காவியத் தாயின் இளையமகன் கவியரசர் கண்ணதாசன்
சிறுகூடல்பட்டி தந்த முத்து, செட்டிநாட்டின் சொத்து. முத்து சாத்தப்பன் செட்டியாரின் எட்டாவது குழந்தையாக பிறந்தவர் முத்தையா என்கிற கண்ணதாசன். கண்ணனைப் போல பல இடரிலும் விழுந்து எழுந்துதான் அவர் கவியரசரானார்.. கண்ணதாசனானார். அதற்கு முன் அவர் எடுத்த முயற்சிகள் எத்தனை எத்தனை . திரும்பத்திரும்ப முயற்சி செய்ததில் வெற்றி அவர் பக்கம்தான்.. அவரது பேனா முனையில் வார்த்தைகள் தவம் இருந்தன சாபவிமோசனம் பெற.
நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்கள், புதுக்கவிதைகள், மரபுக் கவிதைகள், காப்பியங்கள், உரைநடைகள், சுய சரிதைகள், புதினங்கள், சிற்றிலக்கியங்கள், சிறுகதைகள், நாடகங்கள் இவற்றோடு பதிப்பகப் பணி, பத்திரிக்கைப் பணி, கவிஞர், எழுத்தாளர், வசனகர்த்தா, கட்டுரையாளர், இயக்குநர் எனப் பல பரிமாணங்கள் கொண்டவர்.
திரைப் பாடல்களிலும் ஆன்மீகம், தத்துவம், காதல், சோகம், சுகம் எனப் பல்வேறு உணர்வுகளைப் பிரதிபலித்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர், சேரமான் காதலிக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர். மனவாசம் வனவாசம் அவரது சுயத்தை மட்டுமல்ல சினிமாவிலும் அரசியலிலும் அவர் சந்தித்த மனிதர்களின் சுய ரூபத்தையும் பிரதிபலித்தன.
அவரின் வனவாசம் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதல்ல எப்படி வாழக்கூடாது என்பதற்கான வழிகாட்டி.. உண்மைகளை நிர்வாணமாகவும் துயரங்களைத் தாழ்வு கருதாமலும்., மேன்மைகள் என்று கருதியவற்றை பயத்துடனும்..செய்து வாழ்ந்த ஒரு மகா கவிஞனின் உள்ளீடு இது..
சமுதாயம் நம்மைத்தூக்கி எறிந்தாலும்.. மீண்டும் சமுதாயத்திற்குள் ஓடித்தான் இடம் பிடிக்க வேண்டும் என்பார் கண்ணதாசன், அலையால் வீசி எறியப்பட்டாலும் நண்டு திரும்பக் கடலுக்குள் ஓடுவது போல. காலூன்றாத நண்டு போல் அலை மோதாமல் உயர்ந்த இடத்தில் காலூன்றி விடவேண்டும்,, என்பார்..இப்படி மோதி மோதி முன்னேறிய ஒரு வாழ்க்கைச் சரிதம் அவருடையது..
முதலில் ”திருமகள்” பத்ரிக்கைக்காக புதுக்கோட்டையை அடுத்த ராமச்சந்திரபுரத்தில் ஆரம்பித்தது ஒர் கவியரசருக்கான வாழ்க்கை..முதல் கவிதை வந்தது.. அடுத்து முல்லை பதிப்பகம், திராவிடநாடு இதழ்கள் குடியரசு வெளியீடுகள், அண்ணாவின் உரை கேட்டு அரசியல் பயணம் ஆரம்பம். அருணோதயம் பதிப்பகம், தென்றல், தாய்நாடு, அணிகலம், மேதாவி, பொன்னி, குமரன், சக்தி காரியாலயம், சாயிபாபா புத்தகாலயம், சண்டமாருதம், கஜலெக்ஷ்மி அச்சகம், எனக் கிட்டத்தட்ட 1942 இல் இருந்து 1961 வரையான கால கட்டத்தில் சுமார் ஒரு 20 பத்ரிக்கைகளில் பணியாற்றியும் .. சொந்தமாக பதிப்பகம் நடத்தியும் சேர்த்த அனுபவம் அளவிலடங்கா..
பதினாறு வயதில் சென்னை வந்தபோது கவியரசர் கையில் காசில்லை. மெரீனா பீச்சில் படுத்திருந்தவரை ஒரு காவலர் விரட்டினார். ஆனால் சில ஆண்டுகளுக்குப் பின் அவர் தயாரித்த சுமைதாங்கிப் படத்தில் ஜெமினி கணேசன் பாடும் "மயக்கமா கலக்கமா" பாடல் காட்சியில் அதே மெரினா பீச்சில் அதே இடத்தில் ஏழெட்டுக் கார்கள் நடு இரவின் பின்னணியில் ஓடும். இவை அனைத்துமே கவியரசரின் சொந்தக் கார்கள் என்பதைப் படித்த போது அவரது உழைப்பின் உயர்வு புரிபட்டது. அப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு என்றும் எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி நிலைக்கும். என்றும் மனம் தெளிவு பெறும். நாமும் ஜெயிப்போம் என்ற எண்ணம் ஏற்படும்.
தனது அர்த்தமுள்ள இந்துமதம் என்ற நூலில் காம உணரச்சி, கோபம் பாவம் சண்டாளம், கள்ளம் , கபடம், வஞ்சகம், ஏமாற்றிப் பிழைப்போர் முடிவில் அடையும் கடைகேடான நிலை, சுய தர்மம், சத்துவ, ரஜோ, தமோ குணங்கள் , விரதம், சுய கட்டுப்பாடு, இச்சா பத்தியம் , நாத்திக வாதம், தெய்வானுக்கிரஹம் பகுத்தறிவின் போலித்தனங்கள், பொய்யில்லா வாழ்க்கை, மனதுக்கும் உடம்புக்குமான கடிவாளம் அனைத்தையும் விரிவாக ஆய்ந்திருக்கிறார். பல நூறு பதிப்புகள் வெளியானவை இவரது நூல்கள்.
கோபத்தோடு எழுபவன் நட்டத்தோடு உட்காருவான் என அறிவுறுத்துவார். ஞானம் பிறந்த கதை என்று பட்டினத்தார் பற்றியும் பத்திரகிரியார் பற்றியும் எழுதி இருப்பதைப் படிக்கப் படிக்க நம்முள் உத்வேகமும் பற்றற்ற நிலைக்கான இச்சையும் கூடுவது இயல்பு. முடிவில் நல்லவன் வாழ்வான் என்றும், பதினோறாம் நூலில் கண்ணனுக்கும் அர்ஜுனனுக்குமான போர்க்கால உரையாடலான பகவத்கீதையின் பதவுரைகளும், பாடல்களும் வெகு சிறப்பான முத்தாய்ப்பு.
அவரது மனச்சுரங்கத்தில் புதைந்திருந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் கட்டித்தங்கம் வெட்டி எடுத்தது போலும் பட்டை தீட்டப்பட்ட வைரங்களாயும் வெளிப்பட்டன. உலகம் பிறந்தது எனக்காக, அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும், உலகம் எங்கும் ஒரே மொழி உள்ளம் பேசும் காதல் மொழி, சிந்து நதியின் மிசை நிலவினிலே சேரநன்னாட்டிளம் பெண்களுடனே என உற்சாகமாக வாழ்ந்தவர்.நல்வாழ்த்து நான் சொல்லுவேன் நல்லபடி வாழ்கவென்று என்றும் உலகம் அழகுக் கலைகளின் சுரங்கம் எனவும் ரசனையோடு வாழ்ந்தவர்.
அடி என்னடி உலகம் அதில் எத்தனை கலகம் என்று ஃபடாஃபட்டைப் பாட வைத்தவர். என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, நடக்கும் என்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்துவிடும், சோதனை மேல் சோதனை, பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது, காசேதான் கடவுளடா, அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே, வீடு வரை உறவு, போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா, ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா, மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று என உறவுகளின் நிலையாமையைப் பற்றியும் வாழ்வின் நிலையாமையைப் பற்றியு
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். செந்தமிழ்த் தேன் மொழியாள், கனியக் கனிய மழலை பேசும் கண்மணி, பேசுவது கிளியா, காலங்களில் அவள் வசந்தம். பச்சைக்கிளி முத்துச்சரம், அவள் ஒரு நவரச நாடகம், சிவப்புக் கல்லு மூக்குத்தி சிரிக்க வந்த மான்குட்டி, சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாள் நாணமோ இன்னும் நாணமோ, என் வானிலே ஒரே வெண்ணிலா என்றெல்லாம் அவர் பாட அவளோ கண்கள் இரண்டும் இன்று உம்மைக் கண்டு பேசுமோ, சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம், தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தில் குறைவதுண்டோ எனக் கேட்க அவனும் அவளுமாய் அவரே உருகி உருகிப் பாடலாகி இருப்பார்.
இதுபோலத்தான் அவர் வாழ்வும். மூன்று மனைவியர், பதினைந்து குழந்தைகள். இருந்தும் குறைவில்லாமல் வாழ்ந்து சென்றார். ஒரு பொழுதில் பணக்குவியல், ஒரு பொழுதில் கடன், ஜப்தி என்று அமீனாக்கள் வருகை. வீடு ஏலத்துக்குப் போனபோது அவர் எழுதியதுதான் சிலர் சிரிப்பார், சிலர் அழுவார் நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன் என்ற பாடல் என்று அவரது மகள் ரேவதி ஷண்முகம் ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்தார். அதன் பின் தன் பிள்ளைகளிடம் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஜாமீன் கையெழுத்து மட்டும் யாருக்கும் போட்டுறாதீங்க என்று அறிவுரை கூறுவாராம்.
அவரது மது மாதுப் பழக்கத்தையும் அவர் விட்டுச் சென்ற கடன்கள் பற்றியும் அவரது மனைவிகளோ பிள்ளைகளோ குறை கூறியதுமில்லை. எக்காலத்தும் அவரை விட்டுக் கொடுத்ததுமில்லை. அவர் எழுதிய நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் என்பதே அவர் குடும்பம்தான். எப்போது தந்தையைப் பற்றிப் பேசினாலும் அவரொரு திறந்த புத்தகம் என அவர்கள் கண் கசியவே செய்கிறார்கள் ஏனெனில் அவரது வெளிப்படைத் தன்மைக்காக அவரை அவராகவே ஏற்று அவரது குடும்பத்தினர் ஆழமாக நேசித்து வந்துள்ளார்கள்.
”பொன்னம்மா சமையலென்றால் பூமியெல்லாம் வாசம் வரும், தக்காளிப் பச்சடியும் கொத்துமல்லிச் சட்டினியும் கோவைக்காய்ப் பொரியலுமாய் அள்ளி அள்ளி வைத்திருந்து அருகிருந்து பார்த்திருப்பாள்” என்று மனைவியின் சமையலை விதந்தோதிக் கவி யாத்தவர் அவர். ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை கொண்டார் என்றும் நான் காதல் என்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே என்றும் இவர் பாடியது தன்னுடைய வாழ்வை வைத்துத்தான்.
சல் சல் சல் என்னும் சலங்கை ஒலி என்னும் பாடலில் அவந்தான் திருடன் என்றிருந்தேன் அவனை நானும் திருடிக் கொண்டேன். முதன் முதல் திருடும் காரணத்தால் முழுதாய்த் திருட மறந்துவிட்டேன் எனவும் மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி, கங்கைக் கரைத் தோட்டம், கண் திறந்து பார்த்தேன் கண்ணீர் பெருகியதே என்றும் நீயில்லாத உலகத்திலே நிம்மதி இல்லை, நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா? உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல என்றும் மனைவியரின் காதலியரின் ஆற்றவொண்ணாப் பிரிவாற்றாமையையும் பாடியவர்.
நினைப்பதெல்லாம் நடந்துவிடால் தெய்வம் ஏதுமில்லை, கடவுள் இருக்கிறானா, கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய்ப் போன மனிதர்களாலே, கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும், தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு, கடவுள் அமைத்து வைத்த மேடை, தெய்வம் இருப்பது எங்கே என்றெல்லாம் கேட்பவர் திருமாலின் திருமார்பில் ஸ்ரீதேவி முகமே தெய்வங்கள் ஆராதனை ஊரெங்கும் பூவாசனை என்றும் இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான் என்றும் ஆன்மீகப் பாதையையும் காட்டுவார்
கண்ணன் மேல் கொண்ட காதலால் அவர் பாடிய பாடல்கள்தான் எத்தனை எத்தனை. கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல, கண்ணா கருமை நிறக் கண்ணா, ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல், புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே, கோகுலத்தில் பசுக்கள் எல்லாம் கோபாலன் குரலைக் கேட்டு, உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது பாடலில் மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா மரணத்தின் தன்மை சொல்வேன் மானிட ஆத்மா மரணமெய்தாது மறுபடி பிறந்திருக்கும் என கீதையின் சாரத்தை அனைவருக்கும் சாறாக்கித் தந்தவர்
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை, கை கொட்டிச் சிரிப்பார்கள் ஊரார் சிரிப்பார்கள், ஒருவர் மனதில் ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா, நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் உண்டு ஒன்று மனசாட்சி, பிறக்கும் போதும் அழுகின்றான், சட்டி சுட்டதடா, கை விட்டதடா, மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது, உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம், அச்சம் என்பது மடமையடா என எதுகையும் மோனையும் உண்மையும் போட்டிபோடும் தத்துவ வரிகள்.
கந்தன் காலடியை வணங்கினால், மருதமலை மாமணியே முருகையா, அறுபடை வீடு கொண்ட திருமுருகா, சொல்லச் சொல்ல இனிக்குதடா, அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன், திருச்செந்தூரில் கடலோரத்தில், ஒன்றானவன் உருவில் இரண்டானவன், சரி பாதி பெண்மைக்குத் தந்தானவன், கோமாதா எங்கள் குலமாதா என ஒவ்வொரு பாடலிலும் இதிகாச புராணத்தையே சுருக்கி எழுதி வைத்தவர். கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் என்றும் இறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகிறான், மனிதன் வடித்த சிலையில் எல்லாம் இறைவன் வாழுகிறான் என்றும் அவர் பாடி இருப்பது நூற்றுக்கு நூறு உண்மைதான்.
சாதி மத இன பேதமில்லாமல் ஏசு காவியம் மட்டுமல்ல எல்லோரும் கொண்டாடுவோம் அல்லாவின் பெயரைச் சொல்லி நல்லோர்கள் வாழ்க வென்று பாடியவர். கருணைi மழையே மேரி மாதா என்றும் அம்பிகையே ஈஸ்வரியே என்னை ஆளவந்து கோயில் கொண்ட குங்குமக்காரி என்றும் பாடியவர். ஆத்தாடி மாரியம்மா சோறு ஆக்கிவைச்சேன் மாரியம்மா என்றும், சொல்லடி அபிராமி வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ என்றும், தஞ்சை பெரிய கோவில் பற்றியும் சீர்காழி மற்றும் டி எம் எஸ்ஸின் குரல்களில் பெரும்பாலான பாடல்கள் வந்தன. எம்ஜியாருக்கும் எழுதினார், சிவாஜிக்கும் எழுதினார், யாருக்கு எழுதினாலும் அவை அனைத்தும் அப்படியே கதாபாத்திரத்தோடு பொருந்திப் போகும் வரிகள்.
எம் எஸ் வியும் கவியரசரரும் ஒரே நாளில் பிறந்தவர்கள். ஜூன் 24. ஒருமுறை கவியரசர் தனது அறையில் தொடர்ந்து தூங்கியபோது எம் எஸ் வி வேறொரு பாடாலாசிரியரை வைத்து எழுதிக் கொள்ளலாம் என்று கோபமாகச் சொன்னாராம். அதைக் கேட்டு வெளியே வந்த கவியரசர் பாடியதுதான் சொன்னது நீதானா சொல் சொல் என்னுயிரே. இன்னொரு முறை எம் எஸ் வியே ”நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் , நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்” எனக் கண்ணதாசன் பாடியது அவர்கள் இருவருக்கும் உள்ள புரிந்துணர்வு பற்றியது என்று கூறியுள்ளார்.
காதலிக்க நேரமில்லை படத்தின் பாடல் கம்போஸிங்கின்போது ஒரு சிச்சுவேஷனுக்கு மெட்டுக் கேட்டு எம் எஸ் வி யிடம் கண்ணதாசன் “விஸ்வநாதன் வேலை வேண்டும்” என்றாராம். அதையே முதல் வரியாகக் கொண்டு எம் எஸ் வி இசையமைத்தாராம். எம் எஸ் வியின் இசைக்குக் கவிஞர் பாட்டெழுதினால் மீட்டருக்கு மேட்டர் என்றும், கவிஞரின் பாட்டுக்கு எம் எஸ் வி இசைமயைத்தால் மேட்டருக்கு மீட்டர் என்றும் தமாஷாகக் கூறிக்கொள்வார்களாம் இருவரும். அப்படி வந்த பாடல்கள் பலப்பல. பாசமலரில் மலர்ந்தும் மலராத பாதி மலர் போல என்பது அண்ணன் தங்கைப் பாசத்தைப் பாடிய சாகாவரம் பெற்ற பாடல். மழைகூட ஒருநாளில் தேனாகலாம், மணல்கூட ஒருநாளில் பொன்னாகலாம். ஆனாலும் அவையாவும் நீயாகுமா? அம்மாவென் றழைக்கின்ற சேயாகுமா? என்று மழலைச் செல்வத்தின் சிறப்பைப் பாடியவர். இப்பாடல்களைக் கேட்டால் கண் கசியாதவர் யார்?
கண்ணுக்குக் குலமேது என்று காதலுக்கு சாதி மதமில்லை என்று காட்டியவர். காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே என்றும் குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்றும் கொண்டாடியவர். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என எண்ணியவர். தாய்மை அடைந்த பெண்களைப் போற்ற மலர் கொடுத்தேன் கைகுலுங்க வளையலிட்டேன் என்றும் மலர்கள் சூட்டி மஞ்சள் கூட்டி வளையல் பூட்டி திலகம் தீட்டி என்றும் இன்னிசைத்தவர். என்ன கொடுப்பான், எவை கொடுப்பான் என்றிவர்கள் எண்ணுமுன்னே பொன்னும் கொடுப்பான், பொருளும் கொடுப்பான் போதாது போதாதென்றால் இன்னும் கொடுப்பான் இவையும் குறைவென்றால் தன்னைக் கொடுப்பான், தன்னுயிரும் தான் கொடுப்பான் தயாநிதியே” எனக் கர்ணனை வள்ளலாக மக்களின் மனங்களில் நிலை நிறுத்தியவர்.
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா என்றவர். போற்றுவார் போற்றுதலும் தூற்றுவார் தூற்றுதலும் போகட்டும் கண்ணனுக்கே என்ற இவர் நாடோடி மன்னனல்ல, மன்னாதி மன்னன். ராமன் எத்தனை ராமனடி என அத்தனை ராமன்களையும் ஒரு பாடலில் படைத்திருப்பார். அதேபோல் திருமால் பெருமைக்கு நிகரேது என்று தசாவதாரத்தையும் படைத்தவர். அன்பு நடமாடும் கலைக்கூடமே என்ற பாடல் படத்தில் மே மாதத்தில் இடம்பெற்றதால் மே மே என்று முடிந்திருப்பதும், அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே, பார்த்தேன் ரசித்தேன், அத்தான் என்னத்தான் போன்ற பாடல்களும் இவரைச் சிலேடை சக்கரவர்த்தியாக்குகின்றன. பாடப் பாட இனிக்கும் பஜகோவிந்தம், கிருஷ்ண கவசம், கனகதாரா ஸ்தோத்திரம், அம்பிகை அழகு தரிசனம் ஆகியவற்றில் சமஸ்கிருத சுலோகங்களின் சாறுகளையும் சங்ககாலப் பாடல்களையும் பக்குவமாய்ப் பிழிந்து பருகத்தரும் பாங்கு நனி சுவை.
மாற்றமும் ஏற்றமும் நிரம்பியதுதான் அவரது வாழ்க்கை. ””காலமகள் கண்திறப்பாள் சின்னையா, நாம் கண் கலங்கிக் கவலைப்பட்டு என்னையா, கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே” என ஊக்கமூட்டுபவை அவரது பாடல்கள். அவை உள்ளத்திலிருந்து எழும்பியதால் உண்மையையே பேசின. தேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால் பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும்! எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா-என் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா என நுட்பமான உணர்வுகளை சித்தரிப்பதில் அவருக்கு நிகர் அவரே.'' நான் எப்படி வாழ்ந்தேனோ அப்படி வாழாதீர்கள்; நான் கூறியபடி வாழுங்கள்'' என்பதே கண்ணதாசனின் வேண்டுகோள்.
ஐம்பத்தி நான்கு வயதில் மறைந்த இவர் இந்த நூற்றாண்டு கண்டு போற்றி வியந்த சிறந்த ஆசு கவி. அறம் பாடினால் பலிக்கும். ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு. இசைப் பாடலிலே என் உயிர்த்துடிப்பு நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு. காவியத்தாயின் இளையமகன், நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று ஐந்தாறு வரிகளில் தன் முழு வாழ்வையும் கூறியவர். எல்லோரையும் பற்றி சில நூல்கள் எழுதலாம். ஆனால் கண்ணதாசனைப் பற்றி எழுதினால் ஒரு நூலகமே நிரம்பிவிடும். வாழ்க வார்த்தைகளுக்குள் அடங்காத கவியரசரின் புகழ் இவ்வுலகம் உள்ளளவும்.
டிஸ்கி:- கவியரசர் பற்றிய கட்டுரை பற்றி சிறப்பித்துக் கூறியுள்ள குருவிக்கொண்டான்பட்டி வாசகார் திரு எம் பி எம் முத்தையா அவர்களுக்கு நன்றி. இக்கடிதத்தை வெளியிட்ட தனவணிகனுக்கும் நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)