நித்யகல்யாணி – 2.
“கல்யாணி கல்யாணி. வெய்யில் வந்திருச்சு பாரு “ என்று எழுப்பினார்
பாட்டி பகவதி. “என்ன பாட்டி இப்பவே எழுப்புறீங்க.. இன்னும் கொஞ்சம் தூங்குறேன். அதான்
ஸ்கூல் இல்லீல்ல. தாத்தா எங்கே ? “ என்றபடி புரண்டு படுத்தாள் கல்யாணி.
”தாத்தா மாளய அமாவாசை தர்ப்பணம் கொடுக்கப் போயிருக்காரு. நீ
எந்திருச்சுப் பல் தேய்ச்சுட்டு வா. “ என்றபடி பாட்டி உள் சென்றார். கல்யாணி எழுந்து
பல் தேய்த்துவிட்டு பாட்டி கொடுத்த நாட்டுச் சர்க்கரை போட்ட பாலை அருந்திக் கொண்டிருக்கும்போது
தாத்தா நித்யதேவன் வீட்டிற்குள் நுழைந்தார்.
“தாத்தா எங்கே போனீங்க. தர்ப்பணம்னா என்ன ? “ என்றாள் கல்யாணி.
தாத்தா பேத்தியின் கைபிடித்துப் பக்கத்தில் அமர வைத்துக் கொண்டார். “ இறந்துபோன நம்ம
முன்னோர்களுக்குக் கொடுப்பதுதான் தர்ப்பணம்.”
“அப்பிடின்னா என்ன செய்வாங்க தாத்தா “.
”இறந்து போன நம்ம முன்னோர்களுக்கு மாதம் ஒரு முறை அவங்க இறந்த
திதியில் கொடுப்பது திவசம். வருடமொருமுறை கொடுப்பது தர்ப்பணம். எள்ளும் அரிசிமாவும்
கலந்து தர்ப்பைப் புல்லின் மேல் வைத்து நம்முன்னோர்களை நினைத்து நீர் நிலைகளில் கரைத்து
விடுவதுதான் தர்ப்பணம்.”
“நாம அதை ஏன் செய்யிறோம் தாத்தா”.
“நாம தினம் சாப்பிடுறோம்லடா குட்டி. அவங்களுக்கும் பசிக்கும்ல.அதான்.
“
“அப்ப தினம் ஏன் தாத்தா நாம கொடுக்குறதுல்ல. “
”நமக்கு ஒரு மாசம் அவங்களோட பித்ரு லோகத்துல ஒரு நாள்டா. அதுனால
நாம ஒரு மாதத்துக்கு ஒரு முறை கொடுத்தாலே போதும். மாளய அமாவாசையின்போது அவங்க பூமிக்கு
வந்து நாம கொடுக்குற தர்ப்பணத்தை ஏற்றுக்கிட்டு நமக்கு அருளாசி வழங்க காத்திருப்பாங்க.
அதுனாலதான் அது கொஞ்சம் ஸ்பெஷல். “
“ஒவ்வொருவரும் நம் முன்னோர்களால்தானே உருவானோம். அதுனால அவங்களை
மறக்காம திவசமும் தர்ப்பணமும் கொடுப்பது நல்லது.”
“கரெக்ட் தாத்தா. தாங்க்ஸ் கிவிங் மாதிரி” என்று தனக்குப் புரிந்தவகையில்
எடுத்துக்கொண்டாள் கல்யாணி.
“முன்னோர்களுக்குத் தர்ப்பணம் சரி தாத்தா. அப்புறம் நீங்க ஏன்
சனிக்கிழமையில் காலையில் சாப்பிடாம இருக்கீங்க. காக்காய்க்கு சோறு வைச்சிட்டுத்தான்
சாப்பிடுறீங்க.“
“அதுடா நம் முன்னோர்கள் காக்கை வடிவில் வந்து உணவை சாப்பிடுவதாக
ஐதீகம். மேலும் சனீஸ்வரர் பிறந்தது ஒரு புரட்டாசி சனிக்கிழமைதான். அவரோட வாகனமான காகத்துக்கு
உணவிட்டால் அவரும் மனம் குளிர்ந்து நமக்குத் தீமை செய்ய மாட்டார்னு ஒரு நம்பிக்கை. மேலும்
நாம விரதம் இருந்து நம் முன்னோர்களுக்கு உணவு படைச்சிட்டு சாப்பிடுறது உடலுக்கும் மனசுக்கும்
நல்லதுதானே. ”
“சரிதான் தாத்தா அப்ப நானும் விரதம் இருக்கேன்.”
“நீ பசி பொறுக்க மாட்டேடா குட்டி”
”அப்ப நீங்க அன்னிக்கு பகத்சிங் மட்டும் 116 நாள் உண்ணாவிரதம்
இருந்தார்னு சொன்னீங்களே. என்னால ஒரு வேளை மட்டும் இருக்க முடியாதா தாத்தா “
“அடடே. அதை நீ இன்னும் ஞாபகம் வைச்சிருக்கியா “
“ஆமா தாத்தா. பஞ்சாபில் பங்கா அப்பிடீங்கிற ஊர்ல சர்தார் கிசன்சிங்,
வித்யாவதி அவங்களுக்கு ரெண்டாவது மகனா பகத்சிங் பிறந்தாரு. அவர் பிறந்த அன்னிக்குத்தான்
அவங்க குடும்பத்தில் விடுதலைப் போராட்டத்துல ஈடுபட்டு சிறைக்குப் போன அவங்க அப்பா மாமா
எல்லாரும் விடுதலையாகி வந்தாங்க. குடும்பம் முழுசுமே விடுதலைப் போராட்ட வீரர்கள்தான்.”
“ஆமாண்டா செல்லம் . மேலே சொல்லு “
”நவஜவான் பாரத் சங்கத்தை ஆரம்பிச்ச அவர் ஆங்கிலேயரை எதிர்த்தாரு.
இன்குலாப் ஜிந்தாபாத்னு சொன்ன அவரோட துணிச்சலைப் பார்த்து இளைஞர்கள் எல்லாம் அவர்பக்கம்
ஒன்று சேர்ந்தாங்க. அதைக் கண்ட ஆங்கில அரசு பயந்து அவர் ஒரு குண்டு வெடிப்பில் ஈடுபட்டாருன்னு
குற்றம் சாட்டி அவரைக் கைது செய்து சிறையில்
அடைச்சிச்சு. ஜெயில்ல இருந்தப்போ பிரிட்டிஷ் கைதிகள் மாதிரியே இந்தியக் கைதிகளையும்
நடத்தணும்னு புரட்சிக்காரரா இருந்தாலும் அகிம்சை முறையில் 116 நாள் உண்ணாவிரதம் இருந்தாருன்னு
சொன்னீங்களே”
”ஆமாம்டா. ” என்று நித்யதேவன் சொன்னதும் இருவரும் மௌனம் காத்தனர்.
அதன் பின் லாலா லஜபதிராயைக் கொன்ற போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றதற்காக ஆங்கிலேய
அரசாங்கம் பகத்சிங்கைத் தூக்கிலிட்டதையும் சொல்லி இருந்தார். அதை நினைத்துப் பேத்தி
வருத்தத்தில் மௌனமாகிவிட்டாள் என்பதை உணர்ந்த அவர் பேத்தியின் மூடை மாற்றுவதற்காக
“ஆமா கடிகா ஸ்தானம்னா என்னன்னு கண்டுபிடிச்சிட்டியாடா “ என்றார். உடனே கல்யாணியும்”
எஸ் தாத்தா. கல்விச்சாலைன்னு அர்த்தம். யூனிவர்சிட்டி மாதிரி. கூகுள்ல தேடி தெய்வத்தின்
குரல் அப்பிடிங்கிற பேஜ்ல கண்டுபிடிச்சேன் என்றாள்.
”என் பேத்தியாச்சே. சமத்துக்குச் சொல்லணுமா. சரி நல்வழி என்ற
நூலை இயற்றியவர் யார்னு நீ எனக்குச் சொல்லணும். “
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!