எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 22 நவம்பர், 2021

”பெண்”களை இயக்கிய சுகாசினி மணிரத்னம்

 ”பெண்”களை இயக்கிய சுகாசினி மணிரத்னம்

”பருவமே புதிய பாடல் பாடு..” நெஞ்சத்தைக் கிள்ளாதேயில் விஜியாக சுகாசினி மோகனுடன் மெல்லிய பனி படர்ந்த சோலையில் ட்ராக்சூட் அணிந்து குதிரைவால் கொண்டை ஆட ஒரு ஜாகிங் செல்வார். குதிரையின் லாடச் சத்தம் போல் மனதைத் தாளமிட வைக்கும் சந்தம்.

’பூந்தோட்டத்தில் ஹோ காதல் கண்ணம்மா’ ,’தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ’ என்று மனதையும் அசைத்த காதல். சோலை, சாலை என்று இப்படி ஓடிக் கொண்டே இருக்கமாட்டோமா என்று தோன்ற வைத்த பாடல்

ஷூக்கள் சப்திக்கும் மியூசிக்கில் என் பதின்பருவத்தில் கேட்ட லயமான பாடல் இது.. இப்போது கேட்டாலும் தண்ணென்று இருளும் குளிரும் பனியும் சூழ்ந்த மரங்களின்மேல் வெள்ளிக்கீற்றாய் சூரியன் கோலமிடும் பூஞ்சோலை என் நினைவுகளில் பூத்தெழும். சிறுபிள்ளையாய் ஆக்கும் என் மனமும் அதோடு சேர்ந்து பாடத் துவங்கிவிடும்.



இப்படி எண்பதுகளில் பள்ளிப்பருவத்தைக் கடந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் சுகாசினியோடு ஒரு ஒட்டுறவு உண்டு. எளிய பக்கத்து வீட்டுப் பெண் தோற்றம். நிறையப் பேருக்கு அவர் அறிவுஜீவி அக்கா மாதிரி. என் நாத்தனார், பெரியம்மா பெண் போன்ற சிலருக்கு அவர்களேதான் சுகாசினி 
J

கேமிரா அசிஸ்டெண்டாக ஆகத்தான் முதலில் நினைத்தாராம். உதிரிப்பூக்கள், காளி, ஜானி, மீண்டும் கோகிலா, ராஜபார்வை, நண்டு, மெட்டி ஆகியவற்றில் கேமிரா அஸிஸ்டெண்டாகவும், திருடா திருடா, இருவர், ராவணா ஆகியவற்றில் வசனகர்த்தவாகவும் இருந்திருக்கிறார். மணிரத்னம் படம் என்பதால் வசனகர்த்தாவாக இவரையும் அவரையும் பிரித்து அதில் இனங்காண முடியவில்லை என நினைக்கிறேன்.

நெளிநெளியான அடர்த்தியான சுருட்டைக் கூந்தல். தெளிவான கண்கள். முத்துப் போன்ற பற்கள். லேசாக மூக்கைச் சுருக்கியபடி அழகான புன்சிரிப்பு. க்ளோஸ் நெக் ரவிக்கை, இறுக்கம். முதிர்ச்சியான நடிப்பு. அறிவுஜீவித்தனமான பேச்சு. லேசாகக் கலங்கும் கண்கள்.. திடமாய்த் தன்னைத் திருத்திக் கொள்ளும் தெளிவு இதுதான் சுகாசினி.

பாலைவனச் சோலை கீதா முதல் இம்ப்ரஷன். சந்திரசேகருக்கும் சுகாசினிக்கும் இடையே ஏற்படும் சொல்லப்படாத காதலை முதன் முதலில் சொல்லிய படம். மேகமே மேகமே வான்நிலா தேடுதே என்று சோகத்தைப் பிழிந்த அதே நேரம், ஆளானாலும் ஆளு இவ அழுத்தமான ஆளு அழுத்தமான கேரக்டர்களுக்குப் பொருத்தமான ஆளு.. என்று திரும்பிப் பார்க்க வைத்தவர்.

புல்லாக்கு ஜிமிக்கி கழுத்தை இறுக்கும் நெக்லெஸ், நாய்வால்போல் வளைந்த சடை என கோபுரங்கள் சாய்வதில்லையில் அருக்காணி பாடும் பாடல் ’என் புருஷந்தான் எனக்கு மட்டும்தான்’. இதே தலைப்பில் விஜய்காந்துடன் ஒரு படம் செய்தார். ஆளுமைப் பெண்ணாக.. அந்த அருக்காணிக்கு அறுபது வயதா? யூ ட்யூப் சொல்லியது அவருக்கு அறுபது ஆகிவிட்டதாக! அடேயப்பா இன்னும் எப்படி மின்னும் இளமையோடு இருபதாகவே இருக்கிறார் என்று பிரமித்தேன்.

மத்யதர வர்க்கத்தின் பெண்களின் நிலையை வெவ்வேறு பரிமாணங்களில் பிரதிபலிக்கும் பல படங்களில் சுகாசினி நடித்திருக்கிறார். என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் சாரதாவாகட்டும், மருமகளே வாழ்க லெக்ஷ்மி ஆகட்டும், குடும்பம் ஒரு கதம்பம் பார்வதி ஆகட்டும், சிந்து பைரவி சிந்து ஆகட்டும், தீர்மானமும் தீர்க்கமுமான ஒரு பெண்ணின் சாயலிலேயே இவர் படைக்கப்பட்டிருக்கிறார்.

’பாடறியேன் படிப்பறியேன்’ என்று பாடி சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கியவர் இவர் ஒருவராகத்தான் இருப்பார். படத்தில் சிவகுமாரிடம் பொது ஜனத்துக்கு ஏற்றபடி தமிழ்ப் பாடல் பாட வலியுறுத்துவார். அறிவு ஜீவியான இவர் அவருக்கு வாரிசையும் பெற்றுக் கொடுப்பார் (பாலசந்தரின் இன்னொரு பட ஹீரோயின் கல்கியைப் போல்) !



மனதில் உறுதி வேண்டும் நந்தினியாக டெடிகேடட் நர்ஸாக தீர்க்கமாக இருக்கும் அதே நேரம் ( நடன இயக்குநரான ஸ்ரீதர் ) பிரமாதமாக நடனமாடும் ஹீரோவோடு நடனமாடுவார். ஆனால் நடனம் அவருக்கானதல்ல.. விவாகரத்துச் செய்த கணவருக்கு கிட்னி கொடுக்கும் அளவு பரிவுள்ளவர். பண்புள்ளவர். மனச் சிக்கல்களில் உழல்பவர். பின் தெளிபவர். 

அதென்னவோ பாலசந்தரின் ஹீரோயின்கள் எப்போதுமே அதிகம் பேசுவார்கள். அதீதமாக சிந்திப்பார்கள். இயக்குநர் கே பாலசந்தரின் அனைத்து ஹீரோயின்களும் அவரின் பெண் வார்ப்புகளே!  

குடும்பம் ஒரு கதம்பம் பார்வதியாக விசுவின் பாணி வசனங்கள். அதிகம் வித்யாசமில்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் ஈடு கொடுத்து எஸ்வி சேகரிடம் ஒரு சினிமா டிக்கெட்டைக் கொடுத்து அவருக்குப் பிடித்த இடத்தில் சாப்பிடலாம் எனச் சொல்லிச் சுகாசினியாக ஒரு சிரிப்பு சிரிப்பார் பாருங்கள். அட்டகாசம்.

தர்மத்தின் தலைவனில் ’தென்மதுரை வைகை நதி தினம் பாடும் ஒரு பாடலில்’. கண்ணிமைகள் தாழ லேசான ரொமான்ஸ் இருக்கும். ஒருவேளை அவரை அக்கா ஃபிகராகவே பார்த்துவிட்டதாலோ என்னவோ அவரிடம் இருக்கும் ரொமான்ஸை ரசிக்க விட்டு விட்டேன் எனச் சொல்லலாம். அதே சமயம் தெலுங்கில் சிரஞ்சீவி இன்னபிற ஹீரோக்களோடு க்ளாமராக ரொமான்ஸில் கலக்குவதையும் ஹைதையில் இருந்தபோது ஜெமினி டிவியில் பார்த்திருக்கிறேன்.

என் பொம்முக் குட்டி அம்மாவுக்கு லெக்ஷ்மியாக நடிப்பில் என்னை அசத்தியவர். ஒரு தையல் மிஷினை வைத்துக் கொண்டு அவர் பண்ணும் அட்டகாசம் சத்யராஜுக்கு என்ன நமக்கே பொறுக்காது. ஒரு பெண் குழந்தைக்காக, பாசத்துக்கு ஏங்கும் தம்பதிகளாகப் பின் பெற்றவளுக்காக மனத் திடத்தோடு விட்டுக் கொடுப்பவர்களாக அதில் வாழ்ந்திருப்பார்கள்.

2010 களில் நான் இவள் புதியவள் சூரியக்கதிர் போன்று அப்போது வெளிவந்த மாதாந்திரிகளில் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தேன். சுகாசினியும் வாசகர்களின் கேள்விக்குப் பதில் அளித்துக் கொண்டு இருந்தார். அதில் ஒரு கேள்விக்கு ஒரு படம் வந்தவுடன் இணையத்தில் தாறுமாறாகச் சினிமா விமர்சனம் செய்பவர்களைக் கோபத்தோடு விளாசி இருந்தார் சுகாசினி. நான் எடிட்டர் மை.பாரதிராஜாவிடம் ’அது ரொம்பக் காட்டமான பதில். எல்லாரும் அப்படி அல்ல. நான் எல்லாம் அப்படி எழுதுவதில்லை’ எனச் சொன்னேன்.

‘அக்கா உடனே ஒரு மறுப்பு எழுதிக் கொடுங்கள்’ எனக் கேட்டார். சுகாசினி சுட்டியதுபோல் சிலர் அப்போது இணையமே நம் கையில் என எழுதிக் கொண்டிருந்ததால் எனக்கு மறுப்பு எழுதத் தயக்கமாக இருந்தது. ”வேண்டாம் அவர் சொல்வது ஒரு விதத்தில் சரிதான்” என்று கூறித் தவிர்த்துவிட்டேன் பத்ரிக்கைப் பரபரப்புக்காக என்னை வியக்க வைத்த நடிகையான அவரைப் பகைத்துக் கொள்வதை உள்ளூர நான் விரும்பவில்லை.

சாருஹாசன், கமலஹாசன், மணிரத்னம் என சினிமா பிரபலங்கள் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவர். அவரது மகன் நந்தன் லெனினிஸம் பற்றிப் புத்தகம் எழுதியவர், மேலும் இயக்குநராக இருந்தாலும் வாழைக்காய் கூட்டுக்குப் புளி ஊத்தக்கூடாதே என்ற அளவில் தன் கணவருக்கு சமையல் தெரியும் என்று சுகாசினி தொடர்பான செய்திகளை அவ்வப்போது பார்ப்பதுண்டு.  

1995 இல் இந்திரா படத்தை இயக்கியவர். அனுஹாசன், அரவிந்தசாமி எனப் பலரை நம் மனதில் மென்மையாக உலவவிட்டவர். பெண் குழந்தையும் தந்தைக்கு ஈமக் கடன் செய்யலாம், ஜாதிமத பேதமற்று அனைவரும் சமம் என்ற நல்ல கருத்துக்களை எல்லாம் சொல்லியவர். அதற்காகத் தமிழக அரசின் விருது பெற்றது சிறப்பு.

அவர் இயக்கிய புத்தும்புதுக் காலை பார்க்கவில்லை. பெண் தொடரிலும் பலது பார்க்கவில்லை. ஆனால் 8 எபிஸோடுகள் வந்துள்ளன.  1991 இல் எட்டுப் பெண்களை மையமாக வைத்து ரேவதி, பானுப்பிரியா, கீதா, ராதிகா, அமலா ஷோபனா, சரண்யா மற்றும் சுகாசினியே நடித்த அந்தத் தொடர் பெரிதும் பேசப்பட்டது. சுகாசினி செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கு. அவருக்குப் பின் பல பெண்கள் டிவி தொடர்களை இயக்கி வந்தாலும் அவரது இடம் இன்னும் நிரப்பப்படாமலே இருக்கு. பெண்களுக்காக பெண்களை இயக்க திரும்ப வாருங்கள் சுகாசினி. 



டிஸ்கி :- மணி மடல்களில் ராதிகா பற்றிய “ சரத்குமார் ராதிகா எஸ். ராதிகா “ என்னும்  கட்டுரையைக் குறிப்பிட்ட  பி. அளகாபுரி ராம. அழகப்பன் அவர்களுக்கு நன்றி. 


5 கருத்துகள்:

  1. மிகவு‌ம் அருமையான நடிகை... அவரது நடிப்பு எனக்கு நம்ம வீட்டு பெண் போல தெரிவார்.. அவரது நடிப்பில் எனக்கு மிகவும் பிடித்த படம்.. சிந்து பைரவி

    பதிலளிநீக்கு
  2. மிகவு‌ம் அருமையான நடிகை... அவரது நடிப்பு எனக்கு நம்ம வீட்டு பெண் போல தெரிவார்.. அவரது நடிப்பில் எனக்கு மிகவும் பிடித்த படம்.. சிந்து பைரவி

    பதிலளிநீக்கு
  3. எண்பதுகளின் சித்திரம் முப்பரிமாணம் பெற்று நினைவில் சுழல்கிறது.

    பதிலளிநீக்கு
  4. நன்றி டா ஆஸ்வின்

    நன்றி வெங்கடேசன். எனக்கும் பிடித்த படம்.

    நன்றி துரை அறிவழகன் சார்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...