எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 5 மே, 2024

பெண் பரிமாணங்கள் - 5. ஜனாதிபதியிடம் விருது வாங்கிய முனைவர் சே செந்தமிழ்ப்பாவை

 ஜனாதிபதியிடம் விருது வாங்கிய முனைவர் சே செந்தமிழ்ப்பாவை



காரைக்குடி அழகப்பா தமிழ் உயராய்வு மையத்தின் தலைவர் முனைவர் சே செந்தமிழ்ப் பாவை அவர்களின் பாவை ( திருப்பாவை, திருவெம்பாவை) பற்றிய உரையைக் கேட்டு வியந்தேன். இவர் நெறியாள்கையின் கீழ் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர்கள் 117, முனைவர் பட்டம் பெற்றோர் 27 பேர்.  பல்வேறு பொருண்மைகளில் தொல்காப்பியம், புறநானூறு, சங்க இலக்கியங்களில் ஆய்வு செய்துள்ள இவர் பெற்றுள்ள விருதுகளும் கணக்கில் அடங்கா. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களிடம் 2009 இல் ”செம்மொழி தமிழ் இளம் ஆராய்ச்சி அறிஞர்” விருதும் பெற்றவர். இவரிடம் தமிழின் மேல் இவ்வளவு பற்றுவரக் காரணம் என்ன எனக் கேட்டபோது

“10 ஆம் வகுப்பு முடித்தவுடன் எனக்கு முன்பு படித்த மாணவர்களிடம் இருந்து 11 ஆம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகங்களை வாங்கி வைத்துவிட்டேன். ஆனால் என்னுடைய தந்தையார் சிறப்புத் தமிழ்ப் பாடப் பிரிவில் சேர்த்துவிட்டார். மடைமாற்றம் தமிழின் மீது பற்றுக் கொள்ள வைத்தது. என்னுடைய தந்தையார் புலவர் சேதுராமன், பெரிய குளத்தில் 1969 இல் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவிய பொன். பாண்டித்துரைத் தேவர் பெயரால் மகளிர் கல்லூரியை நிறுவி நடத்தி வந்தார். சில காரணங்களால் கல்லூரி தொடர்ந்து நடைபெற இயலவில்லை. அதனால் மீண்டும் கல்லூரி தொடங்க வேண்டும் என்பதற்காக என்னைத் தனித்தமிழ் படிக்க வைக்க விரும்பினார். இது முதற்காரணம். (இரண்டாவது எங்கே அறிவியல் படித்து பூனைகள் வீட்டிற்குள் வர கதவில் நானும் இரண்டு துவாரம் போட்டு விடுவேனோ என்று அஞ்சியது கூட காரணமாய் இருக்கலாம்!)

எங்கள் வீட்டில் 2000 க்கும் மேற்பட்ட நூல்கள் கொண்ட நூலகம் இருந்தது. 10 ஆம் வகுப்பு முடிப்பதற்குள்ளேயே கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் முதல் சாண்டில்யனின் அனைத்துப் புதினங்கள், வீரபாண்டியன் மனைவி போன்ற தமிழில் வெளிவந்த அனைத்து நூல்களையும் படித்துவிட்டேன். எங்கள் ஊர் சிறிய குக்கிராமம் ( போடி. அம்மாபட்டி) எங்கள் ஊரில் நூலகம் இல்லை. மேல்நிலைக் கல்வி பயின்ற சில்லமரத்துப்பட்டி என்னும் ஊரில் உள்ள நூலகத்திற்கு என்னையும் என்னுடைய சகோதரியையும் அழைத்துச் சென்று உறுப்பினராக்கி விட்டார். (10 வயதில்). அப்பொழுல்லாம் ஆண்டுக்கொருமுறை நூலகங்களில் கழிக்கப்பட்ட நூல்கள் விற்பனை செய்வர். என்னுடைய தந்தையார் ஒவ்வொரு நூலகத்திலிருந்தும் சாக்கு மூட்டையில் அந்தப் புத்தகங்களை வாங்கி வருவார். அந்த நூல்களில் கடைசி சில பக்கங்கள் இருக்காது. கதை முடிவு தெரியாமல் அப்பாவிடம் அழுது அதற்காகப் புதுப் புத்தகங்கள் வாங்கிய கதையும் உண்டு!. ( தியாக பூமி).

1970 – அப்பொழுதே எங்கள் வீட்டில் குமுதம், கல்கண்டு, முத்தாரம், சோவியத் யூனியன், ஆனந்த விகடன், கல்கி, கோகுலம் போன்ற பல வார, மாத நாளிதழ்கள் வாங்குவோம். எனக்கு என்னுடைய மூத்த சகோதரிக்கும் (எழில் ராதா) பெரும் போட்டியே நடைபெறும், யார் முதலில் புத்தகத்தைப் படிப்பது என்று. வெள்ளிக்கிழமையானால் தந்தையார் வருகையை எதிர்பார்த்து வாசலிலேயே நிற்போம்.

12 ஆம் வகுப்புப் படிக்கும்போது நூலகத்திற்குச் சென்றால் நூலகர் மாமா சொல்லுவார், இங்குள்ள புத்தகத்தை எல்லாம் நீயும் உங்க அப்பாவும் படித்துவிட்டீர்கள். இனிமே நீயோ உங்க அப்பாவோ புத்தகம் எழுதினால்தான் உண்டு என்று.

கல்லூரிப் படிப்பு காரைக்குடி இராமசாமித் தமிழ்க் கல்லூரியில் தொடங்கியது. எங்கள் தந்தையார் தூயதமிழில் பேசவேண்டும் என்பார். (கடைசிவரை வீட்டிலும் பொது இடங்களிலும் அப்படியேதான் பேசினார்). அவர் ஊட்டிய தமிழ்ப்பற்றுத்தான் இன்று என்னை இந்த அளவிற்கு உயர்த்தி தமிழக முதல்வரிடமும், குடியரசுத் தலைவரிடமும் 22 வயதிலேயே பதக்கங்களையும் விருதுகளையும் பெற வைத்தது.

இளங்கலை ( பி. லிட்) யில் என் வகுப்புத் தோழர்கள் எனக்கு வைத்த பெயர் ”புத்தகப் புழு”. இது 20 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னால் மாணவர்களின் கூடலில் எனக்குத் தெரிய வந்தது.

தலைமைப் பண்பு, தைரியம் இது இரண்டும் என்னுடைய இயல்பாகும். ஏழாம் வகுப்புப் படிக்கும் போது என்னுடைய வகுப்பாசிரியராக இருந்தவர் திருமதி சவிதா டீச்சர். அறிவியல் பாடம் அவ்வளவு அருமையாக நடத்துவார். அவருக்கு அம்மை போட்டு ஒருவாரமாக வரவில்லை. எனக்கு ஆசிரியரைப் பார்க்கவேண்டும் என்று விருப்பம். நான் படிக்கும் ஊரிலிருந்து பேருந்தில் சென்று பார்க்க வேண்டிய ஊரில் அவர் இருந்தார். (50 ஆண்டுகளுக்கு முன்பு ) க்ளாஸ் லீடர் நான். வகுப்பில் பைகளை வைத்துவிட்டு என்னுடைய வகுப்பில் உள்ள 8 மாணவ, மாணவிகளை அழைத்துக் கொண்டு ஆசிரியரைப் பார்க்கப் போய்விட்டேன்.

போடி நாயக்கனூர் சென்றுவிட்டோம். பழங்கள், இளநீர் வாங்கிக் கொண்டு ஆசிரியர் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்துச் சென்று விட்டோம். அவருக்கு ஒரே ஆச்சர்யம். மதிய உணவு கொடுத்து அனுப்பி வைத்தார். பேருந்தை விட்டு இறங்கி வந்தால் அனைத்து மாணவர்களும் எங்களைக் கைகாட்டி கைகாட்டி ஏதோ பேசுகின்றனர். வகுப்பிற்குள் வந்தவுடன் தலைமை ஆசிரியர் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கிருந்த ஆசிரியர்கள் என்னைக் கைகாட்டி சார் இந்தப் பொண்ணுதான் தலைமை தாங்கிக் கூட்டிப் போயிருக்கு என்றனர். வந்தவர்களும் ஆமாம் என்றனர். சார் எனக்கு உடம்பிற்கு முடியாத ஆசிரியரைப் பார்க்க வேண்டும் போலிருந்தது, அதனால்தான் போனோம் என்றேன். தலைமை ஆசிரியர் சில அறிவுரைகளைக் கூறி அனுப்பி வைத்தார். அதன் பிறகு நடந்ததுதான் சிறப்பு. அன்று மதியம் ஆசிரியரைப் பார்க்கப் போகிறவர்கள் போகலாம் என்று அனைத்து மாணவர்களுக்கும் விடுப்பு நல்கினார். இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சி.

என்னுடைய நெறியாள்கையின் கீழ் 27 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இதில் 20 பேர் மகளிர். இவர்களில் அப்பொழுது பட்டம் பெற்றவர்கள் முதல் கணவனால் கைவிடப்பட்டவர்கள், குழந்தையுடன் விதவையாக உள்ளவர்கள், இரண்டு குழந்தைகளின் தாய் போன்றவர்கள்தான் என்னுடைய மாணவர்கள். இவர்களைத் தேர்ந்தெடுத்துச் சேர்த்துக் கொண்டேன். ஏனென்றால் என்னுடைய தந்தையாருடைய நோக்கம் பெண்கள் கல்வி பெறவேண்டும் என்பதே. மேலும் பாரதிதாசன், “ கல்வி இல்லாப் பெண்கள் களர் நிலம். அங்கு புல் விளைந்திடலாம். நல்ல புதல்வர்கள் விளைவதில்லை” என்பார். எனவேதான் பெண்களாகத் தேடிச் சேர்த்துக் கொண்டேன். மேலும் பெண்கள் ஆண்களுக்குச் சரிநிகர் சமானமாக வாழ கல்வியும் வேலையும்தான் பெரிதும் உதவும். அதுவும் ஒரு காரணம். இது மட்டுமின்றி தமிழர் தம் பண்பாட்டை உலகினர் அறியும் வகையில் அழகப்பா பல்கலைக் கழகத்தில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ப் பண்பாட்டு அருங்காட்சியகம் என்ற ஒன்றை உருவாக்கியுள்ளேன். அதில் தமிழர் வரலாறு முதல் தமிழர்தம் புழங்குபொருட்கள் தொடங்கி அனைத்தும் சேகரித்துக் காட்சிப்படுத்தப் பெற்றுள்ளது. இவ்வருங்காட்சியகத்தை சிங்கப்பூர், மலேஷியா, ஜெர்மனி, இலங்கை போன்ற பல நாடுகளில் இருந்தும் பலர் கண்டு களித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...