுவைக்காகவே சிறப்பித்துக் கூறப்படுகின்றன.