குட்டித் தமிழகம் ஆகி வரும் கொலோன் நகரம் – அன்னபூரணி சபாரெத்தினம்
த கேப்பிடல் என்ற நூலை எழுதிய கார்ல் மார்க்ஸ் பிறந்த இடம் ஜெர்மனியின் ட்ரையர் நகரம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். மார்க்ஸியத் தத்துவங்கள் பிறந்த ஜெர்மனி நகரில் இன்று பார்த்தால் வலசை வந்து வசிக்கும் இந்திய மற்றும் ஈழத் தமிழர்களின் திருப்பணியால் ஹாம் காமாட்சி அம்மன் கோவில், முருகன் கோவில், கந்தசாமி கோவில், கதிர்வேலாயுதசாமி கோவில், ஜெகன்னாத் கோவில், சிம்மாசலம் நரசிம்மர் கோவில், சாய்பாபா கோவில், இஸ்கான் கோவில்கள் என இந்தியக் கோவில்கள் அணி வகுக்கின்றன.
யூரோப்பா முழுவதையும் சுற்றி ஓடும் ரைன் நதியின் கரையில் அமைந்துள்ளது கொலோன் நகரம். அந்தக் காலத்தில் யூ டி கொலோன் என்ற வாசனைத் திரவியம் தயாராகி உலகம் முழுக்க வலம் வந்தது இந்த ஊரில் இருந்துதான். இங்கே ஓவியம், கண்ணாடி, யுத்த தளவாடங்கள் என 25 க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்கள் உள்ளன.
நதிக்கரையோர நாகரீகம் தழைப்பதைப் போல் அந்த ரைன் நதியின் பெயரால் ரைன் தமிழ்ச் சங்கம் என்றொரு வாட்ஸப் குழுமம் இருக்கிறது. இதில் 70 க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பத்தினர் அங்கத்தினர்களாக இருக்கிறோம். எனக்குத் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இத்தமிழ்ச் சங்கத்தில் இணைந்துதான் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, தமிழ்ச்சங்க நிகழ்வுகள், பரதநாட்டியக் கலை நிகழ்ச்சிகள், புத்தக வெளியீடுகள் ஆகியவற்றைத் தமிழர்களாகிய நாங்கள் கொண்டாடி வருகிறோம்.