பிரலம்பாசுரனுக்கு முக்தி அளித்த பலதேவர்
தேவகிக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தையினால் தனக்கு அழிவு ஏற்படும் என்பதை அசரீரி கூறக் கேட்ட கம்சன் ஒவ்வொரு நாளும் கோகுலத்துக்குக் கிருஷ்ணரை அழிக்கப் பூதனா, சகாட்சுரா, பகாசுரா என்று அரக்கர்களை அனுப்பிக் கொண்டிருந்தான். இவர்களை எல்லாம் குழந்தை கிருஷ்ணர் அழித்ததால் அடுத்துப் பிரலம்பாசுரன் என்பவனை அனுப்பினான். இவனிடமிருந்தும் குழந்தைக் கிருஷ்ணரும், பலராமரும் எப்படித் தப்பினர் என்பதைப் பார்ப்போம்.
யமுனை நதிக்கரையில் பாண்டீரவனம் என்றொரு வனம் இருந்தது. ஆநிரைகளின் மேய்ச்சலுக்கு உகந்த இடம் பசும்புற்களும், சுனைப் புற்களும், நிரம்பிய இடம் அது. மேலும் குழந்தைகள் எல்லாம் ஊஞ்சலாடி மகிழ ஆலம் விழுதுகளும் கைகோர்த்துக் காட்சி அளிக்கும். ஆயர்பாடிச் சிறுவர்களுக்குப் பிடித்த அற்புத வனம் அது.