பாத யாத்திரையும் பக்தி இலக்கியமும்
நான்கு யுகங்களில் கலியுகமே பக்திமார்க்கத்திற்குப் பெருந்துணை
புரிகின்றது. கிருதயுகத்தில் கடவுளை அடையக் கடுந்தவம் புரியவேண்டும்.
ஊசிமுனை, நெருப்பு ஆகியவற்றில் நிற்றல் என. திரேதாயுகத்தில் மாபெரும்
அளவிலும் பொருட்செலவிலும் தானம், யாகம், வேள்விகள் செய்து கடவுளை
அடைந்தார்கள். துவாபர யுகத்தில் அர்ச்சனை செய்தல் மந்திரம் சொல்லுதல்
ஆகியன கடவுளை அடையும் வழி. ஆனால் கலியுகத்தில் நாம சங்கீர்த்தனத்தால்
இறைவனை அடையலாம்.
இறைவனின் திருப்பெயரையும் திருநாமங்களையும் உச்சரிப்பதன் மூலமே கடவுளை அடையலாம் எனக் கூறப்படுகிறது. பல்வேறு திருத்தலங்களிலும் ஆன்மீகச் சொற்பொழிவுகள், நாம சங்கீர்த்தனங்கள் நிகழ்த்தப் படுகின்றன. பக்தி இலக்கியத்தின் பிதாமகன்கள் ஆழ்வார்கள், நாயன்மார்களுமே ஆவர். பதிகங்கள், மற்றும் பிரபந்தங்கள் இவற்றுள் பல பதிகங்கள் கடவுள் வாழ்த்தாக முன்னிலையில் பாடிப் பரவித் தொழப்படுகின்றன. பிரபந்தங்கள் அன்பின் ஐந்திணை, கைக்கிளை, பெருந்திணை சார்ந்தவை.
