எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 24 அக்டோபர், 2013

அக்கா வனம் புதிய தரிசனத்தில்..

பட்டாம்பூச்சிகளாய்ப்
பறந்து திரிந்தோம்
அக்கா வனத்தில்.

இறக்கைகள் தடவி
காற்றாய்ப் பின் தொடர்ந்து
சிரிப்பாள் அக்காளும்.

அவள் கலகலத்துக்
கொத்துக் கொத்தாய்ச்
சிரிப்பதைப் பூக்கள் என்பார்கள்,


வேலிக்கும் எல்லை வகுத்துக்
காவல்காரரும் வைத்தார்கள்
அவளுக்கு.

காத்தாடிகளைப் போலத்
தோட்டம் விட்டு
வெளியே பறந்தோம் நாங்கள்.

பூத்தாள் காய்த்தாள்
கனிந்தாள்..
கடமையை நிறைவேற்றியபடி.

எப்போதாவது
அக்கா அளிக்கும் தேனுண்ணப்
போவோம் நாங்கள்.

அன்றைக்கு மட்டும் அக்கா
துளிராய்ப் பூவாய் மினுமினுப்பாள்
புன்னகை முகமாய்.

கைகோர்த்துக் களிப்பாகச்
சுற்றும் நாங்கள் பிரியும்போது
முள்வேலிபற்றி அழுவோம்.

பேசாமடந்தையாய்
பறவை இறைச்சல்கள் ரசிக்கும்
முதிர்ந்த மரமாய் ஆனாள்

அடைசல் வனமாய்
ஒருநாள் அக்கா
அழிந்து கிடந்தாள்.

இறக்கைகள் உதிர்த்து
அவள் மேல் விழுந்து
உரமாய் அணைத்தோம்.

இன்னொருபுறம்
தழைத்துக் கிடந்தன
அவளது வாரிசுகள்.

டிஸ்கி :- இந்தக் கவிதை ஆகஸ்ட் 1 - 15 , 2013 புதிய தரிசனம் இதழில் வெளிவந்தது.

5 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...