எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 6 அக்டோபர், 2025

பக்தியால் வென்ற சுதர்சனன்

 பக்தியால் வென்ற சுதர்சனன்


பிறந்த சில காலத்திற்குள் பெற்ற தந்தையையும் பிறந்த பொன்னாட்டையும் விதிவசத்தால் இழந்தான் ஒரு ராஜகுமாரன். ஆனால் பராசக்தியின் மேல் பக்தி வைத்ததால் தான் இழந்த நாட்டையும் அரச பதவியையும் திரும்பப் பெற்றான் அவன். அவனது அபரிமித பக்தியால் அன்பகலாத மனைவியும் கிடைத்தாள். அவனுடைய கதையைப் பார்ப்போம்.

கோசல நாட்டை சூரிய வம்சத்தில் தோன்றிய துருவசிந்து என்ற மன்னன் ஆண்டுவந்தான். இவனுக்கு மனோரமா என்ற பட்டத்து ராணியும், லீலாவதி என்ற ஆசை மனைவியும் உண்டு. ஒரே சமயம் இருவரும் கருத்தரித்து மனோரமாவுக்கு சுதர்சனன் என்ற மகனும், லீலாவதிக்கு சத்ருஜித் என்ற மகனும் பிறந்தார்கள்.

ஒருமுறை காட்டிற்கு வேட்டையாடச் சென்றான் துருவசிந்து. பாய்ந்து வந்தது சிங்கம் ஒன்று. மன்னன் தன் வலிமை முழுவதும் காட்டிப் போரிட்டும் அது மன்னனைக் கடித்துக் கொன்று விட்டது. உடனே நாட்டில் ஆரம்பித்து விட்டது சத்ருஜித் மற்றும் சுதர்சனனின் வாரிசுரிமைப் போராட்டம்.

அமைச்சர்கள் ஒன்றுகூடி பட்டத்து ராணியின் மகனான சுதர்சனன்தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று முடிவெடுத்தார்கள். மக்களின் விருப்பமும் அதுவாகவே இருந்தது. ஆனால் சத்ருஜித்தின் பாட்டனாராகிய யுதாஜித் தன் பேரன் அரசனாக வேண்டும் என்று நயவஞ்சகர்கள் சிலரைச் சேர்த்துக் கொண்டு போர் புரியத் தொடங்கினான். தன் பேரன் சுதர்சனன் ஆட்சியில் அமரவேண்டும் என விரும்பிய சுதர்சனனின் பாட்டனாகிய வீரசேனனும் யுதாஜித்தை எதிர்த்துப் போர்புரிந்தான். ஆனால் யுதாஜித் தந்திரமாக வீரசேனனை மடக்கிக் கொன்று தன் பேரனான சத்ருஜித்தை அரசனாக்கினான்.


நடந்த அநியாயங்களைப் பார்த்த மனோரமா இன்னும் அந்த நாட்டில் இருந்தால் தங்கள் உயிருக்குப் பாதுகாப்பு இருக்காது எனக் கருதி இரவோடிரவாக நகரை விட்டு வெளியேறினாள். அந்தோ பரிதாபம். அக்காட்டில் திருடர்கள் சிலர் அவளது ஆடைகளையும் ஆபரணங்களையும் பறித்துச் சென்றார்கள். அவளோ தானும் மகனும் உயிர் தப்பினால் போதுமெனப் பரத்வாஜர் முனிவரின் ஆசிரமத்தைத் தஞ்சம் அடைந்தாள்.

அவளது துயரக் கதையைக் கேட்ட முனிவர் அவளை அங்கேயே தங்க அனுமதித்தார். மனோரமா தன் மகனுக்குப் பராசக்தியின் பெருமையைக் கூறி அவள் அருளால் தங்க ஒரு நல்ல புகலிடம் கிடைத்தது என மகிழ்ந்தாள். மனோரமாவும் சுதர்சனனும் உயிரோடு இருப்பதை அறிந்த யுதாஜித் ஆசிரமத்துக்கும் படையெடுத்து வர பரத்வாஜ முனிவரோ அவனுக்கு அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார். முனிவரின் சாபத்துக்குப் பயந்து அவனும் திரும்பிச் சென்றான்.

பிறந்ததில் இருந்தே நல்ல பக்தியுடன் இருந்த சுதர்சனன் பராசக்தியின் க்லீம் என்ற மந்திரத்தைக் கேட்க நேர்ந்தது. அன்றிலிருந்து அம்மந்திரத்தை அவன் எப்போதும் உச்சரித்துக் கொண்டே இருந்தான். அதனால் அவனுக்கு ஞானமும் தேஜஸும் சிறந்த வலிமையும் உண்டானது. முனிவர் பெருமானும் இவனைக் கண்டு மகிழ்ந்து இன்னும் பல்வகைப்பட்ட கலைகளையும் கற்பித்தார். அவனது பக்தியைக் கண்டு மகிழ்ந்த பராசக்தியும் அவனுக்குக் கூரிய அம்புகளையும் சிறந்த வில்லையும் வழங்கி அருளினாள்.

ஒருமுறை காசி தேசத்தின் அமைச்சர்கள் அந்த ஆசிரமத்தின் வழியே சென்றார்கள். அவர்கள் சுதர்சனனின் பேரழகையும் பெருவலிமையையும் கண்டு வியந்து காசி மன்னனின் மகளான சசிகலை என்பவளிடம் புகழ்ந்து உரைத்தார்கள். அன்றிலிருந்து அவளும் சுதர்சனனின் நினைவாகவே இருந்து வந்தாள். பராசக்தியின் பக்தையான அவள் பராசக்தியிடம் தான் சுதர்சனனையே மணக்க விரும்பிப் பிரார்த்தித்தாள். அம்பிகையும் அவள் கனவில் தோன்றி அவள் மனோரதம் நிறைவேறிச் சர்வ சௌபாக்கியங்களும் பெறுவாள் என வரமருளி மறைந்தாள்.


சுதர்சனனின் மேல் வைத்த காதலை அவள் தன் தந்தையான காசிராஜனிடம் கூற அவரோ மன்னனாக இருப்பவன்தான் அவளை மணக்க இயலும் எனவே பந்தய சுயம்வரம், வீர சுயம்வரம், இச்சா சுயம்வரம் ஆகியவற்றுள் இச்சா சுயம்வரம் நடத்தத் தீர்மானித்து அனைத்து அரசர்களுக்கும் ஓலை அனுப்பினான்.

சசிகலை தன் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவரை அழைத்துப் பரத்வாஜ முனிவரின் ஆசிரமம் சென்று சுதர்சனனைச் சந்தித்து சசிகலையின் காதலைப் பற்றியும், சுயம்வரத்தில் சுதர்சனன் கலந்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளையும் சொல்லி அவனுக்கே தான் மாலை சூட்டுவதாகவும் சொல்லி அனுப்பினாள். அதைக் கேட்டு வியந்து சுதர்சனனும் அந்த மனிதரிடம் தன் ஒப்புதலைக் கூறி அனுப்பினான்.

மன்னர்கள் பலர் கலந்துகொள்ளும் சுயம்வரப் போட்டியில் தன் மகன் அவமானப்பட நேரும் என மனோரமா தடுத்தாள். சுதர்சனன் பராசக்தியின் அருள் நம்மைக் காப்பாற்றும் என்று கூற அவனுக்கு தேவி கவசத்தைக்கூறி வாழ்த்தி ஆசி கூறி அனுப்பினாள்.

சசிகலை சொல்லி அனுப்பிய சுயம்வர தினத்தன்று சுயம்வர மண்டபத்துக்குள் நுழைந்தான் சுதர்சனன். பல தேசத்து ராஜகுமாரர்களும் தமக்கென ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் வீற்றிருந்தார்கள். சுதர்சனனின் சகோதரன் சத்ருஜித்தும் பாட்டனார் யுதாஜித்துமே இருக்கைகளில் அமர்ந்திருந்தார்கள். அரச பதவியில் இல்லாத சுதர்சனன் ஒதுங்கி நின்றான்.

மண்டபத்தில் நுழைந்த சசிகலை தன் மனம்கவர்ந்த சுதர்சனன் ஒரு தூணோரம் நிற்பதைப் பார்த்து வேகமாக வந்து மாலையிட்டாள். உடனே யுதாஜித் வெகுண்டு போர்புரியத் தயாரானான். காசிமன்னனோ தன் மகளின் திருமணம் நல்லபடியாக முடிந்தபின் போரை வைத்துக் கொள்ளலாமெனக் கூற அனைவரும் அமைதியாயினர்.


திருமணம் முடிந்து சுதர்சனன் பரத்வாஜர் ஆசிரமத்துக்குத் தன் மனைவி சசிகலையுடன் புறப்பட்டான். அவனைப் பின் தொடர்ந்து போரிட்டான் யுதாஜித். ஏற்கனவே அம்பிகையின் அபரிமிதமான அருளைப் பெற்றிருந்த சுதர்சனன் அம்பிகை கொடுத்த கூரிய அம்புகளையும் வில்லையும் வைத்துப் போர் புரிந்து அனைவரையும் தோற்றோடச் செய்தான்.

பரத்வாஜரின் ஆசிரமத்துக்கு வந்து முனிவரையும் தாயையும் வணங்கினான். பின்னர் தன் பொன்னாட்டை மீட்க வேண்டிப் படை எடுத்துச் சென்றான். அவனது சகோதரன் சத்ருஜித்தும் இயல்பிலேயே நல்லவன் என்பதால் தன் சகோதரனுடன் சமாதானம் செய்து கொண்டு நாட்டை வழங்கினான். முனிவருக்கு நன்றி சொல்லித் தாயையும் மனைவியையும் அழைத்துக் கொண்டு நாட்டுக்குத் திரும்பிய சுதர்சனன் சக்கரவர்த்தியாகப் பட்டம் சூட்டிக் கொண்டான். அன்னையின்  க்லீம் என்ற பீஜாக்ஷர மந்திரத்தை அல்லும் பகலும் பக்தியுடன் உச்சரித்து வந்ததாலேயே அவன் தன் அனைத்து இன்னல்களையும் வென்று மீண்டும் தன் பொன்னாட்டையும் அன்பான மனைவியையும் பெற்றான். எனவே பக்தியும் நம்பிக்கையும் எதையும் பெற்றுத் தரும் என்பதை உணர்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...