எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 15 நவம்பர், 2014

சாட்டர்டே ஜாலி கார்னர். பத்மஸ்ரீ விஜயகுமாரும் அகஸ்தியர் கூடமும்.

என் முகநூல் சகோதரர் பத்மஸ்ரீ விஜயகுமார். பத்மஸ்ரீ என்பது அவரின் கடைப் பெயர். ( பேரோடு சேர்ந்து ஒலிக்கும்போது விருதுப் பெயர்போல் இருக்கிறதே  என்று நினைத்தேன்) . எனவே மனைவியோ, தாயோ என்ற குழப்பம் வேண்டாம். :)

இவர் சென்ற இதழ் சக்தி விகடனில் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களுடன் இருக்கும் புகைப்படத்தில் இடம் பெற்றிருந்தார். ஆச்சர்யமாக இருந்தது. சின்ன வயதிலேயே ஆன்மீகத் தேடல் அதிகம் உள்ள சகோதரர்.

{இங்கே ஹைதையில் பௌர்ணமி அன்று சத்குரு கலந்துகொள்ளும் நிகழ்வுக்கு நான் சென்று வரவேண்டும் என்று கூறி விபரங்கள் அனுப்பினார். ஆனால் என்னால் சென்று வர இயலாத அளவு வீட்டிலும் விசேஷங்கள். :) திடீரென்று லீவ் கிடைத்து கணவர் , குழந்தைகள் எல்லாரும் ஒண்ணா இருந்தாலே விசேஷம்தானே :) }

விஜய் கோவையை இருப்பிடமாகக் கொண்ட மெக்கானிக்கல் இன்ஜினியர். இளம் வயதுதான் என்றாலும் ராம்சுரத் குமார், சத்குரு ஜக்கிவாசுதேவ், அகத்தியர் படங்களைத் தன் முகப்புப்படமாக வைத்திருப்பார்.

மலை சார்ந்த புகைப்படங்கள் அடிக்கடி இடம் பெறவே அவரிடம் மெசேஜ் செய்து கேட்டதில் மலைப்பயணங்களில் (அதுவும் மனிதர்கள் அதிகம் பயணித்திராத மலைப் ப்ரதேசங்களுக்குச் செல்வதில் ) அதி விருப்பம் எனச் சொன்னார். அவர் பயணித்த ஒரு மலைப் பயணத்தைப் பற்றிக் கேட்டவுடன் குறுமுனி அகத்தியர் உறைந்திருக்கும் பொதிகை மலை பற்றியும் அங்கே பயணம் செய்து வந்தது பற்றியும் எழுதி அனுப்பினார்.

///விஜய் நீங்கள் சென்று வந்த ஒரு மலைப்பயணத்தைப் பற்றி சும்மாவின் வாசகர்களுக்குக் கூறுங்கள். ? (என்னென்ன இடையூறுகளைக் கடந்தீர்கள் ? மேலும் மலையேற்றம் செய்ய விரும்புபவர்கள் கைக்கொள்ள வேண்டியது என்ன. ?உங்கள் அனுபவங்கள் மூலம் தெரிந்து கொள்கிறோம்)  ///

பொதிகைமலை உச்சியிலே புறப்படும் தென்றல் ....

மேற்கு மலை தொடரில் தமிழக கேரள எல்லை பகுதியில், பல அரிய உயிரினங்களின் வாழ்விடமாக இருக்கும் செங்குத்தான மலை மலையின் உச்சியில் வீற்றிருக்கும் அகத்திய மாமுனியை காண பயணமானோம்.. நண்பர்களுடன்.

பல மூலிகைகளை தழுவி வந்து நம்மை வருடி செல்லும் மெல்லிய தென்றல்...



மனதை கொள்ளை கொள்ளும் விதத்தில் வெள்ளியை உருக்கி ஊற்றியது போல கொட்டும் அருவிகள்... பாய்ந்து செல்லும் நீரோடைகள்,மனதை மயக்கும் அமைதி..எங்கும் காண கிடைக்காத அபூர்வ மூலிகைகள், மலர்கள் ... தொட்டுப்பார் என்று சவால் விடுவதை போல அருகில் ஓடி வந்து பின்னர், சற்றே எட்ட நின்று காதுகளை உயர்த்தி நம்மை ஆச்சரிய பார்வை பார்க்கும் மான்கள்... இதுவரை கண்டிராத உயிரினங்கள்... கேட்டிராத பறவைகளின் குரல்கள்...

திடீரென கேட்கும் யானைகளின் பிளிரல் ... என்று கண்ணிற்கும், காதிற்கும் இனிமை சேர்க்கும் அழகிய வனப்பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 6 ஆயிரத்து 200 அடி உயரத்தில் தென்னிந்தியாவின் இரண்டாவது பெரிய சிகரமான அகத்திய கூடம் மலையின் உச்சியில் அமைந்துள்ளது.
சித்த மருத்துவத்தின் தந்தை என போற்றப்படும் குறுமுனி அகத்தியரின்
கோவில் ...

சித்தர்களுக்கெல்லாம் குருவாகக் கருதப்படும் அகத்திய முனிவரை தரிசிக்கச் செல்லும் வனப்பகுதி முழுவதும் மருத்துவ குணம் நிறைந்த மூலிகைச் செடிகளைக் காணலாம்.மலையடிவார கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் பல ஜீவ நதிகளும், இம்மலையில் இருந்துதான் உற்பத்தியாகின்றன.. தமிழக வனப்பகுதியில் களக்காடு முண்டம்துறை புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட பின்பு, இந்த வழியாக அகஸ்திய கூடம் செல்ல தமிழக அரசு அனுமதிப்பதில்லை.. கேரளா வழியாக செல்லலாம்...

குறுமுனி அகஸ்தியரை தரிசிக்க தைப்பொங்கல் முதல் மாசி மாதம் சிவராத்ரி வரை கேரள வனத்துறையினர் அனுமதி கொடுக்கிறார்கள். கேரளா அரசின் வனத்துறை இணையதளம் மூலமாக முன் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது (கேரளாவில் உள்ள முகவரி மட்டுமே ஏற்றுக்கொள்ளும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது).வனத்துறையின் சார்பாக வழிகாட்டியும் கூட வருவார்.  குறிப்பிட்ட எண்ணிக்கை நபர்களுக்கே அனுமதி அளிக்கிறார்கள். மேலும், அன்றைய காலநிலைக்கு தகுந்தார் போல பயண மாற்றங்கள் இருக்கும்.

திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள போனக்காடு எஸ்டேட்டில் இருந்து 24 கி.மீ. மலைகளுக்கிடையே உள்ள காட்டுப் பாதையில் நடந்து சென்றுதான் குறுமுனியை தரிசிக்க முடியும்..

தென்காசி வழியாக வந்தாலும், திருவனந்தபுரம் வழியாக வந்தாலும் பாலோடு (paload) , என்னும் ஊரில் தங்குவதற்கு வசதிகள் உள்ளது. குறைந்த வாடகைக்கு அறைகள் இங்கு கிடைக்கிறது.. இங்கு, பயணத்திற்கு தேவையான உணவுகளை வாங்கி கொண்டு, இங்கிருந்து 1 மணி நேர பயணத்தில் போனக்காடு எஸ்டேட் எனும் இடதிற்கு செல்லவேண்டும். அங்குள்ள, கேரள வனத்துறை அலுவலகத்தில் பெயர்களை பதிவு செய்யவேண்டும். பிறகு,வனத்துறை அதிகாரி சில ஆலோசனைகளை வழங்கி, பயணிகளின் பைகளை ஆய்வுசெய்து, தடைசெய்யப்பட்ட பொருட்களான பிளாஸ்டிக் காகிதம், தீப்பெட்டி இருந்தால் பறிமுதல் செய்துவிடுவார்கள். குழுவாக மட்டுமே பயணிக்க முடியும்.

இங்கிருந்து தான் நமது பயணம் ஆரம்பமாகிறது. இருபுறமும் கவனத்தில் கொண்டு பயணிக்க வேண்டும். ஒற்றையடி பாதை தான்.. உயர்ந்து வளர்ந்த மரங்கள், அவற்றின் பிரமாண்டமான வேர்கள், பறவைகளின் இனிமையான ஒலி, இதமான காற்று ... இரசித்துக்கொண்டே சென்றால் முதலில் வருவது கேம்ப் 1.(உடன் வரும் வழிகாட்டிகளின் தகவல் தொடர்புக்காக குறிப்பிட்ட தூர இடைவெளியில் கேம்புகளை அமைத்துள்ளார்கள்)அதை,கடந்ததும் சிறிய நீரோடையை அடைந்தோம். சற்று இளைப்பாறி காலை உணவை உண்டோம்.
சிறிய ஓய்விற்கு பிறகு நடக்க ஆரம்பித்தால்.. காட்டாறு ஒன்று சலசலவென சப்தத்தை எழுப்பி ஓடிக்கொண்டிருந்தது. இதனை கடந்து சென்றதும் கேம்ப் 2. சற்று விரைவாக நடக்க வேண்டும். புல்வெளி பகுதியில் யானை, காட்டெருமை போன்ற விலங்குகள் உணவைத்தேடி வருகின்ற இடமாக இருப்பதால் இந்த இடத்தை வேகமாக கடந்தோம், சில நிமிட பயணத்திலே  ஓஓஓவென சப்தம் எழுப்பிக்கொண்டு விழும் நீர்வீழ்ச்சியை பார்த்ததும் மனம் சிறுவர்களை போல மாறிவிட்டது. அதில் ஒரு ஆனந்த குளியல் போட்டதும்,  மனமும், உடலும் புத்துணர்சியாக இருப்பதை உணர்ந்தோம்..

குளியல் குடுத்த புத்துணர்வுடன் நடையை சற்று வேகபடுத்தினால்,கடந்து வந்த தூரத்தை போல சில கி.மீ. தூரத்தில் உள்ள கேரள வனத்துறைக்கு சொந்தமான தங்குமிடத்தை விரைவாக அடையலாம் என வழிகாட்டி அண்ணன் சொன்னதால் நடையை வேகபடுத்தினோம்.இடையே மலையில் ஏற்றம்,இறக்கம்,சிற்றாறு,அருவிகள்,புல்வெளி, என அடர்ந்த வனத்தில் கேம்ப் 3,கேம்ப் 4  ஆகிய இடங்களை கடந்து சுமார் 5 மணி நேர பயணத்தில் அதிருமலை எஸ்டேட் என்ற தங்குமிடத்தை இடத்தை அடைந்தோம். 

மாலை 4 மணிக்கு முன்பாக இந்த இடத்தை அடைந்துவிட வேண்டும்.வனவிலங்குகள் இரையை தேடி இருப்பிடத்தை விட்டு வெளியே வரக்கூடிய நேரம். இடையே நாம் சோர்வாக நடந்தால்,வழிகாட்டி அண்ணன் எங்கள் குழுவினரை உற்சாகபடுத்தி பேசி சிரித்து வேகமாக நடக்க செய்வார். 
அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால் சில இடங்களில் வெயில்,மரங்களை ஊடுருவ முடியாமல் குளு குளுவென சோலை போல இருந்தது. இந்த இடங்களில் உள்ள ஈரபதத்தை சாதகமாக்கி கொண்டு அட்டை ப்பூச்சிகள் நிறைய இருக்கும். கவனமாக நடக்கவேண்டும்.எங்கள் குழு நண்பர்கள் சிலரும் அட்டைபூச்சிக்கு இரத்த தானம் தர தவறவில்லை.

விரைவாக நடந்ததும் ஒரு வளைவில் கேம்ப் 5 என்ற பலகையை பார்த்ததும் " வந்தாச்சு வந்தாச்சுனு " நண்பர்களை பார்த்து கூவினார் நண்பர். கேம்ப்பின் வாசலில் இருந்த வனஅதிகாரியிடம் வருகையை பதிவு செய்தோம். இரவு ஓய்வெடுப்பதற்காக எங்களுக்கு ஒதுக்கப்பட்ட குடில்களில் ஓய்வெடுக்கலாம் என நுழைந்தோம். பழமையான கட்டிடம் ஒன்று விரிசல் அதிகமாக இருப்பதால் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. 

பயணிகள் பாதுகாப்பிற்காக தங்குமிடத்தை சுற்றி 10 அடி ஆழத்தில் அகழி தோண்டி இருக்கிறார்கள் இரவில் யானை,காட்டுபன்றிகள் போன்ற விலங்குகள் நுழையாதவாறு. அகழியை கடக்க சிறிய மரப்பலகை பயன்படுத்துகிறார்கள். இரவில் அகழியை தாண்டி வெளியே செல்ல கூடாது.இரவு உணவிற்கு முன்கூட்டியே சொல்லி வைத்தால் தான் கிடைக்கும்.வந்த களைப்பு தீர கேம்பிற்கு பின்புறம் சற்று தொலைவில் ஓடும் ஆற்றில் காலை நனைத்தால் தலை உச்சியில் உணரலாம் நீரின் குளிர்சியை.பல்லை கடித்துக்கொண்டு மூழ்ங்கி எழும்போது தான் உணர முடியும். " அடடடடா ஆனந்தம்னா " இதுவோனு அற்புதமான குளியலை முடித்து கரைக்கு வர மனமில்லாலே நிறைய பேர் நின்று கொண்டேயிருந்தார்கள்.மனம் குதுகலாமாக இருந்தாலும் வயிறு சும்மா இருக்குமா... பசி எடுத்தது. நமக்காக அந்த குளிரிலும் சூடாக அரிசி கஞ்சி ,பொரியல், ஊறுகாய் என அற்புதமான உணவை தயாரித்து வைத்திருப்பார்கள். 25 ருபாய் கஞ்சி.  சுக்குகாபி 5 ருபாய்..

அப்பப்பா... அருமையான உணவை உண்ட பின்பு ,அங்கு சற்று உட்கார்ந்து எதிரே உள்ள மலையை பார்த்துகொண்டிருந்தோம் நிலவு வெளிச்சத்தில், அதன் உச்சியை மறைத்து, விலகி பின்பு மறைத்து என கண்ணாம்மூச்சி ஆட்டம் நடத்தி கொண்டிருந்தது மேகம்.அந்த,மலை முகட்டை தான் நாளை காலை பயணத்தில் அடைய போகிறோம் என்ற ஆவலுடன் இரவு உறக்கத்திற்கு தயாரானோம். இருங்க முக்கியமான வேலை ஒன்றுள்ளது. நாளைய பயணத்திற்கான உணவை இரவே சொல்லி வைத்தால்தான், தயாரித்து கொடுப்பார்கள் ... அதற்குண்டான பணத்தை செலுத்தி வந்துவிட்டு வந்தேன் ...

திடீரென இரவு பெய்ய தொடங்கிய மழை, அதிகாலை வரை தொடர்ந்தது. அகத்திய முனிவரை காண ஆவலாக தயாரானோம்.  நாங்கள் தயாராவதை பார்த்த சில பயண குழுக்கள் பயணத்தை மேலும் தொடர வேண்டாம், ஆபத்தான இடம் வேண்டாம் என அறிவுருத்தினார்கள். சரி, சரி என அவர்களிடம் சொல்லிவிட்டு, எங்கள் குழுவினருடன் மழையை இரசித்தபடி, சுக்குகாபியை அருந்திக்கொண்டே உரையாடினோம் .. பயமாக இருப்பவர்கள் கேம்பிலேயே தங்கிவிடுங்கள்.. அகத்திய முனிவரை பார்த்தே தீருவது என்பவர்கள் மட்டும் புறப்படலாம் என்று முடிவாகி ... வரயிலாவதர்கள் எல்லாம் வாழ்த்து சொல்லி அனுப்பினார்கள். அவர்களின் அன்பான வாழ்த்துகள் எங்களை மேலும் உற்சாகபடுத்த, காலை மற்றும்  மதியதிற்கான உணவுகளையும், அகத்திய மாமுனிக்கு பூசை செய்ய, பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு கேரள வனத்துறையினரின் ஆலோசனைகளை கேட்டுக்கொண்டு அகத்தியரை காண பயணமானோம் ... 

மழைத்தூரலை அகத்தியரின் ஆசியாக நினைத்துக்கொண்டு மெதுவாக, கவனமாக நடந்து கேம்பிலிருந்து வலது புறம் செல்லும் வழியில் நீண்டு உயர்திருந்த மரத்தின் அடியில் வீற்றிருந்த வன தேவதையை வணங்கி, பயணத்தை தொடர்ந்தோம் .. அடர்ந்த வனம், பறவைகளின் ஒலி.. தூரத்தில் சலசலத்து கொண்டு போகும் நீரின் ஓசை என செவிக்கு இனிமையாக இருந்தது..  நடையின் போது குறுக்கே பயணிக்கும் சில ஓடைகளை கடந்து , பிரமாண்ட மரங்களை "ஆவென" பார்த்துக்கொண்டும் நடையை வேகப்படுத்தினோம். செங்குத்தான பாதை, மழைப்பெய்து கொண்டேயிருப்பதால் பாதையில் சில இடங்களில் வழுக்கல்களை சமாளித்து கவனமாக நடக்கனும்.சுமார் 1 மணி நேர நடைப்பயணத்தில் பொதிகை மலையின் அடிவாரத்தை அடைந்தோம். அங்கு உள்ள
தென் பொதிகை மானசரோவரில் குளியலை முடித்துவிட்டு ( இது முற்றிலும்
மூலிகை நீரைக் கொண்டது),காலை உணவை நிறைவு செய்து, சிறிய இளைப்பாறுதலுக்கு பின் மீண்டும் பயணத்தை தொடர்ந்தோம் .. இந்த பகுதியை கடக்கும் போது கவனமாக பயணிக்க வேண்டும். மழைப்பெய்துள்ளதால் பாறை வழுக்கிவிடும்.பனி அதிகமாக இருப்பதால் எதிரே பாதை கூட தெரியவில்லை. இந்த பாறைக்கு இடது புறம் செல்லும் ஒற்றையடி பாதையில் போனால் ஆதிவாசி மக்கள் வழிபடும் விநோதமான  சிலை ஒன்று இருக்கிறது. மேலும், பாறைகளை குடைந்து உரலை போன்று அமைத்துள்ளார்கள்...

சற்று நேரத்திலே புல்வெளிப்பகுதியை அடைந்தோம். சற்றே ஓய்வெடுத்துவிட்டு , நடந்தால், அடர்ந்த மூங்கில் காடு. இங்கு யானைகளை காணலாம். இச்சிகரத்தின் பாதி உயரம் வரை , இடது புறத்தின் மரங்கள் நிறைந்த மழைநீர் வழியும் சாய்வான பகுதி வழியே ஏறி சென்று,பின் வழித்தடங்கள் அற்ற பாறைகள் வழியே துன்பத்தைப் பொருட்படுத்தாது, காலும்,கையும் ஊன்றி மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கி,நாக்கு வறண்டு போக, பாதையின் எதிரே செங்குத்தான மலையை பார்த்து அதிர்ந்து நின்றோம். எங்களுக்கு முன் பயணமான சிலர் மோசமான வானிலை, கரடு முரடான செங்குத்தான பாதையை பார்த்து பயணதிட்டத்தை கைவிட்டு எங்களையும் திரும்பி,போகலாம் வாங்க என்று கூறினார்கள். எங்கள் குழு பயணத்தில் உறுதியாக இருந்தோம்.. மேற்கொண்டு நடக்கலானோம். 

பாதையெல்லாம் மழைநீர் வழிந்தோடி வருகிறது.. இருந்தாலும் பொறுமையாக ஒவ்வொரு அடியாக வைத்து செங்குத்தான பாதையை கடந்தும் .. பலபேர் பயந்த காரணம் புரிந்தது .. செங்குத்தான வழுக்கு பாறை  அதிலிருந்து இரும்பு கம்பியை தொங்க விட்டிருக்கிறார்கள். கடல் மட்டதில் இருந்து சுமார் 5500 அடி உயரத்தில் இருக்கிறோம். எதிரே நிற்பவர் கூட தெரியாத அளவிற்கு பனி. ஆஹா ... இந்த சூழ்நிலைக்கு பயந்துதான் முன்னர் சென்ற குழு திரும்பி விட்டதோ என நினைத்தோம்.. பிறகு, அகத்தியரை வேண்டிக்கொண்டு ஒருவர் பின் ஒருவராக மெதுவாக இரும்புகம்பியை பிடித்து ஏறினோம். பலமான காற்று,மழை என பயணத்தில் இடையூராக இருந்தது...

எத்துனை இடையூரு வந்தாலும் மனம் தளராமல் எங்கள் குழுவின் ஒவ்வொருவரின் உதவியுடன் வழுக்குப்பாறையின் உச்சியை அடைந்தோம்.அதற்கு மேலே இன்னொரு வழுக்கு பாறை அதிலும் இரும்புகம்பி, கனமான பிளாஸ்டிக் நைலான் கயிறு என பயமுறுத்தலாக இருந்தது. காற்று பலமாக வீசுகிறது. மனதில் அகத்தியரை நினைத்துக்கொண்டு கயிறைப்பிடித்து ஒவ்வொருவராக மெதுவாக ஏறினோம். உச்சியை அடைந்ததும் "ஆனந்தம்,ஆனந்தம் ".அத்துனை பேரின் முகத்திலும். இத்துனை கஷ்டப்பட்டு யாரை காண ஆவலாக வந்தோமோ .. அவர் எங்களின் எதிரே அமைதியாக சிலை வடிவில் நின்றுக்கொண்டிருந்தால் ஆனந்ததிற்கு சொல்லவா வேண்டும்.. மணி சரியாக 11 மணி. நாங்கள் கொண்டு சென்ற பூசை பொருட்களை வைத்து மனம் குளிர குறுமுனி அகத்தியருக்கு பூசைசெய்தோம்.எங்களுடன் வந்த நண்பருக்கு அங்கு வீசிய குளிர் காற்றால் நடுக்கம் எடுத்து மூச்சு திணறல் ஏற்பட்டுவிட்டது. அவருக்கு முதல் உதவி செய்து சிறிது நேரம் ஓய்வெடுக்க சொன்னோம். மழை சிறிது குறைந்ததும் .. வழுக்கு பாறையில் உள்ள கயிறை பிடித்து இறங்க ஆரம்பித்தோம்.. அனைவரும் பாதுகாப்பாக இருங்கியதும் மேலே அகத்தியர் குடிக்கொண்டிருக்கும் மலையை நன்றியுடன் கைக்கூப்பி வணங்கி..  வந்த பாதை வழியே மனநிறைவுடன் நடக்க ஆரம்பித்தோம். சில மணி நேரத்திலேயே காலையில் புறப்பட்ட கேம்பை வந்தடைந்தோம் ... கேம்பில் எல்லோரும் எங்களின் வருகையை ஆவலாக எதிர் நோக்கியிருந்தார்கள்.
மற்ற குழுவினரும் எங்கள் மனோதிடத்தை பாராட்டினார்கள். அவர்களிடம் அகத்தியரை தரிசித்ததை பகிர்ந்து கொண்டோம்.பயண களைப்பு தீர கேம்பிற்கு பின்புறம் ஓடுகிற ஆற்றில் குளியலை முடித்தோம். பிறகு , வனத்துறை ஊழியர்கள் தயாரித்த கொடுத்த கஞ்சியை உண்டோம். நாளைய பயணதிற்கு தேவையான உணவை தயாரிக்க முன் பணம் செலுத்திவிட்டு அவரவர் இடத்தில் உறங்கினோம்.

பயணத்தின் மூன்றாவது நாளான அதிகாலையில் எழுந்து,சுக்குகாப்பியை குடித்துக்கொண்டே குடிலுக்கு வெளியே நின்று,  அகத்தியர் வீற்றிருக்கும் மலையின் உச்சிப்பகுதியை கண்டுகொண்டிருந்தோம்.. அன்றைய தினம் மழை ஓய்ந்திருந்ததால்,சில குழுவினர் அகத்தியரை காண புறப்பட்டார்கள். அவர்களில் சிலர் நண்பர்களாக மனதில் இடம் பிடித்திருந்ததால் முதுகில் தட்டிக்கொடுத்து போய்வாருங்கள் என உற்சாகப்படுத்தி வழியனுப்பினோம்.
பயணத்தின் நிறைவு நாளான மூன்றாம் நாள்,போனக்காடு கேம்பை நோக்கி விரைவாக மலையில் இருந்து இறங்க ஆரம்பித்தோம். காலை வேளையில் பறவைகளின் இனிமையான ஒலி, பல விதமான மூலிகை செடிகளிடையே தவழ்ந்து வரும் தூய்மையான காற்று, பல வண்ண நிறத்தில் யாருடைய வரவை எதிர்பார்க்காமல் பூத்திருக்கும் காட்டுப் பூக்கள் போன்றவை உடலையும் மனதையும் புத்துணர்வாக மாற்றியது.. வரும்போது கண்ட,  ஓடைகள் காட்டாறுகளை கடந்து, நீர்வீழ்ச்சிகளில் குளியல் போட்டுக்கொண்டு அடர்ந்த வனத்தில் இருந்த அமைதிக்கு எந்த வித இடையூரும் இல்லாமல் 4 மணி நேர நடைபயணத்தில்... அடிவார கேம்பான போனக்காடு வந்து அடைந்தோம்.அங்கு,வன அலுவலகத்தில் எங்கள் வருகையின் பதிவை பதிவு செய்தோம்.. பின் நண்பர்கள் வருகைக்காக காத்திருந்து அனைவரும் வந்ததும் மூன்று நாட்களாக எங்களுடன் இருந்து வழிகாட்டிய வனத்துறை ஊழியர்களுக்கு நன்றி சொல்லி ...  விடைப்பெற்றோம் ...

அருமையான இடம் நம்ம ஊரில் இப்படியொரு இடமிருப்பதை போய் வந்தால் மட்டுமே உணரமுடியும்.இயற்கை காட்சிகளை புகைபடம் எடுக்க விரும்புகிறவர்கள் குழுவில் ஒருவர் எடுத்தால் போதும். அனைவரும் எடுக்க நினைக்கும் போது இயற்கையை இரசிக்க முடியாமல் கவனம் முழுவதும் கேமராவில் இருந்துவிடும்.செங்குத்தான பாதையில் பயணிக்கும் போது கவனமாக கால்களை ஊன்றி ஏற வேண்டும்.மழைக்கான உடை, டார்ச் லைட், முதல் உதவி மருந்துகள் எடுத்துசெல்லவும். சோர்வடையாமல் இருக்க குளுக்கோஸ்,உலர் திராட்சை போன்றவை பயன்படும்.

எங்கள் பயண அனுபவத்தை படித்து யாரேனும் அகத்தியரை தரிசிக்க ஆவல் கொண்டால் அதுவே எங்களுக்கு நிறைவான மகிழ்ச்சி...
( அடுத்த பயணத்தில் சந்திப்போம்).

டிஸ்கி :- மிக அருமை விஜய். உங்களுடன் சேர்ந்து பயணித்தது போன்ற உணர்வு. புகைப்படங்களும் அருமை. சித்தர்களிலேயே மிகப் பெரும் சித்தரான அகஸ்தியரை உங்கள் கட்டுரையில் தரிசித்தோம். அதேபோல் இயற்கை அழகுகளையும் ஸ்பரிசித்தோம். :)

மலையேற்றம் செய்ய ஒரு ஃபிட்டான மனநிலையும் உடல் நிலையும் அவசியம் என்று தோன்றுகிறது. கானகத்தில்  எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதையும், எத்தனை நாட்கள் பயணம் என்று திட்டமிடுதலையும்,  என்னென்ன இடர்களை எதிர்கொண்டு ( அட்டைப்பூச்சிகள், மழை, யானை போன்ற வனவிலங்குகள், எதிர்பாராமல் ஏற்படும் இயற்கைப் பேரிடர்கள் ) ஆகியவற்றை எதிர்கொள்வது பற்றியும், வனத்துறையினரிடம் முறையாக அனுமதி பெறவேண்டியது பற்றியும் கூறியது சிறப்பு.  இதைப் படித்துவிட்டு அகத்தியரைத் தரிசிக்க இன்னும் பலர் செல்லலாம். அலுக்காமல் சலிக்காமல் உங்கள் அனுபவங்களை மிகப் பெரும் கட்டுரையாக எழுதி என் வேண்டுகோளுக்கிணங்க அனுப்பித்தமைக்கு மிக்க நன்றி விஜய். :)

டிஸ்கி . :- இது என்னுடைய 50 ஆவது சாட்டர்டே ஜாலிகார்னர்/சாட்டர்டே போஸ்ட் மக்காஸ். :)
    

8 கருத்துகள்:

  1. 50ஆவது சாட்டர்டே ஜாலிகார்னரா சூப்பர் தேனக்கா.

    அகஸ்திய முனியின் பொதிகை மலை பத்தின அழகான தகவல்கள். அதிலும் முகத்தில் மட்டும் சந்தனகாப்பு சாத்திய போட்டோ ரொம்ப அழகு. விஜய்க்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. அற்புதமான பயணம் பற்றிய குறிப்புகள் - கேரள நண்பர் ஒருவரும் இப்படி மலைப்பயணங்கள் செய்வதை விரும்புவார். பல பயணங்களும் மேற்கொண்டவர். அவரும் என்னை அழைத்துக் கொண்டிருக்கிறார். பார்க்கலாம் விரைவில் போக வேண்டும்!

    50-வது சாட்டர்டே ஜாலி கார்னர் - வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. 50 ஆவது சாட்டர்டே ஜாலிகார்னர்/சாட்டர்டே போஸ்ட் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. த்ரில்லான அனுபவம். அகத்திய மாமுனியை கண்டதும் பேரானந்தம்.

    50வது சாட்டர்டே பதிவுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பதை அழகாக உணர்த்திய பயண அனுபவம். மலைப்பயணத்தின் அனுபவங்களை வாசிப்பவர்களும் அனுபவிக்கும் வகையில் அழகாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள்.
    ஐம்பதாவது சாட்டர்டே ஜாலி கார்னரை சிறப்பாக வழங்கியமைக்கு நன்றியும் வாழ்த்துகளும் தேனம்மை.

    பதிலளிநீக்கு
  6. 50 வது சாட்டர்டே பதிவுக்கு வாழ்த்துகள் தேனம்மை.
    விஜய் அவர்களின் அகத்தியர் மலை பயண அனுபவம் அருமை.

    பதிலளிநீக்கு
  7. நன்றி கலா விஜய்கிட்ட சொல்றேன்.

    நன்றி வெங்கட் போயிட்டு வந்து பதிவு போடுங்க :)

    நன்றி ராஜி

    நீண்டநாள் கழித்துப் பின்னூட்டமிட்டுள்ளீர்கள். மிக்க நன்றி ஆதி வெங்கட் :)

    மிக்க நன்றி கீதா

    நன்றி கோமதி மேம். :)

    பதிலளிநீக்கு
  8. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...