எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 19 ஜனவரி, 2019

சாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் ஸாரின் சுட்ட பணமும் சுடாத பணமும்.

திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் இந்த வாரமும் பண நிர்வாகம், சேமிப்பு பற்றிக் கூறி இருக்கின்றார்கள். படித்துப் பாருங்கள்.

சுட்ட பழம் வேணுமா ? சுடாத பழம் வேணுமா ?
”அதோ சைக்கிள்ல வராரே, அவர் பேரு என்னன்னு தெரியுமா ஸார் ?” என்று சஸ்பென்ஸ் வைத்தார் முத்தையா.

நானும் அவரும் நடந்து வந்து கொண்டிருந்தோம். தென்காசி பஸ் ஸ்டாண்ட் அருகில். நான் வங்கியில் பணியாற்றிய 1980 இல்.

“ஊஹூம். தெரியாது” என்றேன்.

“லட்சாதிபதி ஸார்.”
இப்படிக் கூட பெயர் வைப்பார்களா என்ற சந்தேகம் எனக்குள் எழுந்தது. முத்தையா விளக்கினார். லட்சாதிபதி அவரது உண்மையான பெயர் அல்ல. ஊர் வைத்த பெயர்.
எழுபதுகளின் ஆரம்பத்தில் ஏதோ ஒரு காலைப் பொழுது அவருக்கு நன்றாகவே விடிந்தது. லாட்டரியில் ஒரு லட்சம் பரிசு என்றால் விடியல்தானே !
பரிசுத் தொகை கைக்கு வந்தது. ஆனால் வந்த வேகத்திலேயே மறைந்தும் போனதுதான் சோகம். ஒரே வருடத்தில் ஓரமாய்ச் சாய்த்து வைத்திருந்த பழைய சைக்கிளை எடுத்து ஓட்ட வேண்டிய கட்டாயம் வந்தது.
இது இவருக்கு மட்டும் நடந்த கதையல்ல. நம்மில் பலருக்கும் இதே குரூப் பிளட்தான்.
20 – 40 – 20 என்று இதைச் சொல்லலாம். முதல் 20 வருடங்களைப் பள்ளியும் கல்லூரியும் ஆக்கிரமிக்கின்றன. செலவு மட்டும்தான். வருமானம் கிடையாது.
பட்டம் பெற்றது வேலை தேடும் வேட்டை. ஏதோ ஒரு வேலையும் கிடைக்கிறது. 60 வயது வரையில் கடிகாரமும் காலண்டரும் நம்மை உந்தும்.
பிறகு ஒரு நாள் பிரிவு உபசார விழா நடக்கும். “இவர்தான் இந்த நிறுவனத்தை இது நாள் வரை தாங்கி நின்ற தூண்” என்று பிரசங்கம் செய்வார் மேலாளார். எல்லாமே உபசார வார்த்தைகள். நாமே அதை நம்ப மாட்டோம். அப்புறம் முன்னால் அமர்ந்து ஸ்வீட் காரம் காஃபி சாப்பிடும் சக ஊழியர்கள் மட்டுமென்ன நம்பவா போகிறார்கள் !
கைத் தட்டல்களுக்கு இடையே புஷ்டியான செக் ஒன்றை அளிப்பார்கள். ஒரு சந்தன மாலையும் உண்டு. சம்பளம் என்பது நின்றவுடன்தான் இது நாள் வரை நம் நிமிர்ந்த பார்வையே அதனால் என்பதை உணர்வோம்.
அதன் பின் வரும் இருபது வருடம் இம்சை நிறைந்தது. வட்டியோ பென்ஷனோதான் வருமானம். ஒன்றாம் தேதியை எதிர்நோக்கியே மாதம் முழுவதும் தள்ளுவோம். பச்சை நிறப் பெயின்ட் அடித்த பார்க் பென்சே நம் புகலிடமாகும். எங்கே தவறினோம் என்று யோசிப்போம்.
விடை ரொம்ப சிம்பிள். முதல் இருபது வயதில் செலவழிக்கக் கற்றுக் கொண்டோம். ஆனால் பணத்தைக் கையிருப்பாக வைத்துக் கொள்வது பழக்கமாகவில்லை. கையிருப்பு ஏதோ நெருப்புக் கங்கு போல் சுடுகிறது. அதனால் செலவு செய்கிறோம்.
சேமிப்பு கூட வேண்டாம். கையில் பணத்தை நிறுத்தி வைத்தலே ஒரு வித்தைதான். அதைக் கற்றல் மிகவும் அவசியம்.
பணத்தைச் ”சுட்ட” பழமாகவே பார்க்கிறோம். கைப்பணம் “சுடாத” பழம்தான் !


டிஸ்கி :- உண்மையிலேயே எல்லாரும் வயதுக் காலத்தில் சேமிப்பின் அவசியத்தைப் புரிந்துகொள்வதில்லைதான்.அது ரிட்டயர்மெண்ட் வயதில் தாக்குகிறது என்பது உண்மை. பணத்தின் அருமையைச் சுட்ட பழம், சுடாத பழம் கொண்டு விளக்கியது சிறப்பு சார். நன்றியும் மகிழ்ச்சியும்.

2 கருத்துகள்:

  1. அருமையான தொடர்...சாட்டர்டே போஸ்டில். அன்றே வாசித்துவிட்டேன். இப்போது மீண்டும் வாசித்தேன். டிஸ்கியும் அருமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  2. நன்றி துளசி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...