எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 5 டிசம்பர், 2023

கழற்ற முடியாத கணையாழி

 கழற்ற முடியாத கணையாழி


றகைப் போலே அசைகிறேனே உந்தன் பேச்சைக் கேட்கையிலே..குழந்தை போலே தவழ்கிறேனே உந்தன் பார்வை தீண்டையிலே. “  தொலைக்காட்சியோடு பாடிக்கொண்டிருந்தான் ஸாம். அவனது இரு கைகளிலும் நந்தனும் நந்தினியும் எச்சில் ஒழுகும் பொக்கை வாயோடு சிரித்துக் கொண்டிருந்தார்கள்.  அவர்கள் காலில் மாட்டியிருந்த மணித்தண்டையிலிருந்து ஜல் ஜல் என்ற ஒலி எழும்பிக் கொண்டிருந்தது.

 

”மானூத்து மந்தையிலே மான்குட்டி பெத்த மயிலே” என்று அடுத்த பாட்டை அவன் தொடரவும் கிக்கி கிக்கி என்றபடி இருவரும் அவனது கன்னத்தில் எச்சில் விரலால் தொட்டுச் சிரித்தார்கள். அவன் உடல் முழுதும் குழந்தை வாசம் அடித்துக் கொண்டிருந்தது. என்னவென்று விலக இயலாத மயக்கம் அவனை ஆட்கொண்டது.

 

தேவி அமர்ந்து இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள். ஸாம் குழந்தைகளை தங்கத்தாலே பூட்டி இருந்தான். கழுத்துச் சங்கிலி, ப்ரேஸ்லெட், இடுப்புச்சங்கிலி என தகதகவென ஜொலித்தார்கள் இருவரும். அவள் மேலும் குழந்தைகள் வாசம் அடித்துக் கொண்டுதான் இருந்தது.

 

ராணி பால் கொடுக்கும் சமயம் தவிர குழந்தைகள் இருவரையும் தூக்குவதேயில்லை. எப்போதும் ஏதோ ஒரு சிந்தனையில் இருந்தாள். அவளைப் பார்க்க தேவிக்கே அவ்வப்போது கஷ்டமாக இருந்தது. என்ன இருந்தாலும் தன் பிள்ளைகளைச் சுமந்தவள் அல்லவா. எப்படிப் போகச் சொல்வது. பால்குடி மறக்கும்போது பிள்ளைகள் மறப்பார்களா இல்லை அவள் நினைவாகத் தவிப்பார்களா.

 

நினைக்க நினைக்க தேவியின் உடலில் உன்மத்தம் புகுந்தது. சீக்கிரம் அவளை அனுப்பி விட்டு செரிலாக் போன்றவற்றைப் பழக்கிவிட்டால் நல்லது என நினைத்தாள். நந்தனுக்கும் நந்தினிக்கும் ஐந்து மாதம் ஆகிறது. கழுத்து நின்று வாக்கரில் உட்காரவைத்தால் உக்கார்ந்து உந்துகிறார்கள்.

 

“ஆறு மாசம் வரைக்கும் பேச்சி கூட புள்ளை வளர்த்திறலாம். அதுக்குப் பெறகுதான் கஷ்டம் “ என்றவாறு கேப்பையைப் பிள்ளைகளுக்கு ஏற்ற கூழாகக் காய்ச்சிக் கொண்டிருந்தார் நீலாக்கா. ”இன்னிக்கு ஒரு ஸ்பூன் குடுத்துப் பார்ப்போம். ஒத்துக்கிட்டா இதையே கொடுப்போம்” என்றார்.

 

விளையாடிக் கொண்டே இருக்கும்போது நந்தினி வீறிட்டு அழ ஆரம்பித்தாள். என்னாச்சோ ஏதாச்சோ என்று பயந்த ஸாமும் தேவியும் பதட்டப்பட்டார்கள்.ராணி ஓடிவந்து நந்தினியை வாங்கி அணைத்துக் கொண்டாள். மார்போடு சேர்த்து அணைத்தும் அவள் அழுகை அடங்கவில்லை. பால் கொடுத்தால் தீருமோ. அதையும் செய்யப் போனாலும் அவள் பால் குடிக்காமல் இன்னும் அதிகமாக அழ ஆரம்பித்தாள். அவள் அழுவதைப் பார்த்து நந்தனும் உதடு பிதுக்கி அழ ஆரம்பித்தான்.

 

மூவருக்கும் பயம் பிடித்துக் கொண்டது. நீலாக்கா வேகமாக வந்து வாங்கினார். கை காலை எல்லாம் உருவி விட்டார். சுளுக்கு ஒண்ணும் இல்லை. ஒரு வேளை ஒறம் விழுந்திருக்கலாம். இருங்க வாரேன் என்றவர் வேகமாகச் சென்று ஒரு காட்டன் புடவையை எடுத்து வந்தார்.

 

இரண்டாக மடித்துப் போட்டுப் புடவையின் மையத்தில் குழந்தையைப் படுக்க வைத்தார். என்ன செய்யப் போகிறார் என திகிலோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள் தேவியும் ராணியும் ஸாமும். ”இந்தப் பக்கம் நான் பிடிக்கிறேன். அந்தப் பக்கம் தம்பி நீங்க பிடிச்சுக்குங்க” என்றபடி அந்தப் பக்கம் போனார்.

 

“தம்பி கெட்டியாய்ப் பிடிச்சு உருட்டுங்க “ என்றபடி தன் பக்கம் இருந்த இரு முனைகளையும் பிடித்துத் தூக்கினார். நடுங்கும் கைகளோடு ஸாமும் தன்பக்கம் இருந்த புடவையின் இரு முனைகளையும் பிடித்து அரையடி உயரத்தில் தூக்க இருவரும் மாறி மாறி  லேசாக உயர்த்தியும் தாழ்த்தியும் குழந்தையை உருட்ட அது படுக்கை வசத்தில் உருண்டது. மூன்று நான்கு முறை உருட்டிய பிறகு நந்தினியின் அழுகை நின்றது. அது குபுக் கென உருண்டு மல்லாந்து விழிக்க ஆரம்பித்தது.

 

மெதுவாகப் புடவையைக் கீழே வைத்ததும் அக்கா நந்தினியை எடுத்துக் கழுத்தை நீவிக் கொஞ்சி அவர்களிடம் கொடுத்தார். அப்பாடா போன உயிர் வந்தது மூவருக்கும்.

 

கேப்பை கூழ் ரெடி ஆயிடுச்சு அத எடுத்துட்டு வர்றேன். என்றபடி அக்கா உள்ளே செல்ல தேவி தன் மோதிரவிரலைப் பிடித்து மோதிரத்தை உருட்டிச் சுற்றிக்  கொண்டேயிருந்தாள்.

 

ஸாம் இரு குழந்தைகளையும் தலையணை திண்டுவைத்த குட்டி மெத்தைகளில் படுக்க வைத்தான். இருவரும் ஒன்றேபோல் குப்புத்துத் தலையைத் தூக்கிப் பார்த்தார்கள். செல்ஃபோனை எடுத்து உடனே க்ளிக்கினான். நந்தன் நகர்ந்து நந்தினியின் மேல் தட்டி விளையாடியது. இரண்டும் டீதிங் ராடில் , பந்து, ரப்பர், பூப்சீ பாட்டில் என்று இரண்டிரண்டு கிடந்தும் ஒன்றையே பிடித்து இழுத்துக் கொண்டிருந்தன. அவர்களின் சேட்டையை ஆவலோடு விழுங்கிக் கொண்டிருந்தது ஸாமின் செல்ஃபோன் காமிரா.

 

”என்னங்க இத உடனே ஃபேஸ்புக் , டிவிட்டர், இன்ஸ்டாகிராமில் எல்லாம் போட்டுற வேண்டாம். கண்ணு வைச்சிருவாங்க. திருஷ்டி படும் என்ன.”  என்றாள் தேவி.

 

குழந்தைகளின் படுக்கையை சரி செய்த ராணி எழுந்து அவளது அறைக்குச் சென்றாள். அப்போது ராணியின் கையைப் பார்த்தாள் தேவி. அவளும் ஸாமும் அணிந்திருந்தது போல மூன்று கற்கள் கொண்ட வைர மோதிரம் ஒன்றை அணிந்திருந்தாள். கழுத்தில் மெல்லிய செயினும், இருவளையல்களும் ,சின்னதான மயில் டிசைன் தோடுகள் இரண்டு எல்லாமே தங்கத்தில் இருக்க மோதிரத்தின் வைரக்கல்லும் அதன் டிசைனும் தேவியை உறுத்த ஆரம்பித்தது.

 

“கா கா கா .. “ என்று அழைத்துச் சோறு வைத்து அவை உண்ணும் இடத்தில் பிள்ளைகளின் வாக்கரை நிறுத்திக் கூழை சின்னஞ்சிறிய வெள்ளி ஸ்பூனில் ஊட்டிக் கொண்டிருந்தார் நீலாக்கா. மொத்தமே நாலு ஸ்பூன் கூழ்தான் இருக்கும். பல வண்ணங்களில் மூக்கு நீளமான ஒரு பறவை வந்து தோட்டத்தின் மாமரத்தில் அமர அது நந்தன் நந்தினி இருவரின் கண்ணிலும் பட கையை நீட்டி ஊ சூ என்று அவர்கள் பாஷையில் ஏதோ சொன்னார்கள்.

 

“இப்போ உள்ள பிள்ளைகளுக்கு எல்லாம் ஐ க்யூ அதிகமா இருக்கு பாரேன். ஐந்து மாசத்துலேயே இவங்க ரெண்டு பேரும் ரொம்ப ப்ரில்லியண்டா நடந்துக்குறாங்க. இவங்கள அங்க படிக்க வைக்கணும், இந்த ஹாஸ்டல்ல சேர்க்கணும் என்று ஊரின் பணக்காரப் பள்ளிகளைக் கணவன் பட்டியலிட்டுக் கொண்டிருக்க தேவி கேட்டாள் , ”ஏங்க நாம் போட்டிருக்கிற டிசைன்லேயே எப்ப அந்த வைரத் தடையை வாங்கி மாட்டினீங்க. என்ன காந்தர்வ விவாகமா ? இல்ல ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டீங்களா ? கணையாழியைக் கழட்ட வரலியாமா ”

 

கோபமாக உறுத்து விழித்த தேவி முகத்தைத் திருப்பி உள்ளே சென்றாள். குழந்தைகளைப் பார்க்க வந்த ராணி இதைக் கேட்டு விக்கித்து நின்றாள். தோட்டத்தில் இருந்த பறவை பறந்தது. “ எவ்ளோ அழகா இருக்கு. இது நம்மூருப் பறவையே இல்லை. எங்கேருந்தோ இங்கே வந்திருக்கு போல. “ என்றவாறு பிள்ளைகளின் வாக்கரைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தார் நீலாக்கா.

 

” தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன் “ என்ற பாடல் தொடர ராணி தன்னறைக்குத் திரும்பிச் செல்ல ரிமோட்டை எடுத்து டிவியை அணைத்து விட்டு சோபாவில் சரிந்தான் ஸாம்.

 

லா.. ஆ.. லா. என்று ஏதோ கூறியபடி அவனைப் பார்த்துக் கைநீட்டிச் சிரித்தார்கள் நந்தினியும் நந்தனும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...