எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 12 நவம்பர், 2023

மூங்கில் குருத்துக்கள்

மூங்கில் குருத்துக்கள் 

“மூங்கில் இலைக் காடுகளே.. முத்து மழை மேகங்களே..பூங்குருவிக் கூட்டங்களே கேளுங்கள். மாலையிட்ட மங்கையர்க்கு தற்கொலைதான் சொர்க்கம் என்றால் மேளம் என்ன தாலி என்ன கூறுங்கள்.. “

 

“என்ன பாட்டு இதுன்னு கேட்டுட்டு இருக்கே.” குளித்துவிட்டு ஈரத்தலையை சரியாகத் துவட்டாமல் சிலிப்பியபடி படுக்கையறைக்குள் நுழைந்த ஸாம் அங்கே இருந்த ரிமோட்டை எடுத்து படக்கென்று டிவியை அணைத்தான்.

 

சோஃபாவில் கால் மடித்து ஒரு பக்கம் சாய்ந்தமர்ந்திருந்த தேவியின் கண்களில் கண்ணீர் வடிந்த தடம். முகம் ஊதிப்போய்க் கிடந்தது. இரவு பூரா தூங்காமல் கண்கள் உப்பி வீங்கி இருந்தன.

 

இப்போதெல்லாம் அவன் தேவியின் முகத்தை எங்கே பார்த்தான். எல்லாம் அவசரம் எங்கும் அவசரம். ராணியா, தேவியா, அழகியா என்று அதிர்ஷ்டச்சக்கரத்தின் முள் சுற்றிவிடப்படும்போதெல்லாம் எங்கே நிற்கிறதோ அதுபோல் நிற்கக் கற்றுக் கொண்டான்.

 

இரு கைகளாலும் தன் முகத்தை ஏந்தி” என்னடா ஆச்சு தேவிம்மா.. ஏன் வாடிப்போயிருக்கே “  என்று அவன் கேட்கப் போகும் கேள்விகளுக்காக ஏங்கிக் கொண்டிருந்தது அவள் மனம். எவ்வளவு கோபம் வந்தும் அவன் முன்னே அது எல்லாம் மறைந்தும் மறந்தும் போய்விடுவது அவளுக்கே ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

 

தன்னைத் தவிர அவன் வாழ்க்கையில் இன்னும் இரு பெண்கள் இருக்கிறார்கள். இது யதார்த்தம். முன்பே தெரிந்த விஷயம்தான். இன்றைக்கு என்ன புதிதாய் வந்துவிட்டது.

 

”அவர் அவளுக்கு என்ன குறை வைத்தார்”. தான் இப்படி எல்லாம் யோசிப்பது தன் எண்ணங்களின் மழுங்கிய தன்மைக்கும், வீணாயும் பாழாயும் போய்க் கொண்டிருக்கும் தன் சுயமரியாதைக்கும் இழுக்கு எனத் தெரிந்தே அவள் மனம் சமாதானங்களைக் கற்பித்துக் கொண்டிருந்தது. 

 

’ஒருத்தி முன்னாள் காதலி. ஒருத்தி இந்நாளில் அவர் பிள்ளையைச் சுமப்பவள். ஆனால் இருவருமே அவர் துணைவிகளோ இணைவிகளோ இல்லை. தான் மட்டும்தான் அவர் மனைவி..’ நினைக்கும்போதே நாவடியின் ஒரு அசட்டுத் தித்திப்பு தோன்றியது. பேரு பெத்த பேரு தாக நீலு லேது.. என்று எப்போதோ யாரோ சொன்ன பழமொழி மனதில் வந்தது.

 

பிடரி சிலிர்த்த சிங்கத்தின் தலையிலிருந்து தெறிப்பதுபோல் அவள் மேல் தண்ணீர்த்துளிகள் சொட்டிக் கொண்டிருந்தன. ”சரியா துவட்டுங்க” என்று வேகமாய் எழுந்து டர்க்கி டவலை எடுத்தாள். 

 

சரசரவெனத் தலைவாரியவன் அவளை விலக்கிப் படி இறங்கத் துவங்கினான். அங்கே நீலாக்கா காலை உணவுகளை டேபிளில் பரப்பிக் கொண்டிருந்தார். மூங்கில் குருத்து வெஜ் ஃப்ரை செய்திருந்தார். ஃபுல்கா ரொட்டிகளில் இரண்டை எடுத்து பீங்கான் தட்டுகளில் வைத்தார்.

 

”பசியில்லை அக்கா. க்ரீன் டீ மட்டும் குடுங்க” என்றான். சின்னக் கிண்ணங்களில் சுத்தம் செய்த பச்சை திராட்சை, துண்டுகளாக்கிய பப்பாளி, கொய்யா அணி வகுத்தன. இன்னும் சிறிய கப்புகளில் உப்பிட்டு வறுக்கப்பட்ட இரண்டு முந்திரி , இரண்டு வாதுமை , இரண்டு பிஸ்தா, இரண்டு பேரிச்சை, சில கிஸ்மிஸ்பழங்கள் இருந்தன. இன்ஃப்யூஸ்ட் வாட்டர் என்று சில காய்களைத் தண்ணீரில் போட்டு வைத்திருந்தார்.

 

சாதா நாளில் எல்லாவற்றையும் ஒரு கை பார்ப்பான் ஸாம். ஆனால் அன்றைக்கு ராணிக்கு எட்டரை மணிக்கு டாக்டரிடம் அப்பாயிண்ட்மெண்ட் இருந்தது. மூன்றாவது ட்ரைமஸ்டர் ஊசிகள் மற்றும் ஸ்கேனிங்குக்கு செல்லவேண்டும்.

 

எஜமானின் முகம் பார்த்த நீலாக்கா ஒரு பீங்கான் கோப்பையில் ஆவி பறக்கும் க்ரீன் டீயை கெட்டிலில் இருந்து ஊற்றினார். பாதி ஊற்றும்போதே கையை அசைத்தான் ஸாம். சுகர் க்யூப்ஸை இடுக்கியில் எடுத்துப் போட்டுக் கொண்டான். இன்னொன்றை தேவி எடுத்துப் போட முயல தடுத்துவிட்டு டையைக் கட்டிக் கொண்டான்.

 

பாதி அருந்தியும் அருந்தாமலும் கோப்பையை வைத்துவிட்டு அவன் புறப்பட பின்னே சென்ற தேவி தான் ஏதோ ஒரு வேண்டாத பொருளைப் போல அவன் பின்னே தொடர்வதாக ஒரு கணம் உணர்ந்தாள். ஏதோ ஒரு விலக்கம் இருவருக்குள்ளும் வந்திருந்தது.

 

இந்த மூங்கில் குருத்தை அவன் பச்சையாகவே விரும்பிச் சாப்பிடுவான். ஒருமுறை அவளின் தோள்களைப் பிடித்தபடி மூங்கில் தோள் என்று லேசாகச் செல்லக் கடி கடித்தது அவள் ஞாபகத்தில் வந்தது. அங்கே அந்தத் தழும்பும் இன்பமான வலியும் இன்னும் மிச்சமிருப்பதாகத் தோன்றியது. தோள்களைத் தடவிக் கொண்டாள்.

 

கூடவே இருந்தார்கள், ஆனால் வேறொரு உலகில் சஞ்சரித்தபடி. அவனது கார் இறகு முளைத்த புரவியைப் போலப் பாய்ந்து சென்றது. இன்றைக்கு ஏன் இந்த அவசரம் யாரைப் பார்க்கப் போகிறாராமா.. முன்னாளையா, இன்னாளையா. பொருமிப் பொருமி வந்தது அவளுக்கு. நீலாக்காவுக்கு இதெல்லாம் ஏன் தெரியவேண்டும். ?

 

கசிந்த கண்களை அடக்கியபடி மேலேறினாள். “ சாப்பிட்டுப் போம்மா. “ என்று அன்பொழுக அழைத்தார் நீலாக்கா. ”குளிச்சிட்டு வர்றேன்கா.. நீங்க சாப்பிடுங்க “ என்றபடி முகத்தை மறைத்துக் கொண்டாள். 

 

கையில் இருந்த செல்ஃபோன் அடித்தது. அட இதென்ன அம்மாவிடமிருந்து ஃபோன். அப்பா பேசினார். ” கண்ணு ஏழு மாசம் ஆச்சில்ல. உன்னைப் பார்க்கணும்னு அம்மா துடியாத் துடிக்கிறா. என்னவோ வளைகாப்பு சீமந்தம் எல்லாம் இல்லாட்டியும் இடுப்புக்கு எண்ணெய்த் தண்ணியாவது ஊத்தினாத்தான் நல்லபடியா சுகப்ப்ரசவம் ஆகும்கிறா . நாங்க ரெண்டுபேர் மட்டும் பொறப்புட்டு வரோங்கண்ணு. மாப்பிள்ளை ஆஃபீஸுக்குப் போயிட்டாரா. சாயங்காலமே திரும்பிடலாம்னு ப்ளான். உனக்கு ஏதோ லேகியம், கசாயம் எல்லாம் தரணுமாம். “

 

திக்கென்று விழித்தாள் தேவி. ”எதுக்குப்பா இதெல்லாம் ? எல்லாம் நீலாக்காவே நல்லாப் பாத்துக்குறாங்க. நேத்திக்குத்தான் எண்ணெய்த்தண்ணி ஊத்திவிட்டாங்க. ” என்றாள்.

 

”நாங்க சென்னைக்குள்ளே வந்தாச்சும்மா. அரைமணி நேரத்துல உங்க வீட்டுல இருப்போம். எங்க புள்ள எங்க கண்ணுக்குள்ளே இருக்குது. தேடிவருதும்மா ரெண்டு பேருக்கும் “ என்றார்.

 

நடந்ததை யூகித்த நீலாக்கா, பயப்பட வேண்டாம் என்பது போல ஜாடை செய்தார்.

 

அரை மணி நேரத்தில் அப்பா அம்மா வந்தபோது தேவி போர்வையைப் போர்த்திக் கொண்டு கட்டிலில் படுத்திருந்தாள். அம்மாவும் அப்பாவும் பதறிப் போனார்கள்.

 

“ அது ஒண்ணுமில்லம்மா. வெட்டைச் சூடு. நேத்திக்கு எண்ணெய் தேய்ச்சு வெந்நித்தண்ணி ஊத்தி இடுப்பை உருவி விட்டேன்ல. அதுல சூடு அதிகமாக இடுப்பை நவுட்டுதாம். பொய் வலி. அதுக்குத்தான் சோம்புக் கசாயம் கொடுத்துப் படுக்கச் சொல்லி இருக்கேன். சாயங்காலத்துக்குள்ள சரியாயிடும். பூண்டுக் குழம்பும், பருப்புத் துவையலும் தூதுவளை ரசமும் வைச்சிருக்கேன். உங்களுக்கு முருங்கை சாம்பாரும் கீரை தயிர்க்கூட்டும் உருளைப்பொரியலும் பண்ணியிருக்கேன்மா. நீங்க சாப்பிடுங்க. அவங்களுக்கு நான் அப்புறமா கொடுக்குறேன். “ சாமர்த்தியமாகப் பேசிச் செல்லும் நீலாக்காவைப் பார்த்தாள் தேவி. நன்றியில் கண்கள் நனைந்தன.

 

“வலிக்குதாம்மா “ என்று மாற்றி மாற்றிக் கேட்டபடி கையைப் பிடித்துக் கொண்டு அப்பாவும் அம்மாவும் பக்கத்திலேயே அமர்ந்திருந்தார்கள். ”டாக்டர்கிட்ட போலாமா” என்று ஒரே நச்சரிப்பு வேறு. ”மாப்பிள்ளைக்கு ஃபோனைப் போடவா” என்று வேறு கேள்விகள்.

 

”வேண்டாம் வேண்டாம்” என்று சொல்லி வாய் வலித்தது தேவிக்கு. ’நல்லா கொண்டுவந்து கல்யாணம் செஞ்சு வைச்சீங்க. நடுகுழியில போட்ட மாதிரி ’ தான் கோபப்பட்டு ஏதும் பேசி விடக்கூடாது என்று இறுக்கமாகக் கண்ணை மூடிக் கொண்டாள்.

 

அவள் கண்களுக்குள் அழகி வந்து போனாள். “அடிப் பாவி.. ஏண்டி அசந்தர்ப்பமா முழிச்சு என் வாழ்க்கையைக் கெடுக்கப் பார்க்குறே “ பல்லை நரநரவெனக் கடித்துக் கொண்டாள். அழகியையும் ராணியையும் தன் வாழ்க்கையிலிருந்து தூக்கிப் போடுவது எப்படி என அந்த அப்பாவியின் உள்ளம் துடித்துக் கொண்டிருந்தது.

 

அம்மா அப்பாவிடம் ரகசிய ஜாடை காட்டியபடி கீழே இறங்கிச் சென்றாள். மகள் மாடியில் படுத்திருக்க நீலாக்கா சமையல் கட்டில் இருக்க தேவியின் அம்மா அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். “ ஏழு மாசம் ஆச்சு ஆனா புள்ளைக்கு வயிறே தெரியலையே.. ” அவர்களுக்குத் தெரிந்த உறவினர்கள் வீட்டில் மாசமாய் இருந்த பெண்கள் சிலருக்கு வயிறு பெரிதாகாமலே பிள்ளை பிறந்தது பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

ஸாமோ ராணியையும் அதன்பின்னர் அழகியையும் பார்க்கத்தான் போய்க்கொண்டிருந்தான். சிக்னலில் இரண்டு நிமிடங்கள் நிற்க வேண்டி இருந்தது. குழந்தைகளை வைத்துப் பிச்சையெடுக்கும் பெண் இரு குழந்தைகளை இழுத்தபடி அருகே வந்தாள். அவனுக்கு வந்த கோபத்துக்கு ஒன்றும் செய்ய இயலாமல் குளிர்கண்ணாடிகளை ஏற்றினான்.

 

செய்தியாவது கேட்கலாம் என காரிலிருந்த எஃப் எம்மைத் தட்டினான்.

 

“மூங்கில் காடுகளே.. வண்டுமுனகும் பாடல்களே.. “ விக்ரம் பாடும் காட்சி கண்ணில் வந்து போனது.. “ வேரை அறுத்தாலும் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை.  அறுத்த நதியின் மேல் மரங்கள் ஆனந்தப் பூச்சொரியும். தாமரைப் பூவாய் மாறேனோ என் ஜென்ம சாபல்யங்கள் தீரேனோ, ஜனனம் மரணம் அறியாவண்ணம் நானும் மழைத்துளி ஆவேனோ “

 

மழைத்துளி காரின் கதவுகளில்  தட் தட்டென மென் கால்களால் நடந்துகொண்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...