பளிச் பளிச் என்று கண்ணைச் சிமிட்டிக் கொண்டிருந்தது வடக்கு வானில் ஒரு நட்சத்திரம். நிலவு, மற்ற நட்சத்திரங்கள் ஒளிர்கின்றனவோ இல்லையோ தினமும் மாலையிலிருந்து காலைவரை இந்த வடக்கு நட்சத்திரம் மட்டும் ஒளிவீச மறப்பதில்லை.
காந்தப் புலத்தின் மைய ஈர்ப்பாய் ஜொலிக்கும் அந்த நட்சத்திரம் யார் ? நட்சத்திர மண்டலத்துக்கும் சப்தரிஷி மண்டலத்துக்கும் தேவாதி தேவர்களுக்கும் அதி தலைவனாக ஆகும் பாக்கியம், யுகம் யுகமாய் கல்பகாலம் வரை ஜொலிக்கும் பாக்கியம் எப்படிக் கிடைத்தது ?
அவன்தான் என்றும் நிலையான துருவன். அவன் யார் ? அவனுக்கு நிலையான இடம் கிடைத்தது எப்படி எனப் பார்க்க நாம் வைகுண்டத்துக்கும் அதற்குமுன் சுவாயம்புவமநுவின் மகன் உத்தானபாதனது அரண்மனைக்கும் போகவேண்டும்.