எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 24 ஜூன், 2022

எவர்க்ரீன் பாட்டி எஸ் என் லட்சுமி

 எவர்க்ரீன் பாட்டி எஸ் என் லட்சுமி


ஹீரோவாகவோ ஹீரோயினாகவோ ஆகவேண்டும் என்ற தீவிரக் கனவுகளுடன் ஊரை விட்டு ஓடிவரும் எல்லாரையுமே சினிமா உலகம் பூச்செண்டு கொடுத்து வரவேற்பதில்லை. வில்லனாக அறிமுகமானவர் சூப்பர் ஸ்டார் ஆவதும், காமெடியனாக அறிமுகமானவர் ஹீராவாக ஆவதும் சினிமாவில் சாத்தியமே என்றாலும் கிடைக்கும் ரோலில் நடித்து வாழ்க்கைப் படகை ஓட்டிச் சென்றவரே அநேகம்.

அப்படி அறிமுகமான ஒரே ஒரு படத்தில் மட்டும் இளம்பெண்ணாக நடித்தவர், மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள் கிட்டத்தட்ட 58 – 60 வருடங்கள் எவர்க்ரீன் அம்மாவாகப் பாட்டியாக நடித்துச் சென்றவர் நடிகை திருமிகு எஸ் என் லட்சுமி அவர்கள்.

இவர் 1934 இல் பிறந்தவர். விருதுநகர் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் பழனியம்மாள் தம்பதியின் பதிமூன்றாவது குழந்தை. தந்தை மறைவுக்குப் பின் கூடப் பிறந்தவர்கள் வாழ்வாதாரத்துக்காகக் கல் உடைக்க இவர் 6 வயதிலேயே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். 11 வயதில் பாய்ஸ் கம்பெனி நாடகக் குழுவுடன் சென்னைக்குச் சென்றார்.

ஆரம்பத்திலிருந்தே துணை நடிகையாக, குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் சப்போர்ட்டிங்க் ஆர்டிஸ்டாகவேதான் நடித்திருக்கிறார் லட்சுமி. 1948 இல் குழு நடன நடிகையாக சந்திரலேகா படத்தில் அறிமுகம். ஜெமினி ஸ்டூடியோவில் மாதம் 60 ரூ சம்பளத்தில் சேர்ந்தார். சந்திரலேகா படத்தில் ட்ரம்ஸ் டான்ஸில் மூன்றாவது ட்ரம்மில் ஆடும் அழகு வனிதை இவரேதான்.

துணிச்சலானவர். பாக்தாத் திருடன் படத்தில் புலியுடனான சண்டைக் காட்சியில் டூப் இல்லாமல் துணிச்சலோடு நடித்தவர். இதில் இவர் செய்த சிறுத்தைச் சண்டையும் வாள் சண்டையுமே மைக்கேல் மதனகாமராஜனில் அதிரடி சண்டையிடும் க்ளைமாக்ஸ் காட்சியைப் பெற்றுத் தந்ததாம்!.  

எல்லாருக்கும் சினிமாத்துறை ரோஜாப் படுக்கையாக இருப்பதில்லை. அதன் பின் சிறிது காலம் சினிமாவில் வாய்ப்புகள் இல்லை. பின்பு  என் எஸ் கிருஷ்ணன், ஞான தேசிகர், எஸ் வி சகஸ்ரநாமத்தின் சேவாஸ்டேஜ், கே பாலசந்தரின் ராஹினி கிரியேஷன்ஸ் ஆகியோரின் நாடகங்களில் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட 5000 நாடகங்களாம். தானே சொந்தமாக நாடகக் கம்பெனியும் நடத்தி இருக்கிறார்.

1500 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷுக்கு அம்மாவாக நடிக்கும்போது இவருக்கு 30 வயதுதான். பாசத்துக்கு ஏங்கும் தாய். முத்துராமன், நாகேஷுடன் இயல்பான நடிப்பு. முதன் முதலாக அம்மாவாக நடித்தது சிறப்பாக இருந்ததால் தொடர்ந்து அம்மா வேடங்களே கிடைத்தன.

தொழிலாளி படத்தில் எம்ஜியாரின் அம்மாவாக நடித்திருக்கிறார்!. மகன் கதாபாத்திரம் என்பதால் ”அம்மா எனக்கு வேலை கிடைச்சிருச்சு” என்று எம்ஜியார் நிஜமாகவே இவர் காலில் விழுந்தாராம். இவர் பதறிப்போக அவரைத் தடுக்க எம் ஜி யாரோ ”படத்தில் நீங்க எனக்கு அம்மா. நான் உங்க மகன்” என்று சமாதானப்படுத்தி நிற்கவைத்தாராம்.

அதன் பின் சினிமாவின் நிரந்தரப் பாட்டி ஆகிவிட்டார். ராமன் எத்தனை ராமனடி படத்தில் சாப்பாட்டு ராமனாக இருக்கும் சிவாஜியைச் சமாளிக்கும்  பாட்டியாக நடித்திருப்பார். முதிய தோற்றம். கவலையால் சுருங்கிய தேகம், வாழ்வின் ஏற்ற இறக்கங்கள் நீளக் கோடுகளாய்ப் படிந்து போன முகம். எளிய வாழ்க்கை வாழும் வறிய பெண்மணி போன்ற வடிவம். சாதாரண வேடம்தான் என்றாலும் அபாரமான நடிப்பு இவருடையது.

எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். நவரசமாகவும் நடித்தவர். வீரம் கோபம் ரௌத்திரம் என்று யதார்த்தமான நடிப்பு. எதிர்நீச்சல் படத்தில் அட்டகாசம். ஜெயந்தியின் அம்மாவாக, நடுத்தரக் குடும்பத்தின் தலைவியாக அப்பாவி மாதுவின் தலையில் தன் பைத்தியக்காரப் பெண்ணைக் கட்டிவிடவேண்டும் என்று காய் நகர்த்துவார்.

தாமரைக் குளம், எங்கள் குலதேவி, நாலு வேலி நிலம், பணம் பந்தியிலே, அவனா இவன், துளசி மாடம், தெய்வத்தாய் ,நாணல், கறுப்புப் பணம், காக்கும் கரங்கள், மறக்க முடியுமா, கோடிமலர், ராமு, அனுபவி ராஜா அனுபவி, தாய்க்குத் தலை மகன், மாட்டுக்கார வேலன். , துலாபாரம், இதயவீணை, விவசாயி, பாபு, சங்கே முழங்கு, உதயகீதம், சிறை, ஜீன்ஸ், மாட்டுக்கார வேலன், பட்டிக்காடா பட்டணமா, ராமன் எத்தனை ராமனடி, படையப்பா, சிநேகிதியே, ஆணி வேர், தேன்கிண்ணம், என் அண்ணன், சிட்டுக்குருவி, எங்கள் குலதெய்வம், நடு இரவில், நாலு வேலி நிலம், மன்னவன் வந்தானடி, மனைவிக்கு மரியாதை, கைதி கண்ணாயிரம், ரிதம் ஆகிய படங்களில் மிகச் சிறு கதாபாத்திரங்களில் நடித்தும் அழுத்தமான முத்திரையைப் பதித்திருப்பார்.


பெரும்பான்மைக் கேரக்டர்களில் பெரிய குங்குமப் பொட்டு அழுத்தமான உச்சரிப்பு, தீர்க்கமான பார்வை. ஜொலிக்கும் மூக்குத்தியும், முதிய கேரக்டர்களுக்காகக் பெரிய கனத்த ஃப்ரேமிடப்பட்ட கண்ணாடி அணிவதும் அவருக்கு அம்சமாக இருக்கும். தன் சம வயதுக்காரர்களுக்கும் ஏன் தன்னை விட மூத்தவர்களுக்குமே அம்மாவாகப் பாட்டியாகக் கிடைத்த கதாபாத்திரத்தை சிறப்பாகச் செய்தவர்.

நான் மகான் அல்லவில் ராதாவுடன், தாமரை நெஞ்சத்தில் நாகேஷுடன், வாழ்க்கைப் படகில் தேவிகாவுடன், தேனும் பாலும் படத்தில் சரோஜாதேவி, எஸ் வி ரங்காராவ், சிவாஜியுடன், பட்டிக்காட்டுப் பொன்னையாவில் நாகையாவுடன், இரு கோடுகளில் வி எஸ் ராகவனுடன், கனிமுத்துப் பாப்பாவில் முத்துராமன் & ஜெய்சங்கருடன், அன்னை அபிராமியில் கே ஆர் விஜயாவுடன், தீர்க்க சுமங்கலி படத்தில் கே ஆர் விஜயா முத்துராமனுடன், நட்சத்திரத்தில் ஸ்ரீப்ரியா & சுபாஷிணியுடன், டாக்டர் சாவித்ரியில் என் எஸ் கிருஷ்ணன் டி ஏ மதுரத்துடன், கல்லும் கனியாகுமில் டி எம் சௌந்தர்ராஜனுடன், துளசி மாடம் ஏவி எம் ராஜனுடன், ரகசிய போலீஸில் 115 ஜெயலலிதாவுடன், ஏன் படத்தில் எம் ஆர் ஆர் வாசுவுடன், கலைக்கோவில் படத்தில் பிரபல வீணை வித்வான் எஸ் வி சுப்பையாவின் அக்காவாக நடித்திருக்கிறார். நல்லதங்கையில் ஆங்கில ஆசிரியராக நடித்துள்ளது வித்யாசம்.  

நிலவே நீ சாட்சியில் கே ஏ தங்கவேலு & டி கே பகவதியுடன் பின் கொசுவம் வைத்துக்கட்டி  வலது தோளில் புடவை முந்தியைப் போர்த்தி இருப்பார்.  அந்தக்காலப் பெண்மணிகளின் ஸ்டைல் அது. ஔவைப் பிராட்டியாரோ என்று தோன்றும் முகத் தோற்றம். டிவியிலும் பாட்டி கேரக்டர்கள்தான், மெட்டி ஒலி, தென்றல் , சரவணன் மீனாட்சியில் நடிப்பின் கனமான பரிமாணங்கள் வெளிப்படும்.

கமலுடன் 5 படங்கள் நடித்திருக்கிறார். நகைச்சுவையின் உச்சம் மைக்கேல் மதன காமராஜன். அதில் ஊர்வசியின் திருட்டுப் பாட்டி . முரட்டுக் கிழவியாகத் திருடிய பாத்திரங்களைப் போட்டுவிட்டு அதிரடியாகக் கமலின் சட்டையைப் பிடித்து அதகளம் செய்வார். கண்களை உருட்டுவதும் க்ளைமாக்ஸில் மடிசார்ப் பாட்டியாய் கைகளைத் தூக்கியபடியே ட்விஸ்ட் செய்து நகர்வதும் அழகு.  

மகாநதி படத்தில் கமலின் தன்மையான மாமியாராக சுருங்கிய நெற்றியும் சிந்தனை முகமுமாக பட்டையாக விபூதி அணிந்திருப்பார். முகத்தில் டார்ச் அடித்து ஏச்சுப் புட்டாளே பாட்டி ஏச்சு புட்டாளே எனப் பேரன் பேத்தியுடன் ஆட்டம் போடுவார். கமல் மது அருந்திவிட்டு வரும்போது மாமியாராக இருந்தும் தன்மையான அம்மா போல் அட்வைஸ் செய்வார்.  ஜெயில் கம்பிகளுக்கிடையே அவர் கமலைப் பாசம் தோய்ந்து பரிதவிப்புடன் பார்ப்பது க்ளாஸ். இப்படத்துக்காக இவருக்குக் கிடைக்க வேண்டிய தேசியவிருது ஒரு வாக்கால் தட்டிப் போனது ஏமாற்றமே..

விருமாண்டி படத்தில் முரட்டுக் கமலின் முரட்டுப் பாட்டியாக ஜல்லிக்கட்டில் காயம்பட்ட சிங்கை ரிட்டர்ண்ட் பேரனைக் காயத்தில் முட்டுவார்.

தேவர் மகன்  காகா ராதாகிருஷ்ணனின் மனைவியாக மாயத்தேவராக நடித்த நாசரின் அம்மாவாக நடித்தார். தேருக்கு மகன் குண்டு வைத்துவிட்டதைச் சொல்ல ஓடோடி வருவார். ஜாக்கெட் அணியாமல் காது வளர்த்துப் பாம்படம் அணிந்த கிழவியாக வித்யாசமான கெட்டப். நடிப்பை நடிப்பாகச் செய்யாமல் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடுவது அவர் இயல்பு..

தமிழக அரசின் வரிவிலக்கு ஆய்வுக் குழு உறுப்பினராகவும், மாநில தொலைக்காட்சி விருதுகள் நடுவர் குழு உறுப்பினராகவும் சிலகாலம் இருந்திருக்கிறார். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர் என்பது சிறப்பு.

எம் ஜி யார், சிவாஜி, கமல், ரஜனி, நாகேஷ், ஜெயலலிதா ஆகியோரின் படங்களில் நடித்துள்ளார். ராமராஜன், பிரபு கார்த்திக் முரளி ரஜினி, விஜயகாந்த் அர்ஜுன், பிரசாந்த அஜித் விஜய் ஆகியோரோடும் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட ஐந்து தலைமுறை நடிகர்களுடன் நடித்திருக்கிறார். லட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தில் நடித்த இவர் கடைசிவரை திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து 2012 இல் மறைந்தார்.

எனக்கு மட்டும் ஏன் இப்படி முதிய கெட்டப் என எந்த வருத்தமுமில்லாமல் நடிப்பது ஒன்றே உயிர்மூச்சாகக் கிடைத்த வாய்ப்பை எல்லாம் ஏற்று  நடித்த குணச்சித்திர நடிகை. கொடுத்த பாத்திரத்தைச் செம்மையாகச் சிறப்பாகச் செய்து மறைந்த எவர்க்ரீன் பாட்டி எஸ் என் லட்சுமி அவர்கள் சிறந்த ரோல் மாடலாகப் போற்றத் தக்கவர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.   


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...