நிலவறைக் குறிப்புகள் – ஒரு பார்வை
ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின்
எல்லாப் படைப்புகளும் துயருறும் மனித ஆன்மாவினைப் பற்றியே பேசுகின்றன. இப்பூவுலகில்
வாழ அதன் மனிதர்களோடு ஒத்திசைவோடு நடக்க அவரின் கதாபாத்திரங்கள் பெரும் ப்ரயத்தனம்
செய்கிறார்கள். இயல் வாழ்விலும் மனதுக்குள் எப்போதும் ஒரு பயணத்தைச் செய்து கொண்டே
இருப்பார்கள் ஃபியோதரின் கதாபாத்திரங்கள்.
ஆழ்ந்த அறவழியில் தம் மனதை நேர்மையாகப் படைக்கும் பாத்திரங்கள் அவர்கள். தம் இழிமை, கயமை, எதையும் மறைப்பதில்லை. இக்கதையின் நாயகன் தன்னைப் பற்றியே தள்ளி நின்று ஆய்ந்து எழுதி உள்ளமை நம்மை நாமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தக் கோருகிறது. சராசரிக்கும் மேலான சத்தியத்தின் பால் நம்பிக்கை உள்ள சமூகத்தின் மதிப்பீடுகளால் இடர்ப்பட்டு நொந்து போகும் அபூர்வமனிதனைக் கான்வாஸில் வரைந்தது போன்ற சித்திரங்களே இவரின் பாத்திரங்கள்.
அணுப்பிளவு ஏற்படும்
போது அது தன்னைத் தானே மூலக்கூறுகளால் பகுத்துப் பிரிவதைப் போல இக்கதை நாயகனும் தன்னைத்தானே
முதலில் இருந்து முடிவு வரை பகுத்துப் பிரித்துக் கொண்டே வருகிறான். தன் நினைவுக் குறிப்புகளில்
இருந்து நடந்தவற்றை நடந்தவாறேயும் தன்மேல் உள்ள சுய வெறுப்பு, இரக்கம், பெருமிதம்,
கர்வம், அகங்காரம்,பொய் மதிப்பீடு ஆகியனவற்றைத் தோலுரித்துக் காட்டுவதாகவும் உள்ளது.
நாம் எப்படிப்
பிறர் மதிப்பீடுகளாலும் சுய மதிப்பீடுகளாலும் நம் வாழ்க்கை எண்ணங்கள் குறிக்கோள்கள்
பிம்பங்களை உருவாக்கியும் சிதைத்தும் வருகிறோம் என்பதை வலியெழச் சொல்லிய கதை. ருஷ்யர்களின்
துயரம் விரும்பும் மனோநிலையே பிரதானமாக இக்கதையின் கருவாக உள்ளது.
ஃபியோதரின் நண்பர்
ஒருவரின் பெயர் அப்போலன் இதில் அவருக்குச் சேவகம் செய்யும் பணியாளனின் பெயர் அப்போலன்.
இக்கதை நாயகனை ஆட்டிப் படைக்கும் கோபம், குற்ற உணர்ச்சி, மிருக மோதல், இழிவரல், எல்லாம்
அடுத்தவர்கள் தன்னை எள்ளி நகையாடும்போது அது உச்சக்கட்டத்தை அடைந்து அனைவரையும் இழுத்துச்
சிதைத்து விடுகிறது. ஆனாலும் மனிதர்கள் தொடர்ந்து தொடர்பு கொண்டும் வாழ்ந்து கொண்டும்தான்
இருக்கிறார்கள் என்ற எதார்த்தத்தையும் பதிவு செய்கிறது.
இருபாகம் உள்ள
இக்கதையில் முதல் பாகம் எலிவளை பொன்ற வீட்டுக்குள் வருமானம் போதாத ஒரு உத்யோகத்தில்
இருந்து கொண்டு சிரமதசையில் வாழ்க்கை நடத்தும் கதாநாயகன் வெளி உலகுக்காக எவ்வளவு முகமூடி
மாட்ட வேண்டியுள்ளது என்பதைச் சித்தரித்துள்ளார். அவரது நண்பர்களின் ஒருவனுக்குப் பிரிவுபசாரம்
கொடுக்கும் விருந்தில் இவரது பங்களிப்பாகப் பணம் அளிக்க முடியாது போக இவரை அவரது நண்பர்கள்
நடத்தும் விதத்தை இவர் நுண்ணிய பார்வையில் விவரிப்பதும் அதனால் அவருக்கு ஏற்படும் மனவெழுச்சிகளுமே
கதை.
கிறுக்குத்தனங்கள்,
பொய்மைகள், பிறருக்காகத் தன்னை வடிவமைத்தல், அதனால் சுயமிழந்து போய்விட்டதாகக் கோபப்படுதல்,
கட்டுப்பாடு இழத்தல், உடைந்து நொறுங்குதல், தன்னுணர்வினைக் கேள்விக்கு உள்ளாக்குதல்,
மனச் சிக்கல்கள், வாழ்க்கை நடத்தப் போதுமான பொருளாதாரமின்மை, அதனால் கடன் படுதல், தன்னை
நிலை நிறுத்திக் கொள்ளக் கடன் வாங்கியாவது செலவழித்தல், அதனால் தன் சுயமதிப்பீட்டைத்
தக்க வைத்துக் கொள்ள முயலல் என ஒரு சாதாரண மனிதன் படும் அத்தனை பாட்டோடும் அந்தராத்மாவாகத்
தன்னைப் பற்றிய உண்மையை எப்போதுமே உணர்ந்து கொள்ளுதலும் அதை அவ்வப்போது உரைத்தலும்
ஒப்புக் கொள்ளுதலும் இக்கதை நாயகனை எங்கோ உயரத்தில் கொண்டு போய் வைத்துவிடுகின்றன.
இவன் மிகச் சிறந்த கல்வியறிவும் கேள்வியறிவும் படைத்தவனும் கூட.
தன்னை யாராவது
பொருட்படுத்தித் திட்டமாட்டார்களா ஏன் சண்டை போட்டுத் தூக்கியாவது வீச மாட்டார்களா
என்றெல்லாம் கூட ஏங்கும் மனோநிலை படைத்தவன் நாயகன். ஒரு பிரிவுபசார விருந்தில் தன்
பங்குப் பணம் கொடுக்க முடியாததால் நண்பர்களால் அவமானப்படுத்தப்பட அந்த அவமானத்திலிருந்து
மீள என்னன்னவோ செய்கிறான்.
அதிகமாகக் குடித்தல்,
மதுபான விடுதிக்குள்ளேயே நடத்தல், தன்னைக் கீழானவனாக நினைத்துப் பேசிய அவர்கள் அனைவரையும்
கோபத்தோடு திரும்பத் திட்டுதல் என்று ஆரம்பிக்கும் அவன் ஒரு கட்டத்தில் அவர்களைப் பழி
வாங்க எண்ணி ஒரு ப்ராத்தல் வீட்டுக்குச் சென்று அங்கே இருக்கும் லிஸா என்னும் பெண்ணிடம்
அவளது தொழில் பற்றி இழிவரல் வரும் வகையில் பேசி இரக்கத்தைத் தூண்டி அவளை அழ அடிக்கிறான்.
தனது பெற்றோர் பட்ட கடனை அடைக்க அங்கே தஞ்சம் புகுந்திருக்கும் அவள் தனக்கும் ஒரு கனவான்
எழுதிய காதல் கடிதத்தைப் பொக்கிஷம் போல் வைத்திருந்து நாயகனிடம் காட்டுகிறாள்.
அவளை எந்த விதத்திலாவது
தன்னை விடத் தாழ்ந்தவளாகக் காட்ட எண்ணும் அவன் அவள் மேல் இரக்கம் உள்ளவன் போல் நடித்துத்
தான் ஏதோ தேவதூதன் போலக் காண்பித்துத் தன் இல்ல முகவரியும் அளித்து வருகிறான். சில
நாட்களில் அவள் அத்தொழிலை விட்டு நீங்கிவிட எண்ணும் லிஸா நாயகனைத் தேடி வருகிறாள்.
அங்கே அவன் நகரின்
மூலையில் எலிவளை போன்ற இல்லத்தில் நைந்து போன உடைகளோடு உடைந்த நாற்காலிகள் படுக்கை
சாமான்களோடு வாழ்ந்து வருகிறான். அவனுக்கு அதே வீட்டுக்குள் இன்னொரு பாகத்தில் வசிக்கும்
அப்போலன் என்றொரு வேலைக்காரனும் உண்டு. அவனோடும் நாயகனுக்கு எப்போது பார்த்தாலும் வழக்கு.
நாயகனின் சண்டைக்கார மனநிலையைப் புரிந்து கொள்ளும் அவன் நாயகனை விட்டுப் போவதில்லை.
நாயகனை எளிதாகக் கையாள்கிறான். ஆனால் அதுவே நாயகனைச் சிக்கலான மனநிலைக்கு ஆளாக்குகிறது.
தான் என்னும் அகம்பாவமும்
தன்னை எல்லோரும் மதிக்க வேண்டும் என்ற எண்ணமும் கொண்ட அவன் வாழ்வியல் வசதிகள் இல்லாமல்
துன்புறுவதைப் பார்க்க லிஸா வந்துவிட்டாளே என்று கோபப்படுகிறான். வரச் சொன்னதே அவன்
தான். ஆயினும் தன் நிலை பார்த்து ஏதும் செய்ய இயலாமல் குமுறுகிறான். அதை முதன் முதலில்
காணும் லிஸா திகைத்துப் போகிறாள். ஆனால் அப்போலனோ அதைக் கண்டும் காணாமல் தன் வேலையைச்
செய்து கொண்டிருக்கிறான்.
நாயகன் முன்பு
வேலை செய்த இடத்திலும் மற்ற எல்லா இடங்களிலும் தன்னைப் பற்றிய பெருமிதமான மதிப்பீடும்
அது பணமின்மையாலும் வசதி இன்மையாலும் அடிபட்டுப் போகிறதே என்ற அவசமுமே அவனை ஆட்டுவித்துப்
பேசச் செய்கிறது. ஒரு கட்டத்தில் அவனை விட்டு அனைவரும் நீங்கிப் போய்விடுவார்கள் என்பதை
உணர்ந்தும் அவனால் ஏதும் செய்ய முடியாமல் அவ்வாறே தொடர்ந்து நடக்கிறான். அனைவரும் அவனைச்
சூழ்ந்து இல்லாமல் தனிமையில் இருப்பதே அவனுக்கு மருந்தாகிறது. அதே போல் லிஸா அவனை விட்டு
நீங்கிச் செல்கிறாள். போகுமுன் அவள் கையில் ஐந்துரூபிள்களை நாயகன் திணிக்க அதை அவள்
அங்கேயே விட்டுச் செல்கிறாள். நாயகனும் பணத்தைக் கொடுத்து மதிப்பை வாங்க முயல்வதும்
அதே பணத்தாலே மற்றவர்களை அவமானப் படுத்த முயல்வதையும் உரக்கச் சொல்கிறது கதை.
பணத்தையும் வசதிகளையுமே
அளவீடாகக் கொண்ட சமூக அமைப்பில் யாரையும் எதிர்த்து எதுவும் செய்து தன்னை நிரூபிக்க
இயலாத போது அந்தச் சந்தர்ப்பர்த்தில் தன்னை
நாடி வந்தவர்களைக் காயப்படுத்தித் தூக்கித் தூர எறிவதும். தனித்திருப்பதும் அவனுக்குப்
பிடித்திருக்கிறது. எலிவளை போன்ற வீட்டுக்குள் தன்னை ஒளித்துக் கொண்டு தன் சுயம் பற்றியும்
சுய மதிப்பீடு பற்றியும் தனக்குள்ளே ஒப்பீடும் ஆய்வும் செய்து கொண்டிருக்கும் தனித்த
மனிதனின் நிலவறை வாழ்க்கைக் குறிப்புகள்தான் இவை.
எல்லா மனிதருக்குள்ளும்
இருக்கும் நான் என்ற எண்ணத்தையும் நான் யார் தெரியுமா என்ற பெருமிதத்தையும், அதே சமயம்
இயல் உலகில் பொருந்திப் போக அவர்கள் படும் துயரத்தையும் நூற்றாண்டுகள் கடந்தும் அதே
நோக்கிலேயே பார்க்க முடிவது ஃபியோதரின் எழுத்தின் வலிமை. இக்கதையைச் சரளமாகப் படிக்க
முடிவது சுசீலாம்மாவின் சிறப்பான மொழிபெயர்ப்பில். ஃபியோதரே இக்கதையை நம்மிடம் தமிழில்
சொல்லிக்கொண்டு வருவது போல் ஒரு பிரமை ஏற்பட்டது. மொழிபெயர்ப்பு என்ற எண்ணமே தோன்றாமல்
ஃபியோதர் நம்முள்ளும் புகுந்து உணரவைப்பதுதான் இக்கதையின் வெற்றி.
ஒவ்வொரு தருணத்திலும்
தன் செயல்கள் பற்றியும் அவற்றின் உண்மை பொய்மை பற்றியும் தான் அதீதமாக அச்சூழ்நிலையைக்
கையாண்டு இருக்க வேண்டாம் என்றும் ஆனால் அப்படி நடந்தால்தான் அனைவரும் தன்னை விட்டுப்
போவார்கள் என்றும் நாயகன் உரைக்கிறான். அதே போல் தன் அறிவையும் ஆற்றலையும் பெருமைப்படுத்துவது
போல் தன் போலித்தனங்களையும் நடிப்பையும் பொய்மைகளையும்
பாவமன்னிப்புப் போல ஒப்புக்கொள்கிறான். பெருமைமிகு முகத்தை மட்டும் காட்டாமல் சிறுமை
மிகு அகத்தையும் வாசகர் அறியச் செய்து அயர வைக்கிறான்.
வெற்றி பெற்ற மனிதர்களின்
வெற்றிச் சரித்திரம் மட்டுமல்ல. தோல்வியும் துன்பமும் துயரமும் உற்ற ஆன்மாவின் மனவெழுச்சிச்
சித்திரங்களாக இக்கதை படைக்கப்பட்டிருக்கிறது. வாழ்க்கைப் போரில் தோல்வி உற்ற ஆனால்
தன் மனதுக்குச் சத்தியமாக நடந்து வந்த ஒருவனின் வாழ்க்கை வரலாறும் போற்றுதலுக்கு உள்ளதே
என்று உணர்த்தியது நிலவறைக் குறிப்புகள் என்றால் மிகையாகாது.
நூல் :- நிலவறைக்
குறிப்புகள்
ஆசிரியர் :- ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி
தமிழில் :- எம். ஏ. சுசீலா
பதிப்பகம் :- நற்றிணை
விலை:- ரூ 200.
டிஸ்கி:- இந்த விமர்சனம் விகடன்.காமில் வெளியாகி உள்ளது.
https://www.vikatan.com/lifestyle/miscellaneous/my-vikatan-article-about-nilavarai-kuripugal-book
நன்றி விகடன்.காம்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!