பழையனூர் நீலி கதை
பலாலயத்துக்
காளிக்கு அடங்கிய பழையனூர் நீலி என்றொரு பேயுருக் கொண்டவள் இருந்தாள். ஒரு முனிவரைச்
சந்தித்ததும் அவள் உயிர்க்கொலை புரியும் ரத்த தாகமடங்கி உண்மைப் பொருளைப் பற்றி உய்ந்தாள்.
தன் தீவினை அடங்கி நல்வினை மேலோங்க ஜினதர்மத்தில் பற்றுக் கொண்டு அதைப் பரப்பினாள்.
அதைப் பற்றிப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
பாஞ்சாலத்தின் தலைநகரம் புண்டரவர்த்தனம். அதன் அரசன் கொடுத்துச் சிவந்த கரங்களை உடைய சமுத்திரசாரன். யாராலும் வெல்ல முடியாத அவனுடைய அரண்மனை வாயிலில் யானை சேனை, படை பட்டாளமெல்லாம் செல்லும் சப்தம் கடல் அலைபோல் முழங்கும். சூரியன் உள்ளே நுழைய முடியாத அளவு அகில், சந்தனப் புகைகள் மேலெழும்பி வானத்தை மறைக்கும் என்றால் அந்நகரின் சிறப்பை உணர்ந்து கொள்ளுங்கள்.
அந்நகரத்தின் மாஞ்சோலைகளில் கிள்ளை மொழி பேசும் கிளிப்பிள்ளைகள், நிலமெங்கும் நிறைந்திருக்கும் நெற்பயிர்கள், வாய்க்கால்களில்
துள்ளும் வாளை மீன்கள், அவற்றின் பக்கம் ஓடுமீன் ஓட உறுமீன் பார்த்துக் காத்திருக்கும்
நாரைகள், மகிழ்ந்து ஒன்றை ஒன்று துரத்தும் சேவலும் பேடுகளும், விரைந்து ஓடும் சாம்பங்
கோழிகள் என்று மகிழ்ச்சியின் ஒளிபாய்ந்து கிடக்கின்றது மருதநிலம்.
ஒன்றைவிட ஒன்று உயரமாக வளர்ந்திருக்கின்றன வாழைமரங்களும், தென்னை
மரங்களும் பாக்குமரங்களும். திருமணக் கோலாகலத்தில் பங்குபெற விழிவிரித்துப் பூத்துக்
காத்திருக்கின்றன கருங்குவளை மலர்கள்.
மருதம் இப்படியென்றால் தாழைமடல்கள் மணம்பரப்பியும் புன்னைமரங்கள்
பூந்துகளைத் தூவியும், வரிசைகட்டி நிற்கும் புலிநகக் கொன்றைகளில் அலையடித்தும் மகிழ்ந்து
கொண்டிருக்கின்றது நெய்தல்.
வெண்காந்தள்களும் செங்காந்தள்களும் முல்லைப்பூக்களும் காயாச்செடிகளுமாக
மலர்ந்து சிரித்துக்கொண்டிருக்கின்றது முல்லை.
நாகமரங்கள் கரங்கள் நீட்டியும் வேங்கை மரங்கள் விரிந்தும் காந்தள்
மலர்களும் குறிஞ்சிப் பூக்களுமாகப் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றது குறிஞ்சி.
பாஞ்சாலத்தின் நால்வகை நிலங்கள் மட்டுமல்ல. நால்வகை குணமரபு
கொண்ட மனிதரும் நெறிதவறாமல் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மாந்தர்கள் இசைத்தும் ஆடியும்
பாடியும் ஊடியும் கூடியும் களிப்பில் திளைத்துக் கொண்டிருந்தார்கள்.
பாலை நிலம்தான் இல்லையே தவிர இங்கே நகரின் புறத்தே மூங்கில்களும்,
இண்டனும், ஈங்கையும், புதரும் நிறைந்து பாலாயலம் என்றொரு சுடுகாடு இருந்தது. அங்கே
பிணம் எரியும் நாற்றம் பரவி இருள் சூழ்ந்து புகை மிதக்கும்.
எரிந்து கொண்டிருக்கும் ஈமத்தீயிலிருந்து எழுந்து அமரும் பிணங்கள்.
பரந்து கிடக்கும் சுள்ளிகளுக்கும், பாதி எரிந்த உடலிலிருந்து முறிந்து சிதறி விழுந்த
எலும்புகளுக்கும் வித்யாசம் தெரியாது. காக்கைகளோடும் கழுகுகளோடும் எரிந்த தசைகளின்
ஊனுக்காகப் பேய்களும் ஆரவாரமிட்டுச் சுற்றி வரும்.
பத்தும் பத்தாதற்குக் கூகையும், கோட்டானும் ஆந்தையும், வௌவால்களும்
சடசடவெனப் பறந்து அலறி மக்களை வெருட்டும்.
நரிகள் குலை நடுங்குவது போல் ஊளையிடும். ஆலமரமும் அரசமரமும் தலைவிரித்த பேய்கள்
போலப் பேய்க்கூட்டங்களுடன் போட்டி போட்டு மருட்டும்.
அந்தச் சுடலையில் பிடாரி என்னும் காளி கோயில் கொண்டிருந்தாள்.
பிணங்களில் இருந்து பறந்த சாம்பல் படிந்து படிந்து அந்தக் கருத்த காளியை வெளுப்பாக்கி
இருந்தது.
அந்தச் சுடுகாட்டிலும் எதற்கும் பயப்படாமல் எதற்கும் இடர்ப்படாமல்
ஒருவர் தியானம் செய்து கொண்டிருக்கிறாரே ? அவர் யார் ?
அவர்தான் பன்னிரெண்டு தவங்களை மேற்கொண்டு மெய்ப்பொருளை உணர்ந்த
முனிச்சந்திர பண்டாரகன் என்னும் முனிவர். அந்தப் பாலாலயத்திலும் பேய்களின் கூத்தாட்டத்திலும்
கூடச் சிந்தை சிதறாத முனிவருக்கு எங்கோ தூரத்தில் இருந்து கேட்கும் மனிதர்களின் சப்தம்
கவனத்தை ஈர்த்தது. அது கிட்டேயும் நெருங்கி வர ஆரம்பித்தது. உச்சபட்ச ஓசையாகவும் ஒலித்தது.
யாருமே வர அஞ்சும் இந்த இடத்துக்கு யார் வருகிறார்கள்? எதற்காக?
ஏதோ அலையடிப்பது போல் மனிதக் குரல்கள் அருகே கேட்டன. அதற்கீடாக ஆடுகளின் குரல்களும்
அவலத்தோடு ஒலித்தன. எத்தனை பேர் வருகிறார்கள்? என்ன நடக்கப்போகிறது இங்கே.?
காத்திருந்தார் முனிசந்திரர்…
பிடாரியின்
திருவுருவச் சிலையின் முன் அனைவரும் குமிழத் தொடங்கினார்கள். சாதாரண நாட்களில் இங்கே
எட்டிப்பார்க்கவே தயங்குவார்கள். அன்றைக்கோ கூட்டம் கூட்டமாய் மந்தைகளை ஓட்டிக் கொண்டு
வந்திருந்தார்கள்.
சிலர் அங்கே கிடந்த கற்களில் தாங்கள் கொண்டு வந்த வெட்டரிவாள்களைச்
சாணை தீட்டத் தொடங்கினார்கள். மஞ்சள் குங்குமிடப்பட்டு மாலையணிந்த ஆடுகள் அனைத்தும்
முடிவுக்கு வந்த வாழ்க்கைப் போராட்டத்தைக் கைவிட இயலாமல் கதறிக் கொண்டிருந்தன.
இந்த அவலச் சத்தம் எங்கும் நிறைந்ததோடு முனிசந்திரரின் உள்ளத்தையும்
உலுக்கியது. காளிக்குச் சற்றுத் தொலைவில் நின்றிருந்த அவர் அம்மக்களுக்கு முன்னால்
காளியின் எதிரே வந்தார்.
காளியின் எதிரில் இருந்த பலி பீடம் அப்போதுதான் சுத்தப்படுத்தியதுபோல்
காட்சி அளித்தது. கூடியிருந்த மக்கள் ஒரு வெறியாட்டுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
தங்கள் ஆடுகளை சிலர் முன்னே இழுத்து வந்து பலிபீடத்தின் முன்னால் நிறுத்தினார்கள். அவர்கள் முன்னே ஒருவன் நின்று அந்த ஆடுகளின் தலையில்
தண்ணீரைத் தெளித்தான்.
ஆடுகள் தலையைச் சிலிப்பிச் சிலிர்த்தன. ஒருவன் வெட்டரிவாளைத்
தன் தலைக்கும்மேலே உயர்த்தித் தலை சிலிர்த்த அந்த ஆட்டை வெட்டப் போனான்.
“நிறுத்துங்கள்.. நிறுத்துங்கள்” என்று ஓங்கி ஒலித்தது முனிச்சந்திரரின்
குரல். அதைக் கேட்டு அனைவரும் ஒரு கணம் அசைவற்ற சிலையானார்கள்.
அவரை நோக்கி அனைவரின் தலைகளும் திரும்பின. அப்படி ஒருவர் அங்கே
இருப்பதையே அவர்கள் அப்போதுதான் கவனித்தனர்.
ஆடையைப் பார்த்தால் முனிவர் போலிருக்கிறார். கொல்லா நோன்பு இருப்பார்
போலிருக்கிறது. ஏன் தடுக்கிறார் ? ஒவ்வொருவர் மனத்திலும் விதம் விதமான கேள்விகள்.
”எதுக்கு நிறுத்தச் சொல்றீங்க? நீங்க யாரு சாமி ?” என்று கேட்டான்
அவர்களைத் தலைமை தாங்கி அழைத்து வந்தவன்.
“நீங்க எதுக்காக இந்த ஆடுகளைப் பலியிடுறீங்க. “ என்று கேட்டார்
முனிச்சந்திரர்.
“இதோ இருக்காளே இந்தப் பொண்ணு. இவளுக்கு ரொம்ப நாளாப் பிள்ளை
பொறக்காம இருந்துச்சு. இவளுக்குப் பிள்ளை பிறந்தா பிடாரிக்குக் கெடா வெட்டிப் பூச போடுறோம்னு
வேண்டிக்கிட்டோம் சாமி “
ஆடுகள் இன்னும் ஆங்காங்கே கதறி ஓலமிட்டுக் கொண்டிருந்தன. கேட்டுக்
கொண்டிருந்த முனிச்சந்திரரின் உள்ளம் பதைத்தது.
“இந்தப் பொண்ணுக்குப் போன மாசம் புள்ள பொறந்திருச்சு. அதுனால
வேண்டுதலை நிறைவேத்த ஆடுகளை ஓட்டிக்கிட்டு வந்தோம் சாமி “ என்றார்கள்.
“இந்தப் பொண்ணுக்குப் புள்ளையா ஒரு புது உசிரக் கொடுத்த பிடாரி
இன்னொரு உசிரை பரிசா எடுத்துக்கும்னு நம்புறீங்களா.” என்று முனிச்சந்திரர் கேட்டதும்
’உசிரக் கொடுத்த சாமி உசுர எடுக்குமா என்ன.. அதுவும் சரிதானே’.. என்று அனைவரும் யோசிக்க
ஆரம்பித்தார்கள்
”வேண்டிக்கிட்டோமே சாமி. இந்த வேண்டுதலை நிறைவேத்தாட்டா ஆத்தா
மனசு குளிராதே..இப்ப என்ன செய்றது “ என்று கேட்டான் தலைமை தாங்கி வந்தவன்.
“இப்பிடி ஒரு உசிரக் கொன்னு பலி கொடுத்தா அந்த தீவினை உங்களை
ஒவ்வொரு பிறவிக்கும் தொடர்ந்து வருமே”
”ஆனா வேண்டுதலை நிறைவேத்தாட்டித் தெய்வக்குத்தம் ஆகிடுமே”
“அப்படியானா நான் சொல்றதக் கேளுங்க. சாமி உருவங்களை செஞ்சு வைச்சு
வணங்குறீங்க. ஒவ்வொரு சாமியும் ஏறும் யானை வாகனம் போன்ற வாகனங்களையும் மரத்தாலதான்
செஞ்சு வைக்கிறீங்க. மண்ணால குதிரை எல்லாம் செஞ்சு வேண்டுதலை நிறைவேத்துறீங்க. அதேபோல
களிமண்ணால ஆடு உருவம் செஞ்சு அத வெட்டிப் பலி கொடுங்க. எல்லாத்தையும் ஏத்துக்குற ஆத்தா
இதையும் ஏத்துக்கும். உங்களையும் பழி பாவம் அண்டாது.”
இவ்வாறு முனிச்சந்திரர் கூறியதும் கூட்டம் யோசிக்க ஆரம்பித்தது.
“சாமி சொல்றதும் சரிதானே.” என்று ஆங்காங்கே பேச ஆரம்பித்தனர்
மக்கள். முனிச்சந்திரரின் திருவடியில் விழுந்து வணங்கினாள் பிள்ளை பெற்ற அப்பெண். தன்
பிள்ளைக்காக ஒரு ஆடு கூட உயிரிழக்கவில்லை என்று நினைத்த அவள் முகம் மகிழ்ச்சியால் நிரம்பி
இருந்தது. அவள் வணங்கியதும் அனைவருமே விழுந்து வணங்கினார்கள்.
இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பிடாரி என்னும் காளிக்குக்
கோபத்தால் முகம் இன்னும் கருத்தது. அவளது கண்களோ அகலமாய் விரிந்து முனிவரை உறுத்து
நோக்கின. அவரை அங்கிருந்து எப்படியாவது விரட்டி விட வேண்டும். ஆனால் அவரின் தவ நெருப்போ
அவளால் அண்டமுடியாதபடி இருந்தது.
இத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த பேய்களோ பிடாரியை லட்சியம்
செய்யாமல் நாம் செய்த தீவினையினால்தானோ இந்தப் பேயுரு அடைந்தோம் என்று கலங்கிக் கலங்கி
விலகிப் போய்க் கொண்டிருந்தன.
பேய்களின் அலட்சியத்தைப் பார்த்த பிடாரியோ இதற்கொரு முடிவு கட்டியே
ஆகவேண்டும் என எண்ணினாள். ’மனிதர்கள் மட்டுமல்ல பேய்களும் மதிக்காமல் போய்க் கொண்டிருக்கின்றன’.
’இவனை இங்கிருந்து ஓட ஓட விரட்டினால்தான் எனக்கு இரத்தப் பலி
கிடைக்கும். என் தாகம் அடங்கும். இதற்குச் சரியான ஆள் அந்த நீலிதான். அவளை வரவழைத்துத்தான்
இவன் கொட்டத்தை அடக்க வேண்டும்.’
முனிச்சந்திரரின் சொற்படி அவர்கள் களிமண் ஆடுகளைச் செய்து பலியிட்டுப்
பூசை கொடுத்து மகிழ்ந்து ஊருக்குத் திரும்பினார்கள்.
பலியாடுகள் தப்பிப் பிழைத்த மகிழ்ச்சியில் ’மே.. மே..’ என்று
உற்சாகக் குரல் எழுப்பியபடி அவர்களோடு தம் கிடைக்குத் திரும்பிக் கொண்டிருந்தன.
பலியாடுகளின் உற்சாகக் கூச்சல் வெறியேற்ற இரத்தவாசனைக்குத் தவித்த
பலாலயத்துக் காளி பழையனூர் நீலிக்குச் சேதி அனுப்பினாள்.
காசிய நாட்டில்
இல்லை. சேதி நாட்டிலும் இல்லை, நாடு நாடாய் அலைந்ததுதான் மிச்சம். இந்த நீலி எங்கேதான்
இருக்கிறாளோ? தமிழ்நாட்டில் பழையனூரை அடைந்தன
பலாலயத்துக் காளி அனுப்பிய பேய்கள். அங்கேதான் இருந்தாள் அந்த முடிசூடா மகாராணி போன்ற
நீலி.
இதோ இவள்தான் ..இவளேதான்.. அவளை கண்டதும் மகிழ்ந்தன பேய்கள்.
அவள் முன்னே ஓடிச் சென்று தம் மனக்குறையைக் கொட்ட ஆரம்பித்தன.
“ நீலி .. நீ உடனே புறப்பட்டு புண்டரவர்த்தனத்தின் மயானத்துக்கு
வந்து சேர்! அங்கே ஒரு முனிவன் இருக்கிறான். அவன் எங்களுக்குக் கிடைக்கும் பலிகளைத்
”தீவினை அடுக்கும்” எனக் கூறித் தடுக்கிறான்.”
“பலநாளாய்ப் பட்டினி கிடக்கிறோம். பலாலயத்துக் காளி உன்னை அங்கே
அழைத்து வரச் சொல்லி எங்களை அனுப்பினாள்.” என்று அழுதன.
அதற்குள் சில பேய்கள் பின்னணியில் நின்று,”இரத்தம்.. இரத்தம்..
தாகம்.. தாகம்..” என்று கூக்குரலிட்டன.
அவற்றின் குரலைக் கேட்டு இரங்கிய நீலி ” போயும் போயும் ஒரு மனிதனுக்கா
நீங்கள் பயப்படுகின்றீர்கள்” என அலட்சியமாகக் கேட்டாள்.
“நீலி நீ நேர்லயே வந்து பாரு. அப்புறம் சொல்லு” என்று அவளை அழைத்துக்
கொண்டு பலாலயம் வந்து சேர்ந்தன பேய்கள்.
அதே காடு.. ஆனால் இன்னும் இருண்டிருந்தது. பலாலயத்துக் காளி
முணுமுணுத்தாள்.. “ நீலி.. நீதான் அவனுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும். உன்னைத்தான்
நம்பி இருக்கிறேன். “
“நீ மட்டுமா .. இந்தப் பேய்களும்தான்” என்று மனதுக்குள் சிரித்த
நீலி “ போயும் போயும் ஒரு மனிதனுக்கா பயப்படுகிறாய். காத்திரு.. அந்த முனிவனைக் கொன்று
கழுகுகளுக்கு இரையாக்கிவிட்டு வருகிறேன்”
இருண்ட அந்தக் காட்டில் எரியும் பிணங்களின் நடுவில் இருளைப்
போன்ற கரிய உருவில் போய் நின்றாள் நீலி. இன்னும் பேய்களையும் பூதங்களையும் ஏவினாள்.
மாய உருவங்களைப் படைத்து முனிசந்திரரை அச்சுறுத்தச் செய்தாள்.
ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்தார் முனிச்சந்திரர். அவரை இந்தப்
பேய்களின் நடமாட்டம் எதுவுமே அசைக்கவில்லை.
திடீரென மேகம் போல் இடித்து வானவில்லுடன் தோன்றினாள். அடுத்தகணம்
பாம்புபோல் நாக்கை நீட்டினாள். அதற்கடுத்துப் பாதிப் பாதி உருவங்களாய்த் தோன்றி மிரட்டினாள்.
வாயிலிருந்து தீ லாவும் படி ஊதினாள். மலையையே விழுங்கிவிடுபவள்போல் வாயைப் பிளந்தாள்.
இரண்டு கால்களையும் நிலத்தில் உதைத்தெழுந்து வானில் மிதந்தாள்.
வயிற்றில் கைகளால் அடித்துப் பேரொலி எழுப்பினாள். திடீரென வானிலிருந்து நிலத்தில் விழுந்து
ஊளையிட்டாள். கொள்ளி வட்டம் பறந்து பறந்து எரிவதைப் போலப் பலாலயம் எங்கும் பறக்கும்
சிதை போலச் சுற்றிச் சுற்றிச் சுழன்று நின்றாள். கற்களையும் எரியும் சிதைச் சுள்ளிகளையும்
அவர் மீது எறிந்தாள்.
எத்தனை செய்தும் நீலியின் தந்திரங்கள் எதுவுமே பலிக்கவில்லை.
எதனாலும் கவனம் சிதறாமல் தன் யோகத்தில் அமர்ந்திருந்தார் முனிச்சந்திரர்.
இவன் சாதாரணப்பட்ட ஆளில்லை. யோசித்தாள் நீலி. அவ்வளவு உறுதியானவனா
இவன்..? அப்படியானால் இவன் யோகத்தைக் காமத்தால் தகர்ப்பேன். இவ்வுலகில் காமவயப்படாத
மனிதனும் உண்டா?
யாராய் மாறலாம்? யோசித்தாள் நீலி.. ஆம் அதுதான் சரி.. ஒரு நொடிதான்.
தன் கோர உருவத்தை மாற்றி அந்த நாட்டு சமுத்திர ராசனின் அழகிய இளமகள் இளவரசி காமலேகை
ஆக மாறிவிட்டாள் நீலி.
வாசனைத் திரவியங்கள் பூசி வண்ண ஆடைகள் அணிந்து தன் நீண்ட கருங்கூந்தலில்
பூச்சரங்கள் மணக்க இளமை பொங்கும் உருவத்துடன் திருமகள் போன்ற தோற்றத்தில் முனிச்சந்திரரின்
அருகில் வந்தாள்.
’பிணங்கள் எரியும் சுடுகாட்டில் பூச்சரங்களின் வாசனையா?’ ஏதோ
வித்யாசமாக உணர்ந்த முனிச்சந்திரர் கண்களைத் திறந்தார்.
எதிரே ஒரு பேரழகி!!! இந்தப் பலாலயத்தில் இவள் இந்த நேரத்தில்
என்ன செய்கிறாள்?
தேவலோகப் பெண்போன்ற எழிலுடன் மணிமேகலை அசைய இடை ஒசிய ஒயிலாக
நடந்து முனிச்சந்திரரின் கண்களைத் திறக்கவைத்துவிட்ட கர்வத்தில் அவரை நெருங்கி வந்து
கொஞ்சு மொழிகள் பேசத் தொடங்கினாள் நீலி.
”நில்.. யார் நீ?” எனக் கேட்டார் முனிச்சந்திரர்.
”நான் இந்த நாட்டு மன்னனின் மகள் காமலேகை. உங்களைப் பற்றிக்
கேள்வியுற்று காதலானேன். நாடி வந்த என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் சுவாமி. எனக்கு வாழ்க்கை
என்று ஒன்று இருந்தால் அது உங்களோடு மட்டும்தான்..” முனிச்சந்திரரிடம் சொன்ன காதல்
வசனங்கள் நீலிக்கே திகைப்பூட்டிக் களிப்பூட்டின.
அவள் பூசியிருந்த வாசனைத் திரவியங்களையும் மீறி அவளின் தீவினை
அவளை அவருக்குக் காட்டிக் கொடுத்தது. இத்தனை அலங்காரங்களையும் மீறி அவளது சுய உருவம்
அவரது ஞானக்கண்ணுக்கு ஒரு நீலப்புகை போல் அசைந்து கொண்டிருந்தது.
ஒளிவட்டம் சூடிய முனிச்சந்திரரின் வதனத்திலிருந்து மெல்லத்தான்
வெடித்தது ஒரு குறுநகை. அதன் ஒளி கண்டு விதிர்த்தது காடு. அதன் வெளிச்சம்பட்டுப் பேய்களும்
அஞ்சி நடுங்கி ஓடுங்கி ஓடின. பலாலயத்துக் காளியும் திகைத்தாள்.
” ஏ நீலி.. இதென்ன வேடம்.. நீ பழையனூர் நீலிதானே.. உன்னை நான்
அறிவேன்.. என்னை அழிக்க எத்தனை வேடம் போட்டாலும் நடக்காது. இதில் காதலி வேடம் வேறா”
இன்னும் புன்னகை மாறாமல் கண்களில் ஒளிபெருகச் சிரித்தார் முனிச்சந்திரர்.
நீலியே அதிர்ந்தாள். இதை எதிர்பார்க்கவில்லை அவள். ஒரு நொடியில்
தன் வேடத்தை அந்த முனிவர் கண்டுபிடித்து விட்டார் என்பதே அவளுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
அவ்வளவுதானா தன் மாயத் திறமை எல்லாம்.
மகாமுனிவர் இவர். பெருந்தவசி. இவரிடம் தன் சேட்டைகள் எல்லாம்
எடுபடாது. ஒரே கணத்தில் உணர்ந்தாள் நீலி. உடலில் ஒரு நடுக்கம் ஏற்பட்டு மூளையை எல்லாம்
துடைத்தாற் போலிருந்தது அவர் பார்வையும் புன்னகையும்..
தன் மாய ஆற்றல் எல்லாம் ஒன்றுமில்லை. உண்மையான தவ ஆற்றலே சிறந்தது
என உணர்ந்தாள். இயல்பான உருவுக்கு வந்தாள். தன் செய்கைகளுக்காக வெட்கப்பட்டு அவர் பாதங்களில்
விழுந்தாள்.
”காலில் விழுகிறாளே. பகைவனை உறவாடிக் கெடுக்கப் போகிறாளோ..”
யோசித்தன பேய்கள். ஆனால் உண்மையிலேயே உளப்பூர்வமாகத்தான் விழுந்து இருந்தாள் நீலகேசி.
’இனிமேலும் செய்வதற்கு ஒன்றுமில்லை’ என்று பலாலயத்துக் காளியும் அமைதியானாள்.
”முனிவரே! என் மாய
ஆற்றல் அழிவைத்தான் கொடுத்தது. ஆனால் உங்கள் தவ ஆற்றலோ நெருப்புப் போலக் காக்கின்றது.
இந்தத் தீய வினைகளில் இருந்து என்னைக் காப்பாற்றி நல்வழி காட்ட வேண்டுகிறேன். ” பதறிச்
சிதறி ஓடி மரங்களின் பின்னே ஒளிந்துகொண்டு நீலகேசியை அச்சத்தோடு பார்த்தன பேய்கள்.
தீவினைகள் ஒழிய வேண்டுமானால் தாமும் நல்வழியில் செல்லத்தான் வேண்டுமோவென்று யோசிக்கத்
தொடங்கின.
நீலகேசியின் பணிவையும் வணக்கத்தையும் வேண்டுகோளையும் பார்த்து
மனம் நெகிழ்ந்த முனிச்சந்திரர் அவள் மனம் பக்குவமாகி வருவதை உணர்ந்தார்.
சமண நெறியைப் போதிக்க இதுவே தருணம். அவள் மனமென்னும் அகலில்
நன்னெறியை நிரப்பி ஞான விளக்கு ஏற்றினார்.
அவளுக்கு உலகவாழ்வின் நன்மை தீமைகளைப் போதித்தார். இன்ப துன்பங்கள்
எதனால் ஏற்படுகின்றன? அவற்றிலிருந்து விடுபட்டு ஞானநிலை அடைவது எப்படி? என்று தன் அறவுரைகள்
மூலம் விளக்கமளித்தார்.
”மேலும் மேலும் அறிய ஆவலாய் இருக்கிறேன். எனக்கு சமணத் தத்துவங்கள்
முழுவதையும் விளக்க வேண்டுகிறேன் முனிபுங்கவரே”.
“சொல்கிறேன் கேள் நீலகேசி.. இந்தப் பிரபஞ்சம் மூன்று பகுதிகளால்
ஆனது. மேல்பகுதி, நடுப்பகுதி, கீழ்ப்பகுதி ஆகியன அவை. அவற்றில் இந்தக் கீழ்ப்பகுதியில்
ஒன்றின் கீழ் ஒன்றாக ஏழு நரகங்கள் உண்டு. எல்லாவற்றுக்கும் கீழே நிகோதம் என்ற மீளா
நரகம் இருக்கிறது. அதுதான் கொடிய நரகம். அதற்குச் சென்றவர்களுக்கு மீட்சி என்பதே கிடையாது.
ஆனால் மற்ற நரகங்களில் இருப்பவர்கள் தங்கள் தீவினைகளை எல்லாம் அனுபவித்துக் கடந்தபின்
நடுப்பகுதியில் உள்ள பூவுலகில் புதிய உயிராகப் பிறப்பார்கள்.”
”நடுப்பகுதியில் உள்ள இந்தப் பூவுலகத்திலும் ஓரறிவு பெற்ற புல்
முதல் ஆறறிவு பெற்ற மாந்தர் வரை வாழ்ந்து வருகின்றார்கள். அதனால்தான் தொல்காப்பியம்
மக்களும் மாக்களும் நிறைந்தது இவ்வுலகு என்கிறது.”
”இந்த நடு உலகில் நல்வினைகள் செய்து நன்மைகளைச் சேகரித்துக்
கொண்டவர்கள் தேவருலகில் பிறப்பார்கள். இந்த மூன்று உலகங்களும் சேர்ந்த தொகுதிதான் பிரபஞ்சம்”
என்றார்.
”அப்படின்னா நான் எல்லாம் எதுல இருக்கேன் சுவாமி?” ஆவலாகக் கேட்டாள்
நீலகேசி.
“நீ என்னதான் தேவருலகத்தைச் சேர்ந்தவள்னாலும் இந்தப் பூவுலகத்துல
வாழும் அறவோர்களை விட தாழ்ந்த நிலையிலதான் இருக்கே.. ஏன்னா உன்னைக் கண்டு தீயோர்தானே
அச்சமடைந்து வணங்குறாங்க. நல்லவங்களத்தான் நீ நெருங்க விடுறதே இல்லையே” இதைக் கேட்டதும்
வருத்தம் ஏற்பட்டது நீலகேசிக்கு.
”வருத்தப்படாதே நீலகேசி. இப்பிடி மூன்று உலகிலும் உயிர்கள் எல்லாம்
மாறி மாறித் தங்களோட கர்மவினைக்கு ஏற்பப் பிறந்து இறந்து பிறந்துக்கிட்டே இருக்கும்.
இந்தக் கர்ம பூமிலதான் இதுலேருந்து விடுபடுறதுக்கான நோன்பு, தவம் எல்லாம் செய்யலாம்.
“
”நீ இந்த நிலையிலேருந்து விடுதலை பெறணும்னு நினைச்சீன்னா மூன்று
வழிகள் இருக்கு. இதக் கடைப்பிடிச்சீன்னா நீ உய்வு பெறலாம்.”
“அதெல்லாம் என்னன்னு சொல்லுங்க சுவாமி!”
“நல்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் இது மூன்றையும் கடைப்பிடிச்சா
அமுதம் போன்ற அழியா வாழ்வு பெறலாம்.”
“அப்பிடின்னா நான் என்னென்ன செய்யணும் சுவாமி ?”
”எல்லா உயிர்களிடத்திலயும் அன்போட இருக்கணும். மனம், மெய், மொழியினால்
கூட யாருக்கும் துன்பம் தராமல் வாழணும். ”
“கேக்கவே நல்லா இருக்கே சுவாமி. இத எல்லாம் சொன்னது யாரு?
“மனிதர்களைக் காக்கும் சமயசஞ்சீவிகளான இவற்றைக் கூறியது அறிவு
மயமானவரும் அன்பு மயமானவருமான ஜிநபகவான்தான்”
இருள் விலகுவது போல் இருந்தது. விடியும் சமயம்தான். சூரியன்
மெல்ல எழும்பிக் கொண்டிருந்தான். நீலகேசியின் அறியாமை இருள் அகன்று அறிவுக்கண்ணும்
திறக்க ஒளி பிறந்தது.
தன் பழைய வாழ்வை எண்ணி மனம் கசந்தாலும் இனிப்பான இந்தப் புதுவாழ்வு
அவளை எங்கோ கொண்டு சென்றது. தனக்குப் புத்துயிர் அளித்த ஜின பகவானையும் ஜின தர்மத்தையும்
புகழ்ந்து பாடத் தொடங்கினாள்.
தகுந்த சமயத்தில் போதனைகள் அளித்துத் தன்னைக் காப்பாற்றிய முனிச்சந்திரருக்கு
நன்றி கூறி வணங்கி எழுந்தாள்.
தான் உலகத்தின் உச்சியில் இருப்பதாகத் தோன்றியது நீலகேசிக்கு.
அந்த உலகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் தன்னைப் புதுப்பித்த ஜினனைப் பற்றியும் ஜின தர்மத்தைப் பற்றியும் அறிவித்து
இதுவே சிறந்தது என நிரூபிக்க விரும்பினாள். இந்தப் பூவுலகமும் சூரியனின் வெளிச்ச மலர்களோடு
விரிந்து காத்திருந்தது திருவறம் பரப்பக் கிளம்பிய அவளுக்காக.
அதன்பின் அவள் குண்டலகேசி, அர்த்த சந்திரர், மொக்கலர், புத்தர்
பெருமான், பூரணர், பராசரர், லோகஜிதர், பூதிகர், பிசாசகர் ஆகியோருடன் வாதம் புரிந்து
சமண சமய உண்மைகளை நிறுவினாள். நன்னெறிக்குத் திரும்பிய நீலியின் நற்செய்கைகளை நாமும்
போற்றுவோமாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)