சென்னை ஆவடியில் சமூக சேவையில் ஈடுபட்டு வரும் திரு. வெங்கடாச்சலம் பழனியப்பன்
ஆவடியின் ட்ராஃபிக் சிக்னலில் இருக்கும் காவலரோடு தேவைப்படும்போதெல்லாம் தோள்கொடுத்து சாலைப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவார். ஆவடிப் பகுதியில் மின்சாரம், சாலை வசதி போன்றவற்றுக்காக உரிமைக் குரல் எழுப்புவார். உரிய தகவல்களோடு பெட்டிஷன், மகஜர், கடிதங்கள் அனுப்பி அவை சீர் செய்யப்படும்வரை ஓயாமல் பாடுபடுவார். ஓரிரு முறை இலவச மருத்துவ முகாம் நடைபெற தனது இல்லத்தை ஒழுங்குபடுத்தி வழங்கியுள்ளார். இரத்ததானமும் சிலமுறை செய்துள்ளார். துப்புரவுப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டி அவர்களையும் கொண்டாடுவார். இவர்தான் சென்னை ஆவடியில் வசித்து வரும் காரைக்குடி ஆலங்குடியார் வீதியைச் சேர்ந்த வெங்கடாச்சலம்.
தனி மனிதனாகவும் குழுவாகவும் சமூகசேவையில் நாட்டம், கொரோனா காலத்தில் மற்றும் பேரிடர் காலங்களில் இடர்ப்பட்டோருக்கு இயன்ற உதவிகள், பல வருடங்களாக பாதயாத்திரை சென்று வரும் பக்தர்களுக்கு மிக்ஸர் போன்ற உணவுப் பொருட்கள் வழங்குதல் ஆகியன செய்து வரும் வெங்கட் அவர்களிடம் அவர்களின் குடும்பம், சமூக நல நாட்டத்துக்கான தேட்டம் பற்றிக் கேட்டபோது அவர் ,”பிறந்தோம், வாழ்ந்தோம், மடிந்தோம் என்பதற்கு நமக்கு 6 அறிவு தேவையில்லை. கொஞ்சமாவது நமது ( Foot Prints ) கால் தடங்களை இந்த பூமியில் பதித்துவிட்டு இந்த பூ உலகை விட்டு நாம் பிரிய வேண்டும்.
இயற்கையிலேயே நகரத்தார் சமூகத்திற்கு சமூக சேவையில் ஈடுபாடு உண்டு. எனது ஆத்தாவும், அப்பச்சியும் எப்பொழுதுமே அடுத்தவர்களுக்கு நல்ல ஆலோசனை கூறுவதும், பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்களாகவும் இருந்தார்கள். அந்த மரபணு என்னுள்ளும் தொடர்கிறது. என்னுடைய தாயார் அலமேலு ஆச்சி, தந்தையார் பழனியப்ப செட்டியார், சூரக்குடிக் கோவிலைச் சேர்ந்தவர்கள் நாங்கள். 1971~1976 - அரசு ஆரம்ப பள்ளி, ஆவடியிலும், 1976~1981 - ராமசாமி முதலியார் மேல்நிலைப்பள்ளி, அம்பத்தூரிலும், 1981~1984 - DME, முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி, ஆவடியிலும் பயின்றேன். (இலங்கைத் தமிழருக்காக போராட்டம் நடத்தியதால் 2ம் ஆண்டு படிக்கையில் 45 நாட்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து என்னை இடைநீக்கம் செய்தார்கள் ).
டிசம்பர் 2004 சுனாமி நம் எல்லோருக்கும் மிகுந்த மன வேதனை அளித்தது. ஜனவரி 1, 2005 அன்று நானும் எனது அவாசின், ஹூண்டாய் கம்பெனி நண்பர்களும் ஒரு கண்டெய்னர் முழுவதும் நிவாரண பொருட்களை எடுத்துக் கொண்டு
நாகப்பட்டினத்திற்கு சென்று அங்கு தவித்த மக்களுக்கு வழங்கினோம். கொரோனா காலத்தில் நானும் என் நண்பர்களும் சேர்ந்து பல ஏழை மக்களுக்கு அரிசி, மளிகை, காய்கறிகள், எண்ணெய் என எங்களால் இயன்ற அளவு உதவி செய்தோம். அன்று அது மட்டுமே முக்கிய தேவையாக இருந்தது. 2015ல் வெள்ளை பாதிப்பின் போது சென்னையில் மூன்று இடங்களில் உணவு பொட்டலங்களை வழங்கினோம்.
நீண்ட நாட்களாக ஒரு மருத்துவ முகாமாவது நடத்த வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். மருத்துவ முகாம் நடத்துவது என்பது ஒரு சவாலான விஷயம். முதலில் அதற்கு தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும். மருத்துவமனைகளின் ஒத்துழைப்பு மற்றும் மருத்துவர்களின் நேர ஒதுக்கீடு மிக முக்கியமானதாகும். 11.6.2023 அன்று எங்கள் இல்லத்தில் உள்ள அறைகளை முழுவதுமாக காலி செய்து
சுத்தப்படுத்தி முகாமுக்காக ஒதுக்கினோம். கண் சிகிச்சை, பல் சிகிச்சை, ரத்த அழுத்தம், ரேண்டம் சர்க்கரை, உடல் எடை சோதனைகள் என நடந்தேறியது. நூற்றுக்கும் மேற்பட்டோர் அதில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
04.11.2023 அன்று ஆவடி மாநகராட்சி மற்றும் திருமுல்லைவாயில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் குழு உதவியுடன் காய்ச்சல் முகாம் நடத்தினோம். 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். (லயன்ஸ் கிளப்கள் மற்றும் ரோட்டரி கிளப்கள் பல மருத்துவ முகாம்களை நடத்துகிறார்கள். அவர்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் நம்மால் இயன்ற அளவுக்கு ஒரு மருத்துவ முகாமை நாங்கள் வசிக்கும் நகரிலேயே நடத்த வேண்டும் என்ற என்ற எண்ணம் என்னுள் நீண்ட காலமாக இருந்தது).
நாம் முறையாக வரி செலுத்தி வருகிறோம். அப்படி இருக்கும் பட்சத்தில் அடிப்படை வசதிகளான நல்ல சாலை, தெரு விளக்கு பராமரிப்பு, மெட்ரோ நீர் வசதி, மழை நீர் கால்வாய் சுத்தப்படுத்துதல், குப்பைகளை அகற்றுதல், கழிவுநீர் இணைப்புகள் போன்றவைகள் முறையாக செயல்படுத்தப்படாத பட்சத்தில் அந்தந்த துறை சார்ந்தவர்களை கேள்வி கேட்க வேண்டியது நமது உரிமை. நாங்கள் தொடர்ந்து ஆட்சியர், ஆவடி மாநகராட்சி ஆணையர், சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர், உதவி பொறியாளர், நகரமைப்பு அலுவலர் போன்றவர்களுக்கு கடிதம், மின்னஞ்சல், நேரடி தொடர்பு மூலமாக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து பிரச்சனைகளை ஒவ்வொன்றாக சரி செய்து வருகிறோம்
அதேபோல் எங்கள் நகரில் இருந்து சென்னை-திருவள்ளுவர் நெடுஞ்சாலையை கடப்பதற்கு மூத்த குடிமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் சிரமங்களை ஆவடி நகர காவல் ஆணையரகத்தில் முறையிட்டு சிகப்பு பிளிங்கர்கள் அமைத்துள்ளோம். பீக் அவர்சில்... ஹோம் கார்டு துணை கொண்டு போக்குவரத்தை முறைப்படுத்தி உள்ளோம்... அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக நானும் போக்குவரத்து தன்னார்வ சேவையை செய்கிறேன்.
எங்கள் பகுதியில் உள்ள ஒவ்வொரு தெருவிளக்கு கம்பத்திற்கும் ஒரு எண் ஒதுக்கப்பட்டு பெயிண்ட் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் மக்கள் தெரு விளக்குக் குறைகளைச் சரியாகத் தெரிவிக்கவும் அதற்கு நகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்கவும் இது உதவியாக இருக்கிறது. ஆவடி மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் எங்களது 25 வது வார்டில் மட்டுமே இந்த முறையை அமல்படுத்தி உள்ளோம்...
துப்புரவுப் பணியாளர்களின் சேவை என்பது ஒரு மகத்தான சேவை ஆகும்... நாம் அருவருப்பாக நினைக்கும் அந்த வேலையைத்தான் அவர்கள் தினமும் செய்து வருகிறார்கள். அவர்களின் சேவையை ஊக்குவித்து அவர்களை பாராட்ட வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். எனவே அவர்களுக்கு கையுறைகளையும், முக கவசங்களையும் தொடர்ந்து அளித்து வருகிறோம். ஆயுத பூஜை நாளில் அவர்கள் அனைவரையும் அழைத்து அவர்கள் சேவையை பாராட்டி அவர்களுக்கு இனிப்பு, காரம் மற்றும் சிறிய பண உதவி வழங்கி வருகிறோம். தனிமனிதனாக சேவை செய்வது என்பது மிகக் கடினம். ஒவ்வொரு சமூக சேவைக்கும் பண உதவிகள் தேவைப்படுகிறது. அந்த நல்ல உள்ளம் கொண்ட நண்பர்கள் உதவியோடு மட்டுமே இத்தகைய சமூக சேவைகளை செய்ய முடிகிறது.
திருத்தணி பங்குனி உத்திரத்திற்கு வருடா வருடம் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்காக கடந்த 45 வருடங்களாக எங்கள் குடும்பம் ( வைஷ்ணவி நகர், சென்னையில் ) மிக்சர் பொட்டலங்களை உபயம் செய்து வருகிறது. அதேபோல் காரைக்குடியில் உள்ள எங்கள் வீட்டில், பல வருடங்களாக கார்த்திகை மாதம் 2வது சோமவாரத்தன்று முருகனுக்கு சோறு வடித்து அன்னதானம் செய்யப்பட்டு வருகிறது. வைஷ்ணவி கோயில் நவராத்திரி திருவிழாவின் போது ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து தன்னார்வு சேவையை செய்து வருகிறேன்.”
உங்கள் குடும்பத்தினர் உங்களின் சமூக சேவையை எப்படிப் பார்க்கிறார்கள். அவர்களின் பங்களிப்பு என்ன எனக் கேட்டபோது “சமூக சேவையில் ஈடுபடும் போது நம் குடும்ப வேலைகளை முழுவதுமாக பார்க்க இயலாது. 1991, ஆச்சி மகள் மகேஷ்வரியுடன் திருமணம். அவர் என் இல்லக விளக்கானார். எங்களுக்கு இரண்டு பிள்ளைகள். அருண் ரகுராம், BTech - Bio Tech, தற்போது பெங்களூரில் பணியில். அபிஷேக் வெங்கட், BTech - Computer Science... தற்பொழுது கல்லூரி படிப்பில். எனது மனைவி, மகன்கள், ஆச்சி, அயித்தான் மற்றும் மச்சினர்கள் அதை புரிந்துகொண்டு குடும்ப வேலைகளை அவர்களும் ஓரளவு எடுத்துக் கொண்டு செய்வதால் பிரச்சனை எதுவும் இல்லாமல் வாழ்க்கை நகர்கிறது...
பொதுநல சேவையில் ஈடுபடும் போது இடர்ப்பாடுகள் என்று ஏதும் ஏற்பட்டதா எனக் கேட்டபோது ”பொது சேவையில் ஈடுபடும் போது எதிரிகளை சம்பாதிப்பது ஒரு இயற்கையான செயல்தான். கடந்த 45 வருடங்களாக ஒரே பகுதியில் வசிப்பதாலும், பக்கத்தில் இருக்கும் பல பகுதிகளில் நிறைய நண்பர்கள் இருப்பதாலும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஓரளவு கடிதம் எழுதும் திறமை உள்ளதாலும், வைஷ்ணவி தேவியின் பூரண அருள் கிடைப்பதாலும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மனோ தைரியம் என்றுமே உள்ளது.” என்றார். தன்னலம் கருதாது சமூக சேவையில் ஈடுபட்டு வரும் திரு. வெங்கட் அவர்களின் சேவை சென்னை முழுமைக்கும் தொடர நமது செட்டிநாடு இதழின் சார்பாக வாழ்த்துக் கூறி வந்தேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)