ஸ்பைக் பஸ்டர்
”ஹேய் ஹேய் அண்ணனோட பாட்டு” என்று ரஜனி ஆடிக்கொண்டிருக்க முடி சிலும்பிச் சிலும்பி
விழுந்தது. ஸாம் பெருமையோடு ராணியின் அருகிலும் ரூபாவதியின் அருகிலும் நின்று புகைப்படத்துக்குப்
போஸ் கொடுத்துக் கொண்டிருந்தான். இரண்டு வாரங்கள் இங்குபேட்டரில் இருந்த அவனது குழந்தைகள்
நாப்கினால் நன்கு சுற்றப்பட்டு ஸாம் கையிலும் ராணி கையிலும் இருந்தார்கள்.
அனைவரும் புகைப்படத்துக்காகப்
புன்னகைத்து நகர்ந்ததும் அங்கே இருந்த தொட்டிலில் இருவரையும் படுக்க வைத்தார்கள் ஸாமும்
ராணியும். ”எவ்ளோ தலைமுடி.” என்று. சிலும்பிக்
கொண்டிருந்த தலைமுடியைத் தடவியபடி சொன்னார் நீலாக்கா.
“நந்தினியும் நந்தனும் அவர் கைகளுக்கருகில் குன்றிமணிக் கண்களைத் திறந்து நாக்கை உதப்பிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். முகமெல்லாம் சிவந்து ரோஸ் நிறக் கன்னங்கள் மிளிர்ந்தன.
குழந்தையைப் பார்க்க வந்திருந்த
உறவினர்களும் அவர்களின் முடியையே தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ”ஸ்பைக்ஸ்
ஹேர்ஸ்டைல் வைச்சமாதிரி எவ்ளோ முடி”.
இதைக் கேட்கும்போதெல்லாம் ஸாம்
புன்னகைத்துக் கொள்வான். ஆமாம் நந்தனுக்கும் நந்தினிக்கும் நல்ல கோரை முடி கூடையாக
நெற்றியை மறைத்திருந்தது. எல்லாம் ராணியின் முடிவாகு. அவனுக்கும் தேவிக்கும் இவ்வளவு
முடி இல்லை.
தேவியை நினைத்ததும் அவன் மனது
நொந்தது. நீலாக்காவைப் பார்த்து அக்கா ”தேவி மருந்து எல்லாம் கரெக்டா சாப்பிடுறாதானே”
என்று திரும்பவும் ஒரு முறை கேட்டான்.
”அதெல்லாம் கரெக்டா கொடுக்குறேன்
தம்பி. அதோட தினம் நிறைய தயிர்விட்டு தயிர்சாதமும், துளசிச் சாறும், சுக்குடிக்கீரை
கழனிச்சாறும், கத்தாழை ஜூஸும் அப்பப்ப கொடுத்துட்டு வர்றேன். தேவிம்மா அந்த ஆயிண்ட்மெண்டைப்
போட்டு ரெண்டு வேளை மவுத்வாஷாலயும் கழுவுறாங்க. இப்ப பரவாயில்லை. ரத்த அழுத்தமும் கட்டுக்குள்ள
வந்திருக்கு. நீங்க கவலையே படாதீங்க. அவங்க நல்லா இருக்காங்க “
ராணியும் ஸாமும் ஆளுக்கொரு குழந்தையைத்
தூக்கிக் கொள்ள நீலாக்காவும் ட்ரைவர் கண்ணாயிரமும் ஆஸ்பத்திரியில் பதினைந்து நாளாகப்
பயன்படுத்தக் கொண்டு சென்ற சாமான்களைக் கட்டித் தூக்கிக் கொண்டார்கள்.
”நீங்க காருக்குப் போங்க. நாங்க
டாக்டர்கிட்ட சொல்லிட்டு வர்றோம்” என்று விலகிச் சென்றார்கள். ஸாமும் ராணியும். குழந்தை
பிறந்தபோது வந்து பார்த்ததுதான் தேவி அதன்பின் ஓரிரு முறை ஸாம் அத்யாவசியமாக ஆஃபீஸ்
சென்றிருந்தபோது வந்து பார்த்துச் சென்றிருந்தாளே தவிர இன்று வரவில்லை.
தெரிந்த டாக்டர் என்பதால் ரூபாவதியிடமும்
தாங்களே எல்லாவற்றிலும் ஒப்புதல் ஸைன் செய்து வெளியே வந்தார்கள். இரண்டு மூன்று நாட்களுக்குள்
தேவியும் வந்து எல்லாவற்றிலும் கையெழுத்திட வேண்டும். இன்று வர ஏனோ மறுத்துவிட்டாள்.
பால் குடிக்கும் பிள்ளைகள் என்பதால்
மூன்று மாதம் வரை ராணியுடனே அவர்கள் இருக்க தேவியிடம் கெஞ்சிக் கூத்தாடி ஸ்பெஷல் பர்மிஷனும்
வாங்கிவிட்டான்.
விஷயம் தெரிந்து ராணிக்கெதிராகக்
குடும்பமே திரும்பிய போது அனைவரையும் சமாளித்தவர் நீலாக்காதான். “குழந்தை ஆசையில் ரெண்டு
பேருமே இப்பிடி ஒரு முடிவெடுத்துட்டாங்க. என்ன இருந்தாலும் இவங்க ரெண்டு பேரோட வாரிசுதானே.
நம்ம குடும்ப ரத்தம்தானே. இப்ப என்ன செய்றது. அடுத்து அந்தப் பொண்ணு பிரசவிச்சு கொடுத்துட்டுப்
போயிடுவா. அது வரைக்கும் பொறுக்கத்தானே வேணும். “
அதிகம் படிப்பறிவில்லாவிட்டாலும்
உலக அறிவு தெரிந்த அவர் சொன்னதை குடும்பம் ஏற்றுக்கொண்டதோ இல்லையோ கோபத்தோடு ஒன்றும்
பேசாமல் ஸாம் வீட்டினரும் தேவியின் பிறந்த வீட்டு ஆட்களும் சென்றுவிட்டார்கள்.
ரிஸல்ட் வந்துவிட்டது. தேவிக்கு
மவுத் அல்சர் வகைதான். அதைப் பார்க்காமல் விட்டிருந்தால் மவுத் கேன்ஸராகி விடக்கூடிய
அபாய எல்லையில்தான் இருந்தது. அந்த ரிஸல்ட் கிடைத்த ஆசுவாசத்தில் ஸாம் ராணியின் டெலிவரியில்
இருந்து ஆஸ்பத்திரியிலேயே தங்கி தன் பிள்ளைகள் இருவரையும் ஒருமணிக்கு ஒருதரம் சென்று
ரசித்துக் கொண்டிருந்தான். நர்ஸ்களின் பரிகாசப் புன்னகைக்கும் ஆளாகி இருந்தான்.
இரண்டு மூன்று நாட்களில் ராணி
நார்மலாகி விட்டாள். குழந்தைகளுக்கு அமுதூட்டவும் அவர்களுக்கு உடுப்பு மாற்றவும் நாப்கின்
மாற்றவும் மாறி மாறிப் பார்க்கவும் அவளுக்குச் சரியாக இருந்தது. ஒரு நர்ஸ் வேறு கூடவே
இருந்தார். ஸாமுக்கும் ராணிக்கும் நந்தனையும் நந்தினியையும் கண் சிமிட்டாமல் பார்ப்பதற்கே
காலம் பத்தவில்லை.
”ராணி வீட்டுக்கு வா. அங்கே நாளைக்கு
புண்யாசனம் பண்ணி காது குத்தணும்னு சொன்னாங்க அம்மா. ”ராணியின் வயிற்றில் ஏதோ புரண்டது.
என்னது ஸாம் வீட்டுக்கா. அங்கேயா..
குழந்தைகளை விட்டுப் பிரியணுமா.
இரவெல்லாம் இருவரையும் சேர்த்து அணைத்துப் படுத்திருந்தாள். கண் கசிந்து கொண்டே இருந்தது.
தன் ரத்தம் இல்லையா இவர்கள். தானொரு நிலம்போல்தானா. அவர்கள் விதையை நடவில்லையே. செடியை
நட்டுத்தானே வளர்த்துத்தரச் சொன்னார்கள். கொடுக்கத்தானே
வேண்டும். கொடுக்கத்தான் வேண்டுமா. தூக்கிக் கொண்டு எங்காவது சென்று விடுவோமா.
கருமுட்டை தானம் செய்தபோது இப்படி
எல்லாம் தோணலையே. கருப்பையில் வளர்ந்த இரு உயிர்களை எப்படிக் கொடுப்பது. குனிந்து பார்த்தாள்.
தன்னையே பிரதிபலித்தமாதிரி இரு முகங்கள். நான்கு கண்கள். நான்கு பிஞ்சுப் பாதங்கள்
தாய்மையால் கனிந்திருந்த அவள் நெஞ்சில் உதைத்தன. தாங்கிப் பிடித்துத் தடவினாள். கண்களில்
ஒற்றி முத்தமிட்டபோது குழந்தைகளின் பிஞ்சுப் பாதங்களை தன்னையறியாது வடிந்த அவள் கண்ணீர்
கழுவிக்கொண்டிருந்தது.
தொட்டிலில் இடும் நாள். ஐயர் வந்து
புண்யாவசனம் செய்து கும்பம் வைத்து ஹோமம் செய்து சென்றுவிட்டார். அனைவரும் விருந்துண்டு
கொண்டிருந்தார்கள். வீடெங்கும் பாயாசமும் விருந்துணவும் மணத்தது.
ராணி பிள்ளைகளைத் தூக்கிக் கொண்டு
அவளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பெட்ரூமில் பால் கொடுக்க அமர்ந்திருந்தாள். நீலாக்கா அவளுக்கு
துணை செய்யச் சென்றிருந்தார்.
சொந்தக்காரர்கள் யாரும் பெரிதாக
விசாரிக்காவிட்டாலும் அரசல் புரசலாக விஷயம் சென்று சேர்ந்திருந்தது. இந்தக் காலத்தில்
இப்படி பிள்ளை பிறப்பது அதிசயம் ஒன்றுமில்லையே என்று யாரும் எதுவுமே பேசவில்லை. அப்படிப்
பலர் இருந்தாலும் வம்பு பேசும் சிலர் எங்கும் இருக்கத்தானே செய்கிறார்கள்.
“நம்ம குடும்பத்துல யாருக்கும்
இப்பிடி வணங்காமுடி இல்லையே. முள்ளம்பன்னி முள்ளுமாதிரி நல்லா குத்துது. ஆனா குட்டிக
ரெண்டும் போஷாக்கா நல்லாத்தானிருக்கு “ ஹாலில் அமர்ந்திருந்த உறவினர் ஒருவர் இன்னொருவரிடம்
சொல்லிக் கொண்டிருந்தது பக்கத்து அறையில் இருந்த தேவியின் காதுகளில் நாராசமாய் ஒலித்தது.
ஐயர் சென்றதும் விடியலில் எழுந்தது
களைப்பாக இருந்ததால் ஓய்வெடுக்க அவள் தனது அறைக்குள் புகுந்திருந்தாள். விருந்தினர்களை
மாமனார் மாமியார் பார்த்துக் கொள்வதாகச் சொல்லி இருந்தார்கள். யாராவது ஏதாவது சொல்லப்போக
வீணாய் அவள் ஏன் புண்படவேண்டும் என்ற நல்ல உள்ளம்தான் காரணம்.
” அவங்க எங்க குழந்தைகள். சுமந்தவளின்
ஜாடையும் சேர்ந்திருக்கலம். அதுக்காக இப்படி எல்லாம் எங்க குழந்தைகளைப் பேசுவது யார்
?” என்று பார்ப்பதற்காக வேகமாகக் கோபத்தோடு வெளியில் வந்தாள் தேவி. டி வி, கம்ப்யூட்டர்,
சார்ஜர் ஆகியவற்றின் ப்ளக்குகளை மாட்ட அந்த அறையின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த ஸ்பைக்
பஸ்டர் அவள் காலில் தட்டியது. அப்படியே கால் தடுக்கி ட்விஸ்டாகி அறைக்குள் விழுந்த
தேவி ஒரு அவசர மயக்கத்துக்குப் போனாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)