மகளிர் மட்டும் ஊர்வசி
”மேடம் ஒரு பேட்டி வேணுமே” இது நான்.
“இப்போ செங்கல்பட்டில் ஒரு ஷூட்டிங்கில் இருக்கேன். சென்னை வந்ததும் சொல்றேன் வாங்க.” இது ஊர்வசி.
“மேடம். போன்லயே நீங்க நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொன்னாப் போதும். அப்படியே எழுதி ஆர்டிகிளா அனுப்புறேன் மெயில்ல. உங்க அனுமதிக்குப் பிறகு பத்திரிக்கை அலுவலகத்துக்கு ஃபார்வேர்ட் பண்ணுறேன்.”
“என்னது போன்ல பேட்டியா? நீங்க யாரு எவருன்னே தெரியாது. நேர்ல வந்து பார்த்தாத்தான் பேட்டியே” என்று கறாராகப் போனை வைத்து விட்டார். ஊர்வசி.
2010 களில் சென்னையின் கே கே நகரில் இருந்தபோது லேடீஸ் ஸ்பெஷல், இவள் புதியவள், சூரியக்கதிர், நம் தோழி போன்ற பத்திரிக்கைகளுக்கு ஃப்ரீலான்சர் ஜர்னலிஸ்டாகப் பேட்டிகள் எடுத்து அனுப்பிக் கொண்டிருந்தேன். புயல்வேகத்தில் ஸ்டெனோகிராஃபர்போல போனை ஒரு கையில் பிடித்து நோட்டில் குறிப்புகள் எடுத்து பல்வேறு சினிமா பிரபலங்களையும், மருத்துவர்களையும் பேட்டி எடுத்து அதை லாப்டாப்பில் டைப் செய்து மெயிலில் அனுப்பி உள்ளேன். ஆனால் ஊர்வசிதான் நோ சொல்லி விட்டார்.
விக்கிரமாதித்தன் போல் மனதைத் தளர விடாமல் என் கேள்வி வேதாளங்களைச் சுமந்துகொண்டு வேளச்சேரியில் இருக்கும் அவர் வீட்டுக்கு ஒரு பொன்மாலைப் பொழுதில் சென்றேன். அப்போதுதான் ஃப்ளைட்டில் இருந்து இறங்கி வீட்டுக்குள் அடி எடுத்து வைத்திருந்தார். தொடர் பேட்டியில் என்னுடன் கனிவான மொழியில் உரையாடினாலும் அவரை ஃபோட்டோ எடுத்துக் கொள்ள மறுத்து விட்டார்.
பேட்டியின்போது ”தமிழுக்கே உரித்தான ழ வை மெட்ராஸ் தமிழர்களை விட மற்ற மொழிக்காரர்கள் அற்புதமாக உச்சரிக்கிறார்கள்” என்றார் அதிரடியாக. தொலைக்காட்சி மூலம் தமிழ் கற்பித்த நன்னனைச் சிறப்பானவராகக் குறிப்பிட்டார். கல்கியில் சின்னச் சின்ன வாழ்க்கைக் குறிப்புக்கள் என்ற காலம் எழுதி இருக்கிறார் ஊர்வசி.
இவர் ஹ்யூமர் ஹீரோயின் ரோலில்தான் அதிகம் வெளுத்து வாங்கி இருக்கிறார். சினிமா ஹீரோயினான இவர் டிவியில் நடிப்பது குறித்துக் கேட்டபோது விஷுவல் மீடியாவின் மாற்றத்தினால் அதை ஏற்றுக் கொண்டதாகக் கூறினார். நந்தனா, மீரா ஜாஸ்மின், நயன் தாரா ஆகியோர் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டபோது இவரிடமும் ஒப்பீனியன் கேட்டிருக்கிறார்கள். ”அறிமுகம் மட்டுமே நான். மற்றபடி அவர்களின் திறமைதான் ஜெயிக்க வைத்தது” என்றார். வாழ்வின் எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தன் நடிப்பு டிப்ளமசியை விடாதவர். நடிப்பு ராட்சசி என்று கமலாலேயே புகழப்பட்டவர்.
கமலைப் பற்றிக் கூறும்போது “அவரைப் போல ஒரு கலைஞனைப் பார்ப்பது அரிது. டெடிகேஷன்னு சொல்வோமில்லையா அதுதான். மன்மதன் அம்பு போல மைக்கேல் மதனகாமராஜனிலும் ஒரு டெஸ்ட் முயற்சியாக ஸ்லோமோஷன் சாங் பின்னோக்கி உச்சரிப்போடும் சீன்ஸோடும் இருக்கும். அதை அவர்தான் செய்ய முடியும். மன்மதன் அம்புவில் அந்தப் பாட்டில் திருமணம் முடியும்போது பல்லாண்டு பல்லாண்டு என்று வரும் உச்சரிப்பு கூட திருப்பிப் போட்டு எழுதி ஐயர்களுக்கு ப்ராக்டீஸ் கொடுத்து செய்தது. இந்தியாவிலேயே இது கமலால் மட்டுமே முடியும். அந்த அளவு டெடிகேஷன் உள்ளவர் அவர்.” எனப் புகழ்ந்தார்.
உங்களுக்கு மிகப் பிடித்தவர் யார் எனக் கேட்டபோது “என் மகள் தேஜாலெக்ஷ்மி., ( குஞ்ஞாத்தா) .12 வயதாகிறது. 7 வது படிக்கிறாள். ” என்றார். (மகளைப் பற்றிச் சொல்லும்போது முகம் மலர்ந்தார்).
எல்லாரும் அரசியலுக்கு வர்றாங்க, நீங்க எப்ப வரப்போறீங்க எனக் கேட்டபோது ”அரசியல் செய்ய மிகப் பெரிய சமாச்சாரம். மிகுந்த அர்ப்பணிப்பு தேவை. நாட்டில் நடப்பது தெரியணும். அதுக்கு நேரம் ஒதுக்கணும். எல்லாரும் வந்துட்டாங்கன்னா அவங்களுக்கு இண்டரஸ்ட் இருக்கு. எனக்கு அதில் இண்டரஸ்ட் இல்லை, நான் பயப்படும் ஏரியா அது. ஒரு நாள் ஒரு தேசியக் கட்சி அலுவலகம் முன்பு உள்ள பல்டாக்டர் வீட்டுக்கு உறவினரை கொண்டு விட சென்றிருந்தேன். காரை விட்டு இறங்கக்கூட இல்லை. அந்தக் கட்சியின் தலைவர் எனக்கு வணக்கம் தெரிவித்தார். நானும் காரில் அமர்ந்தபடியே பதில் வணக்கம் தெரிவித்தேன். மறுநாள் பத்ரிக்கையில் நான் அந்தக் கட்சியில் சேர்ந்ததாக ந்யூஸ் வந்துவிட்டது. அப்படி ஏதும் நடக்காமலே ஒரு ஸ்கூப் ந்யூஸ் வந்தது” என்றார்!.
ஊர்வசி கேரளா கொல்லம் மாவட்டம் சூரநாட்டில் சாவர வி.பி. நாயர் மற்றும் விஜயலெக்ஷ்மிக்கு மூன்றாவது மகளாகப் பிறந்தார். இவரது சகோதரிகள் கலாரஞ்சனி, கல்பனா. சகோதரர்கள் கமல்ராய் மற்றும் இளவரசன். இவர்கள் ஐவருமே நடிகர்கள், பெற்றோருமே நாடக நடிகர்கள்தான். எனவே நடிப்பு என்பது இவர் ரத்தத்திலேயே ஊறி இருக்கிறது.
ஒன்பதாவது வயதிலேயே குடும்பம் சென்னைக்கு மாறியதால் தமிழ் அருமையாகப் பேசுவார். மனோஜ் கே. ஜெயினுடன் 2000 ஆண்டு திருமணம். தேஜாலட்சுமி என்றொரு மகள், மனோஜுடனான பிரிவுக்குப் பின் சிவபிரசாத் என்பவரை 2013 இல் மணந்தார். இவர்களுக்கு இஷான்பிரஜாபதி என்றொரு ஆண்குழந்தை உள்ளது.
1979இல் கதிர்மண்டபம் என்ற மலையாளப் படத்தில் 10 வயதுக் குழந்தையாக அறிமுகம். 83 இல் தனது பதினாலாவது வயதிலேயே முந்தானை முடிச்சில் ஹீரோயினாகத் தமிழில் அறிமுகம். தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் இவர். இதில் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதை ஐந்து முறை வென்றுள்ளார், இதில் 1989 முதல் 1991 வரை கிடைத்த மூன்று தொடர் விருதுகளும் அடங்கும்.இரண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார்.
எப்போதும் சீரியஸாய்ச் சுருங்கிய கண்கள், அதில் அவ்வபோது மின்மினியாய் ஒளிரும் கிண்டல், உப்பிய கன்னங்கள், உள்மடிந்த வாய், ரோஜா இதழ்களை ஒட்டியது போன்ற உதடுகள், வெகுளித்தனம், கிராமப்புறப் பெண்போன்ற உடலமைப்பு முந்தானை முடிச்சில், பின்னாளில் ஏகத்துக்கும் எடை கூடிவிட்டார் தன் சகோதரி கல்பனா போல்.
முந்தானை முடிச்சு, அபூர்வ சகோதரிகள், தாவணிக் கனவுகள், கொம்பேரி மூக்கன், நெருப்புக்குள் ஈரம், ஓ மானே மானே, அம்பிகை நேரில் வந்தாள், அன்பே ஓடிவா, எழுதாத சட்டங்கள், வாய்ப்பந்தல், வேங்கையின் மைந்தன், ஊருக்கு உபதேசம், சாந்தி முகூர்த்தம், நேரம் நல்ல நேரம், வெள்ளைப்புறா ஒன்று, அந்த ஒரு நிமிடம், அடுத்தாத்து ஆல்பர்ட், நாம் இருவர், ஒரு மலரின் பயணம், தெய்வப்பிறவி, பருவ ராகம், பாட்டி சொல்லைத் தட்டாதே, பெண்கள் வீட்டின் கண்கள், மைக்கேல் மதனகாமராஜன்,மகளிர் மட்டும், வனஜா கிரிஜா மாயா பஜார், ஆயுத பூஜை, சுயம்வரம், பஞ்சதந்திரம், விரலுக்கேத்த வீக்கம், திருப்பதி ஏழுமலை வெங்கடேசா, சிவா மனசுல சக்தி, மன்மதன் அம்பு, உத்தம வில்லன், சவாலே சமாளி, மகளிர் மட்டும், தில்லுக்குத் துட்டு 2, இந்தியா பாகிஸ்தான், இஞ்சி இடுப்பழகி,இடியட், வீட்ல விசேஷம்..
அப்பாடா மூச்சு வாங்குது.315 படம் அதில் 125 படம் தமிழில்.!83 இல் முந்தானை முடிச்சில் துவங்கி 2022 இல் வீட்ல விசேஷம் வரை. இவற்றுடன் டப்பிங், திரைக் கதாசிரியர், தயாரிப்பாளர், இது போக 50 க்கும் மேற்பட்ட சானல்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், நிகழ்ச்சி நடுவர், சின்னத்திரை நடிகை, விருந்தினர் ( பிக் பாஸ்) எனப் பல பங்களிப்புகள், அமேசான் ப்ரைம், டிஸ்னி ஹாட் ஸ்டாரிலும் இவர் படங்கள் வெளியாகி உள்ளன.
இவர் நடித்ததில் எனக்குப் பிடித்த பாத்திரங்கள் விரலுக்கேத்த வீக்கம் காயத்ரி, பாட்டி சொல்லைத் தட்டாதே சீதா, திருப்பதி ஏழுமலை வெங்கடேசா பத்மினி, புள்ளைகுட்டிக்காரன் அழகு, சுயம்வரத்தில் அறிவொளி மங்கை, மாயாபஜாரில் மாயம்மாகவும் சுஜியாகவும் டபுள் ஆக்டிங், மேலும் குணச்சித்திரப் பாத்திரங்களில் முந்தானை முடிச்சுப் பரிமளமாகவும், மன்மதன் அம்புவில் மல்லிகாவாகவும் கலக்கி இருப்பார். முந்தானை முடிச்சில் அந்தி வரும் நேரம், சின்னஞ்சிறு கிளியே, கண்ணத் தொறக்கணும் சாமி, நான் புடிச்ச மாப்பிள்ளைதான், வா வா வாத்தியாரே, வெளக்கு வச்ச நேரத்துல.. என அனைத்துமே ஹிட் பாடல்கள். படமும் 25 வாரம் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட், சில்வர் ஜூபிலி படம், சினிமா எக்ஸ்பிரஸ் அவார்டு கிடைத்தது.
இன்றும் நினைத்தல் கூட என்னை வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் படங்கள் இரட்டை ரோஜா, பஞ்சதந்திரம், மைக்கேல் மதன காமராஜன். இரட்டை ரோஜாவில் புருஷனான ராம்கியை முதலாளியான குஷ்பூவுக்கு விற்றுவிட்டுக் கோடீஸ்வரியாக அலப்புவதும் தன் தோழி சுகாசினி கணவரின் படத்தைப் பொக்கிஷமாக எடுத்துக் கொண்டு தன் மாளிகையை விட்டு வெளியேறுவதைப் பார்த்ததும் தன் நிலை குறித்துப் புலம்புவதும் எனக் கலக்கி இருப்பார்.
பஞ்சதந்திரத்தில் அம்மிணி ஐயப்பன் நாயர். ஜெயராம் தன் நண்பர்களுடன் ரகசியமாக பெங்களூர் செல்லத் தன் நண்பனையே மருத்துவர் போல போனில் பேசச் சொல்வார். அப்போது அவர் ( மகனின் இருதயத்தில் உள்ள ) ஓட்டை எல்லாம் அடைச்சிடலாம். எனச் சொல்ல “இவர் என்ன டாக்டரா இல்ல ப்ளம்பரா” எனக் கேட்டு அதிரடிப்பார் ஊர்வசி!. மைக்கேல் மதன காமராஜனில் திரிபுரசுந்தரியாக அதகளம். ”நீங்களும் குக்கு. கிராமமும் குக்கா”, “ போயிடுத்தா.. எல்லாம் பாழாப் போயிடுத்தா” என்று அழுவார். கனவு பாடலில் கமல் பஞ்சகஞ்சத்தில் துரத்த, அசல் பிராமணப் பெண்போலத் தலைநிறைய மல்லிகைப்பூ, மடிசார் அணிந்து ஊர்வசி ஓட, அவரின் பின்புறம் பட்டுக் குடம் கிணற்றில் துள்ளி விழுவது காட்சி அழகு.
மகளிர் மட்டும் என்ற தலைப்பிலேயே இரு படங்கள் நடித்திருக்கிறார்!1994 இல் மகளிர் மட்டும். சிங்கீதம் சீனிவாசராவ் டைரக்ஷன். கிரேஸிமோகனின் வசனங்கள்.ரேவதி, ஊர்வசி, ரோகிணி ஆகிய மூன்று பெண்கள் மேனேஜர் நாசரால் ஏற்படுத்தப்படும் பணியிடப் பாலியல் தொந்தரவுகளைத் துணிச்சலோடு எதிர்கொள்வதை நையாண்டியோடு காட்சிப் படுத்திய முதல் மீ டூ படம். 175 நாட்கள் ஓடிய இப்படம் வி சாந்தாராம் வெள்ளி விருதை வென்றது. இதில் ஜானகியாக நடித்த ஊர்வசி சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதை வென்றார்.
மகளிர் மட்டும் 2017 இலும் ஊர்வசி நடித்திருக்கிறார். ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா பொன்வண்ணன் ஆகிய பள்ளிக்கூடத் தோழிகள் 38 ஆண்டுகளுக்குப் பிறகு ஜோதிகாவின் முகநூல் தேடல் முயற்சியால் இணைகிறார்கள்.பெண்கள் குடும்பத்துக்காக உழைப்பது மட்டுமல்ல.. தங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்குகளிலும் ஈடுபடவேண்டும். தங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதாய் அமைந்துள்ளது இப்படத்தின் சிறப்பு.. இதில் ஊர்வசி மற்றும் பானுப்ரியா ஆகியோர் தென்னக பிலிம்பேர் விருதுகளில் சிறந்த துணை நடிகை பிரிவில் பரிந்துரைக்கப்பட்டனர். டயலாக் டெலிவரியில் க்வீனான ஊர்வசி க்ரிட்டிக் அவார்டு, ஸ்டேட் அவார்டு, ஃபிலிம்ஃபேர் அவார்டு, எடிசன் ஃபிலிம் அவார்ட் பெற்றதில் வியப்பில்லை. இன்னும் பல்வேறு விருதுகளும் சிறப்புகளும் பெற்று மகளிர்க்கான இன்னும் பல ஊக்கமூட்டும் படைப்புகள் கொடுக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் ஊர்வசி மேம்.
315 படங்கள்.. அதில் 125 தமிழ்... மற்றும் பல பங்களிப்புகள்.. ஊர்வசி உண்மையிலேயே மனதைக் கவர்கிறார்.
பதிலளிநீக்குமிக அருமை நன்றி
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்
பதிலளிநீக்குநன்றி ப்ரபா
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!