எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 10 மே, 2017

இயற்கை விவசாயத்தின் தேவை குறித்து ஆரண்யா அல்லி.


ஆரண்யா அல்லி. இயற்கை விவசாய ஆலோசகர். உரங்கள், பூச்சிக் கொல்லிகள், இரசாயனங்கள் மூலம் இயற்கை பாழ்பட்டதோடு உடல் மனம் சார்ந்த நோய்க்கூறுகளுக்கு மனித இனம் பகடைக்காயாய் ஆகிவிட்டதையும் அதிலிருந்து மீள்வது பற்றியும் அவரிடம் மகளிர் தரிசனத்துக்காகக் கேட்டோம்.


சுற்றுச்சூழல் மாபெரும் மாசடைந்துள்ள சூழலில் இன்றைய தேவையான உரமில்லா இயற்கை விவசாயம், வீட்டுத்தோட்டம்/மாடித்தோட்டம், பால்கனித்தோட்டம் அமைப்பது பற்றியும் அதன் அத்யாவசியம் பற்றியும் கூறுகிறார்.

மாடித்தோட்டம் அல்லது வீட்டுத்தோட்டம்.:-
வீட்டுத்தோட்டம் :-

நாமெல்லோருமே முன்னோர்கள் வழியாக விவசாயிகள்தான். இப்போது நகரவாழ்வின் இடப்பற்றாக்குறை “கொல்லை “என்னும் தோட்டத்தின் இடமில்லாமல் செய்துவிட்ட காரணத்தால் இருக்கும் கிடைக்குமிடங்களில் தொட்டிகள், செடிவளர் பைகள் ( க்ரோ பேக்ஸ்  இதற்கென தயாரிக்கப்படுபவை ) உடைந்த அல்லது உபயோகமில்லாத கண்டெயினர்கள், (உதாரணமாக பழைய பேரல்கள், அரிசி சாக்குகள், ப்ளாஸ்டிக் கேன்கள்) மூலம் நமது விவசாய ஆசையை பூர்த்தி செய்து கொள்கிறோம்.

செடிகளை விரும்பாதவர்கள், செடிகளை வளர்க்க விரும்பாதவர்கள் யாராவது உண்டா?

ஒரு மரத்தை வெட்டுபவரின் வீட்டில் பார்த்தால் சின்ன டப்பாவிலாவது டேபிள் ரோஸ் மலர்ந்து சிரித்துக் கொண்டிருக்கும். காலையில் அதற்கு நீரூற்றிவிட்டுத்தான் அன்றைய வேலைக்குக் கிளம்பி இருப்பார். இவர் யாருக்காக வெட்டினாரோ அவருடைய பங்களா பசுமைப் போர்வையில் ஜொலித்துக் கொண்டிருக்கும்.

அதிகபட்சம் இரண்டு தலைமுறைக்கு முன் ஒவ்வொரு வீட்டின் முன்னும் பின்னும் இடம் இருந்தது. அநேகமாக எல்லா வீடுகளிலும் இருக்கும் இடத்தைப் பொறுத்து முருங்கை, எலுமிச்சை, வாழை, கொய்யா, மாதுளை, மா, சப்போட்டா மரங்கள் இருந்தது.

கொஞ்சம் பூச்செடிகளும் கத்திரி, வெண்டை, சுண்டைக்காய், தக்காளி, மிளகாய்ச்செடிகளும் இடையிடையே புளிச்சை, புதினா, மணத்தக்காளி, கொத்துமல்லி, கீரை வகைகளும் கண்டிப்பாக இருக்கும்.

இப்போது போல அப்போது காம்பவுண்டு ஏது ? வேலிப்படல்தான். அதில் புடல், பாகல், அவரை, சுரை, பீர்க்கு என்று படர்ந்திருக்கும். விவசாயிகளே நகரவாசிகள் கேள்விப்படாத பண்ணைக்கீரை, தொய்யக்கீரை, குப்பைக்கீரை, குமிட்டிக்கீரை என்று எத்தனையோரகக் கீரைகள் பற்றி அறிந்து சொல்வார்கள். 

ஆனால் இப்போது நகர நெருக்கடியில் சதுர அடிக் கணக்கில் கேக் துண்டுகளாக இடம் விலை சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் இக்காலகட்டங்களில் கிடைக்கும் இடங்களில் எல்லாம் செடிகள் வளர்க்க வேண்டியதாக உள்ளது. இது காலத்தின் தேவைதான். வேறு வழியில்லை.

மொட்டைமாடித் தரை, பால்கனி, காம்பவுண்ட் சுவர் ஓரங்கள், ஜன்னல் ஓரங்கள், தொங்கும் சட்டிகள் எங்கெங்கு முடியுமோ அங்கு ஏதெல்லாம் வளர்க்க முடியுமோ அவை வளர்த்தே ஆகவேண்டியது அவசியமும் அவசரமும் ஆகும்.

வீட்டுத் தோட்டம் அல்லது மொட்டைமாடித் தோட்டம் ஏன் ? எதற்காக ?

பூக்கள் அழகுக்காக வளர்க்கப்படும் செடிகள் போக இன்று நம் காய்கறித் தேவைகளுக்காக நாம் ஒவ்வொருவரும் வீட்டுத்தோட்டம் போடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

பூச்சிகளுக்கு அல்லாமல் நமக்கும் பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு .
நாம் உண்ணும் உணவில் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட விஷத்தின் அளவை ( ஙே ! )  விட கிட்டத்தட்ட 700 முதல் 1000 மடங்கு விஷம் கண்டறியப்பட்டுள்ளதாக ஒரு அறிக்கை சொல்லுகிறது. முக்கியமாக இன்று எங்கெங்கும் மிக மிகத் தாராளமாகப் பயன்படுத்தப்படும் எண்டோசல்ஃபான் என்பதொரு நஞ்சு. முதல் தலைமுறை மருந்து இதை பெரிய அளவில் பயன்படுத்தியது.

கேரளாவில் உள்ள காசர்கோடு முந்திரித் தோட்டத்தில் பூச்சி பாதிப்பு ஏற்பட்டபோது ஹெலிகாப்டர் வழியாக 1970 ஆம் ஆண்டு முதல் பரவலாகத் தெளிக்கப்பட்ட நஞ்சு மூலம் பூச்சிகள் கட்டுப்படுத்தப்பட்டதா எனத் தெரியவில்லை. ஆனால் இன்றளவும் 2017 வரையும் ( ஏன் அதற்கு மேலும் தொடரக் கூடும் ) மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்ட கண்ணீர்க் கதைகளுக்குப் பஞ்சமே இல்லை. குறைப் பிரசவங்கள், மரபியல் குறைபாடுகள், மலட்டுத்தன்மை, கேன்சர், மற்றும் புலன் நுகர்வுக் குறைபாடுகள் என்று பட்டியலிட முடியாது.

இப்போதைய சூழலில் நாம் பயன்படுத்துவது ஐந்தாவது தலைமுறை நஞ்சு அதாவது ஊடுருவிப் பாயும் நஞ்சு, விஷம் தெளிக்கப்பட்ட இலை, காய்கள் எந்தப் பகுதியை பூச்சி சாப்பிட்டாலும், வாசனை நுகர்ந்தாலும் பூச்சியின் நரம்பு மண்டலத்தைத் தாக்கி பூச்சியை அழிக்கும் வல்லமை கொண்ட ஆர்கனோ பாஸ்பேட் வகை நஞ்சுகள்.

நிலத்தைப் பயிரிடத் தொடங்குமுன் களைக்கொல்லி எனும் நஞ்சை நிலத்தில் கொட்டத் துவங்கி விடுகிறோம். அடுத்து உரம் என்னும் இரசாயனம், முளைத்துத் துளிர்க்கத் துவங்கிய உடன் சராசரியாகப் பத்து நாட்களுக்கு ஒரு முறை பூச்சிக் கொல்லி, பின்னரும் உரம், மீண்டும் மீண்டும் பூச்சிக் கொல்லி.

ஒரு விஷச் செடியில் விளையும் கத்திரிக்காய் பூத்து பிஞ்சாகி காயாகி அறுவடைக்குத் தயாராவதற்குள் பதினைந்திலிருந்து இருபது நாட்கள் ஆகிறது என்றால் அந்தக்காய் குறைந்தபட்சம் நான்கு முறை நஞ்சில் குளிப்பாட்டப்படுகிறது.

போதாக்குறைக்குக் காய்கறிக் கடைகளில் மீண்டும் மீண்டும் ரசாயனத்தில் நனைத்து எடுக்கப்பட்டு அது வாடாமல் பார்த்துக் கொள்ளப்பட்டு பளப்பள ஒளிவெள்ளத்தில் ட்ரேக்களில் அழகுற அடுக்கப்பட்டு விற்பனைக்குக் காத்திருக்கிறது.

கீரைகளோ இன்னும் ஆபத்து. கீரைகளுக்குப் பூச்சித் தொல்லை அதிகம் என்பதால் 20 நாட்களில் இருந்து 30 நாட்களில் விளைந்துவிடும் கீரைக்கு நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒரு முறை பூச்சிக்கொல்லி அடிக்கப்படுகிறது.

அடுத்த முறை நீங்கள் காய்கறி கீரைகள் வாங்கியபின் முகர்ந்து பாருங்கள். அதில் வீசுவது காய்கறி கீரைகளின் ஒரிஜினல் மணம் அல்ல. அது மோனோ குரோட்டம்பாஸ் என்னும் கொடிய நஞ்சின் மணம்.

10 மிலி மோனோகுரோட்டம்பாஸ் குடித்துவிட்டாலே நாம் தப்பிப்பது கடினம் எனில் தினம் தினம் மைக்ரான் மில்லி எடுத்துக்கொண்டாலும் ஆரோக்கியம் தரும் காய்கறிகளே நம்மைக் கொல்லும் ஆலகாலமாக மாறிவிடும்.

எனவேதான் நம்மிடம் நிலம் இல்லை விவசாயம் தெரியாது எனினும் குறைந்தபட்சம் அன்றாடம் கண்டிப்பாக உபயோகிக்கும் நாம் உண்ணும் கீரை காய்கறிகளையாவது நாமே உற்பத்தி செய்துகொள்வது இன்றைய அவசிய அவசரத் தேவையாகும்.
எப்படிச் செய்வது ?

தேவையானவை :- க்ரோ பேக்ஸ், அரிசிப் பைகள், தொட்டிகள், மரப்பெட்டிகள், பழைய ப்ளாஸ்டிக் கண்டெயினர்கள். காயர் பித் ( கோகோபித் ), மண்புழு எரு, செம்மண், கலவையை நம்மிடம் உள்ள பாத்திரத்தில் இட்டு கீரை விதைகள், செடி விதைகளை விதைக்க வேண்டியதுதான்.

எங்கு கிடைக்கும். ?
உங்கள் அருகில் உள்ள நர்சரி கார்டன்களில் தேவையான பொருட்கள் விதைகள் கிடைக்கும். அக்ரோ சர்வீஸ் என்னும் விவசாய இடுபொருட்கள் விற்கும் கடைகளில் விதைகள் கிடைக்கும்.

எல்லாப் பொருட்களும் சேர்ந்தபின் :-
கீரை விதைகளை அப்படியே தூவி நீர் விட்டால் இரண்டாவது நாளில் முளைத்துவிடும். 20 நாட்களில் இருந்து 30 நாட்களில் அறுவடை செய்து கொள்ளலாம். புதினா மட்டும் தண்டுகளை ஊன்றிவைத்தால் போதும்.

புதினா, பாலக், தண்டுக்கீரை, மணத்தக்காளி போன்றவை ஒரு முறை நட்டால் போதும். பலமுறை அறுவடை செய்து கொள்ளலாம். மற்றவை பிடுங்கி எடுத்துவிட்டு மீண்டும் மீண்டும் விதைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

வெண்டை, கொத்தவரை, முள்ளங்கி போன்ற விதைகளை அப்படியே ஊன்றவேண்டியதுதான். கத்திரி, தக்காளி, மிளகாய் விதைகளை ஒரு பையில் பரவலாகத் தூவி நீர் விட்டு வர முளைத்து வரும். அவைகளே நாற்று எனப்படும். தக்காளியை 30 நாள் செடியாகப் பிடுங்கி நட்டுக் கொள்ளலாம். கத்திரி, மிளகாயை 40 நாள் செடியாகப் பிடுங்கி நடலாம்.

கொடி வகைகளை பாகல் பீர்க்கன் புடலை செடி அவரை பீன்ஸ் வகைகளுக்கு செடி வளர்க்கும் பை கொஞ்சம் பெரிதாக வேண்டும். அவ்வளவுதான். கொடி படர நான்கு குச்சிகளையோ பிவிசி பைப்புகளையோ வைத்து சிறுபந்தல் அமைத்தும் கொள்ளலாம்.

தரை ஈரம் கோர்க்குமா ?
ஒவ்வொரு பையின் அடியிலும் இரண்டு செங்கல்களை வைத்து அதன்மேல் இப்பைகளை வைக்கும்போது வடிகிற நீர் எளிதில் ஆவியாகிவிடும். பயம் வேண்டாம்.

பூச்சிகள் வருமே ?
ஆமாம் உலகில் படைக்கப்பட்ட அத்தனை உயிரினங்களும் வாழத் தலைப்பட்டவைதானே.

எப்படிக் கட்டுப்படுத்துவது ?
வேப்பம் புண்ணாக்கு, பூண்டு இஞ்சி பச்சைமிளகாய் அரைத்த கரைசல் போதுமானது. கிட்டத்தட்ட 80 % பூச்சிகளைக் கட்டுப்படுத்திவிட முடியும்.

குறிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய செடிகள் குறைந்தபட்சம் கத்திரி, மிளகாய், தக்காளி, வெண்டை, முள்ளங்கி, புதினா, கொத்துமல்லி, மணத்தக்காளி, சிறுகீரை, தண்டுக்கீரை, வெந்தயக்கீரை, பாகன், பீர்க்கன், புடல், பிரண்டை, துளசி, கற்பூரவல்லி, கற்றாழை, முடக்கற்றான், தூதுவளை இவைகள் இருந்தாலே, அதாவது இவற்றை வளர்த்து தொடர்ந்து உபயோகித்து வந்தாலே நம் ஆரோக்கியம் மேம்படுவதை நன்றாக உணரலாம்.

அபார்ட்மெண்ட்ஸ் என்னும் அடுக்கங்களில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்குள் மணி ப்ளாண்ட், துளசி, கற்றாழை, பசலை, ஐவி, மார்ஜினட்டா, போன்ற செடிகளை வளர்ப்பது வீட்டுக்குள் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கவும் மன அழுத்தம் குறைக்கவும் அலங்காரத்துக்கும் உபயோகம் ஆகும்.

மேலும் முக்கியமாக அபார்ட்மெண்ட் மேல் தளங்களில் தனியாகவோ, கூட்டாவோ சேர்ந்து காய்கறிகள், கீரைகள், பூக்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்து தாங்களே பயன்படுத்திக் கொள்ளவும் இன்னும் அதிக அளவில் செய்து விற்பனை வாய்ப்பாகவும் பயன்படுத்தலாம்.

ஆர்கானிக் ஃபார்மிங்.
ஆர்கானிக் இயற்கை விவசாயம் என்பதும் இயற்கை விவசாயம் என்பதும் இங்கு ஒன்று போலவே பார்க்கப்படுகிறது. என்றாலும் இரண்டும் வேறு வேறு.

ஆர்கானிக்.
ஆர்கானிக் விளைபொருட்கள் என்பவை குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு குறிப்பிட்ட நிலத்தில் குறிப்பிட்ட வழிமுறைகளின்படி விளைவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கும் துறையால் பரிசோதித்து அங்கீகாரம் பெற்று விற்பனைக்கு வருபவை. சான்றிதழ் அங்கீகாரம் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. ஆனால் நடைமுறை வசதிக் குறைவால் ஆர்கானிக் உற்பத்தியாளர்களே கூட சான்றிதழ் பெற முயல்வதில்லை.

உதாரணமாகக் கீரைகளின் விளைநாட்கள் 25 லிருந்து 30 நாட்கள் வரை. மண் தன்மைக்கு சான்று வாங்கிக் கொள்ளலாம். அதில் விளையும் கீரைக்கு ஒரு முறை வாங்கிக் கொண்டால் எப்போதுமே அவை ஆர்கானிக்தான் என்பதற்கு என்ன உத்தரவாதம் ?

இயற்கை விவசாயம்:-
ஆகவேதான் ”ஆரண்யா ஆர்கானிக் ஃபார்மிங்” இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கிறது. இயற்கை விவசாயம் என்பது எந்தவித செயற்கை இரசாயன நஞ்சும் கலக்காமல் இயற்கை இடுபொருட்களை மட்டும் பயன்படுத்தி உற்பத்தி செய்வது. இங்கு தர அளவுகோல் என்பது ஒரு சதுர அடியில் வசிக்கும் மண்புழுக்களின் எண்ணிக்கையும், மண்ணின் மிருதுத்தன்மையும் அதிலுள்ள நுண்ணுயிர்களின் அடர்த்தியுமே ஆகும்.

விவசாயிகளின் நம்பகத்தன்மை பொறுத்து விளைபொருட்களின் விலை கூடும். எனவே நாங்கள் பயிற்சி தரும் அனைத்து விவசாயிகளையும் எப்போதும் தங்களை சமரசம் செய்துகொள்ள வேண்டாம் என அறிவுறுத்துகிறோம்.

ஒரு நிலத்தை எடுத்துக் கொண்டால் முதலில் மண்ணின் மிருதுத்தன்மை, அதிலுள்ள நுண்ணூட்ட பேரூட்டச் சத்துக்களின் அளவு, உப்பு, கார, அமில அளவு, ஹியூமஸ்தன்மை ஆகியவற்றை அளவிட்டு நிலத்தை நிரந்தர வேளாண்மை என்னும் பெர்மா கல்சர் ஸிஸ்டத்திற்குத் தயார் செய்கிறோம்.

பெர்மா கல்சர் என்னும் நிரந்தர வேளாண்மை என்பது உழாத வேளாண்மை ஆகும். ஒரு முறை நிலத்தில் பெர்மா கல்சருக்கான நிரந்தரப் பாத்திகளை அமைத்துவிட்டால் அதில் பராமரிப்பு மட்டுமே செய்து நீண்ட காலத்திற்கு உழாமலே விதைக்கவும் அறுவடை செய்யவும் செய்யலாம். குறிப்பாக கீரைகள் காய்கறிகள் விவசாயத்திற்கு மிகவும் ஏற்ற முறை ஆகும்.

கீரைகள் காய்கறிகள் உற்பத்தி தினப்படி வருமானத்திற்கும் ஏற்றதாகும். இவ்வாறான இயற்கை வேளாண் அமைப்பை “ஆரண்யா ஆர்கானிக் ஃபார்மிங் “ அமைத்தும் தருகிறோம்.


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...