ரியல் எஸ்டேட்டில் சாதித்து வரும் எல்.எஸ்பி.ராகவன்
காரைக்குடியில் பாரம்பரியமான சிவ.மெ.(வெ.ராம) இல்லத்தைச் (லட்டு வீடு) சேர்ந்தவர் எல்.எஸ்பி. ராமசாமி என்கின்ற ராகவன். கோயில், இளையற்றாங்குடி/ கழனிவாசல் பிரிவு. இவரது பெற்றோர்கள் - L.சுப்பிரமணியன் செட்டியார் -மீனாட்சி ஆச்சி. மனைவி-ஆத்தங்குடி முத்துப்பட்டிணம் PR.லெட்சுமணன் செட்டியார் -திருநெல்லை ஆச்சி மகள் அங்கயற்கண்ணி. இவருடைய ஒரே மகள் மீனாட்சியை நாட்டரசன்கோட்டையைச் சேர்ந்த சிங்கப்பூரில் வசிக்கும் வெ.ராமநாதன் (தினேஷ்)க்கு மணமுடித்து, அவந்திகா, தர்ஷனா என்ற இரண்டு பேத்திகள்.அனைவரும் சிங்கப்பூரில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார்கள்.
இவர் தமது இளமை பருவத்தில் இளம்பிள்ளை வாதத்தால் இரண்டு வயதிலேயே இடது கால் பாதிக்கப்பட்டவர். இறைவன் அளித்த சோதனைகளை எல்லாம் மன உறுதியினால் கடந்தவர். தனது சாதனைகளால் தான் பேசப்படவேண்டும் என எண்ணுபவர். இடைவிடாத உழைப்பாளி. தன் பணிகளைச் சிறப்பாகச் செவ்வனே செய்வது மட்டுமின்றி பொதுக்காரியங்களிலும் தோள் கொடுப்பவர். அலைந்து திரிந்து பார்க்க வேண்டிய வேலைகளைக் கூட அயராமல் செய்து வருபவர். மகள் திருமணத்திற்கு முன்பு இன்சூரன்ஸிலும் இன்று ரியல் எஸ்டேட் துறையிலும் சாதித்து வருகிறார். அவரிடம் நமது செட்டிநாடு இதழுக்காக இவரது இளமைப்பருவம், இன்சூரன்ஸ் துறை, ரியல் எஸ்டேட் துறை பற்றிக் கேட்டபோது,
”நான் இளம்பிள்ளை வாதத்தால் (Polio attack) இரண்டு வயதிலேயே இடது கால் பாதிக்கப்பட்டவன். பெரியப்பா பிள்ளைகள் எழுவர் மற்றும் என்னைச் சேர்த்து உடன் பிறந்தோர் நால்வர் என கூட்டுக் குடும்பமாகப் பல வயதினரும் மிகுந்த பாசத்துடன் வளர்த்தமையால் மாற்றுதிறனாளி என உணராமல் வளர்ந்தேன்.
அழகப்பா மாடல் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்புப் படித்தேன். பள்ளி வரை விட்டுக் கூட்டி வர உதவியாளர் ஊமையன் என்ற அண்ணன் இருப்பார். என் வாழ்நாளில் மறக்கமுடியாத, இன்றும் நான் நன்றி செலுத்தும் நபர் அவர். அப்போது வெளியே தானாகச் சென்று விளையாடக் கூட முடியாது.வீட்டுக்குள் வீட்டாரின் அரவணைப்பில் செல்லப் பிள்ளையாக இருந்து வந்தேன்.
அம்மா அந்த காலத்தில் பட்டபடிப்பைக் கேரளாவில் படித்திருந்ததால் முற்போக்கு சிந்தனை உடையவர்.அப்பா உற்ற நண்பர்.இருவரும் எனக்குப் பல வகைகளிலும் அயராது வைத்தியம் பார்த்து நானாக என் வேலைகளை கவனித்துக்கொள்ளப் பாடுபட்டார்கள். கல்லூரியில் நுழைய வேண்டிய சமயத்தில், என் அண்ணன் கண்ணன், கட்டாயமாக வெளியூர் சென்று ஹாஸ்டலில் தங்கி நான் நானாக நம்பிக்கையையுடன் வாழக் கற்றுக்கொள்ள வலியுறுத்தியதால் ,திருச்சி செயிண்ட் ஜோசப்கல்லூரியில் பி.காம்.பயின்றேன். அது எனக்குப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
பல மாநிலங்களில் இருந்து வந்த மாணவர்களுடன் விடுதியில் வாழ முடிந்தது. அன்றாடம் நாமாக வாழ என்னையும் அறியாது பயின்றேன். என்னால் இயற்கையாகவே ஹாஸ்யமாக பேச முடிவதை உணர்ந்தேன். எப்போதும் நண்பர்கள் கூட்டத்துடன் இருப்போம். இன்றும் அனைவரும் தொடர்பில் இருக்கிறோம்.அப்போது இருந்த கல்லூரி மற்றும் விடுதியின் கண்டிப்பு எம்மைச் செம்மையாக வளர வழி வகுத்தது.
கல்லூரிக்குப் பிறகு மீண்டும் காரைக்குடியில் பிரபல ஆடிட்டர் நாகராஜன் அய்யரின் கீழ் C.A. பயின்றேன். கணக்கு மற்றும் வருமான வரி சம்பந்தபட்டவைகளைப் பற்றி நன்கு பயில வாய்ப்பிருந்தாலும் C.A படிப்பை முடிக்க முடியவில்லை.அண்ணனுடன் சேர்ந்து Earthmoving contract தொழிலை நடத்தச் சென்னைக்கு மாறினேன்.
சென்னை என்னைப் புதுப் பரிமாணத்துக்கு அழைத்துச் சென்றது. வீட்டிற்குள்ளிருந்து கணக்கு வழக்குகளை நானும், சைட் வேலைகளை அண்ணனும் கவனித்து வந்தோம். என்னடா எப்போதும் உள்ளிருந்து அமர்ந்து பார்க்கும் வேலையாகவே பார்க்கிறோமே என்ற அலுப்பும் எண்ணமும் ஒரு புறம் எப்போதும் என்னிடம் இருந்துக் கொண்டே இருந்தது. நாமும் மற்றவர்களைப் போல வெளியே ஓடியாடிச் சம்பாதிக்க வேண்டும் என்ற வேகம் இருந்தது. அந்தச் சமயத்தில் தான் TATA , ICICI, HDFC, BAJAJ போன்ற தனியார் நிறுவனங்கள் இன்ஸுரன்ஸ் கம்பெனிகள் தொடங்கினர். இதில் முதலீடில்லாமல் முகவராகச் சேர்ந்தால் நமக்கிருக்கும் தொடர்புக்கும், பேச்சு திறமைக்கும் நல்ல வாய்ப்பிருக்கும் என்று நினைத்துச் சிலரிடம் யோசனை கேட்டேன்.
அனைவருமே "இது உனக்குத் தேவையா? , வீதிக்கு நாலு L.I.C Agent இருக்கான்.நீயும் Agent என்றால், உன்னைப் பார்த்தாலே ஓடி விடுவார்கள் "என்ற எதிர் மறை கருத்துக்களை ஒரே மாதிரியாகச் சொன்னார்கள். அப்படியானால் இதில் தான் நாம் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ICICI bank customer careஐ தொடர்பு கொண்டு நான் Agent ஆக வேண்டுமெனத் தெரிவித்தேன்.
ஒரு மாதமாகியும் எந்தத் தகவலும் இல்லை.மறுபடியும் அழைத்தேன். அந்த முறை, இது வங்கிக்கானது, இன்ஸுரன்ஸ் வேறு துறை, இருப்பினும் அவர்கள் வசம் மெயில் அனுப்புகிறோம். இல்லையெனில்
நீங்கள் நேரில் சென்று பாருங்கள் என்றனர்.நான் எப்படியும் முகவர் ஆக வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தேன். 15 நாட்கள் கழித்து ஜெகதீஸ் என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் வந்து பார்க்கும்படிச் சொன்னார். அவர் சொன்ன நேரத்திற்கு அங்கு சென்று, மூன்று மணி நேரம் காத்திருந்தும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
நண்பர்களிடம் இதைச் சொன்னபோது "ஏன்டா வேலையத்த வேலை பார்க்கிற?"என்று ஏவனம் செய்தனர். இருந்தும் நான் திடமாக இருந்தேன். இரண்டு நாளைக்குப் பிறகு அவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் என்னைப் பார்த்தவுடன் "இது அலைந்து திரிந்து பார்க்க வேண்டிய வேலை, இந்தக் காலுடன் உங்களால் முடியுமா, இப்படிக் கேக்கிறேன்னு தப்பா நினைச்சுக்காதிங்க" என்றார். இல்லைநான் car, scooty ஓட்டுவேன், முடியும் என Form Fill பண்ணிப் பரீட்சைக்குத் தயாரானேன்.
Insurance
Agent என இல்லாமல் Insurance Advisor என அழைத்தனர். அது அங்கீகாரத்தைத் கொடுத்தது. லைசன்ஸ் கிடைத்த முதல் நாள் 17 புது பாலிஸிகளைப் பெற்றுக் கொடுத்தேன்.எனது பெயர் அலுவலக சுவர், லிப்ட், கான்டீன் என அனைத்து இடங்களிலும் பாரட்டுதல்களுடன் ஒட்டப்பட்டுப்
பெரிய பாராட்டு விழாவும் நடந்தது. அது தான் நான் பெற்ற முதல் வெற்றி! .பிறகு அடுத்த இரண்டு மாதங்கள் பெரிதாக வியாபாரம் செய்ய முடியவில்லை.ஆர்வமும் குறைந்தது.
அன்றைய ஆரம்ப நாட்களில் IIM,XLRI போன்ற சிறந்த பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்ற திறமையான இளைஞர்கள் மேனேஜர்களாகவும், டிரெய்னர்களாவும் இருந்து என்னைப் பலமடங்கு ஊக்குவித்துத் தெரியாத நபர்களிடம் (Cold calling) முதலீடுகள் பெற்றால்தான் தொடர்ந்து ஜெயிக்க முடியும் என்பதைத் தெளிவுபடுத்தினர்.
முழு நேரமாக செயல்பட தொடங்கினேன். Data base வாங்கித் தெரியாத நபர்கள் வசம் குறைந்தது நாள் ஒன்றுக்கு 50 நபர்களுடன் போனில் பேசுவேன்(அப்போது Do not disturb option இல்லை). நிறைய சிரமங்கள் இருக்கும். பெரும்பாலோர் திட்டுவர். எப்படி ஆரம்பித்து, எப்படி அவர்களைச் சந்திக்க Appointment பெற வேண்டும் என்பதைப் படிப்படியாகக் கற்றுக்கொண்டேன். நேரில் சந்தித்தால் நிச்சயமாக அவர்களை அன்று இல்லாவிட்டாலும் நாளடைவில் முதலீடு செய்ய வைக்கத் தயார்ப்படுத்திக்கொண்டேன்.
பல கம்பெனிகளின் HR managerகளை சந்திந்து, அவர்கள் ஊழியர்களுக்கு help desk மூலமாக சரியான வழிகாட்டுதல்களை வழங்கி அவர்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமானேன்.அதற்கு நான் படித்த C.A பல வகையில் உதவியது. மறைமலை நகர் Ford, Sriperumpudur Hyundai, Tidel park போன்ற கம்பெனிகளில் எனக்கு நிறைய வாடிக்கையாளர்கள் வந்தனர். எவ்வளவு தூரமாக இருந்தாலும் ,வியாபாரம் வராவிட்டாலும் நேரில் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தால் சிரமம் கருதாது கட்டாயமாகப் போய்விடுவேன் , இன்முகத்துடன் திரும்புவேன். அது எனக்கும் மனதளவில் தொய்வு கொடுக்காமல் பார்த்துக் கொண்டது.
ICICI PRUDENTIAL LIFE INSURANCE ஆரம்ப கால Advisor என்பதால், அதன் Product designing committe memberராக என்னை நியமித்தனர். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மும்பை அலுவலகத்தில் K.V.KAMATH, SHEEKIA SHARMA, VAIDYANATHAN, CHANDHA KOCHHAR என பெரிய பதவியில் இருந்தவர்களுடன் Products, competitive market products, Call centres affairs, Advisor developments என அனைத்துத் துறைகளிலும் மேம்படுத்த நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் நேராகக் கலந்து கொண்டது மிகப் பெருமை.
தொடர்ந்து மனைவியின் பெயரில் SBI LIFE INSURANCEல் License எடுத்து அதிலும் நல்ல வளர்ச்சி கிடைத்தது. South Africa, Greece, Thailand நாடுகளுக்கு Company மூலமாக நடந்த சுற்றுலா மற்றும் மாநாடுகளில் கலந்துகொள்ளும் தகுதி வாய்ப்புகள் கிடைத்துக் கலந்துகொண்டேன். MDRT(million dollar round table) என்ற இன்ஸுரன்ஸ் துறை உலக அளவிலான வருடம் தோறும் அறிவிக்கும் Target ஐத் தொடர்ந்து 10 வருடம் சாதித்து பல விருதுகளைப் பெற்றுள்ளேன்.
பல நிறுவனங்களின் பல ஊர் கிளைகளில் முகவர்கள் மற்றும் மேலாளர்களுக்கு ஊக்கும் அளிக்கும் வகையில் பல கூட்டங்களில் பேசியுள்ளேன். தொடர்ந்து Mutual Funds company களிலும் License எடுத்து அதிலும் நல்ல முறையில் வெற்றியடைந்தேன். சுமார் 1800 வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்று இன்றும் பலருடன் குடும்ப நண்பனாக இருக்கிறேன். மருத்துவர்கள், நீதிபதிகள், பைலட்கள், அரசியல்வாதிகள், மரைன் இன்சினியர்கள், சாப்ட்வேர் இன்சினியர்கள் எனப் பல தரப்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இளைஞர்கள் மட்டுமல்ல, இல்லத்தரசிகள் ,ஓய்வு பெற்றவர்கள் இந்தத் துறைக்கு வர வேண்டும். நல்ல வருமானம் கிடைக்கக்கூடியது மட்டுமல்ல, பிறர் குடும்பத்திற்குப் பாதுகாப்பும் அளிக்கக் கூடியது. பண முதலீடு இல்லாவிடிலும், நம் முழு நேரத்தையும், ஆர்வத்தையும் முழுமையாக முதலீடு செய்ய வேண்டும். முதலில் மிகுந்த சிரமமாக தான் இருக்கும்.
வெற்றியின் வித்தாக நான் நினைப்பவை:-
நம் மீதும் ,நம் கம்பெனி மீதும் நம்பிக்கையை இழக்க கூடாது. நம் திறமையையும், Product knowledgeஐயும் Competitive products knowledgeஐயும் மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். Objection handling - வாங்குபவர்ளைப் திருப்திப்படுத்தச் சரியான பதில்களைத் தெளிவாக எடுத்துச் சொல்லி அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். சரியான தீர்வு வழங்க வேண்டும் நேரம் தவறக் கூடாது. நல்ல உடையணிந்து, சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும். குழப்பாமல் தெளிவாக பேச வேண்டும். தொடர்ந்து சேவை செய்ய வேண்டும். விடாது உழைக்க வேண்டும்.
தற்போதுவாடிக்கையாளர்கள் பலர் என்னை நம்பிச் சொத்துக்கள் வாங்க விற்க ஆலோசனை கேட்டதாலும், பத்திரங்களைச் சரி பார்த்துத் தரச்சொன்னதாலும், Real Estate துறையில் கால் பதிந்தேன். அது என்னைப் பலமடங்கு உயர்த்தி உள்ளது.
Property Joint Ventures, Commercials மட்டுமன்றி காலி மனைகள், வீடுகள், என இன்றும் நல்ல முறையில் நேர்மையாக, வெளிப்படையாக சரியான விலைக்கு வாங்க, விற்க உதவுகிறேன். வாங்குபவர்களையும் விற்பவரையும் நேரடித் தொடர்பில் கொண்டுவந்து, அவர்களுக்கு ஆவன செய்து, அதற்குண்டான கமிஷனை மட்டுமே தெளிவாகப் பெறுவதால் பல வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுத் தொடர்ந்து வெற்றி பாதையில் செல்ல முடிகிறது.
கடந்த ஐந்து வருடமாகக் காரைக்குடிக்கு நிரந்தரமாக வந்து, இங்கு மிகச் சிறந்த முறையில் Real estate செய்து வருகிறேன். பெரும்பாலும் வெளிநாட்டில் வசிக்கும் நம்மவர்களுக்கு, அவர்கள் நாட்டுச் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப இங்கு சொத்து வாங்க விற்க உதவுவதால், நிறைய வெளி நாட்டவர்கள் (NRI) என்னிடம் வருகிறார்கள்.
அவர்களின் தெரியாத சொத்துக்களை இனம் கண்டு, தேவையான ஆவணங்களைச் சரிசெய்து, அவர்கள் இங்கே வந்ததிலிருந்து திரும்பிச் செல்லும் வரை உடனிருந்து உதவுவதால் அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களை அறிமுகம் செய்கிறார்கள்.
என் மனைவி அங்கயற்கண்ணிக்கு இந்த தருணத்தில் நன்றி பாராட்ட நினைக்கிறேன். என்னை முழுமையாக ஆத்ம நிறைவுடன் ஏற்றுக்கொண்டவர். என் மனம் அறிந்து, நான் தொய்வு பெறும் நேரத்தில் நம்பிக்கை அளித்து, நான் நினைப்பதை நிறைவேற்றுபவர். குடும்பப் பொறுப்பை முழுமையாக சுமப்பவர்.”
எனது Mobile and What's app +91 9841028774. EMAIL LSPRAMASAMY@GMAIL.COM. என்னை நீங்கள் இவற்றில் தொடர்பு கொள்ளலாம்.” என்று கூறினார் அந்தத் தன்னம்பிக்கை மனிதர்.
தொடர் உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி இவையே இவரின் இவ்வெற்றிக்குக் காரணம். இன்சூரன்ஸில் உச்சங்களைத் தொட்டது மட்டுமல்ல அடுத்தவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாய் ரியல் எஸ்டேட்டில் ஈடுபட்டு வழிகாட்டி வருவதும் பாராட்டிற்கு உரியது. இவர் இத்துறையிலும் முத்திரை பதிக்க நமது செட்டிநாடு இதழின் சார்பாக வாழ்த்தி வந்தேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)