சென்னை இராயப்பேட்டையின் தெருக்கள் ஜனசந்தடி மிகுந்தவை. அதிலும் நாங்கள் குடி இருந்த பெருமாள் முதலி தெரு மவுண்ட் ரோடுக்கு நடந்து செல்லும் தூரத்தில் இருந்தாலும் இன்னும் நெருக்கடியானது. ஆனால் அது வெஸ்ட்காட் ரோட்டில் சேரும் இடத்தில் ஒரு அற்புதம் இருந்தது. அதுதான் வுட்லேண்ட்ஸ் தியேட்டர். அங்கேதான் பாஸிகர், தேஜாப், ஹம் ஆப்கே ஹைங் கௌன், இன்னும் ஹோம் அலோன், க்ரேஸி ஸஃபாரி, அலாதீன், 2010, E. T (extra terrestrial) பேட்மேன் & ராபின், ஜேம்ஸ்பாண்ட் படங்கள் என்று ஒரு மாபெரும் உலகத் திரைப்பட சாம்ராஜ்யமே காத்திருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக சமோசா, ஜலேபி ஃபலூடா, குல்ஃபி என்று நார்த் இந்தியன் ஐட்டங்களுக்கும் அயலகப் படங்களுக்கும் ரசிகர்களாக நாங்கள் மாறிக்கொண்டிருந்த நேரம் எங்களைத் தமிழ்ப் படங்களுக்குக் கட்டி இழுத்து வந்தவை அழகனும், டூயட்டும்.
எண்பதுகளின் இளைஞர்களின் இதயத்தைக் கவர்ந்த எவர்க்ரீன் கதாநாயகிகளில் முக்கியமானவர் பானுப்ரியா. ஸ்ரீவித்யா மாதவி சரிதா வரிசையில் என்னைக் கவர்ந்த பேசும் கண்கள் கொண்டவர். சிற்பம் போன்ற முகம். செப்புச் சிலை போல உருவம், கம்பீரமான உயரம், மாபெரும் கண்கள், வடிவழகி & இடுப்பழகி, கொஞ்சும் குரல், குழந்தை போன்ற துறுதுறுப்பு, அபாரமான நடனம், உடனுக்குடன் உணர்ச்சிகளை மாற்றும் முகம், கண்கள் மற்றும் பாடி லாங்வேஜ் என என்னை அசரடித்தவர் பானுபிரியா. ஐ டெக்ஸ் விளம்பரத்தில் உள்ள பேசும் கண்கள் இவருடையதுதான்.
1980 முதல் 1993 வரை தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி
என 155 படங்களில் நடித்துள்ளார், குச்சுப்புடி & பரதநாட்டியக்கலைஞர். சுழன்று ஆடுவதிலும்
ஆடிக்கொண்டே மூச்சு வாங்கக் கோபம் கோபமாகப் படபடவென்று பேசுவதிலும் வல்லவர்! நடிக்க
வந்த புதிதில் டூ பீஸ் ஸ்விம் சூட் எல்லாம் போட்டுப் போஸ் கொடுத்திருக்கிறார். ஹோம்லி,
க்ளாமர் என்று அசத்தினாலும் இதுவரை எந்தக் கிசுகிசுவிலும் சிக்காத நடிகை.
ஜனவரி 15, 1967 இல் ஆந்திராவின் ராஜமுந்திரிக்கு
அருகிலுள்ள ரங்கம்பேட்டா கிராமத்தில் பிறந்த இவரது ரியல் பெயர் மங்காபானு. ரீல் பெயர்
பானுப்பிரியா. பெற்றோர் பாண்டு பாபு & ராகமாலி. உடன்பிறந்தவர்கள் ஒரு அண்ணன் ஒரு
தங்கை. தங்கை
எங்க ஊரு பாட்டுக்காரனில் நடித்த நிஷாந்தி. 1998 இல்
பொறியாளர் ஆதர்ஷ் கௌஸலை மணந்தார். இத்தம்பதிக்கு ஒரு மகள். பெயர் அபிநயா.
தனது பதினேழாவது வயதில் 1983 இல் மெல்லப் பேசுங்கள் என்ற தமிழ்ப் படத்தில் அறிமுகமானார்.
ஜேம்ஸ்பாண்ட் 999, சதுரங்கம், தென்றல் தொடாத மலர், ஆராரோ ஆரிராரோ, தர்மபத்தினி, சத்ரியன்,
புதுமனிதன், கோபுர வாசலிலே, பொண்டாட்டி சொன்னாக் கேட்டுக்கணும், அழகன், வானமே எல்லை,
பிரம்மா, பவித்ரா, தளபதி, தைப்பூசம், பரதன், தெற்குத்தெரு மச்சான், சுந்தரகாண்டம் பங்காளி,
அமரன், காவியத்தலைவன், நீங்க நல்லா இருக்கணும், பொறந்த வீடா, புகுந்த வீடா, கோகுலம்,
மகராசன், உழவன், பொல்லாதவன், தீக்குச்சி, சில நேரங்களில் சில மனிதர்கள் ஆகியவற்றில்
நடித்திருக்கிறார்.
நீங்கள் ரசித்துக் கேட்கும் டப்பிங்க் குரல்களில் இவரதும் ஒன்று. இந்தியன் படத்தில் ஊர்மிளா மடோன்கர், சூரிய வம்சத்தில் பிரியா ராமன், ரம்பா ஆகியோருக்கும் டப்பிங்க் பேசி இருக்கிறார். இதில் இந்தியன் பட ஊர்மிளாவிற்கு இவரின் குரல் துள்ளலோடு அவர் நடிப்புக்கும் உருவத்துக்கும் பொருத்தமானதாக இருந்தது சிறப்பு.
அம்மன் படங்கள் என்றாலே நமக்கு உருட்டும் விழிகளோடும் மிரட்டும் பார்வையோடும் கே ஆர்
விஜயாம்மாவும், ரம்யா கிருஷ்ணனும்தான் சூலத்துடன் தோன்றுவார்கள். ஆனால் இவரும் ஸ்ரீ
ராஜராஜேஸ்வரி அம்மன், பராசக்தி ,தாலி காத்த காளியம்மன் ஆகிய படங்களில்
நடித்திருக்கிறார். சில படங்களில் இரட்டை வேடமும் ஏற்றுள்ளார். சைதை
தமிழ்ச் செல்வி என்று கூலர்ஸை மாட்டிக் கொண்டு அவர் புரியும் அளப்பறைகள் கலகலப்பு.
1999 இல் தன் திருமணத்துக்குப் பின் என்றென்றும் காதல் என்ற படத்திலும் நடித்தார்.
தளபதியில் பத்மாவாக ரஜனியுடன் ஜோடி சேர்ந்தவர். தனது கணவனைக் கொன்றவன் என்று தெரிந்தும் தனது மகளின் பாதுகாப்புக்காக அவனை மணந்து கொள்ளும் கதாபாத்திரம். ஜன்னலின் வழி குழந்தையைச் சுமந்தபடி நிற்கும் அவரது துயரம் தோய்ந்த விழிகளும் பார்வையுமே நம்மை என்னவோ செய்யும்.
மகராசனில் கமலுடன் ஜோடி. மெகா காமெடியான சென்னைப் பேச்சு வழக்கில் இருவருமே அசத்தி இருப்பார்கள். பொண்டாட்டி சொன்னாக் கேட்டுக்கணும் சிறந்த திரைக்கதை அம்சம் கொண்ட வெகுஜனப் படம். வானமே எல்லையில் நடிகையாகவே ஒரு காட்சியில் மட்டும் தோன்றினார். தற்கொலை எண்ணத்தோடு அகஸ்மாத்தாகச் சந்திக்கும் ஐந்து பேர் தங்கள் முடிவை மாற்றி வாழ்வை நோக்கி நகரும் கதை. அவர்கள் அனைவருமே பானுபிரியா ரசிகர்கள் என்பதால் இவரை ஒரு ஷூட்டிங்கிலிருந்து கடத்தி வந்து தங்களுக்காக ஒரு நடனம் ஆடும்படிக் கேட்பார்கள். வித்யாசமான படம் & கதைக் களன். பெரிய நடிகையாயிருந்தும் பந்தா ஏதும் செய்யாமல் டைரக்டர் கேபிக்காகக் கெஸ்ட் ரோலில் அந்த நடனக் காட்சியில் நடித்தார்.
விசுவாமித்ரா, சக்தி, வாழ்க்கை ஆகிய தொலைக்காட்சித் தொடர்களில்
நடித்தவர். மேலும் சுஹாசினி இயக்கிய ’பெண்’ என்னும் தொடரில் இவரின் பங்களிப்பு சிறப்பு.
1989 இல்ஆராரோ ஆரிராரோ படத்திற்குத் தமிழ்நாடு மாநில அரசின் சிறப்பு விருதுகள்.
1991 இல் அழகன் படத்திற்காக தமிழ்நாடு மாநில அரசின் சிறப்பு விருது, மூன்று மாநில நந்தி
விருது, இரண்டு சினிமா எக்ஸ்பிரஸ் விருது, ஃபிலிம்ஃபேர் விருது பெற்றுள்ளார்.
மிகச் சிறந்த டான்ஸர் என்பதால் இவர் படங்களில் அநேகம் நடனப் படங்களாகவே அமைந்தன. இதில்
அழகன் பிரியா என்னை மிகவும் கவர்ந்தவர். ”கோழி கூவும் நேரம் ஆச்சு தள்ளிப் போ மாமா..
ஓட மங்கை காத்திருக்கு ஓடிப்போ மாமா. ”” என இடுப்பை வெட்டி வெட்டி அவர் ஆடும் ஆட்டத்தினால்
அழகன் படத்தில் நான் ரசித்த அழகி பானுப்பிரியா.
கீதா, மதுபாலா, பானுப்ரியா, மம்முட்டி என நாற்கோணக் காதல். ஜாதிமல்லிப் பூச்சரமே என
விரியும் புல்வெளியில் தனது ட்யுட்டோரியல் ஆசிரியை கீதாவின் பாடலை மம்முட்டி பாட அதற்குப்
பிரியா அழகு அபிநயம் பிடிக்க என மனதைத் தென்றலாய் வருடிய பாடல். வெள்ளை உடையில் ஹீரோவையும்
ஹீரோயினையும் இவ்வளவு கவர்ச்சியாகப் படைக்க கேபியால் மட்டுமே முடியும். ஆனால் இவர்களின்
இணக்கம் கண்டு திரும்பிச் செல்லும் கீதாவின் சோகம் வருத்தம் தரும்.
என்னைப் புதுப்பித்த புதியவளுக்கு என ரஞ்சன் ஒரு காரைப் பரிசளிக்க, என் இனியவருக்கு என்று ப்ரியா ஒரு வாத்தியத்தைப் பரிசளிக்க இனி எல்லாமே பரவசம்தான் என்று நினைக்கும்போது இருவருக்கும் ஊடல் வந்துவிட பரிசுகளைத் திருப்பி அனுப்பி விடுவார் ப்ரியா. கோபம் கோபமாய்ச் சுழன்றாடிக் கொண்டே நடனம் மட்டுமே தன் காதல் எனச் சொல்லிக் கொள்வார். திரும்பிய பரிசைப் பார்த்துக் கொதித்துப் போய் நெஞ்சமடி நெஞ்சம் அது நெஞ்சமடி நெஞ்சம் அன்று நான் கொடுத்தது என நம் இதயத்தையும் அதிரச் செய்யும்படி ரஞ்சன் பாடுவார்.
ஒருவழியாய் ஊடல் முடிய அது மழையும் நீயே வெய்யிலும் நீயே என நம்மையும் காயவைத்துக் குளிர்விக்கும், சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என இரவில் பேச ஆரம்பித்து தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள் முடிந்து காலையில் சூரியனின் பொற்கிரணங்கள் படுக்கையைத் தொடும்வரை இருவரும் தனிமையில் போனில் பேசிக் கொண்டிருக்கும் ’ஸ்வீட் நத்திங்க்ஸ்’ அமரகாவியம்.
அழகன் படத்தில் இத்தனை இருந்தும் ஆண்களற்ற ஒரு தீவில் அல்லிராணி போல் ”மாலையில் யாரோ மனதோடு பேச” எனப் பச்சைப் புடவையில் பெண்மையின் நளினமும் மென்மையும் எழிலும் பொங்க "தென்றலே பாட்டெழுது. அதில் நாயகன் பேரெழுது என்று தன் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தும் " சத்ரியன் கதாநாயகி பானுப்ரியாதான் என்னை அதிகம் கவர்ந்த அழகி !
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!