கனவுகளை விதைத்துக் காத்திருக்கும் காரைக்குடித் தென்றல்
காரைக்குடி கார்த்திகேயன் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார் தென்றல். இது அண்ணஞ்சார் என்று அனைவராலும் அன்பால் விளிக்கப்படும் இவரது தாத்தாவால் தொடங்கப்பட்டது. எப்போதும் சுறுசுறுப்பாகவும் பளிச்சென்றும் இருக்கும் தென்றல் கொரோனா காலத்தில் கூட வாட்ஸப்பில் தேவதைக் கூட்டம் என்றொரு குழு ஆரம்பித்துப் பயிற்றுவித்தார், கொரோனா தொடரவும் வாசல் பள்ளி என்று அவரவர் வீட்டுக்கே சென்று பயிற்றுவித்தார். அவரிடம் நம் லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிக்கைக்காகப் பேட்டி கேட்டபோது இதுவரை அறியாத அவரின் பன்முகத் திறமைகளையும் தடை தாண்டி வரும் அவரது வெற்றி ஓட்டங்களையும் கண்டு பிரமித்தேன். அவர் மொழிகளிலேயே அதைத் தருகிறேன்.
”நான் 12ஆம் வகுப்புப் படித்து முடித்த போது, அயல் நாட்டுத் தூதுவராகவரவேண்டும்என்பதே என் மிகப்பெரிய கனவாக, இலட்சியமாக இருந்தது. ஆனால் ஐந்து பெண் குழந்தைகளையும் படிக்க வைத்து, வேலை வாங்கிக் கொடுத்து, திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றதொரு நிலையான கொள்கையுடன் என் அப்பா வாழ்க்கையை நகர்த்தியதால், அவரின் விருப்பப்படி ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்க்கப்பட்டேன்.ஆனால், சில நாட்களிலேயே, "கிட்டாதாயின் வெட்டென மற" என்பதை மனதில் கொண்டு என்னைத் தேற்றிக்கொண்டு, ஈராண்டுகள் நன்றாகப் படித்து மாவட்ட அளவில் ரேங்க் பெற்று, பள்ளியில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றேன்.
திருமணம் ஆகும்வரை பெரிதாக எந்தக் கஷ்டமும் தெரியவில்லை. பிறகுதான் வாழ்க்கையின் இன்னொரு பக்கம் கரடுமுரடான பாதையாகத் தெரிந்தது. அந்த முகம் அச்சுறுத்தலாகவே இருந்தது. அடுத்தடுத்து மூன்றாண்டு கால இடைவெளியில் இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்ட போதும், கடுமையான போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது.
என்னுடைய தேர்வுக்குக் கட்டணம் செலுத்தியும் தேர்வுகளை எழுத அனுமதிக்கப்படவில்லை. ஆனால், உறவுகளைப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாகவே பிரச்சனைகளைப் பார்க்க வேண்டும் என்ற ஒரு புதிய அணுகுமுறை எனக்குக் கைவர ஆறேழு வருடங்கள் ஆயின. சமைப்பதும் சாப்பிடுவதும், உடுத்துவதும் துவைப்பதும், படுப்பதும் தூங்குவதும் மட்டுமே வாழ்க்கையா? என்று விரக்தி ஏற்பட்டபோது நான் விழித்துக் கொண்டேன்.
அதிகாலையில் எழுந்து அவசரமாகச் சமைத்து, குழந்தைகளையும் கணவரையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு நானும் பள்ளிக்கு ஓடிக் கொண்டிருந்தேன். இது ஒரு இயந்திர கதியிலான வாழ்க்கையாகப்பட்டது எனக்கு. என் மகளுக்கு ஏழு வயது ஆனபோது முனைவர் மா.ப.சரளா அம்மையாரிடம் பரதநாட்டியம் கற்றுக்கொள்ள வகுப்பில் சேர்த்தேன். மிதிவண்டியில் இரண்டு குழந்தைகளையும் ஏற்றிச் செல்ல இயலாது என்பதால் துணிந்து ஈருருளி ஒன்றை வாங்கி ஓட்டக் கற்றேன். மகனை கீபோர்டு வகுப்பில் விட்டேன். மறுநாளில் இருந்து எனது 35 ஆவது வயதில் குழந்தைகள் நடனமாடும் அதே வகுப்பில் சேர்ந்து நானும் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். அதேபோல் என் குழந்தைகளைக் கர்நாடக சங்கீத வகுப்பில் சேர்த்தபோது 36 வயதில் நானும் கர்நாடக சங்கீதம் பயின்றேன். பிறகு 38ஆவது வயதில் அழகப்பா பல்கலைக்கழகம் நுண்கலைகள் மையத்தில் தேவார இசை கற்று, சான்றிதழ் பெற்றேன். எனக்கான காலத்தையும் இசைவான சூழலையும் நானேதான் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை நான் உணர்ந்த தருணம் அது.
பிறகு என்னுடைய 40ஆவது வயதில் இருந்து உதிரப்போக்கு மிகவும் அதிகமாகி விட்டது இந்த மெனோபாஸ் என்பது பெண்களுக்கு இயற்கையாக ஏற்படும் ஒரு சுழற்சி, அது வியாதியல்ல என்று மனத்தில் இருத்திக்கொண்டு, திருச்சி, மதுரை, இராமநாதபுரம், காரைக்குடி எனப் பல நகரங்களிலும் தொடர்சிகிச்சை எடுத்துக் கொண்டேன். ஆனாலும் வீட்டைவிட்டு இறங்கி விட்டால் பள்ளியிலும், பொது நிகழ்ச்சிகளிலும் நிரந்தரமாக ஒரு சிரிப்பு முகமூடியும், சுறுசுறுப்புக் கவசமும் முகத்திலும் உடம்பிலும் அணிந்து கொள்ளப் பழகினேன்..
சுற்றத்தினர் மட்டுமல்ல, சுற்றி இருப்பவர்களிடமும் குற்றம் காணாது வாழப் பழகினேன். ஓய்ந்து போய் உட்காரும்போதெல்லாம் ஏதாவது ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொள்வேன். பிரச்சனைகளின் அழுத்தம் அதிகமாக அதிகமாக, என் போராட்ட வேகமும் அதிகரித்தது. மனதிற்கொண்ட இலட்சியம் எதுவும் நிறைவேறா நிலையிலும், ஆங்கில இலக்கியத்தை அஞ்சல்வழியில் படித்து, இரண்டிரண்டு தேர்வுகளாக எழுதி, பி.ஏ., எம்.ஏ., எம்.ஃபில்., மற்றும் பி.எட். பட்டங்கள் பெற்றேன். தற்பொழுது முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சிப் படிப்பையும் மேற்கொண்டு வருகிறேன்.
திருமணத்தின் போது என் கணவர் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்தார். மிகவும் சொற்ப வருமானத்தில் ஒவ்வொரு மாதத்தையும் கடத்தவே மலையேற்றம் செய்தது போல் களைப்பாக இருந்தது. இருப்பினும் துணிந்து ஓர் இடம் வாங்கி, வீடு கட்டினேன். அஸ்திவாரம் போட்டு, முழங்கால் உயரத்திற்குச் சுவர்கள் வந்த பொழுது என் கணவரே நம்மால் முடியாது விட்டு விடுவோம் என்று சொன்னபோது கூட ஊக்கம் தளராது கட்டி முடித்தேன். அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் இவை நான்கும் நாற்றிசையிலும் இருந்து என்னைத் தாக்கின. ஆனால் அவர்கள் எல்லோரும் எனக்கு வேண்டியவர்களே. எனவே யாரையும் வெறுக்கவில்லை. ”யாரொடும் பகை கொள்ளலன் என்றபின் போரொடுங்கும்; புகழொடுங்காது” என்னும் கவிச்சக்கரவர்த்தியின் வரிகளை இறுகப் பற்றிக் கொண்டேன்.
அப்பொழுதுதான் இனிய நந்தவனம் என்னும் மாதஇதழில் ஒரு கட்டுரை எழுதித் தரும்படிக் கேட்டனர். அன்றிலிருந்து தொடங்கியது எனது இலக்கியப் பயணம். நிறைய எழுதத் தொடங்கினேன். இன்னும் நிறைய வாசிக்கத் தொடங்கினேன். ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் அல்லது அதற்கும் குறைவான நேரமே தூங்கினேன். குறைந்த தூக்கத்தைப் பயணங்களிலும், விடுமுறை நாட்களிலும் வேலையை முடித்த பின்பு தூங்கி ஓரளவு சரிப்படுத்திக் கொண்டேன்.
ஒரு முழு நாளில் எனக்காகச் சில நிமிடங்களை ஒதுக்கிக்கொள்ளக் கற்றுக் கொண்டேன். உயிர் பருகும் மழை, நீசமாக எண்ணாதே நீச்சலடிக்கக் கற்றுக்கொடு, வானவில்லும் வண்ணத்துப் பூச்சிகளும் என்னும் தலைப்புகளில் மூன்று நூல்கள் எழுதி, வெளியீடு செய்தேன். இலக்கியச் சொற்பொழிவு, கவியரங்கம், பள்ளி மற்றும் கல்லூரிகளில் சொற்பொழிவு, நிகழ்ச்சித் தொகுப்பு மற்றும் நூல் விமரிசன உரை என்று தொடர்ந்து பொதுவெளியில் இயங்கத் தொடங்கினேன். சிறந்த படைப்பாளர்கள் மற்றும் சிற்றிதழாளர்கள் பலரின் அறிமுகமும் நட்பும் கிடைத்தது.
என்னுடைய குழந்தைகளும் வளர்ந்து விட்டார்கள்; கல்லூரிப்படிப்பை முடிக்கும் காலம். இனிமேல் கவலையில்லை என்று நினைத்த வேளையில், அப்பாடா! இனிமேல் ஒரு வழியாக, ”நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்” என்று, இந்தச் சமூகத்திற்கு நான் சொல்ல நினைப்பதையெல்லாம் என் எழுதுகோல் பேசட்டும், ”எழுத்தும் தெய்வம் என் எழுதுகோலும் தெய்வம்” என்று தீவிரமாக நான் எழுதிக் கொண்டும், பொதுவெளியில் பயணப்பட்டுக் கொண்டுமிருந்த வேளையில் மறுபடியும் ஒரு முட்டுக்கட்டை. இது மனதளவில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்தது.
எப்போதும் திடகாத்திரமாக ஆரோக்கியத்துடன் இருந்த என் கணவருக்கு இதயத்தில் ரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஓபன் ஹார்ட் பைபாஸ் சர்ஜரி மட்டுமே சிறந்த தீர்வு என்று பரிந்துரைக்கப்பட்டது. இப்பொழுதும் சர்ரென்று கீழிறங்கி, வாழ்க்கையின் முதல் படிக்குத் தள்ளப்பட்டேன். என்னுடைய சொந்தப்பணிகள் அனைத்துக்கும் தற்காலிகமாக ஒரு முற்றுப்புள்ளி வைத்தேன். மனதுக்குள் அது நிரந்தரமாகி விடுமோ எனும் கவலையும் இருந்தது. அதைவிட அதிகமாக ’என்னால்தான் என் கணவருக்கு வியாதி வந்தது; சரியாகக் கவனிக்கவில்லை’ போன்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் என் மீது சுமத்தப்பட்டன. ஆனால் என்னுடைய கவனமெல்லாம் ஒரு தாதியாக, செவிலியராக இருந்து அவரைக் காப்பாற்ற வேண்டும். அறுவை சிகிச்சைக்குப்பின் அவர் பழையபடி இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதிலேயே நிலைத்திருந்தது. என்னிரு பிள்ளைகளும் நான் சொல்வதற்கு இணங்க என்னுடன் இணைந்து தங்கள் தந்தையை இரவுபகல் பாராது ஒரு குழந்தையைப் போலப் பார்த்துக் கொண்டனர்.
ஆறு மாதங்களாக அவரது உடல் நலன் தவிர வேறெந்தச் சிந்தனையும் செய்யாது, அவரை நல்ல நிலைக்குக் கொண்டு வந்ததும் மறுபடியும் எனது எழுத்துப் பணியை ஆவலாகத் தொடங்கினேன். சில நாட்களிலேயே என் பார்வையில் ஒரு மசமசப்பு தென்பட்டது. தூங்குவதற்கு நான் எடுத்துக் கொண்ட நேரக் குறைவுதானோ? என்று முதலில் நினைத்தேன். கண் மருத்துவரிடம் ஆலோசித்த பிறகு கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் எனக் கூறிவிட்டனர். ’கத்தி போய் வாலு வந்துச்சு டும் டும் டும் டும்” என்ற நிலையாயிற்று. 30 நாட்கள் இடைவெளியில் இரு கண்களிலும் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்.
இரண்டாவது கண்ணில் அறுவை சிகிச்சை முடிந்து 60 நாட்கள் கழித்து இப்பொழுது எனது தொடர் ஓட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கி இருக்கிறேன். விடாமுயற்சியாலும் தொடர் வாசிப்பினாலும் எனது வாழ்க்கைப் பயணத்தை இன்னும் துணிவாக எதிர் கொள்ள வேண்டும். ”சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி” என்று எழுதப்பட்டதெல்லாம் என்னைப் போன்ற பெண்களுக்கு ஏட்டுச் சுரைக்காயாகவே இருக்கட்டும். வானம் மேலே. பூமி கீழே. எல்லைகள் என்று எதுவும் இல்லை. எட்டாத உயரத்தில் கனவுகளை விதைப்போம். என்றேனும் ஒரு நாள் எட்டிப்பிடிப்போம். என் கனவுகள் மெய்ப்படட்டும் என்று வாழ்த்துங்கள். நானும் வளர்கிறேனே!”
நிச்சயமாகத் தென்றல். சிரிப்பு முகமூடியும் சுறுசுறுப்புக் கவசமும் அணிந்து பளிச்சென்று உலாவரும் தன்னம்பிக்கைத் தென்றல் நீங்கள். உங்கள் கனவுகள் விருட்சமாகப் பெருகி மெய்ப்படட்டும் என லேடீஸ் ஸ்பெஷல் வாசகியர் சார்பில் நானும் வாழ்த்துகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)