”தேனம்மை லெக்ஷ்மணனின் படைப்புலகம்” என்ற நூலுக்காக கவிதாயினி முபின் சாதிகாவுடன் கலைஞன் பதிப்பகத்தின் 100 கேள்விகளும் என்னுடைய பதில்களும்
26.உங்கள் வாசிப்பு அனுபவம் எழுதுவதற்குத் துணைபுரிகிறதா?
நிச்சயமாக. அதிகம் வாசிக்காத பொழுதுகளில் நான் வெறும் குடுவை போல காலியாக உணர்ந்திருக்கிறேன். வாசிக்கும்போது எழுத்து என் எழுதுகோலிலிருந்து தானாகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.
27.பெண்ணியம் பற்றிய விழிப்புணர்வு பொதுவாகப் பெண்களிடம் அதிகரித்திருக்கிறதா?
பெண்ணியம் பற்றிய விழிப்புணர்வாக அது இல்லாமல் தவறான புரிதல்களாக அவை அதிகரித்திருக்கின்றன. உடை அணியும் சுதந்திரம், பாலியல் பற்றி சுதந்திரமாக எழுதுவது இவற்றை விடுங்கள். கல்வி வேலைவாய்ப்பு, கருத்து சுதந்திரம் இருந்தாலும் தனது தனிப்பட்ட சுதந்திரம் என்பதைப் பெரியவர்களையும் கணவனையும் மதிக்காமல் இருப்பது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அன்று ஆண் மற்றும் சமூகம் செய்ததைத் திருப்பி அவர்களுக்குச் செய்வது என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எடுத்துக்காட்டாக தங்கல் படத்தைச் சொல்லலாம். தன் பெண் விளையாட்டு வீராங்கனையாக அண்ணன் பையனை அமீர்கான் கோழி சமைக்கச் சொல்வது. அவர் பெண் உயர்வு என்பதால் அண்ணன் பையன் எங்கே தாழ்வாகப் போனான். அவன் எந்தப் பெண்களையும் எந்த விதத்திலும் இழிவு படுத்தாத போது அவனை ஏன் இழிவுபடுத்தவேண்டும்.
28.பெண்ணுக்குக் குடும்பம்தான் இன்னும் பாதுகாப்பான அமைப்பா?
அது ஒவ்வொரு பெண்ணின் தனிப்பட்ட முடிவைச் சார்ந்தது. என்னைப் பொறுத்தவரை திருமணமாகிவிட்டதால் அது எனக்குப் பாதுகாப்பானதாகத் தோன்றுகிறது. டார்ம் மற்றும் பிஜிக்களும் கூட பாதுகாப்பான அமைப்புகள்தான். அது அவரவர் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் பொறுத்தது.
29.பெண்தான் குடும்பத்தை உருவாக்குபவளாக இருக்கிறாளா?
இப்போது ஆணும் குடும்பத்தை உருவாக்குபவனாக ஆகி வருகிறான். நிறையப் பொறுப்புகளை ஆண்களும் தங்கள் தோளில் சுமக்கிறார்கள்.