எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 22 மார்ச், 2019

சீதை என்றொரு – ஒரு பார்வை.


சீதை என்றொரு – ஒரு பார்வை.

சீதை என்றொரு காப்பிய நாயகி என்ற பார்வையில் படிக்க ஆரம்பித்து சீதை என்றொரு பெண்மையின் குறியீடு என ஆசிரியர் நிறுவதைப் படித்து வியந்தேன்.

கம்பன் அடிசூடி திரு பழ பழநியப்பன் அவர்கள் பெண்ணினத்தின் பிரதிநிதியாக, பெண்ணினத்தின் வளர்ச்சியாக, பெண்ணியத்தின் வளர்ச்சியாகச் சீதையைக் கூறுகிறார்கள்.

மானிடப் பெண் செய்யத்தக்கன செய்யதகாதன என்பதை அவள் வாழ்க்கையில் இருந்தே எடுத்துக்காட்டுகிறார். சீதை கணவனுடன் பேசிய சொற்கள் இல்லறநெறியையும், அதிக முக்கியத்துவம் கொடுத்த சொற்கள் தனிமனித ஒழுக்கத்தையும் பிரதிபலிக்கின்றன.


சீதையின் சொற்களைக் கொண்டே இவற்றை மெய்ப்பிப்பது அழகு. இராமனுடன் கூடிய உரையாடல், சுமந்திரன், இலக்குவன், இராவணன், திரிசடை, அனுமன் ஆகியோருடன் கூடிய உரையாடல் நயத்தைச் சிறப்பித்துக் கூறுகிறார்.

இராமனுடன் வனம் புகலையும், வெண்புன்னகை ஏந்திய பெண்கனி சீதை எனவும் பாராட்டுகிறார்.

தீப்புகுந்த சீதை, மாயமானுக்கு மருகிய சீதை, இதோடு வித்யாசமாக இருபதாம் நூற்றாண்டுச் சீதையர் பற்றியும் அவர்தம் துன்பம் பற்றியும் சுபத்ரா, கந்தர்வன், ரோகிணி, மைத்ரேயி, மு.மேத்தா ஆகியோரின் கவிதை கொண்டு சொல்லிச் சென்றிருப்பது வெகு சிறப்பு.

“இந்திர மாயங்களால்
ஏமாற்றப்பட்டு
கௌதம வறுமைகளால்
சபிக்கப்பட்ட
அப்பாவி அகலிகைகளை
ஆட்கொள்வதற்காகப்
பொதுவுடைமை இராமபிரான்
பூமியெங்கும் வலம் வரட்டும் “

கற்பெனப்படுவது சொற்திறம்பாமை என்பதையும் கூறியிருப்பது கவனிக்க வேண்டியது.

சுமந்திரனுடன் நடக்கும் உரையாடலில் இன்னா செய்தார்க்கும் இனியன செய்கிறாள் சீதை. தான் வளர்த்த கிளிக்குக் கைகேயி பெயரைச் சூட்டியதால் அதனைப் பாதுகாத்துவருமாறு கூறுகிறாள்.

இலக்குவனுடன் நடக்கும் உரையாடலில் பொய்மானைத் தேடிசென்ற இராமனின் குரலில் மாரீசன் அலறியபோது இலக்குவனை இடித்துரைப்பவளாகவும் அறிவில்லாதவளாகவும் காட்டப்படுகிறாள்.

இராவணனுடன் நடக்கும் உரையாடலில் ஆரண்யத்தில் விரகு இலாச்சீதை, அசோகவனத்தில் அறிவுகாட்டி இடித்துரைத்த சீதை , கும்பகர்ணன் வதைக்கு முன்னால் மீள அருந்தருமம் உரைத்த சீதை, இன்றைய நிலையில் விருப்பமில்லாதை விரும்ப நேரிடும் சீதையர் என பகுத்துக் கூறப்படுகிறாள்.

திரிசடையுடன் பிறிதின் நோய் போற்றியவளாகவும் அனுமனுடன் தவத்தொழில் பெருந்தேவியாகவும், சித்திரம்காட்டுகிறாள்.  

வெஞ்சொல் செவிசுடத் தேம்பிய சீதை ( நீ வருந்தலை:நீங்குவன் யான் என ராமன் சொல்ல நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு ) , சொல்லினால் சுடவல்ல சீதை ( எல்லை நீத்த உலகங்கள் யாவும் என் சொல்லினால் சுடுவேன்: அது, தூயவன் வில்லின் ஆற்றலுக்கு மாசு என்று வீசினேன் ), எரியைச் சுடேல் என்றியம்பிய சீதை ( எரியே அவனைச் சுடல் என அனுமனைக் காத்தல் ) , தீயைச் சுட்ட தீ சீதை (அங்கி, யான்: என்னை இவ் அன்னை கற்பு எனும் பொங்கு வெந்தீச் சுடப் பொறுக்கிலாமையால் இங்கு அணைந்தேன் “ என அக்னி அவளை ஏந்தி ராமனிடம் ஒப்படைத்தல் ) , கற்பெனும் கடவுள் தீ சீதை ( கனிந்து உயர் கற்பு எனும் கடவுள் – தீயினால் நினைந்திலை, என் வலி நீக்கினாய் ‘ என அக்னி தேவனே கூறுகிறான்) என கற்பின் கனலியாகக் காட்டுகிறார்.

எனவே பெண்மைக் காப்பாக, கற்பின் அரசியாக, பெண்மையின், பெண்ணியத்தின் வளர்ச்சியாக கம்பன் கருத்துப் புரட்சிக்காரனாக சீதையை படைத்திருக்கிறான் எனவும் காலம் காலமாக பெண்களுக்கு ஏற்பட்டு வரும் இன்னல்களையும் மனத்தவமே கற்பு என்பதையும், கணவனுடனான இல்வாழ்க்கை, அறத்தில் நிற்றல், தனித்து நின்று போராடி வாழ்தல், கணவன் அதிகம் கொடுமைப்படுத்தினால் வீறிட்டெழுந்து நியாயம் கேட்டல், கணவனுக்கு அடிமையாக இராமல் சுய சிந்தனை உள்ளவளாக சீதை இருத்தல், என சீதையை என்றென்றைக்குமான பெண்மைக் குறீயீடாகப் படைத்ததை விரிவாக நிறுவியது வெகு சிறப்பு.

நூல் :- சீதை என்றொரு
ஆசிரியர் :- பழ. பழநியப்பன்
பதிப்பகம் :- வானதி பதிப்பகம்
விலை ரூ :- 24/- ( 2000 ஆம் ஆண்டு வெளியீடு )

5 கருத்துகள்:

  1. நன்றி ஸ்ரீராம்

    நன்றி துளசி சகோ

    நன்றி வெங்கட்சகோ

    நன்றி ஜம்பு சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...