எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 10 செப்டம்பர், 2026

எதிர்நீச்சல் சௌகார் ஜானகி

எதிர்நீச்சல் சௌகார் ஜானகி


கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கு மேலாகத் திரையுலகில் கோலோச்சி வரும் சௌகார் ஜானகிக்கு வயது 94. எப்போதும் இளமையாக உணரும் அவர் இந்த வயதிலும் டிவி தொடர்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு ஜெயித்த பெண்மணிகளில் இவரை முதல் இடத்தில் வைக்கலாம்.

டிசம்பர் 12, 1931 ல் அப்போதைய மெட்ராஸ்  ராஜமுந்திரியில் பிறந்தார். பெற்றோர் வெங்கோஜி ராவ், சசி தேவி. இவரது தங்கை கிருஷ்ணகுமாரியும் பிரபல நடிகைதான். 1947 இல் சங்கரமாஞ்சி ஸ்ரீனிவாசராவ் என்பவரை மணந்தார். மூன்று குழந்தைகள். 1949ல் இருந்து தற்போது வரை நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி எனக் கிட்டத்தட்ட 400 படங்கள்.

இவர் மட்டுமல்ல இவருடைய பேத்தி வைஷ்ணவியும் மிகச் சிறந்த நடிகைதான். இவர் முதலில் நாடக நடிகையாகத்தான் அறிமுகமானார். ஒரு பேட்டியில் குழந்தைகளுக்குப் பால் வாங்க வேண்டியே தான் நடிக்க வந்ததாகக் குறிப்பிட்டு இருப்பார். அவ்வளவு போராட்டம் நிறைந்த மணவாழ்க்கையில் இருந்து வெளியேறி இவர் எதிர்நீச்சல் போட்டுத் தனியாகக் குழந்தைகளை வளர்த்து இன்றும் தன்னம்பிக்கைப் பெண்ணாக மிளிர்கிறார்.

மாடர்ன் உடைகளிலும், ஹேர் ஸ்டைலிலும் அசத்தலாக இருப்பார். புதிய பறவையில் புதிய பாணி புடவைக் கட்டில் கவர்ச்சியாக ஜொலிப்பார். அலங்காரக் கொண்டையில் நெற்றிச் சுட்டி போன்ற அழகான க்ளிப்பும் பளபள காதணிகளும் அவரது பளபளப்போடு போட்டி போடும். கருணையும், கம்பீரமும், மென்மையும், அப்பாவித்தனமும் அமையப் பெற்றவர். பசுப்போன்ற பார்வையும், மிடுக்கான பார்வையும் ஒருங்கே அமைந்த வித்தியாசமான கலவை அவர். ”பார்த்த ஞாபகம் இல்லையோ” என அவர் வலது காலை முன்வைத்து மைக்கைப் பிடித்து அசைந்தாடும்போது நம் மனமும் அதில் லயித்து விடும்.

நந்தி விருதுகள், கலைமாமணி விருது, பத்மஸ்ரீ விருது, வொண்டர் வுமன், ஸ்திரி ரத்னா, ராஜ்யோத்ஸவா, சிம்மா, ஸ்ரீ கிருஷ்ணதேவராயா, மகாநதி சாவித்ரி, என இன்னும் பல விருதுகள் பெற்றுள்ளார். இவர் நடித்த படங்களில் எனக்கு மிகப் பிடித்தவை புதிய பறவை, எதிர்நீச்சல், இரு கோடுகள், உயர்ந்த மனிதன், தில்லுமுல்லு, படிக்காத மேதை, பார்த்தால் பசி தீரும், பார் மகளே பார், பாமா விஜயம், பாலும் பழமும், பேசும் தெய்வம், திருமால் பெருமை, அழகன் ஆகியன.

இவர் நடித்த இன்னும் சில படங்கள் பணம் படுத்தும் பாடு, வளையாபதி, நல்ல இடத்து சம்பந்தம், அவள் யார், பாக்கியலட்சுமி, குமுதம், சினிமா பைத்தியம், பச்சை விளக்கு, நாணல், பணம் படைத்தவன், நீர்க்குமிழி, மகாகவி காளிதாஸ், மோட்டார் சுந்தரம் பிள்ளை, கலியுகக் கண்ணன், கண் கண்ட தெய்வம், தாய்க்குத் தலைமகன், ஒளிவிளக்கு, தசாவதாரம், கண்ணன் ஒரு கைக்குழந்தை, கை கொடுக்கும் கை, பாபு, ரங்கராட்டினம், திருநீலகண்டர் ,தாயின் மணிக்கொடி மற்றும் பெண் என்னும் டிவி தொடரிலும் நடித்துள்ளார்,

அழகன், ஹே ராம், தம்பியில் பாட்டி வேடம் செய்துள்ளார். அழகனில் துருதுருப்பான மதுபாலாவின்  ஆப்டிமிஸ்டிக் பாட்டி டாக்டர் ஜானகியாக வருவார். புதுப்புது அர்த்தங்கள் வெற்றி விழா ஆகியவற்றில் நல்ல சப்போட்டிங் ஆர்டிஸ்ட். புதிய பறவையில் சிவாஜியுடன் நைட்கிளப்பில் தனது நடனத்துக்குப் பின் அமர்ந்து அவர் உரையாடும் போது பேரரை சிட்டி போட்டு அழைக்கும் இடத்தில் அவரது மிடுக்கு நம்மை அசர வைக்கும்.

தில்லுமுல்லுவில் மீனாட்சி துரைசாமியாகக் கலக்கல் கதாபாத்திரம். அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன் என்ற பெயரில் உள்ள ரஜினிக்கு அம்மாவாக அதில் நடித்திருப்பார். தேங்காய் சீனிவாசன் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி என்ற பெயரில் ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனி நடத்திக் கொண்டிருப்பார். அவரிடம் பணிபுரியும் ரஜினி தனக்குத் தாய் இருப்பதாகப் பொய் சொல்வார். அவரிடம் சொன்ன பொய்யைக் காக்க நாடக ஆர்ட்டிஸ்டான சௌகாரைத் தன் தாயாக நடிக்கக் கேட்பார்  அப்போது ரஜினியிடம் (இவ்ளோ பெரிய மகனுக்குத் தாயாகத் தன்னை) ”ஜனங்க ஒத்துப்பாளா” என்று அவர் கேட்கும்போது தியேட்டரில் சிரிப்பு அள்ளும். சிவா, தீ போன்ற படங்களில் ரஜினியின் தாயாகவும் நடித்துள்ளார்.

பட்டாக்கத்தி பைரவனில் சிவாஜிக்கு ஜோடியாகவும் தாயாகவும் டூயல் ரோலில் நடித்திருப்பார். திருநீலகண்டரில் நீலாவதி கதாபாத்திரம். காவியத்தலைவி அவரே தயாரித்து அதில் தாயாகவும் மகளாகவும் இரட்டை வேடங்களில் நடித்த படம். ”ஒருநாள் இரவு பகல் போல் நிலவு, கனவிலே என் தாய் வந்தாள்” என்ற பாடல் வெகுஉருக்கம்.


பார் மகளே பாரில் தங்களுக்குப் பிறந்த பெண் குழந்தைகளைத் தொட்டிலில் ஆட்டும்போது, நீரோடும் வைகையிலே பாடலில்  “நான் காதல் என்னும் கவிதை தந்தேன் கட்டிலின்மேலே” என்று சிவாஜி பாட, ”அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின்மேலே” என்று சௌகார் அர்த்தத்தோடு பதிலளிக்க வெகு இனிமையான தாலாட்டாக இருக்கும் அது.

எதிர்நீச்சலில் ”அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா, அவ ஆத்துக்காரன் சொல்லுறதக் கேட்டேளா” என்ற பாடலில் “எட்டுக்கல்லில் பேசரி போட்டா எடுப்பா இருக்கும் மூக்கு,” என மனைவி சௌகார் பழிப்புக் காட்ட, “சட்டியிலிருந்தா அகப்பையில் வரும் தெரியாதோடி நோக்கு” எனக் கணவன் ஸ்ரீகாந்த் முறைப்புக் காட்ட, ”ஏட்டிக்குப் போட்டி பேசாதடி பட்டு” ”பேசுனா என்ன வைப்பேளா ஒரு குட்டு” ”ஆத்திரம் வந்தா பொறுக்காதவன்டி கிட்டு” ”என்னத்தச் செய்வேள்? சொன்னதச் செய்வேன் வேறென்ன செய்வேள். அடக்கி வைப்பேன் ,அதுக்கு மேல? ம்ம்ம்..பல்ல உடைப்பேன்” என்றதும் அழ ஆரம்பித்து விடுவார் சௌகார். ஒண்டுக்குடித்தனத்தில் மத்தியதர வகுப்பின் ஆசை அபிலாசைகளைப் பட்டியலிட்டு வெகு பேஷாகப் போகும் பாட்டு.

இரு கோடுகளில் ஜெமினியின் முதல் மனைவி பாத்திரம். தாய் சொல்லைத் தட்ட முடியாமல் ஜெமினி சௌகாரைப் பிரிந்து ஜெயாவை மணம் முடிப்பார். சௌகாரின் தந்தையோ மகளின் வாழ்க்கையைச் சீர்ப்படுத்தி அவரைக் கலெக்டராக்குவார். சௌகார் இவ்வூருக்கு மாற்றலாகி வர ஜெமினி அவர் கீழேயே குமாஸ்தாவாக வேலை பார்க்க வேண்டிய நிலை வரும். ஜெமினியின் அம்மா தாங்கள் அவருக்குச் சமமில்லை எனக்காட்டச் சின்னக்கோடு வரைந்து செல்ல அதை வெல்லத் தன் மகளைக் கலெக்டராக்கி ஊரிலேயே பெரிய புள்ளியாக்கிவிட்டேன் என ஜெமினியிடம் மார்தட்டி பெரிய கோட்டை வரைந்து காட்டுவார் சௌகாரின் அப்பா.

ஜெமினியின் வீட்டுக்கு நவராத்திரி பூஜைக்கு ஜெயா கலெக்டரை அழைக்க ”புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் இருவருக்காக, இந்த பாமா ருக்மணி இருவருமே அவர் ஒருவருக்காக” என்ற உணர்வு மயமான பாடல் நம்மை நெகிழ்விக்கும். முடிவில் ஜானகி ஜெயாவுக்கு குங்குமம் இட்டுவிட்டு அவளது வாழ்க்கையை அவளுக்கே திருப்பித் தருவதோடு முடியும். மேலும் இருவரின் குழந்தைகளும் நீரில் மூழ்கிவிட அதில் ஜெயாவின் குழந்தை மட்டுமே தப்பிக்கும். கலக்டரின் உண்மைக் கதையும் நல்லுள்ளமும் புரிந்து ஜெயா தன் மகனை வெளிநாட்டுக்குச் செல்லும் சௌகாரோடு அனுப்பி வைப்பாள்.

”மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி. ” இன்னொரு மயக்கம் தரும் பாடல். வெள்ளுடையில் கணவரைத் தேடும் இழிவரல் கொண்ட பெண்ணுருவம் மனதை என்னவோ செய்து விடும். இதற்கு எதிர்மறையாகப் பணம் படைத்தவனில் ”கண் போன போக்கிலே கால் போகலாமா” என்ற பாடலில் அவர் மனோகருடன் ஆடுவது மிக வித்தியாசம்.

மொத்தத்தில் பார்த்த ஞாபகம் இல்லையோ என்று புதிய பறவையாய் பறப்பார். அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா என்று அழகு மாமியாய் ஜொலிப்பார். மாலைப்பொழுதின்  மயக்கத்திலே என்று கணவனைப் பிரிந்த பெண்ணாக நம்மை நெகிழ்விப்பார். பாமா விஜயத்தில் வரவு எட்டணா பாட்டில் பற்றாக்குறை குடும்பத்தின் மூத்த மருமகளாக இருப்பார். அட்டகாசமாக ஹிந்திவேறு பேசுவார். உயர்ந்த மனிதனின் மனைவியாக ”அத்தானின் முத்தங்கள் அத்தனையும் முத்துக்கள்” என்று கனிவு பொங்கக் கனிந்திருப்பார்.

புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் இருவருக்காக என்ற பின்னர் ருக்மணிக்காக என்று விட்டுக் கொடுப்பார்.  இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு என்று தொழுது வணங்குவார். மனமே முருகனின் மயில்வாகனம் என்று உருகுவார். கண் போன போக்கிலே கால் போகலாமா என்று வாழ்வின் நெறிகளை கூறுவார். ஆனி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே என்று ஓர்ப்படிகளுடன் ஆடிப்பாடுவார். கையோடு கைசேர்க்கும் காலங்களே என்று கல்யாணக் கவிதை பாடுவார். காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே எனக் கலங்குவார். பாடல் காட்சிகளில் மட்டுமே சௌகாரின் நடிப்பில்தான் எத்தனை வகை. இன்னும் நவரசங்களையும் அள்ளித் தெளிக்கும் நடிப்புச் சுரங்கம் அவர்.

காவேரியின் கணவனில் “மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே” என்ற பாடல் ”கூட்டாஞ்சோறு ஆக்கிக்கிட்டுக் கும்மாளந்தான் போட்டுக்கிட்டுக் கொழவிக் கல்லுப் புள்ளய ஒண்ணு குஷியாகப் பெத்துக்கிட்டு” என எளிமையும் மகிழ்ச்சியுமான வாழ்வைச் சித்தரிக்கும். ”வெட்கமாக இருக்குது எனக்கு” எனப் பாடிய பாவை விளக்கும் அவர். ”படித்ததனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு. பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு” என்று பாந்தமாகக் கணவனை அரவணைக்கும் அன்னையும் அவர். 

சென்ற நூற்றாண்டுப் பெண்களின் வாழ்வியல் துயரங்களையும், அவலங்களையும், அதை அவர்கள் ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்று வலியுறுத்திய கட்டுப்பெட்டித்தனமான சமுதாயத்தையும், அதையும் மீறி அவர்கள் போராடி ஜெயித்ததையும் அவர்களின் பாசத்தையும் நேசத்தையும் அப்பாவித்தனத்தையும் மனோதைரியத்தையும் உறுதியையும் தெளிவான சிந்தனைகளையும் புடமிட்டுக் காட்டின சௌகாரின் படங்கள். நூறாண்டு கடந்தும் வாழ்க  துணிச்சலும் தன்னம்பிக்கையும் சுடர்விடும் எதிர்நீச்சல் சௌகார் ஜானகியம்மா !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)