சிந்து பைரவி சிவக்குமார்
உன்னிடம் மயங்குகிறேன், உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது, ஒரே நாள் உன்னோடு ஒரே நாள், தேன் சிந்துதே வானம், ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருளென்ன, தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது என்ற மென்காதல் பாடல்களைக் கேட்டால் சிவக்குமார் ஞாபகம் வருவார். எம்ஜியார், சிவாஜி, ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ஆர், கமல், ரஜினி, விஜய்காந்த், சத்யராஜ் சரத்குமார், பிரபு, விக்ரம் விஜய், சூர்யா, அஜித் என நான்கு தலைமுறை நடிகர்களோடு நடிப்புலகில் பயணம் செய்தவர்.
சிறந்த ஓவியர். ஒரு முறை குமுதத்திலோ விகடனிலோ இவர் வரைந்த ஓவியம் ஒன்று வெளியானது. சூரிய உதயத்தில் மரங்களைத் தங்கமஞ்சள் நிறப்பின்னணியில் ஒளீரிடும்வண்ணம் வரைந்திருந்ததைக் கண்டு அசந்துள்ளேன். மேடைப் பேச்சாளர். கம்பராமாயணம், திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசுவது மட்டுமல்ல. நூறு பூக்களின் பெயர்களையும் கூட மனப்பாடமாகச் சொல்லக் கூடியவர்.