விளம்பரங்கள் ஒரு காலகட்டத்தின் வாழ்வியலைப் பிரதிபலிக்கின்றன. ஃபேஷன் ட்ரெண்டிங் மாறுவதை அறிவிக்கின்றன. உடை, அலங்காரம், அவை எடுக்கப்பட்டிருக்கும் விதம் மற்றும் ப்ளாக் & வொயிட் படங்கள் அவை நிச்சயம் 40 முதல் 50 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கவேண்டும் என்பதைத் தெரிவிக்கின்றன.
அத்யாவசியமான விஷயம் எல்லாம் சொல்லிட்டேன்னு நினைக்கிறேன். , இப்பிடி ஒரு போஸ்ட் போட. படம் கிட்டிச்சு, நீங்களும் கிட்டிட்டீங்க. அப்புறம் கதைக்க என்ன பஞ்சம். :)
நமக்கு சுஜாதா, இந்திரா காந்தி அம்மா, இவங்க போல நடிகை சரிதான்னாலும் ஒரு காலத்துல உயிர். இப்பவும் சரிதாவைப் பிடிக்கும். ஜூலி கணபதி போன்ற படத்தில் நெகட்டிவ் காரெக்டரில் பார்த்த போது கொஞ்சம் கெதக் என்றிருந்தாலும் சரிதாவை ரொம்ப பிடிக்கும். ஏனெனில் மௌனகீதங்கள் வந்தபோது நான் டென்த் படித்துக் கொண்டிருந்தேன். ஊருக்கு ஒரு உறவினர் திருமணத்துக்கு வந்தபோது எங்கள் மாமா மூக்குக் குத்திக் கொள்ளும் எல்லாருக்கும் மூக்குத்தி கொடுப்பதாகக் கூற ஒரு ஆர்வக்கோளாறில் நானும் என் பெரியம்மா பெண்களும் மூக்கைக் குத்திக் கொண்டு வலியால் கண்ணெல்லாம் கலங்கி ( நரம்பில் இறங்கிவிட்டது ஆணி ) ஒரு வழியாக பள்ளிக்குச் சென்றோம்.
அங்கே எங்கள் ஆசிரியை கேட்டார், என்னடி உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா.
இல்லீங்க மிஸ்.
அப்புறம் ஏண்டி மூக்குக் குத்திக்கிட்டு இருக்கே
பெரிய பெண் ஆனா மூக்குக் குத்திக்கணும்னு சொன்னாங்க என்று கொஞ்சம் மழுப்பித் தப்பித்தபோது வந்த படம் மௌனகீதம். அதில் சரிதா மூக்குத்தி மின்ன மின்ன கோபம் ஜொலிக்க நடிப்பார். ரொம்ப ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அதே ஹேர் ஸ்டைலை வேறு பல்வேறு ஆண்டுகளாக ஃபாலோ பண்ணினேன். :)
எங்களுக்குத் தமிழ் வகுப்பு எடுத்த “ அறம்வாழி” மாஸ்டரின் ஐந்து வயதுப் பேரன் என்னைப் பார்த்தால் மூக்குத்திப் பூ மேலே காத்து உக்கார்ந்து பேசுதையா என்று பாடுவான். நாம சரிதாவோ என்ற நினைப்பில் மூக்குத்தி பிடித்துப் போனது உண்மை.
அப்புறம் நூல் வேலி, அவள் அப்படித்தான், நெற்றிக்கண், தண்ணீர் தண்ணீர், ஊமை விழிகள், பொண்ணு ஊருக்குப் புதுசு, தங்கைக்கோர் கீதம், வேதம் புதிது, கீழ்வானம் சிவக்கும் ஆகிய படங்கள் கொஞ்சம் குழப்பத்தோடு பிடித்தன. காரணம் அன்றைய ஹீரோயின்ஸ் வெறும் மெழுகு பொம்மைகளாக வந்தபோது வெவ்வேறு காரெக்டர்களில் உணர்வு பூர்வமாய் நடித்து மனதைக் கவர்ந்தவர் சரிதா.
நல்லா பார்த்தீங்கன்னா தெரியும் அந்தக் காலத்துல நட்ட நடு நெத்தில பொட்டு வைச்சுக்குவாங்க. சரிதாவின் கண்ணும் நாக்கை மடித்து அவர் செய்யும் குறும்பும் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ”ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் “ என்ற பாட்டை என்றைக்குக் கேட்டாலும் நான் ஃப்ளாட்தான். அவ்ளோ ரசிகை அவருக்கு நான்.
சரி விளம்பரத்தை விட்டுட்டு வேறெங்கோ போயிட்டேன். ( சரிதா ரசிகை மன்றம் :)