மதுரைக் கணக்காயனாரின் மகனைக் காத்த கந்தவேலன்
எந்த செயலைச் செய்தாலும் ஆழ்ந்த சிரத்தையோடு ஈடுபாட்டுடன் செய்யவேண்டும். அப்போதுதான் அதன் பலன் சிறப்பாக இருக்கும். ஏனோ தானோவென்றோ அல்லது பல பக்கமும் கவனம் சிதறவோ ஒரு காரியத்தைச் செய்தால் அது துர்ப்பலனை அளித்துவிடும். அப்படிக் கவனம் சிதறியதால் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரன் ஒரு தண்டனை அடைந்தார். அதிலிருந்து எப்படி, யாரால் விடுபட்டார் என்பதையும் பார்ப்போம்.
“தொள்ளாயிரத்துத் தொண்ணூற்று ஒன்பது” “தொள்ளாயிரத்துத் தொண்ணூற்று ஒன்பது” என்று அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டிருந்தது கார்முகி. அது குதிரை முகமுடைய ஒரு பெண்பூதம். திருப்பரங்குன்றத்தின் பொய்கைக் கரையில் நின்று சாலையின் இரு மருங்கையும் பார்ப்பதும் பின் முகத்தைக் கோணி விரலை மடித்து நொடித்துச் சொடுக்கி அலுத்துக் கொள்வதுமாய் இருந்தபோது அங்கே ஒரு புலவர் வந்தார்.
“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி” என்று முணுமுணுத்தவர் ”உண்மையைச் சொன்னதற்கு இந்தத் தண்டனை தேவைதான் சொக்கநாதா. கோபப்பிரசாதம் பாடியும் தீரவில்லையே உன் கோபம் சோமசுந்தரா.” எனக் கூறிப் பொய்கையின் கரையில் அமர்ந்தார். அவர் மதுரைக் கணக்காயனாரின் மகனான நக்கீரனார்.
