மகர்மச் யா மஹாதேவ்
”சாதுர்யம் பேசாதேடி என் சலங்கைக்குப் பதில் சொல்லடி..
” பாடிக்கொண்டிருந்தது அந்த மஹேந்திராதாரில் மாட்டி இருந்த பென் ட்ரைவ்.
”இன்னொருத்தி நிகராகுமோ எனக்கின்னொருத்தி
நிகராகுமோ.. ” இப்பவெல்லாம் என்ன என்னவோ பாட்டைக் கேட்டுக் குட்டிச்சுவராகிப் போய்க்கொண்டிருக்கிறாள்
தேவி. நல்ல வேளை சீரியல் எல்லாம் பார்க்காமல் இருக்காளே. நினைத்துப் பெருமூச்சு விட்டான்
சாம்.
மெர்க்கராவின் எஸ்டேட். கொண்டை
ஊசி வளைவுகளில் மடிக்கேரி என்று கன்னட எழுத்துக்கள் மின்னின. காஃபி எஸ்டேட்டின் வனப்புக்குள்
புகுந்து புகுந்து சென்றது அந்த ஜீப்.
இன்ஸ்டண்ட் காஃபி பவுடர் தயாரிக்கும் கம்பெனியிலிருந்து காஃபியின் தவிர்க்கமுடியாத அரோமா எழும்பிக்கொண்டிருந்தது. பாசம் பிடித்த மண்ணில் பச்சையமிட்டிருந்தன ஏலச்செடிகளும் மிளகுக் கொடிகளும்.
”கொஞ்சம் காஃபி சாப்பிட்டுட்டு
பின்னே எஸ்டேட் போவோம் தேவி” ஆம் என்றும் சொல்லாமல்
இல்லை என்றும் சொல்லாமல் டேஷ்போர்டில் செல்ஃபோனை வைத்தாள் தேவி.
அது பன்னெடுங்காலமாக இருக்கும் அவர்களது காஃபி கம்பெனி.
கரவுசெறிவான பேலன்ஸ்ஷீட் உள்ளது. வருடாந்திர நிகரலாபம் பல லகரங்கள். பங்குச்சந்தையில்
ஏ பிளஸ் கம்பெனிகளில் சிறந்ததாக லிஸ்டட் ஆகியிருந்தது. ஆன்யுவல் ரிப்போர்ட்டுடன் ஷேர்ஹோல்டர்களுக்கு
டிவிடெண்டுகளே வருடம் தோறும் பல ஆயிரங்கள் கொடுப்பார்கள். வளர்ச்சிப்பாதையில் சென்று
கொண்டிருக்கும் குடும்ப பிஸினஸ்களில் ஒன்று.
எத்தனை எத்தனை ரசனையான பயணங்கள்
மேற்கொண்டிருக்கிறார்கள் இருவரும். இப்போதெல்லாம் மெக்கானிக்கலான பயணங்கள் ஆகிவிட்டது.
எந்த ஆரம்பமும் இல்லாமல் முடிவும் இல்லாமல் ஏதோ ஒரு பயணப்பாதையில் தான் மட்டும் தனித்துச்
செல்வது போன்ற கனவுகள் அவளுக்கு வரத்துவங்கி இருந்தன.
ஸாம் உள்ளே சென்றிருந்தான். மனமில்லாமல்
அவளும் இறங்க கதவைத் திறந்தாள். டேஷ்போர்டில் வைத்த செல்ஃபோனை எடுக்க அதனுடன் ஒரு பிரிண்டட்
பேப்பர் வந்தது. சுகப்ப்ரசவத்துக்காக தான் சொல்லிய ஸ்லோகம் பத்துக் காப்பியாவது பிரிண்டாகி
மடிக்கப்பட்டிருந்தது. அடிக்கடி பிரித்துப் படித்ததுபோல் ஓரமெல்லாம் மடிந்து அழுக்காகிக்
கிடந்தது.
ஹ்ம்ம். அவள் மனம் முழுக்க வெறுமை
பரவியது. இது எல்லாம் அவளுக்காக, அந்த ராணிக்காக. அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்காக.
இதையெல்லாம் பார்த்துத் தான் பொறாமைப்படுவதுகூட நியாயமா. தனக்காக, தங்களுக்காகக் குழந்தையைச்
சுமக்கும் அவளிடம் நட்பும் பாசமும் தோன்றாமல் வெறுப்பு விளைவது ஏன். ? ஸாம் காட்டும்
அதீத அக்கறையா.
மண்ணாங்கட்டி, மை ஃபுட். யாரோ
எப்படியோ போகட்டும். யாரும் எனக்கு நிகரில்லை. குழந்தை பிறந்தால்தான் ஒருத்தரின் வாழ்க்கை
முழுமை பெறுமா. என் வாழ்க்கையை எனக்குப் பிடித்தபடி நான் வாழ்ந்து சென்றாலே முழுமைதானே.
நானென்ன இவரின் கைப்பொம்மையா. அடிமையா. முதன்முதலாகத் தனித்து நின்று யோசித்தாள் தேவி
”நல்ல ஃப்ளேவர் இல்லடா” என்றான்
ஸாம். ஆமென்று தலையசைத்தாலும் பிடிக்காத நாடகத்தில் நடித்துக் கொண்டிருப்பது போல் அவஸ்தையாயிருந்தது
அவளுக்கு. பிடியை விட்டுவிடலாமா என்று பல்வேறு கணங்களில் தோன்றியது இன்றும் தோன்றி
மூச்சுத் திணற வைத்தது. இதற்கு மேலும் இந்த ட்ராமாக்களைத் தொடர்ந்து கொண்டிருக்கமுடியாது.
அன்புக்குப் பதில் அன்பு, பரஸ்பர
அன்பு, கட்டாய அன்பு, கடமைக்கான அன்பு, இதெல்லாம் போக உன் மனதில் காதலுக்கான அன்பு
இல்லையா விரல் சுட்டிக் கேட்டது மனசு.
டயர் படிந்த மண் தரைகளில் ஓடி
எஸ்டேட்டைத் தொட்டு நச் என்று கச்சிதமாக நின்றது மஹேந்திராதார்.
”கண்ணு சொல்ல மறந்துட்டேன். நாம
மூணு பேரும் குஜராத் போகலை. சென்னையிலேயே அதுக்கு ஏற்பாடு பண்ணிட்டேன்” என்றான். அவனைத்தான்
பார்த்தாள். ஆனாலும் அதில் ஆமோதிப்புமில்லை. வெறுப்புமில்லை. அவனையும் தாண்டி அவள்
பார்வை எங்கோ படிந்திருந்தது.
”இன்றைய ராசி பலன் மகிழ்ச்சின்னு போட்டிருக்கு பேப்பரில். அதான் நீங்க வந்துட்டீங்க
சார் என்று முருகன் மகிழ்ந்து கொண்டிருந்தான். எதிர்பாரா விசிட்தான் அது.
“கோழி வறுவல் செய்யிறேன். மீனை
குழம்பு வைக்கவா சார். பக்கத்து எஸ்டேட்ல தொட்டிமீன் வளர்க்குறாங்க. செம டேஸ்ட்” என்றான்
முருகன். அங்கே இருந்த பேப்பர்களைப் புரட்டியபடி
”கொஞ்சம் கொழம்பு வைச்சிட்டுக் கொஞ்சம் மீனைப் பொரிச்சிடு” என்றான் சாம்.
”தேவி நீ மகர ராசிதானே.. உனக்கு
சிந்தனைன்னு போட்டிருக்கு ராசிபலன். கரெக்டா இருக்கே. இன்னிக்கு பூரா காலைலேருந்து
சிந்திச்சிக்கிட்டே இருக்கியே” என்று கிண்டலடித்துச் சிரித்தான். ”ஆமாம் நான் ஒரு மகர்மச்தான்
”என்று கசப்பு வழிய தேவியும் புன்னகைத்தாள்.
”அப்பிடின்னா” என்றான் ஸாம்.
”முதலை, அதுக்கு மகர்மச்சுன்னு
பேரு. இரையைப் பிடிச்ச அடையாளமே இல்லாம முழுசாத் தின்னுடும். மகரராசிக்கு மகரயாழையும்
சொல்லலாம்” என்று தொலைக்காட்சியில் சேனல்களைத் திருப்பியபடி அமர்ந்திருந்தாள்.
ஆடிட்டர் ஆஃபீஸில் வருடாந்திர
இன்கம்டாக்ஸ் கணக்கு வழக்கு முடிக்கவேண்டும் என்று சொல்லி ஸாம் மதிய உணவுக்கு வருவதாகச்
சொல்லிச் சென்றான். மீன் வறுபடும் வாசம் வந்துகொண்டிருந்தது. எலுமிச்சை, வினிகர் போட்டுக்
கழுவி, உப்பு, மிளகாய்த்தூள் கார்ன்ஃப்ளோர், ப்ரெட் க்ரம்ப்ஸ் எல்லாம்போட்டு புரட்டி
ஊறவைத்த மீன்களை வறுத்துவைத்துக் கொண்டிருந்தான் முருகன்.
குஜராத்தின் கத்தியவாரில் இருக்கும்
மஹாதேவ் கோவிலைக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். முதலையையே மஹாதேவராக வணங்குவதாகச்
சொன்னார் தொகுப்பாளர். நிமிர்ந்து அமர்ந்தாள் தேவி. என்னது மகர்மச் மஹாதேவா. சர்வ வல்லமை
படைத்த ஆண்டவனா ?
தூரத்தே தண்ணீரில் மஹாதேவ் மந்திர்.. அலையடித்துக் கொண்டிருக்கிறது. போட் சீறிச் செல்கிறது. அருகே ஒரு முதலை..
அது மஹாதேவ்மா என்கிறான் போட்காரன். அதைத் தொட்டு வணங்க முற்படுகிறாள் தேவி. நழுவித் தண்ணீரில் விழும் அவளை நெருங்குகின்றன சில முதலைகள்.. நெருக்கத்தில்
பார்க்கும்போது ஒன்று ராணியாகவும், இன்னொன்று முத்தழகியாகவும் முகம் காட்ட மதியத்தூக்கத்தின்
விதிர்விதிர்ப்பில் ஸோபாவில் இருந்து நழுவி விழுந்து எழுந்தாள் தேவி.
எதிரே முத்தழகியும் அவளது தந்தை செந்தில்நாதனும் வந்திருக்க சந்தோஷ முகத்துடன்
பின் தொடர்ந்து வந்தான் ஸாம். முருகன் டைனிங் டேபிளில் சூடாகப் பொரித்த கோழியையும்,
வறுத்த மீனையும் மற்ற உணவு வகைகளையும் பரப்பிக் கொண்டிருந்தான்.
குழம்பில் பரிதாபத்துடன் விழித்த
அந்த மீன்களின் தலையைப் பார்த்தததும் தேவி ஏனோ தன்னை நினைத்துக் கொண்டாள். பழைய
தோழியைக் கண்ட மகிழ்ச்சி அவள் முகத்தில் எங்குமே இல்லை. பேருக்குச் சிரித்து அணைத்துக்
கொண்டாள்.
ஒரே கலகலப்பும் குதூகலமுமாக டைனிங்
ஹால் புதுசாகி இருந்தது. ”அவங்க எஸ்டேட்டுக்கு வந்துட்டுத் திரும்பிட்டு இருந்தாங்கப்பா.
வழியில பார்த்தனா. கையோட ஆடிட்டர் ஆஃபீசுக்கும் கூட்டிட்டுப் போயிட்டு வந்தேன் ”
முத்தழகி சொல்லிக் கொண்டிருந்தாள்.
“ நான் ஸ்கிட் ஆகி விழுந்ததும் மயக்கம் வந்தது. பார்த்தா ஒரு ஹைபர்நேஷன் மாதிரி ஆயிடுச்சு.
மூன்றாம் பிறை படம் மாதிரி. ஒண்ணா டான்ஸ் ஆடினோம்
விழிச்சுப் பார்த்தா நீங்க யாரோவாயிட்டீங்க ஸாம். “ அன்பா , காதலா, ஏக்கமா என்று இனம்பிரிக்கமுடியாமல்
தொனியின் அவசம் கூடத் தெரிந்துவிடாதபடி பேசினாள் முத்தழகி.
”அந்த டிஜிட்டல் ஃபோட்டோ ஃப்ரேம்.
அதுல உங்க ரெண்டு பேர் கூடவும் அப்பா அம்மா எடுத்துக்கிட்ட ஃபோட்டோஸ் அதுனாலதான் நான்
யோசிக்கத் தொடங்கினேன். ” காலத்தின் சுழற்சி எப்படி எல்லாம் வெளியாகிறது வியந்துகொண்டான்
ஸாம்.
’இல்லாட்டி முழிச்சதும் உங்களைக்
கட்டிப் பிடிச்சிக்கிட்டு அழுதுருப்பேன்’ என்று சொல்ல நினைத்ததை சோற்றோடு முழுங்கினாள்.
அவள் பார்வையில் அதைப் படித்த ஸாம் தலையைக் குனிந்து கொண்டான்.
’கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம்
கொண்டாடுதே’ என்ற பாடல் வரிகள் ஓட தேவியின் தலைக்குள்ளிருந்து கண்ணுக்குத்தெரியாத கொம்புகள்
முளைத்தன. அவளும் தலைகுனிந்து தன் கோபத்தை மறைத்துக் கொண்டாள். கொம்புகள் முளையிலேயே
அமுங்கிக் கொண்டிருந்தன.
”முருகன் சமையல் எப்பவும் போல
அற்புதம். ”அப்பாவும் மகளும் சர்டிஃபிகேட் கொடுக்க சைலண்ட் மோடில் கிடந்த ஸாமின் போன்
துடிக்கத் தொடங்கியது. அதை சட்டைப் பையில் இருந்து எடுத்துப் பார்த்த ஸாம் பாதிச் சாப்பாட்டிலேயே
பூகம்பம் வந்தமாதிரி இருப்புக் கொள்ளாமல் சட்டென்று முடித்துவிட்டுக் கைகழுவி விட்டுக்
கிளம்பினான்.
ஒரு ஐந்து நிமிடத் தனிமைக்காக
அவன் தேவியிடம் பொய் சொல்ல வேண்டி வந்தது., ஆடிட்டர் ஆஃபீஸ் என்று. ராணியிடமிருந்து
ஃபோன். என்ன அவசரமோ தெரியலையே. அவன் தொண்டையில் சாப்பாடு ஒரு கவளம்கூட இறங்கவில்லை.
”இப்போதானே வந்தோம். அவர் நாளைக்கு
வந்தா போதும். எல்லாம் ஹேண்டோவர் பண்றேன்னு சொன்னாரே ஆடிட்டர்.. என்ன அவசரம் ஸாமுக்கு..”
என்றார் யதேச்சையாக செந்தில்நாதன்.
”எல்லாம் எனக்குத் தெரியும்.
எல்லாம் குழந்தைக்காகப் பொறுக்கிறேன். அதன்பின் தெரியும் நான் மகர்மச்சா மஹாதேவா என்று.”.
விரிந்த விழிகளுடன் குழம்பில் செந்நிறமாக நீந்திக்கொண்டிந்தன மீன்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)