எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 28 ஜூன், 2011

கவி மதியும் கவிமதியும்...





கவி மதியும் கவிமதியும்.:-
****************************************
இசுலாமிய நண்பர்கள் மற்றும் சகோதரர்களின் எழுத்துக்களில் மிகவும் கவனிக்கப்பட வேண்டியவர்கள் ., வாசிக்கப்படவேண்டியவர்கள் என என்னிடம் ஒரு லிஸ்ட் உண்டு.. மிக அருமையான., நேர்த்தியான பகிர்வுகளுக்குச் சொந்தக்காரர்கள். கவிமதி., ஜமாலன்., ஆபிதீன்., ஆசாத்ஜி. ஆசிஃப் மீரான். இதில் ஸ்டார்ஜனும்., அக்பரும்., இப்படிக்கு நிஜாம்., ஜமால்., நவாஸ்., ஜெய்லானியும் உண்டு.


என் அன்பு சகோதரர் கவிமதி முதலில்.. இவரின் கவிதைத் தொகுதி .,"தண்ணீர்ப் படிகள்" படித்து கண்ணீர் வந்தது உண்டு.. குழந்தைப் பருவத்தில் நம்மை நெருக்கமாக உணரவைக்கும் நட்பு வயது ஏற ஏற பிரித்துச் செல்கிறது. அண்மையில் செல்லவும் பேசவும் கூட சமூகம் கட்டுக்களை முன் வைக்கிறது. இந்தக் கவிதைகளில் சிறுவயதில் நாம் களங்கமில்லாமல் கொண்ட நட்பை பருவ வயதிலும்., திருமண வயதிலும்., அதன் பின்னர் பல வருடங்கள் .. வாழும் நாள் வரையிலும் எடுத்து செல்லும் நேர்த்தி மிக அருமை.. அண்ணன் தம்பி இல்லாத ஒரு ஆணின் உறவு காதலாய்த்தான் இருக்க வேண்டுமா என்ன. இது போல மிக அழகான நட்பாகவும் இருக்கலாமே..

நம் நட்பைச் சரியாகப்
புரிந்துகொண்ட போதே
நினைத்தேன்

நம்மை இங்கே விட்டு
மாடியில்
உன் மனைவியும்
என் கணவனும்
புதுப்பிக்கின்றனர்
தங்கள்
பள்ளி வாழ்க்கையின்
பசுமைகளை.

மற்றும்

தலைமுடி
நகம்
பயணச்சீட்டு
இன்னபிறவென
சேமித்து வைக்கும் பைத்தியக்காரதனம்
எப்போதும் நட்பிற்கு
அவசியமேயில்லை..

இவை தண்ணீர்ப் படிகளில் எனக்குப் பிடித்தவை.. ஜென் தத்துவம்...., பின் நவீனத்துவம் என மிரட்டாமல் மிக எளிமையான மனம் தொடும் கவிதைகள் இவை..

நிலாச்சோறு உண்டிருக்கிறீர்களா.. நாம் சிறு பிள்ளைகளாய் இருந்த போது அத்தையோ அம்மாவோ பிள்ளைகளை வட்டமாக அமரவைத்து குழம்பு ஊற்றிப் பிசைந்து ஒவ்வொருவர் கையிலும் ஒரு கவளம் கொடுப்பார்கள்.. நாம் சிரித்துப் பேசிக் கொண்டே உண்ணுவோம்., ஓடி ஆடி விளையாடுவோம்., தொலைக்காட்சி நம்மை தின்னாத காலம் அது.. அந்த இன்பம் எல்லாம் இன்று தனித்த வீடுகளில் வாழும் குழந்தைகளுக்கு வருட விடுமுறை நாட்களிலாவது கிடைக்கிறதா என்பது கேள்விக்குறிதான்.


இந்த ஏக்க உணர்வுகளை பதிவு செய்து இருக்கிறார் தண்ணீர்ப் படிகளில் ..

”எங்கள் தெரு வழியே போறவரே” என்ற தொகுதி முழுக்க உரிய அங்கீகாரமில்லாமல் சிதறிக்கிடக்கும் மனிதம் பற்றிய நெகிழ வைக்கும் கவிதைகள்..

என்
தெரு வழியே
போறவரே..

எப்போதேனும்
பேசியதுண்டா
பெரும்
அங்காடிகளில்
பேரம்?

இல்லையெனில்

ஏன் பேசுகிறீர்கள்
இத்தனை பேரம்
என் கூடைக்கருகில்..?

என இது போல சிந்திக்க., வருந்த வைத்த கவிதைகள் அனேகம்..

அமீரகம் சென்ற போது சந்தித்த முதல் வலைப்பதிவர் மற்றும் குறிப்பிடக்கூடிய எழுத்தாளர் இவர். தை இதழில் இவரது கவிதை .,

பார்வையற்ற புத்தன்..

உன்னினத்திற்கு மட்டுமென்ற
பிரிவினைவாதங்களில்
குளிர்ந்தேயிருக்கின்றன
போதி மரங்கள்
எம்மினக் குருதியில்..

என்ன சொல்ல... இன்னும் குருதிக்காட்டில் முள்வேலியில் வாழ்பவர்கள் பற்றி..சொல்ல ஏதும் வார்த்தை கூட துணை வருவதில்லை..

இவரின் இணைய தளம். www.kavimathy.wordpress.com

இதில் நீ எங்கிருக்கிறாய் என்ற கவிதையில்

அவர்கள் காட்டிய படத்தில்
ஈழத்தை தவிர்த்து
வானத்தைப் பார்க்கிறது
உன் கண்கள்
அப்போதே தெரிந்துக்கொண்டோம்
அது நீ இல்லையென//

இல்லை என்று சொல்லிக்கொண்டே
எங்களை பிளந்து பிளந்து
தேடுகிறான்
முன்பு எங்களோடு இருந்தவன்
இன்று எங்களுக்குள்
இருப்பாயோவென

கொஞ்ச நாளாவது
குளிர்ந்துபோகட்டும்
திடீரென்று தோன்றும் உன்னிடம்
தோற்றுப் போகவேண்டாமா

எமக்குத் தெரியும்
எவனுக்கும் சொல்ல அவசியமில்லை
எங்கு நீ இருக்கிறாய் என்பதை.

இந்தக் கவிதைகளின் அசாத்திய நம்பிக்கை எனக்கு பிடித்திருந்தது.


8 புத்தகங்கள் வெளியிட்டு இருக்கும் இவர் புதுச்சேரி அரசாங்கத்தால் சிறுகதைத் தொகுப்பிற்காக ” புதுச்சேரி மூவொரு அறக்கட்டளை விருது “ பெற்றிருக்கிறார்.

பெரியாரின் கருத்துக்களில் மிகுந்த ஈடுபாடு உண்டு ..சாதி ஒழிப்பும் பெண்ணெழுச்சியும்தான் உண்மையான சமுதாய விடுதலை என எண்ணுபவர்.

பெரியார் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டே தன் பெயரை கவிதைகளின் ஒளிநிலவாய் .. ”கவிமதியாய்..” மாற்றிக் கொண்டார். பெண்கள் கற்க வேண்டும்., சுயசார்போடு நிற்கவேண்டும் என்ற பிடிவாதமான கொள்கைகளுக்குச் சொந்தக்காரர் இவர். மதம் ., இனம் சார்ந்து பெண்ணை வீட்டிலேயே அடக்கி வைத்தல் கூடாது.. பெண் எழுச்சி வேண்டும். பெண்கள் உயர்வடைய வேண்டும்.ஆணும் பெண்ணும் சமமாய் பார்க்கப்பட வேண்டும் என்ற தனது கருத்தை பலவித எதிர்ப்புகளுக்கு மத்தியில் பதிவு செய்து வருபவர் இவர்.


கீற்று., வானவில்., தை., ஆயுத எழுத்து., குளம்., தமிழ் மணம்., மாற்று., இலக்கியம் - புதுச்சேரி. இவற்றில் இவரின் படைப்புக்கள் வெளிவந்துள்ளன.

”மழை மழையாய்., மதகுப் பலகைகள்., என் தெரு வழியே போறவரே.,தண்ணீர்ப் படிகள்., மதம் ஒரு கற்பிதம்., நிறங்களற்ற தனிமை ” இவரின் நூல்களில் சில.

"வெட்டியெறிய ஆடுகளல்ல..
நாம் வெள்ளாமை பெருக்கும் காடுகள் .."

என்பது இவருக்குப் பிடித்த மேற்கோள்..

ஃபிப்ரவரி 2010 இல் இவரின் மதகுப் பலகைகள் நூலுக்கு திருமதி கி. ராஜநாராயணன் அவர்களின் துணைவியாரிடம் இருந்து திருமதி அக்கலீமா கவிமதி விருதை வாங்கினார். இன்னும் பல புத்தகங்கள் வெளியிட்டு பல விருதுகள் பெற வாழ்த்துக்கள் கவிமதி..!

டிஸ்கி:- இந்தக் கட்டுரை 29.3.2011 மார்ச் கீற்றுவில் வெளியிடப்பட்டுள்ளது. நன்றி கீற்று..:))

8 கருத்துகள்:

  1. டைட்டில்லயே ஏதோ சொல்ல வர்றீங்கன்னு தெரிஞ்சிடுது .. குட்

    பதிலளிநீக்கு
  2. நண்பர் கவிமதியின் கண்ணீர் படிகள் நானும் வாசித்திருக்கிறேன் . மீண்டும் மீண்டும் சுவாசிக்கத் தூண்டும் எதார்த்தமாய் எழுத்து நடை அருமை . பகிர்ந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. நல்ல பகிர்வு தேனம்மை. நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அருமையான பதிவு.
    நிறைய படிக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. நன்றி நிஜாம்., சிபி., சங்கர்., ராமலெக்ஷ்மி., ரத்னவேல் ஐயா.:)

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...