திருப்பாற்கடலை வரவழைத்த திருமூலநாதர்
திருப்பாற்கடல் என்றால் திருமால் பள்ளி கொண்டிருக்கும் இடம்தானே, அது எப்படி பூமிக்கு வந்தது அதுவும் அதை வரவழைத்தவர் திருமூலநாதர் என்றால் சிவபெருமான் ஆயிற்றே என்று எண்ணலாம். ஆனால் பூமியில் பசியோடு அழுத ஒரு பாலகனுக்காகத் திருமூலநாதர் திருப்பாற்கடலை வரவழைத்தார். அது எங்கே எனக் காண்போம்.
முன்னொரு காலத்தில் மத்யந்தினர் என்றோர் முனிவர் இருந்தார். அவருடைய குமாரன் பெயர் மாத்யந்தினர். தந்தையான மத்யந்தினர் தனது மகனுக்கு நால் வேதங்களையும் ஆறு சாத்திரங்களையும் பயிற்றுவித்தார். அதன் பின் ஆத்ம ஞானம் பெறுவதற்குத் தில்லைவனத்தை அடைந்து சிவபெருமானைப் பூசிக்கும்படிக் கூறினார்.
தந்தையின் சொற்படி மாத்யந்தினரும் அவ்வாறே தில்லைவனத்தைத் தேடிச் சென்றார். பலகாடுகள், நாடுகள் கடந்தன. பலரிடமும் கேட்டு ஒருவழியாகத் தில்லைவனத்தை வந்து சேர்ந்தார். இறுதியாக ஒரு தில்லை மரத்தின் கீழ் சுயம்புவாக எழுந்தருளி இருந்த திருமூலநாதரைக் கண்டடைந்தார். அந்த மூர்த்தியின் அருகிலேயே இருந்த சிவகங்கைத் திருக்குளத்தில் நீராடி அனுட்டானம் முடித்தார். சிவனின் திருமுன்பு வந்து பஞ்சாங்க அட்டாங்க வணக்கம் செய்தார்.
சிவபெருமான் மீது தினம் தினம் வெய்யிலும் மழையும் பொழிவதைப் பார்த்த அவர் சிவலிங்கத் திருமேனியின் மேற்புரம் பந்தல் அமைத்தார். ஒரு பர்ணசாலை அமைத்துத் தானும் தங்கி இருந்து தினந்தோறும் பெருமானை அன்போடு பூக்களால் பூசித்து வந்தார்.
பொழுது விடிவதற்கு வெகு நாழிகைக்கு முன்பே எழுந்து நித்யானுஷ்டானங்களை முடித்துப் பூசைக்கு வேண்டிய மலர்களைக் கொய்து, பழங்களைப் பறித்துக் கொண்டு வந்துவிடுவார் மாத்யந்தினர். அன்றாடம் இருட்டில் பறிக்கச் செல்வதால் சில சமயம் மலர்கள் இருப்பதைக் கண்டுபிடிக்க முடியாது. விடிந்துவிட்டாலோ அவற்றில் உள்ள தேனை வண்டுகள் உண்டுவிடும்.
ஒருநாள் பனி அதிகம் பெய்யவே அவர் மலர் எடுக்கச் செல்ல நேரமாயிற்று. அதற்குள் அவற்றை வண்டுகள் கடித்துவிட்டிருந்தன. எனவே மனவருத்தத்தோடு அவர் இறைவனிடம் முறையிட்டு நிலத்தில் வீழ்ந்து அழுது புரண்டார். அவர் வருத்தம் கண்ட சிவபெருமான் அசரீரியாக,”ஏனப்பா இவ்வளவு வருத்தப்படுகின்றாய்?” என வினவினார்.
இறைவன் குரலைக் கேட்டுப் புளகாங்கிதமடைந்த மாத்யந்தினர், ”ஈசனே விடியலில் விரைந்து சென்று பூசைக்கு நல்ல மலர்களை எடுக்க இயலவில்லை. வண்டுகள் தேனை உண்டுவிடுவதால் அவை பூசைக்கு உரியதாயில்லை. என் செய்வேன்” என்று வருந்திக் கூறினார்.
இவரின் வருத்தத்தைக் கண்டு இரங்கிய இறைவன்.” வருந்தாதேயப்பா, உனக்கு மரம் ஏறி வசதியாக புலியினுடைய கை, கால்களைப் போன்ற உறுப்புக்களையும், இருளிலும் நன்கு தெரியும்படியான பார்வையையும் கொடுத்தோம். புலியின் கை கால்களைப் பெற்றதால் இனி உன் பெயர் வியாக்கிரபாதர் என வழங்கப்படும்” என்று அருளினார்.
அன்றிலிருந்து புலிக்கால் முனிவர் எனப்பர் வியாக்கிரபாதர் தன் பூசைகளை மனமகிழ்வுடன் செய்து வந்தார். தன் மகனைத் தில்லை வனத்துக்குப் பார்க்க வந்த அவரது தந்தை மத்யந்தினர் இவ்விவரங்களைக் கேள்வியுற்று மகிழ்ந்தார். திருமணப் பருவத்தில் உள்ள தன் மகனுக்கு வசிஷ்டரின் சகோதரியான ஆத்ரேயியை மணமுடித்து வைத்தார். இத்தம்பதிகளுக்கு உபமன்யு என்றொரு மகன் பிறந்தான்.
தில்லை வனம் காடு என்பதால் அங்கே குழந்தைக்குத் தேவையான பால் வேண்டி ஆத்ரேயி தன் குழந்தை உபமன்யுவுடன் வசிஷ்டரின் இல்லம் வந்தடைந்தாள். அங்கே காமதேனுப் பசுவின் பாலை உண்டு சில காலம் உபமன்யு மகிழ்ச்சியுடன் இருந்தான். ஆனால் வியாக்கிரபாதருக்குத் தன் குழந்தையான உபமன்யுவை விட்டுப் பிரிந்து இருப்பது கடினமாக இருந்ததால் இருவரையும் தில்லை வனம் வரும்படிக் கூறினார்.
இங்கே வந்தபின் பால் கிடைக்காததால் அரிசிக் கஞ்சி வைத்து அதில் இனிப்பைச் சேர்த்து உபமன்யுவிற்கு அருந்தக் கொடுத்தனர். ஆனால் காமதேனுப் பசுவின் பாலைக் குடித்து வளர்ந்த உபமன்யு அரிசிக் கஞ்சியைக் குடிக்க மறுத்து அழவே வியாக்கிரபாதர் திருமூலநாதரின் சந்நிதிக்குச் சென்று முறையிட்டார்.
“எனக்கு காமதேனுவும் இல்லை, மற்ற செல்வங்களும் இல்லை. என்னுடைய ஒரே செல்வம் நீதானே திருமூலநாதா, நீதான் என் மகனின் துயர் நீக்க, பசி போக்க வேண்டும்” என்று வருந்தி அழுதார். குழந்தையும் தொண்டை வரள அழுதது.
கருணைக் கடலான திருமூலநாதர் உடனே அங்கே தோன்றினார். பாலுக்காகப் பாலன் அழுததைக் கண்ட அவர் உள்ளமும் கரைந்துவிட பாற்கடலையே வரவழைத்தார். வியாக்கிரபாதரை அழைத்து,” பாலுக்காக அழும் பாலகனுக்காகப் பாற்கடலை இங்கே வரவழைத்திருக்கின்றோம். இதைப் பருகவைத்துப் பாலனின் பசியாற்றி மகிழ்ச்சியாக வைத்திரு” என்று கூறி அருளினார்.
இதைக் கண்டு பெருமகிழ்வு கொண்ட வியாக்கிரபாதர் உபமன்யுவை அழைத்துப் பாற்கடலில் இருந்து பாலைப் பருகச் செய்து இன்புற்றார். இன்னும் இன்னும் திருமூலநாதரின் மேல் பேரன்பு கொண்டு பூசித்து மகிழ்ந்தார்.
இறைவனிடம் பாற்கடலை பெற்ற அக்குழந்தை உபமன்யுவும் அதைக் குடித்து நன்கு வளர்ந்து நால் வேதங்களையும் ஆறு சாத்திரங்களையும் கற்றுத் தேர்ந்தார். அவரிடம் கிருஷ்ண பகவானே சிவதீட்சை பெற்றுப் பிள்ளை வரமும் பெற்றுச் சென்றார் என்றால் திருமூலநாதரின் பெருமையும் அவர் வரவழைத்த திருப்பாற்கடலின் பெருமையும் வியத்தற்கும் வணங்குதற்கும் போற்றுதற்கும்உரியதே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)