பெரியோர் சிறியோர் உயர்ந்தோர் தாழ்ந்தோர் வறியோர் வலியோர் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவருமே இறைவனை எட்டமுடியும் என்பதற்கு இறைவனை நினைத்து யாழிசை மீட்டி வந்த ஒரு பாணரின் கதை உதாரணமாய் இருக்கிறது. அது என்ன என்று பார்ப்போம் குழந்தைகளே.
உறையூர் நகரில் மிகப் பரந்த செந்நெல் வயல் அது. கடம்ப மரங்களும் மருதநில மரங்களும் செழித்திருந்தன. நண்பகல் நேரம் வெய்யிலோ தகித்தது. திடீரென குவா குவா என்ற சத்தம் ஓங்கி வளந்திருந்த நெற்பயிரின் ஊடே ஒலித்தது.
அந்தப் பக்கமாக பாணன் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவர் யாழினை மீட்டி இறைவனைப் பாடிப் பரவும் மெய்யன்பர். இறையன்பரான அவருக்குப் பிள்ளைப் பாக்கியம் இல்லை. எனவே குழந்தைச் சத்தம் கேட்டதும் மனம் திடுக்கிட்டு இதென்ன பிரம்மையோ என்று சுற்றும் முற்றும் பார்த்தார்.
உண்மையாகவே ஒரு குழந்தையின் அழுகுரல் அவரை அசைத்தது. பதட்டத்துடன் செந்நெற்பயிர்களை விலக்கித் தேடத் தொடங்கினார். அடடா பிஞ்சுக் குழந்தை ஒன்று கைகால்களை அசைத்தபடி உச்சியில் சுட்ட சூரியனைக் காணக் கண் ஒட்டாமல் அழுது கொண்டிருந்தது.
பதறிப்போய் அக்குழந்தையைத் தூக்கிய அப்பாணர் தன் இல்லத்துக்கு எடுத்து வந்தார். அவரும் அவர் மனைவியும் இறைவன் தமக்கு அளித்த பரிசு எனக் கருதி அக்குழந்தையை வளர்த்து வந்தார்கள். தன்னுடைய யாழிசையை அக்குழந்தைக்குக் கற்றுக்கொடுத்தார். அக்குழந்தை இறைவனைத் துதித்து யாழிசையில் சிறந்து விளங்கியதால் மக்கள் திருப்பாணர் என்று மரியாதையாக அழைத்தனர்.
என்ன இருந்து என்ன திருப்பாணர் உறையூரில் இருக்கிறார் ஆனால் அவர் மனங்கவர்ந்த ரங்கரோ ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றின் அக்கரையில் அல்லவா இருக்கிறார். அக்காலத்தில் மக்களை உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்று குலவரையறை கொண்டு பிரித்து வைத்ததினால் கோவிலுக்குள் சென்று ஸ்ரீரங்கரைப் பார்க்கக் கொடுத்துவைக்கவில்லையே என மனம் மிக வருந்தினார் திருப்பாணர்.
எனவே தினமும் காலையில் காவிரியில் குளித்து முடித்து நீரில் நின்றபடியே ஸ்ரீரங்கத்தின் கரை மீது ஏறாமல் தன் யாழை மீட்டி இறைவனிடம் மனம் ஒன்றியிருந்தார். கடவுள் தியானத்தில் அவர் யாழிசையோடு தானும் கரைந்து கொண்டிருந்ததால் புறத்தே நடப்பதை அறியாமல் இருந்தார்.
ஒருநாள் காலை ஸ்ரீரங்கரை வணங்குபவரான லோகசாரங்கர் என்பார் ஸ்ரீரங்கத்தின் பக்கம் இருக்கும் காவிரியில் நீராட வந்தார். அங்கேயே அவர் தனது காலை பூஜைகளை முடித்து இறைவனுக்குத் திருமஞ்சன நீர் சுமந்து செல்வார். பார்த்தால் ஒரு பாணர் மெய்மறந்து யாழை மீட்டிக் கொண்டு இவர் இறங்கும் படித்துறையின் அருகில் நின்று கொண்டு நகரமாட்டேன் என்கிறார்.
” யாரப்பா நீ. நகர்ந்து கொள்” என்று கூறிய லோகசாரங்கரின் குரலும் அப்பாணருக்குக் கேட்கவில்லை. கண்மூடிப் பாடி நின்ற பாணரோ நகர்வதாயில்லை. எனவே என்ன செய்வதென அறியாமல் லோகசாரங்கர் திடீரெனக் கையில் கிடைத்த கல் ஒன்றை எடுத்து அப்பாணர் மேல் வீசுகிறார்.
ஐயகோ அக்கல் திருப்பாணரின் நெற்றியில் பட்டு இரத்தம் குபுகுபுவென வழிகிறது. கண் திறந்த திருப்பாணர் எதிரில் லோகசாரங்கரைப் பார்த்து விலகிச் செல்கிறார். இதைப் பார்த்த லோகசாரங்கர் திடுக்கிட்டாலும் திருமஞ்சனத்துக்கு நீர் சேந்திக் கொண்டு செல்கிறார்.
கோவிலின் கர்ப்பக் கிரகத்தை அடைந்ததுதான் தாமதம். ஸ்ரீரங்கரின் நெற்றியில் ரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது. தன் கண்களையே நம்பாத லோகசாரங்கள் கண்களைக் கசக்கிப் பார்க்கிறார். உண்மைதான் அரங்கனின் நெற்றியில் இருந்து ரத்தம் வழிகிறது. ஒரு விநாடியில் தன் தவறு உணர்ந்த அவர் அரங்கனின் நெற்றியின் துணியால் அழுத்தி ரத்தத்தை நிறுத்தப் பார்க்கிறார். ஆனால் அதுவோ விடாமல் வழிந்து கொண்டே இருக்கிறது.
இச்செய்தி அரசன் வரை போய்ச் சேருகிறது. அனைவரும் பதறுகிறார்கள். என்னன்னவோ செய்கிறார்கள். ஆனால் ரத்தம் நின்றபாடில்லை. அன்று இரவு மனம் வருந்தியபடி உறங்கச் செல்கிறார் லோக சாரங்கர். அவர் கனவில் வந்து ” என்னையே நினைத்துப் பாடிய பாணனை இப்படிக் காயப்படுத்தலாமா “ என்று கேட்கிறார்.
லோகசாரங்கரும் கனவினிலே பதில் சொல்கிறார். “ ஐயனே உம் பூசைக்கு நேரமாயிற்று. அவர் நான் திருமஞ்சன நீர் எடுக்க இடைஞ்சலாய் நின்றதால் கையில் கிடைத்த கல்லை வீசிவிட்டேன். மன்னிக்க வேண்டுகிறேன் “ என்கிறார்.
“ அவனும் என் பக்தன்தான். நீ என் அருகில் வந்து வணங்குகிறாய். அவனோ என் அருகில் வர இயலாமல் அல்லும் பகலும் யாழிசை மீட்டி இசையால் என்னை மானசீகமாக வணங்குகிறான். எனவே அவனை என்னருகே அழைத்து வா “ என்கிறார்.
அப்பாடா தீர்வு கிடைத்தது என்று நிம்மதி அடையும் லோகசாரங்கர் விடிவதற்காகக் காத்திருக்கிறார். காவிரிக்கரைக்குச் சென்று ஆத்மார்த்தமாக யாழிசை மீட்டும் திருப்பாணரை ஸ்ரீரங்கரைத் தரிசிக்க வருமாறு அழைக்கிறார்.
அக்கால வழக்கப்படி ”நான் அந்த நகருக்குள் கால்பதிக்க அனுமதி கிடைக்காதே” என திருப்பாணர் தயங்க ”நான் உம்மைச் சுமந்து சென்று இறக்குகிறேன்” என்று அவரைத் தம் தோள்களில் சுமந்து சென்று ஸ்ரீரங்கம் திருக்கோவிலில் அரங்கன் சந்நிதியில் இறக்குகிறார் லோகசாரங்கர்.
அனைவரும் லோகசாரங்கரின் செயலையும் திருப்பாணரையும் கண்டு வியப்படைகிறார்கள். கருவறைக்குள் சென்ற திருப்பாணர் ஸ்ரீரங்கரை திருவடி முதல் திருமுடி வரை தரிசித்து அமலன் ஆதிபிரான் என்ற பத்துத் திருவந்தாதிப் பாடல்கள் பாடி மகிழ்கிறார்.
வர்க்கபேதமோ ஜாதி பேதமோ மொழி பேதமோ இல்லாமல் யாராக இருந்தாலும் அன்பாக அழைத்தால் ஆண்டவனே அவர்களைத் தம்மிடம் சிறப்போடு அழைப்பான் என்பதை இக்கதை உணர்த்துகிறதுதானே குழந்தைகளே .
வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றி ஜெயக்குமார் சகோ
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !