எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 28 நவம்பர், 2023

கறையான்கள்

கறையான்கள்

தேவி கருமாரியம்மா சிறந்த உபகாரி. அவள் தேசம் எல்லாம் காக்கும் அருள் செல்வி அவதாரி “ என்று பாடிக்கொண்டிருந்தது பெரியபாளையத்தம்மன் கோவிலின் லௌட் ஸ்பீக்கர். அன்று ஆடி வெள்ளியாதலால் புற்றுக்குப் பால் ஊற்ற பெண்கள் கூட்டம் க்யூ கட்டி நின்றது.

 

கூட்டத்துக்கு நடுவில் வாழையிலையில் தட்டு வைத்து அதில் மூன்று மாவிளக்கு உருண்டைகள் வைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் பூ வைத்து நடுவில் குழியாக்கி நெய் ஊற்றித் திரிப் போட்டு ஏற்றி வைத்துக் கொண்டிருந்தார் நீலாக்கா. சிறிது நேரத்தில் காரின் அருகில் வந்து மாவிளக்கைக் கொடுத்துவிட்டு ”தேவிம்மா கூட்டம் கொஞ்சம் கம்மியான மாதிரி இருக்கு. அதுனால சீக்கிரம் எட்டிப்பார்த்துக் கும்பிட்டு வந்துடலாம் வாம்மா” என்றார்.

 

என்னவோ சில நாட்களாகவே தேவிக்கு தலை சுற்றிக் கொண்டேயிருந்தது. அதனால் அக்காவின் கையைப் பிடித்துக் கொண்டு கீழே இறங்கினாள். ‘சரியாகவே சாப்பிட மாட்டேன் என்கிறது இந்தப் பெண். மாசமா இருக்கதும் இல்லாததும் எனக்குத் தெரியாதா என்ன. ரத்த சோகையோ என்னவோ வெளுத்துக்கிட்டே வேற போகுது. சாப்பிடாம கொலை பட்டினி கிடந்து மெலிஞ்சதுதான் மிச்சம். வீட்டுக்காரர் வேற அக்கறை இல்லாம போயிட்டு வந்துட்டு இருக்காரே.. ஹ்ம்ம்..பெரிய வீட்டு சமாச்சாரம். “ யோசித்தபடி அக்கா கைபிடித்துச் சென்றார்.

 

”ஸ்பெஷல் தர்ஷன்ல போயிடலாம்கா” என்றபடி பணம் கொடுத்து டிக்கட் வாங்கச் சொன்னாள் தேவி. வெளியிலேயிருந்து மலைப்பாம்பு போல நீண்டிருந்தது கூட்டம். க்யூவோ பாம்பு சுருண்டது போல சுருண்டு சுருண்டு பிரகாரத்தையே வளைத்திருந்தது. கூட்டத்தைப் பார்த்ததுமே மலைப்பாயிருந்தது அவளுக்கு.

 

தலைக்கு மேலே ஐந்து தலை நாகம் படமெடுக்க உற்சவ அலங்காரத்தோடு ஒரு பக்கம் பெரிய பாளையத்தம்மன் உலாவுக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள். வளையல் அலங்காரம். ஆயிரக்கணக்கில் வளையல்களாலேயே மாலை அணிந்திருந்தாள். பாவாடை, சித்தாடை எல்லாமே விதம்விதமான கண்ணாடி வளையல்களால் கண்ணைப் பறித்தன. ஜெகஜ்ஜோதியாக தீபத்தில் தரிசனம் தந்தாள் ஆத்தா.  

 

தூரத்தில் இருந்தபடியே ‘ஆத்தா தாயே. மன நிம்மதி கொடும்மா’ என்று கன்னத்தில் போட்டுக் கொண்டபடி பிரகாரத்தில் அமர்ந்திருந்த மக்களையும் வரையப்பட்டிருந்த பிரம்மாண்ட கோலங்களையும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அது யார் தூரத்தில்.. அவளா.. ஆம் முத்தழகிதான். வெறுப்பு பொங்கிக் கொண்டு வந்தது தேவிக்கு.

 

வளையல் வளையலாகக் கழண்டு விழுவது போல அவள் கண்ணெதிரே கறுப்பாகப் பட்டாம்பூச்சிகள் பறக்கத் துவங்கின. சருகாய் சரிந்து விழும் அவளை நோக்கி நீலாக்கா ஓடிவந்து கொண்டிருந்தார். அதற்குள் பக்கத்தில் இருந்த யாரோ தாங்கிப் பிடித்தார்கள். முழுதாக மயக்கத்துக்குப் போகும் முன் அவள் அருகே பார்த்த முகம் பதட்டத்தில் இருந்த முத்தழகியுடையது.

 

பால் குடமும் மதுக்குடமும் முளைப்பாரியும் கடந்து போய்க்கொண்டிருந்தன அம்மன் கோவில்களை நோக்கி. அழகர் ஹெல்த் ஃபவுண்டேஷனில் இருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த கார் ஓரம் கட்டியது. ஸ்டீரியங்கில் சாய்ந்து மனம் கொள்ளாக் கவலையோடு பக்கத்தில் அமர்ந்திருந்த தேவியையே பார்த்துக் கொண்டிருந்தான் ஸாம். மனம் நிறைந்தவள். வாழ்வை நிறைத்தவள். இன்பத்தை வாரி இறைத்தவள். கேட்டதெல்லாம் கொடுத்தவள். நிறைவான வாழ்வு வாழாமல் சென்று விடுவாளோ. அவளைக் காப்பாற்ற முடியாமல் போய்விடுமோ..

 

கையில் ட்ரிப்ஸ் ஏற்றுவதற்காக ஊசி குத்தப்பட்ட இடத்தில் இருந்த பாண்டேஜ் தேவிக்கு வலியோடு உறுத்தியது. ஒரு நாள் முழுதும் அவள் படுக்கையில் கழித்திருந்தாள். நீலாக்காவும் முத்தழகியும் பின் சீட்டில் அமர்ந்திருந்தார்கள். டாக்டர் சொன்ன விஷயத்தை அகஸ்மாத்தாகக் கேட்ட இருவருக்கும் பயத்தையும் கவலையையும் அடக்க முடியவில்லை. ஒன்றும் பேசாமல் மௌனம் காத்தார்கள்.

 

“விரதம் எல்லாம் என்ன வேண்டி இருக்கு. ஆளே வீக்கா இருக்கே. ஒழுங்காவே சாப்பிடுறதில்லை. சாப்பாட்டுல உன் கோவத்தைக் காட்டாதே. “ மேலுக்குப் பேசிக் கொண்டிருந்தாலும் அவன் உள்ளம் டாக்டர் அழகப்பன் சொன்ன விஷயத்தின் வீரியத்தில் இறங்கிக் கிடந்தது.

 

”வயிறு காய்ஞ்சா வயித்துல புண், வாய்ப்புண் வரும். அது தொடர்ந்து ஆறாம இருந்தா கஷ்டம். ஏதோ ஒண்ணை, பிடிச்சதை பிடிவாதம் செய்யாம சாப்பிடலாம்ல. எனக்காகக் காத்திருக்காதேன்னு பல முறை சொல்லிட்டேன் வேற. ”

 

வங்களுக்கு லோ பிபி இருக்கு. அதுவும் கிட்டீனெஸுக்கு ஒரு காரணம். “ படுக்கையில் இருந்த தேவியின் பிபியை செக் செய்த டாக்டர் சொல்லிக் கொண்டிருந்தார். ”இன்னும் இரு நாள் இங்கே இருக்கட்டுமே ஸாம்.”

 

”இல்லை நான் வீட்டுக்குப் போகணும்”. பிடிவாதமாக கையில் ட்ரிப்ஸுடன் எழுந்து அமர்ந்தாள் தேவி. அவளுக்கு அந்த பினாயில் வாடையும் ஆஸ்பத்ரியின் நோய் நாடியும் என்னவோ செய்தது. ராணியை வேறு அசர்ந்தப்பமாக ஞாபகப்படுத்தி படுத்தி எடுத்துக் கொண்டிருந்தது. 

 

அவளது நாக்கை நீட்டச் சொல்லியும் வாயை அசைக்கச் சொல்லியும் பார்த்துக் கொண்டிருந்த டாக்டர் ” சின்னப் புள்ளையில டான்சில் பண்ணிருக்கா.. என்று கேட்க, ஆமென்று தலையசைத்த தேவியிடம் “ சரிம்மா சாயங்காலம் போகலாம். ஸிஸ்டர் இந்த டெஸ்ட் எல்லாம் எடுத்துடுங்க. ”என்றபடி அவர் ஸாமிடம் ”சரி மிஸ்டர் ஸாம் என் ரூமுக்கு கொஞ்சம் வாங்க “ என்றபடி சென்றார். பின் தொடர்ந்தான் ஸாம்.

 

எடை, உயரம், ரத்தம், சிறுநீர், எல்லாம் டெஸ்ட் செய்ய எடுத்த நர்ஸ் க்ளாம்புடன் மூடி போட்ட கப் ஒன்றை நீட்டி எச்சிலையும் துப்பச் சொல்லி எடுத்துக் கொண்டாள்.   

 

’இந்தக் கறையான்கள் எல்லாம் போனாலே நான் நல்லா ஆயிடுவேன்’ என்று முத்தழகியையும் ராணியையும் பற்றி நினைத்தாள் தேவி.

 

சஸ்பெக்ட் ஷி இஸ் ஹாவிங் ஓஎஸ்சிசி. ( OSCC ) ஓரல் ஸ்வாமஸ் செல் கார்சினோமா. – வாய்ப்புற்று.”

 

”ஓ மை காட். அவளுக்கு இது எப்பிடி..?” அதிர்ந்தான் ஸாம். தொய்ந்து அமர்ந்தான்.

 

”இதுக்குக் காரணமே தேவையில்லை சாம். தைரியப்படுத்திக்குங்க. மெட்டபாலிசம் &  ம்யூட்டேஷன் கூட காரணமா இருக்கலாம். இவங்களுக்கு உடம்பில் ஃபோலேட் அமிலம் குறைவா சுரக்குதான்னும் தெரில. அதுனால கூட மவுத் கான்ஸர் வரும். இது மவுத் அல்சராவும் இருக்கலாம். டோண்ட் கெட் பானிக். ஈஸி டெஸ்ட்தான் சீக்கிரம் தெரிஞ்சிடும். ”

 

ஃபோனை தேவியின் கட்டிலில் வைத்துவிட்டு வந்துவிட்டான் ஸாம். அதை நீலாக்காவிடம் கொடுத்துவிட்டாள் தேவி. டாக்டர் ரூம் தெரியாமல் அவர் தடுமாறித் திரும்ப தேவியின் அறைக்கே வந்தார்.

 

அவரது அப்பாவிடமிருந்து அடுத்தடுத்து ஃபோன் வந்து கொண்டேயிருந்தது. எனவே அவனது செல்ஃபோனைக் கொடுக்க முத்தழகியும் நீலாக்காவும் நீளக் காரிடாரில் நடந்து வந்து கதவைத் திறக்க டாக்டரின் ரூமில் நிகழ்ந்த உரையாடல் அகஸ்மாத்தாகக் காதில் விழ இருவரும் பேயறைந்தது போலானார்கள்.

 

வீட்டின் கேட் திறந்திருக்க வாட்ச்மேன் கணபதி டாமியைப் பிடித்துக் கொண்டிருந்தார். அது வெகுநேரம் தேவியக் காணாமல் அதகளம் செய்து கொண்டிருந்தது.

அங்கே வாசலிலேயே கவலை தோய்ந்த கண்களோடு நின்றிருந்தார்கள் தேவியின் பெற்றோரும், ஸாமின் பெற்றோரும். ஆடி வெய்யிலோடு புழுக்கம் வாட்டியது அனைவரையும்.

 

காரை விட்டு இறங்கியதும் இறங்காததுமாக அப்பா அம்மாவைப் பார்த்ததும் ஓடிச் சென்று அம்மாவைக் கட்டிக்கொண்டு தேவி அழ, தொய்ந்து நடந்து வந்த ஸாமும் தன் அம்மாவை அணைத்துக் கொண்டான். அவன் கண்களில் இருந்தும் தன்னையறியாமல் கண்ணீர் வழிந்தது.

 

ஒரே நொடியில் பல்வேறு விஷயங்கள் தாக்க இருவரின் பெற்றோரும் சிலையாய்ச் சமைந்து நின்றார்கள். டாமியோ அனைவரையும் கண்ட உற்சாகத்தில் எவ்வி எவ்வி தேவியைப்பிடித்துக் கன்னத்தை நாவால் நக்கிக் கொண்டிருந்தது.

 

அதே சமயம் அம்மன் பேனரோடு ஒரு ஆட்டோ ரோட்டில் பாடியபடி சென்றது.. ”காத்திடுவாள் ஆத்தாள் காத்தாயி.. திருக்கண்ணபுரம் சேர்ந்தாள் மகமாயி..  திருவேற்காட்டில் காத்திருந்தாள் கருமாரி அம்மா விளையாடுகின்றாளே ஒரு மாரி.. “

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...