முக நூல் நண்பர் ஓசை செல்லாவிடம் ஓராறு கேள்விகள் கேட்டோம் நம் வலைத்தளத்தின் சாட்டர்டே ஜாலி கார்னருக்காக. அவரின் பதில்கள் சுவாரசியம். நீங்களும் படிச்சு ரசியுங்க.
இயற்கை எழில் கொஞ்சும் ஒரு மலைப்பக்கம் தானே தனியா வீட்டைக் கட்டி வாழ்ந்தவர் இவரு .
#1 : இயற்கையோடு இயைந்த வாழ்க்கை எப்பிடி இருக்கு. இதப் பத்தி நிறைய சொல்லுங்க. “
நான் தற்பொழுது நகரச்சூழலில் இயற்கையோடு இணைந்து எப்படி வாழ்வது என்று ஆய்வு செய்து வருகிறேன். இயற்கையின் வளங்களை உறிஞ்சுவதிலும், நாசம் செய்வதிலும் நகரம் பெரும்பங்கு வகிக்கின்றது என்று நான் தீர்க்கமாக நினைப்பதால் இந்த மாற்றம்.
அதிகாலை எழுந்தவுடன் நாம் பல் துலக்குவதில் இருந்து குளித்து வேலைக்கு சென்று.. வீடு திரும்பி.. உணவு உண்டு உறங்கும் வரையிலும் நாம் எவ்வளவு கொடூரமாக இயற்கையோடு முரண்படுகிறோம் என்பதை ஆய்வுக்குள்ளாக்கி வருகிறேன். சீக்கிரமே அதை பற்றி விரிவாக எழுதுவேன்.
இப்போதைக்கு ஒரு சின்ன கேள்வி.. நம் அனைவருக்கும் . . .
கீழ்க்கண்ட அன்றாட செயல்களை செய்யும்போது உங்களால் இயற்கையோடு ( நிலம், நீர், காற்று ) எந்த அளவு ஒத்துப்போக முடிகிறது ? போகிறீர்கள்.. அல்லது மாசு படுத்துகிறீர்கள்?
1) பல்துலக்கும் போது ?
2) குளிக்கும்போது ?
3) உணவு சமைக்கும்போது?
4) வாழ்விடத்தில் சுகாதாரம் பேணும்போது, கழுவும்போது, சுத்தம் பேணும்போது, துணிகள் துவைக்கும் போது ?
5) காலை மாலை அலுவலகத்துக்கு பயணிக்கும்போது ?
6) மாலை பொழுது போக்கும்போது?
7) இரவு உறங்கும்போது?
இந்த கேள்விகளுக்கு உங்களால் மனசாட்சியை தொட்டு விடை சொல்ல முற்படுங்கள் !
#2. இணையம் வைத்து நீங்க மாதம் ஒரு தொகை சம்பாதித்தாக சொன்னீர்களே.. அது பற்றி சொல்லுங்க.
ஆம். இணையத்தில் எழுதி முதல் ஒரு லட்சத்தை ஈட்டிய தமிழ் வலைப்பதிவர் நானாகத்தான் இருப்பேன். ஆனால் இன்று அனைத்து வலைப்பதிவுகளையும் விழுங்கி முகநூல் பகாசுரனாக வடிவம் பெற்ற பின்பு எனது எழுத்துக்கு கிடைக்கும் வருமானம் என்று ஒன்றுமே இணையத்தில் இல்லை ! எல்லாமே மார்க்குக்குதான் போய் சேர்கிறது ! அதில் ஒரு வருத்தமும் இல்லை ! நாம் முன்பைவிட இப்பொழுது இணையத்தில் அதிகமாக இயங்குகிறோம் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு உண்மை நமது கிரியேட்டிவிட்டிகளை இந்த சோசியரல் நெட்வொர்க் காசாக்கி அதை தானே வைத்துக்கொள்கிறது என்பதுவும் !
- #3 : புக் என்று எதுவும் வெளியிட்டு இருக்கிறீர்களா? அந்த அனுபவம் பற்றி ?
அடிப்படையில் நான் ஒரு சிந்தனையாளன். சூரியனுக்கு கீழ் மேல் அப்பால் உள்ள அனைத்தும் பற்றி சிந்திப்பவன். சிந்திப்பதை எழுதுவதால் நான் எழுத்தாளனாகவும் ஆகிறேன் !
இயற்கை எந்த அளவுக்கு என்னை ஈர்க்கிறதோ அதே அளவுக்கு அறிவியலும் டெக்னாலஜியும் என்னை ஈர்க்கின்றன என்றும் சொல்லலாம். என்னை பொருத்தவரை புத்தகங்கள் என்பவை இணையம் வந்த பின்பு ஒரு அப்சொலீட் ஆன டெக்னாலஜி அல்லது நடைமுறை !
இன்று யாரும் எப்படி புறாவின் காலில் கட்டி செய்தி அனுப்புவதில்லையோ... பனையோலையிலோ அல்லது ஏன் கடுதாசிகூட அதிகம் எழுதுவதில்லையோ அதே போலத்தான் புத்தகம் போடுவதும்... என்பது எனது தாழ்மையான கருத்து ! அது காலத்துக்கு ஒவ்வாத ஒரு விசயம் ! எனவே நான் இன்று வரை வாசிப்பாளனுக்கும் படைப்பாளிக்கும் இடையே பதிப்பகம் என்று ஒன்று இருப்பதை அவசியமற்றதாக கருதுகிறேன்.
மேலும் இனிமேல் மின்னூல்கள் இந்த தமிழ்ச்சுழலை ஆளும்.. என்று அதற்கான சில செயல்திட்டங்களை கருது கோள்களை உருவாக்கி வருகிறேன். இந்த ஆண்டே எனது மின்னூலும் மற்றவர்கள் பின்பற்றிய மின்னூல் செயல் திட்டங்களையும் வெளியிடுவேன் என்று மட்டும் இப்பொழுது சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் !
#4: முகநூலில் உங்களுக்கு தோழிகள் நிறைய.. பெஸ்ட் பிரெண்டு யாரு?
ஏன்? சொந்த செலவில் சூனியம் வைக்கிற மாதிரியான கேள்வி ! அதுனால இதுக்கு வேறு மாதிரியாக பதில் அளிக்கிறேன். எனக்கு பொதுவாக இங்கே தோழிகள் தான் நண்பர்களை விட அதிகம் ! அதே சமயம் நான் அவர்களின் எழுத்துக்களை படித்து கொஞ்சம் என் கருத்துக்களையும் ஏற்றி ஒருவிதமான உற்சாகப்படுத்தலில் பங்கேற்கிறேன். மற்ற படி என் நட்பு என்பது தனிப்பட்ட விசயம் ! பொதுவில் வைக்க விரும்பியதேயில்லை ! ஒன்டூ ஒன் என்பது மாதிரி ! அதை இன்றளவும் இயன்ற அளவு கடைப்பிடிக்கிறேன் !
ஒருவர் நட்புடன் நம்மோடு தனிப்பட்ட முறையில் பகிர்ந்த விசயங்களை நாளை அது முறிந்தால் கூட அதை மற்றவர்களிடமோ ஏன் அவர்களிடமோ கூட சுட்டிக்காட்டாமல் இருப்பது எனக்கான ஒரு அறம் என்று வகுத்துக்கொண்டுள்ளேன் ! அதனாலேயே தோழிகள் அன்றிலிருந்து இன்றும் என் மீது ஒரு மரியாதை கலந்த நட்பை வைத்திருக்கிறார்கள் என்று கருதுகிறேன் !
மற்றபடி நான் ஜொள்ளு லொல்லு ஓவர் வாய்பேசி வாங்கிக்கட்டிக்கொன்டது என்று ரொம்பவே ஜாலியாகவும் தான் இணையத்தில் உலாவந்து கொண்டிருக்கிறேன்.. எந்த ஒரு புனிதப்பிம்பங்களும் இன்றி !
#5 : உங்கள் வாழ்க்கை பரிசோதனைகள் நிறைந்ததாக இருக்கிறதே.. உங்கள் குடும்பத்தவர்கள் ஆதரவு எப்படி?- என்னை சகித்துக்கொண்டிருப்பதே இருப்பதிலேயே மிகப்பெரிய ஆதரவு தானே ! எனக்கு என்றில்லை.. அனேகமாக ஆய்வுகளில், முயற்சிகளில் மூழ்கிய அனைவருமே இதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும் !
பெரியார் முதல்.... என் மனம் கவர் நடிகர் விஜய் சேதுபதி வரை . .. இதை ஒவ்வொரு விதமாக சொல்லியே வந்துள்ளார்கள். எனவே உங்கள் கேள்விக்கு விடை.. ஆம் ! வெறும் ஆதரவு மட்டுமல்ல.. நிறைய சகிப்புத்தன்மையோடும் அவர்கள் எனக்கு உதவி வருகிறார்கள் !
- #6 : உங்களுக்கு நீங்களே கேள்வியையும் கேட்டுக்கொண்டு அதற்கான பதிலையும் சொல்லிவிடுங்களேன் !
ஆகா ! இது கூட நல்ல டெக்னிக் தான் ! நோகாமல் நொங்கு சாப்பிடுவது மாதிரி ! எல்லா பேட்டியெடுப்பவர்களும் இந்த டெக்னிக்கை பின்பற்றலாமே ! அனேகமாக சிலர் இதையே செய்தும் வருகிறார்கள் ! சரி நம்ம டர்ன் இப்போ ! எனக்கு நானே கேட்டுக்கொண்ட ஜாலி கேள்வி . . .
" செல்லா அது என்ன நமீதா மீது மட்டும் அப்படி ஒரு கிரேஸ் ! வலைப்பதிவில் நமீதா ரசிகர் மன்றம் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை ?
பதில் : படிக்கிற காலத்தில் சமந்தா பாக்ஸ் போஸ்டர். அதன் பின்பு குஷ்பூ . . . அந்த வகையில் தற்போது நமீதா ! இதுக்கு மேல விளக்கம் தேவையிருக்காதுன்னு நினைக்கிறேன். அதற்கப்புறம் வந்த நடிகைகள் எல்லாம் கிட்டத்தட்ட ஒல்லிபிச்சான்களாகவே இருப்பதால் யாரும் என்னை கவரவில்லை ! கவர்ந்தால் நிச்சயம் கட்சி மாறிவிடுவேன் ! எனக்கொன்றும் வயதாகிவிடவில்லையே ! பலரிடம் சொல்லும் அதே வரிகள் தான் .. நான் இன்னும் ஷாருக், சல்மான், அமீர் என்ற மூன்று கான்களையும் விட இளமையானவன் தானே !
நன்றி தேன்
---- ஹாஹாஹா முடிஞ்ச வரை நிறையப் பேர்கிட்ட மாட்டி விட்டாச்சுன்னு நினைக்கிறேன். என்னாச்சு இந்த போஸ்ட் வந்தப்புறம் உங்க நிலைமைன்னு தெரிஞ்சுக்க ஆசை.. ஓசை செல்லா.. நன்றி நன்றி நன்றி.
எனது 24 நூல்கள்
சனி, 15 மார்ச், 2014
சாட்டர்டே ஜாலி கார்னர், ஓசை செல்லாவிடம் ஓராறு கேள்விகள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஹா... ஹா... ஹா... ரசிக்க வைத்தது பதில்கள்...
பதிலளிநீக்குநன்றி தனபாலன் சகோ
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!