எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 17 டிசம்பர், 2023

வலைப்பின்னல்

 வலைப்பின்னல்

யோ பாம்பு பாம்பு என்று பதறித் துடித்து எழுந்தாள் முத்தழகி. எங்கே எங்கே என்று ஓடிவந்தார்கள் அவளது தந்தை செந்தில்நாதனும் தாயும். .

 

“அதோ.. அங்கே.. அங்கே..  பெரிய்ய்ய பாம்பு . இல்ல இங்கதான்”  என்று தன் காலடியைச் சுட்டிக்காட்டினாள். பந்துபோல் உருண்டிருந்த கம்பளியைக் காலடியில் இருந்து உருவினார் செந்தில்நாதன். இன்னும் பயம் நீங்காமல் அவள் உடம்பு விதிர்விதிர்த்துக் கொண்டிருந்தது.

 

”என்னம்மா இது. உல்லன் கம்பிளி இதைப் போய் பாம்புன்னு நினைச்சிட்டியா. கால்ல சுருண்டு சிக்கிருக்கு போல. என்று சிரித்தார். ”உங்களுக்கு எப்பவும் விளையாட்டுத்தான். எழுந்து இந்தத் தண்ணியக் குடிம்மா” என்று கொடுத்தாள் அழகியின் தாய். வாங்கிக் குடித்துவிட்டுப் போங்கப்பா என்று சிணுங்கியபடி எழுந்து சென்றாள் மகள்.

 

”என்னம்மா வெப்சைட் ஒண்ணு நம்ம ஷேர் பிஸினஸுக்காக ஆரம்பிச்சுத் தர்றேன்னு சொன்னியே எப்பம்மா அத செய்யப் போறே ”. என்றார்

 

”ப்ராஸஸ்ல இருக்குப்பா. இன்னும் இரண்டு நாள்ல முடிச்சிருவேன்.” கையைத் தம்ஸ் அப் காட்டினாள்.

 

பழையவற்றை எல்லாம் நினைத்து உக்கி உருகிப் போகாமல் மகள் தன்னம்பிக்கையுடன் நடந்து கொள்வது அவருக்கு நிம்மதியாயிருந்தது. கொஞ்சம் நாள் போகட்டும். இந்த நினைவுகள் மறையட்டும். அவளுக்கேத்த வரன் கிடைக்காமலா போய்விடுவான். மனதைத் தேற்றிக் கொண்டார்.

 

இந்த அளவு அவள் மீண்டதே பெரிது என்று மகிழ்ந்து போய் கோவில் கோவிலாய் வேண்டுதல் நிறைவேற்றிக் கொண்டிருந்தாள் அவளது தாய்.

 

ஆறு மாதத்தில் கம்ப்யூட்டர் கற்றுக் கொண்டு மகள் வித்தகியானதில் செந்தில்நாதனுக்குப் பெருமிதம். தனது கம்பெனிகளுக்கு தனித்தனி வெப்சைட் உருவாக்க அவளிடம் கேட்டிருந்தார். மகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருவதில் பெரும் திருப்தி ஏற்பட்டிருந்தது.

 

அலுவலகத்துக்குப் புறப்பட அப்பா மகள் இருவரும் ரெடியாகிக் கொண்டிருந்தார்கள். அப்போது வந்து சேர்ந்தான் ஸாம். அவனைக் கண்டதும் செந்தில்நாதனின் முகம் மாறியது. “என்னப்பா சாமிநாதா இந்தப் பக்கம். ஏதும் விசேஷமா ? “ அவர் கேட்ட தொனியே தனது வருகையை அவர் விரும்பவில்லை என்பதை ஸாமுக்கு உணர்த்தியது.

 

“இல்ல அங்கிள். என் பசங்களுக்கு ஃபர்ஸ்ட் பர்த்டே. அதுக்காக உங்களையும் ஆண்டியையும் முத்தழகியையும் பர்சனலா இன்வைட் பண்ண வந்தேன். ” என்றான். ”அப்புறம் உங்க பிஸினஸுக்கு அழகி வெப்சைட் கிரியேட் பண்ணிக்கிட்டு  இருக்காளாமே. எங்க பிஸினஸுக்கும் பண்ணிக் கொடுக்கச் சொல்லுங்க அங்கிள். இதையே ஜாபா எடுத்து செய்யலாம் அவள் “ என்று புகழ்ந்து சொல்லிக் கொண்டிருந்தான்.

 

இடைமறித்து ” பர்த்டேக்கு நீ ஃபோன்ல கூப்பிட்டாலே போதுமே.. எதுக்குப்பா வீண் அலைச்சல் ”என்றார் செந்தில்நாதன். மிக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தன் வருகை இவ்வளவு கசப்பேற்படுத்துகிறதா என்று கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது ஸாமுக்கு. அழகியின் விழிப்பு வரை இருந்த நிலை வேறு. அதன் பின் அவள் சலனப்படுவதை அவளது பெற்றோர் விரும்பவில்லை என உணர்ந்து கொண்டான்.

 

”சரி அங்கிள் வந்திருங்க. என் பர்ஸனல் இன்வைட். என் செகரெட்டரி ஃபார்மல் இன்வைட் அனுப்புவாங்க”. என்று விடைபெற்றுத் திரும்பினான். ஒரு நொடி முன்னே திரும்பி இருந்தால் முட்டிக் கொண்டிருந்திருப்பான்.  ஆஹா அதே ரோஸில் முத்துக்கள் தைத்து ஃப்ரில் வைத்த நீள லெஹங்காவில் முத்துச் சிப்பி பிளந்தது போல் வெள்ளைப் பல்வரிசை மின்னச் சிரித்தபடி நின்றிருந்தாள் முத்தழகி. “ வாவ் “ என்று விரிந்தது ஆண் மனம்.

 

எப்போது பார்த்தாலும் அவளைக் கண்டு கிறங்கும் மனம் அப்போதும் கிறங்கியது. இரு பிள்ளைகளின் தகப்பன் தான் என்று நினைவுக்கு வர மீண்டவன் “ நந்தன் நந்தினிக்கு பர்த்டே அழகி. கட்டாயம் அப்பா அம்மாவோடு வந்திடு “ என்று கூறிவிட்டு கண்களைத் திருப்பிக் கொண்டு வேகமாக வெளியேறினான். ”ஷ்யூர் சாம்” என்று அவள் சொல்வது கூட தேய்ந்து ஒலித்தது.

 

பெருமூச்சு விட்ட செந்தில்நாதன் ” அப்பாடா. போயிட்டான். அம்மா அப்பாகிட்ட கூட சொல்லாம இரண்டு பெண்கள் வாழ்க்கையைக் கெடுத்துட்டு இருக்கான். நல்ல வேளை “ என்றார். ”நாம தப்பிச்சோம்” என்று தந்தை சொல்லாமல் விட்ட வார்த்தையை ஊகித்து ’ஸாம் மேல் என்ன தவறு. சூழ்நிலை அப்பிடி’ எனப் புன்னகைத்தபடி அவரைத் தொடர்ந்து சென்று காரில் ஏறினாள் அழகி.

 

ப்பிடி என்ன நம்மேல் தப்பு. இப்பிடி அழகி குடும்பத்துக்கு வேண்டாதவனாய்ப் போனோம்”. என்று மனம் குமைந்தபடி வீடு திரும்பிக் கொண்டிருந்தான் சாம்.

 

காரை போர்ட்டிகோவில் நிறுத்திவிட்டு உள்ளே செல்ல டாமி ஓடிவந்து கொஞ்சிக் குலாவியது.

 

இரண்டு குட்டி பாட்டரி கார்களில் நந்தனும் நந்தினியும் அமர்ந்து ஒருவரை ஒருவர் இடித்தபடி வீட்டுக்குள் ஓட்டிக் கொண்டிருந்தார்கள். நீலாக்கா ஸ்பூனில் வேகவைத்த காய்கறிகளை ஊட்டிக் கொண்டிருந்தார். பிறந்தநாளுக்கான அலங்காரங்கள் தோட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தன. வேகமாகத் தங்கள் பெட்ரூமுக்குச் சென்று படுக்கையில் விழுந்தான்.  

 

காய்ச்சலில் அனத்திக் கொண்டிருந்தாள் தேவி.  பல்லைக் கடித்தபடி இறுக்கத்தோடு எழுந்து அமர்வதும் பின்னர் படுப்பதுமாக இருந்தாள். அவளுக்கு உடம்பு சரியில்லை என்பதே ஸாமுக்குத் தெரியவில்லை. திடீரென்று கண் விழிக்கும்போது பால்கனிக்கும் படுக்கைக்குமாக பாம்பு நெளிவது போல் அலைந்துகொண்டிருந்தாள் தேவி. முறுக்கிக் கொண்டிருந்தது அவள் உடல்.

 

என்னம்மா என்னாச்சு என்றுவன் அவளின் கைபிடித்துக் கேட்டான். அப்போதுதான் உடம்பு கொதித்தது தெரிந்தது. பல் கிட்டித்தது. கைவசம் இருந்த பாரசிட்டமால் ஒன்றைக் கொடுத்துப் படுக்க வைத்தான். அவள் மனதை சுழட்டிய கவலை அவனுக்குப் புரிந்தது. தூக்கத்தில் அவள் அனத்தலில் அது வெளிப்பட்டது. ராணி என்பாள் கையை முறுக்குவாள். நந்தா, நந்தினி என்பாள் பக்கத்துப் படுக்கையைக் கட்டிப் பிடிப்பாள். திடீரென பதறி எழுவாள்.

 

ஸாம் அவளைக் கட்டிப் பிடித்துப் படுக்க வைத்து அவர்கள் அடுத்த ரூமில் நீலாக்காவோடு படுத்து இருப்பதாகவும் அவளுக்கு ஜுரமென்பதால் கொண்டு வரவில்லை என்றும் சொன்னான்.  தூக்கத்திலும் அவள் மனமெங்கும் தன் குழந்தைகளிடமிருந்து ராணியை எப்படிப் பிரித்து அனுப்புவது என்பதே எண்ணமாயிருந்தது.

 

நாளை விடிந்தால் குழந்தைகள் பிறந்தநாள். மா மா என அவர்கள் தேவியிடமும் ராணியிடமும் தாவிக் கொண்டிருப்பார்கள். தன் பிரச்சனையை விட அவள் பிரச்சனை பெரிது என உணர்ந்தான் ஸாம். இதை எப்படித் தீர்க்கலாம். ?

 

விடிந்தது நந்தனும் நந்தினியும் அழுது கொண்டிருந்தார்கள். அழுகைச்சத்தம் கேட்டு விழித்த ஸாமும் தேவியும் கீழே சென்று பார்க்க அங்கே குழந்தைகளை சமாதானப்படுத்தியபடி அமர்ந்திருந்தார் நீலாக்கா.

 

ராணி எங்கே ? . அவள் அறையில் எட்டிப்பார்த்தால் காலியாக இருந்தது. ட்ரெஸ்ஸிங் டேபிளில் ஒரு கடிதம் படபடத்தது. அதன் மேல் பேப்பர் வெயிட் போல அவன் கொடுத்த மூன்று கல் வைர மோதிரம் அமர்ந்திருந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...