எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 17 ஜூன், 2016

பூரத் திருநாளும் உத்திரத் திருநாளும்.

காரைக்குடியில் நடைபெற்ற கம்பர் விழாவின் மகத் திருநாளை முன்பே பதிவு செய்திருக்கிறேன். பூரம் மற்றும் உத்திரத் திருநாட்களில் எடுத்த புகைப்படங்கள் பழைய லாப்டாப்பில் மாட்டி ( மடிக்கணினி வாங்கி 5 வருடம் கூட ஆகவில்லை . ஹ்ம்ம் ) ப்ளூ ஸ்க்ரீன் ஆகி லாக் ஆகிவிட்டது.எனவே கைபேசியின் காமிராவில் கிடைத்தவற்றைப் பகிர்ந்திருக்கிறேன்.

வழக்கம் போல் செல்வி கவிதாவின் இறைவணக்கத்தோடு தமிழமுதம் அருந்தினோம்.

அதன் பின் என் முகநூல் தோழியும் ப்ரபல கவிதாயினியுமான ராஜாத்தி சல்மா அந்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்தார்கள். அவர்களுடன் அளவளாவினேன்.

அவர்கள் தேர்தல் சுற்றுப்பயணத்தின் காரணமாக தன்னுடைய ஒரு சில கவிதைகளை மட்டுமே வாசித்துவிட்டு விடைபெற்றார்கள். ( கம்பனில் சுவை ஊற்று என்பது அவருக்கு அளிக்கப்பட்டிருந்த தலைப்பு.)

அதன் பின் கருத்துப் பொழிவு என்ற தலைப்பில் கம்பனில் மறக்க முடியாதது பற்றி  திரு த. இராமலிங்கமும், கம்பனில் மறக்கக் கூடாதது பற்றி திரு பழ கருப்பையாவும் உரை நிகழ்த்தினார்கள். மிகச் செறிவான உரை இரண்டுமே.

கம்பனில் மறக்க முடியாதது பற்றிக் கூறும் போது தன்னைக் கானகத்துக்கு அனுப்ப கைகேயி கட்டளையிட்டாலும் தாயின் கட்டளையைச் சிரமேற்று நிகழ்த்திய தனயனின் செயல்பாடு மறக்க முடியாதது  பற்றிப் புகழ்ந்தார்.

கம்பனில் கவிப் பொழிவு என்ற தலைப்பில் சொற்கடல் என்ற தலைப்பில் திருமதி ருக்மணி பன்னீர் செல்வம் மிகவும் ரசிக்கும்படி அற்புதமாகப் பேசினார். அன்றைய நிகழ்வும் கோட்டையூர் வள்ளியம்மை ஆச்சியின் விருந்தோம்பலோடு முடிவுற்றது.
மறுநாள் நாம் அனைவரும் எதிர்பார்த்த பட்டிமண்டபம்.  இதில் தொடக்க நிகழ்ச்சியாக எம் கவிதா தமிழமுதம் வழங்கினார்.


திரு கம்பன் அடி சூடி அவர்கள் பட்டிமன்றப் பேச்சாளர்களையும் நடுவர் தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன் அவர்களையும் அறிமுகப்படுத்தி சிறப்புரை ஆற்றினார்கள்.


பட்டி மண்டபத் தலைப்பு :- எவர் சந்திப்பில் கம்பன் பெரிதும் வெற்றி பெறுகிறான்.?

இராமன் - கைகேயி சந்திப்புப் பற்றி திரு வே. சங்கர நாராயணன், திருமதி பாரதி பாபு, திரு பாகை கண்ணதாசன் பேசினார்கள்.
இராமன் - இராவணன் சந்திப்பு பற்றி திரு இரா மாது, திருமதி சுமதி ஸ்ரீ, திரு மெ ஜெயம்கொண்டான் ஆகியோர் பேசினார்கள்.
 இராமன் - சிறை மீண்ட சீதை சந்திப்புப் பற்றி திரு பழ முத்தப்பன், திருமதி இரா கீதா, திரு அப்பச்சி எஸ் சபாபதி ஆகியோர் பேசினார்கள்.
வந்திருந்த கூட்டத்தின் ஒரு பகுதியினர்.
சுமதிஸ்ரீயின் பேச்சு மிகவும் அருமை.



நோக்கர்களின் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. நானும் நேற்று வாக்களித்தேன். கவிதாயினி வள்ளி முத்தையாவுக்குப் பிறகு கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன் என்று வாக்களிக்க அழைத்தார்கள். . 49 நோக்கர் பெருமக்களில் ஒருவராகத் தேர்வு பெற்று வாக்களித்தது இன்ப அதிர்ச்சி !!!



நோக்கர் பெருமக்கள் நாற்பத்தி ஒன்பதின்மரும் வாக்களித்து இராமன் சிறைமீண்ட சீதை அணியை விலக்கினார்கள். நோக்கர்களின் தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர்கள் அணி மேல் முறையீடு செய்தார்கள். இருந்தும் குற்றம் குற்றமே என்று தீர்ப்பளித்தார் நீதிபதி நெல்லைக் கண்ணன் அவர்கள்.
இதில் புதுமை என்னவென்றால் அந்தத் தீர்ப்பு வெளியான பின்னேயே இவர் எந்தத் தயாரிப்பும் இல்லாமல் மேடை ஏறி பாதிக்கப்பட்ட அணிக்காக வாதாட வேண்டும். இந்த விழாவில் நோக்கர்களின் சார்பாகப் பேசியவர் திரு மா சிதம்பரம். மிக அருமையாகப் பேசினார். மிக ஆச்சர்யம். !

மொத்தத்தில் கம்பரசத்தில் தமிழ்த் தேன் ஊற்றி அருந்தி மகிழ்ந்தோம். வாழ்க வளமுடன். அடுத்த விழாவை எதிர்நோக்கிக் கம்பன் தமிழருந்தக் காத்திருக்கிறோம்.

கம்பன் புகழ் வாழ்க !
கன்னித் தமிழ் வாழ்க !

4 கருத்துகள்:

  1. அருமையான படங்களுடன் அழகான பதிவு. பாராட்டுகள். வாழ்த்துகள்.

    முதல் படத்தில் பூரமும் உத்திரமும் கிட்டத்தட்ட ஒரே கலர் புடவைகளில் அருகருகே அமர்ந்திருந்தாலும் .........

    குறைந்தது ஆறு வித்யாசங்கள் கண்டுபிடிக்க முடிகிறது :))))))

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான நிகழ்வுகள். பாராட்டுகள்....

    பதிலளிநீக்கு
  3. நன்றி விஜிகே சார், அஹா !!!

    நன்றி வெங்கட் சகோ .

    பதிலளிநீக்கு

  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...