எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 19 ஜனவரி, 2015

அன்ன பட்சி பற்றி புதிய தரிசனம் பத்ரிக்கையில் அகிலாவின் விமர்சனம்.

  1. அன்னபட்சி பற்றி அகிலா புகழ் கோவை இலக்கிய சந்திப்பில் பேசியதை தனது வலைப்பதிவில் ( சின்ன சின்ன சிதறல்கள் ) பதிவிட்டிருந்தார்.

அதன் சுருக்கம் அக்டோபர் 16 - 31  புதிய தரிசனம் இதழில் வெளியாகி உள்ளது.

தலைப்பிற்குரிய கவிதையில் தேனம்மை அவர்கள், அன்னபட்சியின் தன்மையை அழகாய் இயம்புகிறார். அன்னபட்சி எப்படி நீர் தவிர்த்து பால் மட்டும் கொள்ளுமோ அதையே சற்று மாற்றி,



‘உன் அல்லதை எல்லாம் நல்லதாக்கி அருந்தும் அன்னபட்சி நான்’ ன்னு எழுதியிருக்காங்க கவிதையில்.இது மிகவும் வித்தியாசமான சிந்தனை. மற்றவர்களின் நல்லவை அல்லாதவற்றைக் கூட நல்லதாக்கிப் பார்க்கும் அவரின் இந்த குணம் நம்மை வியக்க வைக்கிறது. 
இனி, கவிதைகளைப் பார்ப்போம்..

இந்த நூலின் முதல் கவிதையே தேடலின் துவக்கமாக இருக்கிறது.

ஓசையிலாத இசையும்
வர்ணகளில்லாத நிறமும்
மேகங்களை ஒத்த உருவமும்
நீரைப் போல உணர்வும்
கொண்டலைகிறேன்
இந்த அண்டத்திலே
ஒரு விண்மீனும்
ஒரு பால்வீதியும்
எனக்கான
ஒரு சூரியனும் சந்திரனும் தேடி.

எனக்கே எனக்காக ஒரு விண்மீனும் பால்வீதியும் அமையாதா என்கிற ஒரு தவிப்பு இந்த கவிதையில் தெரிகிறது. இக்கவிதையில் அவர் வசதிகளையோ வாய்ப்புகளையோ தேடவில்லை. நல்ல துணையோ நட்போ வேண்டும் என்ற உணர்வுப்பூர்வு தேடலும் இல்லை இது. ஆத்மார்த்த தேடல் இது. அதுவே இந்த நூலின் மற்ற கவிதைகளுக்கான முகவரியும் ஆகிறது.   

சமூக சிந்தனைக் கொண்ட கவிதைகள் ஆகட்டும், பொம்மை கவிதைகள் ஆகட்டும், மனதின் உணர்வுகளை சொல்லிச் செல்லும் கவிதைகள் ஆகட்டும் எல்லாவற்றிலும் அவரின் பெயரில் உள்ள இனிப்பை முத்திரையாய்ப் பதித்திருக்கிறார்.


பொம்மை கவிதைகள் : 
பொம்மைகளை வைத்து கவிதைகள் சிலது புனைந்திருக்கிறார். அவைகள் இந்த கவிஞருக்கு மிகவும் பிடித்த ஒன்று போலும். பொம்மைகளைப் பற்றி கவிதை சொல்லி அதில் நிஜ வாழ்க்கையைப் புகுத்திப் பார்க்கச் சொல்கிறார்.

விளையாட்டு பொம்மை என்கிற கவிதையில்,
பொம்மை வாங்க போகும் ஒருவன், சொல்பேச்சு கேட்பது போலிருக்கும்
பொம்மையை வாங்கி வருகிறான். ஆனால் அந்த பொம்மையோ அதிகமாய் பேசும் தன்மையது. அவனை விளையாடுகிறது அது. அவன் தூங்கிவிடுகிறான். அது முழித்திருக்கிறது அவன் உறக்கம் கலைய காத்திருக்கிறது.

இதில் அவர் சொல்ல நினைக்கும் விஷயம் பெண் பார்த்து திருமணம் முடித்து வரும் ஆண்மகனைப் பற்றியது. பெண் என்பவள் அதிகமாய் பேசவே படைக்கப்பட்டவள். ஆனாலும், அவள் அவளின் சத்தமும் இல்லாவிடில் குடும்பமும் உறவுகளும் முழிப்பில் இருக்க முடியாது என்பதை அழகாய் இந்த கவிதையில் விளக்கிவிட்டார் கவிஞர்.


பொம்மைக்காரிகள் என்னும் கவிதையிலும், தன் பொம்மையுடன் விளையாடும் ஒரு குழந்தை, அடுத்து ஒன்றைப் பார்த்ததும், இதை விடுத்து, அதனுடன் விளையாடுகிறது. ஒன்றை விடுத்து அடுத்தது அடுத்தது என்று போகும் குழந்தை கடைசியில் தனக்குரிய பொம்மையிடம் வந்து சேருகிறது.

நாமும் இப்படிதான். நம் கையில் இருப்பதை விடுத்து, அடுத்த ஒன்றைப் பார்த்ததும் அதன் மேல் நாட்டம் கொள்கிறோம். மறுபடியும் தொடக்கதிற்கே வருகிறோம். வாழ்க்கையில் அவ்வப்போது நம்முடன் வந்து சேரும் அனைத்துமே வாழ்வின் அந்தந்த பகுதியில் மட்டுமே நிலைக்கிறது. அதை தாண்டும் அனுபவங்கள் இலகுவாய் கொண்டு செல்லக்கூடியவை என்பதை இவரின் இந்த கவிதை சுட்டிச் செல்கிறது.   

பொம்மை வைத்து எழுதும் இந்த கவிதைகள் கவிஞர் தேனம்மையின் மனநிலையை எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதைப் பாப்போம்.

பொம்மை என்பது ஒரு Still Life. அசையா வாழ்க்கை.

அதற்குள் நாம் நம் கனவுகளைப் பொருத்திப் பார்க்கலாம். அதுவாய் நாம் மாறிப் பார்க்கலாம். அதற்கு வண்ணங்களில் உடைகள் உடுத்தி, அதில் நம் அழகை, அழகாய் உணரலாம். நம்மால் நடத்த இயலாததை நடத்துவதாக கற்பனைகள் செய்யலாம். நிறைய கேள்விகளுக்கு மௌனத்தைப் பதிலாய் கொடுக்கலாம். கவிஞரும் இதைதான் செய்திருக்கிறார்.

எப்போது நம்மை சுற்றியிருக்கும் சூழல் நம்மை அசைவற்றதாக்கி விடுகிறதோ அப்போதுதான் நாம் அசைவற்ற பொருளுக்குள் நம்மை புகுத்தி இயங்க ஆரம்பிக்கிறோம். கவிஞரும் அசைவில்லாத் தன்மைக்குள் தன்னை புகுத்தி பார்த்து, கவிதை தொடுத்து நம்மை குளிர்வித்திருக்கிறார்.


எளிமையான சொல்லாடல் :

கவிதைகளில் எளிமையான சொல்லாடல் வலம் வருகிறது. கவிதையை புரிய விடாமல் செய்யும் சிக்கலாக்கும் வார்த்தைகள் இல்லாமல் இயல்பான பேச்சு வழக்கிலேயே நிதர்சனங்களை சுட்டும் கவிதை இருப்பது அழகாய் இருக்கிறது. சமூகத்திற்கான செய்தியும் பொட்டில் அடித்தார்ப்போல் அதன் கடைசி வரிகளில் மின்னுகின்றன.

விவசாயம் என்னும் கவிதையில்,

சாணி சருகு
வேப்பம் பிண்ணாக்கு
மக்கிப் போன தோல்தழை
மழை பெஞ்சா மன்னுழப்பி

இத்தனையும் விட்டுபுட்டு
கைநிறைய அள்ள
கலப்புரம் போட்டு
மேலே அள்ள
மேலுரம் போட்டு

பருத்தி வரும்னு பதறிப் பார்த்தும்
கத்திரிக்க்காயக்கு மரபணு மாத்தியுங்
காத்திருந்தா

சாயாத்தண்ணியா கருத்து வந்தது
சாயத்தண்ணி
துவைச்ச நுரையாட்டம்
பார்த்தீனியம் கூட பட்டுப்போக

குடிச்சுக் குடல் அழிஞ்சு
புண்ணாகிக் கிடக்கு
சுரப்புத் தட்டிப் போய்
வெடிச்ச முலைக் காம்பாட்டம்
எனக்குப் பாலூட்டிய பூமி


இந்த கவிதையின் கடைசி வரிகளில் உள்ள வலி, பால் சுரப்புத் தட்டிப் போன, அதுவும் வெடித்துப் போய் இருக்கும் முலைக் காம்பின் வலியை வறண்டுப் போன இந்த பூமியின் வலியுடன் ஒப்பிட்டு அருமையான சமூக அக்கறை கொண்ட கவிதையைப் படைத்திருக்கிறார்.    

மெழுகின் முணுமுணுப்பு என்னும் கவிதையில், மின்சாரம் போய்விடும் ஒரு வேளையில், வீட்டில் பழங்கதைகளும் சிரிப்பும் சந்தோஷமாய் பொழுது கழிகிறது. மீண்டும் மின்சாரம் வந்தவுடன் அவரவர் வேலைகளில் முழ்கிவிடுகின்றனர். அதை அழகாய் கவிதையில் சமைத்திருக்கிறார் தேனம்மை.

அதன் கடைசி வரிகள் இவை,

மீண்டும் பிரிந்து தத்தமது வேலையில்
அனைவரும் புகுந்துக் கொள்ள
பகிர்ந்த சந்தோஷம் எல்லாம்
துரத்தப்பட்ட கணவாய்
அதன் புகையைப் போல மிதந்து வெளியேறுகிறது


இக்கவிதையை படிக்கும் போது நமக்கும் இம்மாதிரி அனுபவம் நேர்ந்தது நினைவில் வருகிறது.


செல்ல பிராணி என்கிற கவிதையில்,

நாய்களைக் காதலிப்பவர்கள்
பெருகிக் கொண்டிருக்கிறார்கள்

.. என்று தொடங்கி, நாய்கள் மனிதர்களைவிட மேல் என்பதை கவிதையில் சொல்லி சென்று இறுதியில்,

நாய்களோடு வாழ்பவர்கள்
பெருகிக் கொண்டிருக்கிறார்கள்

என்று முடித்திருக்கிறார்.
அருமை..


விளையாட்டு என்னும் கவிதையில்,  
ஆண் பெண் உறவையும் பெண் கருவுருதலையும் பூடகமாக சொல்லியிருக்கிறார்  



பெண்மை கவிதைகள் : 
தேனம்மை ஒரு பெண் கவிஞர் ஆயிற்றே, பெண்மை பற்றுய கவிதை இல்லாமல் இருக்குமா என்ன..

சூலும் சூலமும் என்கிற சமூகம் பெண்ணை எப்படி எதிர்க் கொள்கிறது என்பதை மனதில் வேதனையுடன் சொல்லியிருக்கிறார்.

யாருக்குமே கேட்காமல் அவள்
அழுது முடிக்கும் போதெல்லாம்
ஒரு சூலம் முளைக்கும் அவளது ஞானக்கண்ணாய்

எடுத்து வயிற்றிலே செருகிக் கொள்வாள்
ஏன் சூலுற்றீர்கள் எனப் பெற்றவரை நினைத்து
ஏன் சூலுரவைத்தாய் எனக் கொண்டவனை நினைத்து
என் சூலில் ஏன் பிறந்தீர்கள் என
சூல் கொண்டவர்களை நினைத்து

என்னும் வரிகள் பெண்மையை தட்டியெழுப்பும் கேள்விகள்.

கடவுளை நேசித்தல் என்னும் கவிதையும் ரசிக்கும்படி உள்ளது.


இவரின் கவிதைகள் காற்றைப் போல், தென்றலைப்போல் இயல்பானதாக இருக்கிறது. அனைத்துமே அருமை. இந்த இவரின் நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் இதை உணருவீர்கள்.

 -- நன்றி அகிலா புகழ் & புதிய தரிசனம். ( ஜெபகுமார் )

டிஸ்கி :- எங்கள் நூல்கள்  2015,  38 வது சென்னைப் புத்தகக் கண்காட்சி, அகநாழிகை பதிப்பகம்,  “அரங்கு எண் 304, வீரபாண்டிய கட்டபொம்மன் வீதி” யில் கிடைக்கும்.


4 கருத்துகள்:

  1. ரசிக்க வைக்கும் சொல்லாடல்...

    விமர்சனம் அழகு... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. நன்றி தனபாலன் சகோ

    நன்றி குமார் சகோ

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...