எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 12 ஆகஸ்ட், 2021

விராதன் தும்புரு ஆன கதை

விராதன் தும்புரு ஆன கதை

காமம் குரோதம் லோபம் மதம் மாச்சர்யம் ஆகிய ஐந்து கீழ்நிலைக் குணங்களும் வந்துவிட்டால் ஒரு மனிதன் உயர முடியாதது மட்டுமல்ல. கீழான நிலைக்கும் போய்விடுவான். அப்படி ஒரு கந்தர்வன் தன் கீழ்நிலைக் குணத்தால் அரக்கனானதும் அதன்பின் சாபவிமோசனம் பெற்றுக் கந்தர்வனானதையும் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
ராமனும் சீதையும் இலக்குவனும் கைகேயி தயரதனிடம் கேட்டுப் பெற்ற வரத்தினை நிறைவேற்றப் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்யப் புறப்பட்டனர். அப்படி அவர்கள் சித்திரகூடத்தில் தங்கி அதன் பின் பத்தாண்டுகள் கழித்துத் தென்திசை நோக்கிச் சென்றார்கள்.
அத்திரி முனிவரின் ஆசிரமம் எதிர்ப்பட்டது. அங்கே அத்திரி முனிவரும் அனுசூயாதேவியும் வரவேற்று உபசரித்தனர். அனுசூயாதேவி தன் ஆபரணங்களை சீதைக்குப் பூட்டி அழகு பார்த்தார். அவர்களிடம் விடைபெற்று ராமனும் இலக்குவனும் சீதையுடன் தண்டகாரண்யம் நோக்கிப் பயணமாயினார்.


அப்போது அடர்ந்த அக்கானகத்துள் ஓடிவந்தான் விராதன் என்ற அரக்கன். மலைபோன்ற உருவம். மனிதர்கள் அவன் உள்ளங்கைக்குள் அடங்கி விடுவார்கள். அவ்வளவு பெரியதாக இருந்தான். கிடைக்கின்ற பொருள் எதுவானாலும் உண்டுவிடுவான். மனிதர்களையும் கூடக் கொன்று தின்றுவிடுவான். அப்பேர்ப்பட்ட அரக்கன்.
பிரம்மனிடம் கிட்டத்தட்ட ஒன்றேகால் லட்சம் வருடங்கள் சாகாவரம் பெற்றிருந்தான். அதனால் அவன் மூர்க்கமும் ஆணவமும் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அவன் கண்ணில் சீதைதான் முதலில் தென்பட்டாள்.
அவன் பறந்துவந்து சீதையை ஒருகையால் பிடித்துக் கொண்டு ஆகாயத்தில் பறந்து போய் நின்றான். திடீரென அரக்கன் வந்ததும் சீதையைப் பிடித்துப் பறந்ததும் பார்த்துத் திகைத்த ராமனும் இலக்குவனும் அண்ணாந்து பார்த்தனர்.
அரக்கன் கையில் சிறு பூவைப்போல சீதை தவித்துக் கொண்டிருந்தாள். ராமனும் இலக்குவனும் அவ்வரக்கனிடம் “ சீதையை விட்டு விடு “ என்று கூறித் தடுத்தனர். அரக்கனோ அவர்கள் கைக்கு அகப்படாதபடி விளையாட்டுக் காட்டிச் சீதையைத் தூக்கி இன்னும் உயரே பறந்தான்.
“நான் பிரம்மனிடம் சாகாவரம் பெற்றவன். யாராலும் என்னை அழிக்க முடியாது. ஓடிப்போய்விடுங்கள்.  நான் இவளைத் தின்று பசியாறுகிறேன் “ என விழுங்க முயற்சித்தான்.
அவன் அப்படி விளையாட்டுக் காட்டியபடி சீதையின் துயரை ரசித்தபடி மேலும் கீழும் பறந்து கொண்டிருந்தான். அவனை நோக்கி ராமனும் இலக்குவனும் தங்கள் வில்லை எடுத்து அம்பை எய்தனர். சீதைக்குக் காயம் பட்டுவிடக்கூடாதே என்று எய்ததால் அவர்களின் குறி தவறியது. அதைக்கண்டு கானகம் அதிரும்படி நகைத்து அவர்கள் எதிரே இரு கால்களையும் விரித்து நின்று அவர்களை வலிய வம்புக்கு அழைத்தான்.  
அவன் கீழே நின்ற ஒரு விநாடிப் பொழுதில் ராமனும் இலக்குவனும் துள்ளிக் குதித்து அவன் தோள்மேல் தவ்வினார்கள். இதை எதிர்பாராத அவன் சீதையைக் கீழே விட்டுவிட்டு தன் தோளில் ஏறிய ராமன் இலக்குவனோடு பறக்கத் துவங்கினான்.

“ அவர்களை எங்கே அழைத்துச் செல்கிறாய். இதோ நான் இருக்கிறேன். என்னைத் தின்று பசியாறு “ என்று சீதை உரக்கக் கூவினாள். அவள் கண்கள் நீரைச் சொரிந்தன. மரங்கள் செடிகள் கொடிகளைத் தள்ளியபடி அண்ணாந்து அந்த அரக்கன் பறக்கும் திசையெல்லாம் சீதையும் கல்லிலும் முள்ளிலும் கால் நோக ஓடி வருகிறாள்.

சீதையின் துயரத்தையும் அவளின் குரலையும் கேட்ட ராமர் விராதனின் தோள்மீது நின்று தன் வாளால் அவனை வெட்ட முனைந்தார். அவரோடு இலக்குவனும் கூட நின்று விராதனை வெட்டத் துணிந்தான்.
இருவரும் அந்த அரக்கனின் தோள்மீது நின்று வெட்டியதால் காயமுற்றுக் கீழே விழுந்தான் அவன். கோபத்தில் அவன் மேல் குதித்து அவனைக் கீழே தள்ளினார்கள் ராமனும் இலக்குவனும்.
ஆஹா இதென்ன. வீழ்ந்த அரக்கன் கீழ் சாய அவன் இன்னொரு உருவத்தில் மேலெழுகிறானே. வெகு அழகான கந்தவர்வனாக அவன் மாறுகிறான். ராமனும் இலக்குவனும் வியக்கிறார்கள். சீதையோ பேச்சற்றுப் போய் நிற்கிறாள்.
“ஐயனே .. என் பெயர் தும்புரு. நான் ஒரு கந்தர்வன். உங்கள் திருவடி பட்டதால் எனக்கு ஞானம் கிட்டியது. என் சாபம் தீர்ந்தது “
“சாபமா. யார் உனக்கு சாபம் அளித்தார்கள் “ என வினவினான் இலக்குவன்.
“குபேரனிடம் நான் பணி செய்து வந்தேன். அப்போது என்னைக் காமம் என்னும் கீழ்நிலைக் குணம் தாக்கியது. என் நினைவுகளில் நோய்மை கூடியதால் கடமைகளில் இருந்து தவறினேன். உடனே என்னை அரக்கனாகும்படிச் சபித்தான். ஐயகோ. அழகான கந்தர்வனான நான் அசிங்கமான அரக்கனானேன். மலைபோன்ற உருவத்துடன் நல்லது கெட்டது அறியாமல் கிடைத்தை எல்லாம் பிடித்துத் தின்னத் துவங்கினேன்.  இன்று உம் திருவடி பட்டதும் என் சாபம் தீர்ந்தது . சாபவிமோசனம் பெற்றேன்.” இவ்வாறு கூறிய தும்புரு இன்னும் ராமனைப் புகழ்ந்தான்.
“ உன்னால் பிறவாப் பெருவரம் பெற்றேன் என் ஐயனே. தாய் கன்றைக் காப்பது போல என்னைக் காத்தாய். என் நற்குணங்கள் திரும்பவும் பிழைக்க உதவினாய். தந்தை போல் என் உருவையும் மீட்டுத் தந்தாய். நன்றி ஐயனே “ என்று ராமனையும் இலக்குவனையும் சீதையையும் வணங்கி ஆசி பெற்று வானவெளியில் பறந்து சென்றான்.
கீழ்நிலைக் குணங்கள் நம்மைக் கயமையில் செலுத்திவிடும் கடமையில் இருந்து தவறச் செய்யும் என்பதை உணர்ந்து அவற்றை மனதில் இருந்து நீக்கி நற்குணங்களோடு வாழ்வோம் குழந்தைகளே.  

ஆராதனை என்ற தலைப்பில் வாசகர் கடிதத்தை வெளியிட்ட சொற்கோயில் இணைய இதழுக்கும் குமார் சார் அவர்கட்கும், வெளியீட்டாளர் சாத்தப்பன் சார் அவர்கட்கும், எடிட்டர் ஹுமாயூன் சார் அவர்கட்கும், ஓவியத்தால் உயிரூட்டிய பிரபாகர் சார் அவர்கட்கும் மனமார்ந்த நன்றி. ! 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...