நான் எனது என்ற செருக்குக் கொண்ட மனிதனை யாரும் அண்டுவதில்லை. செருக்குக் கொண்ட மனிதன் தனித்து விடப்படுகிறான். ஆனால் செருக்கு அகன்று தன்னை உணர்ந்து பிறரை மதிப்பவன் மேன்மகனாகப் போற்றப்படுவான். அப்படிச் செருக்குக் கொண்ட சுகரைப் பற்றியும் தன் செருக்கை அவர் அகற்றி மேன்மகனாக ஆனது பற்றியும் பார்ப்போம் குழந்தைகளே.
பதினெண்புராணங்களையும் இயற்றியவர் வேத வியாசர். அவர் ஒரு முறை பச்சைக்கிளி உருவில் இருந்த கிருதாசீ என்ற தேவ கன்னிகையின் மேல் விருப்பம் கொண்டதால் அவர்களுக்கு சுகப் பிரம்மர் என்ற குழந்தை பிறந்தது. தாயைப் போல சுகப் பிரம்மருக்கும் மூக்குக் கிளிமூக்குப் போல அமைந்து இருந்தது.
இளம் வயதிலேயே அறிவுக்கூர்மை மிக்கவராக விளங்கினார் சுகர். ஆயினும் அவருக்கு பிரம்ம ஞானம் என்றால் என்ன எனப் புரியவில்லை. இது பற்றி அவர் தன் தந்தை வியாசரிடம் கேட்கிறார்.
“தந்தையே பிரம்ம ஞானம் என்றால் என்ன ?”
“மகனே, இதை நீ மிதிலை மன்னன் ஜனகனிடம் சென்று கேள் “ என்கிறார் தந்தை வியாசர். தன் தந்தைக்குத் தெரியாதது என்ன அந்த ஜனகருக்குப் பெரிதாகத் தெரிந்துவிடப் போகிறது என்று நினைக்கிறார் சுகர்.
தந்தைக்கு ஏதும் தெரியாமல் இருக்குமா. அதை மகன் இன்னொருவர் மூலம் அறிந்து தெளிவதே சிறப்பு என்று அனுப்புகிறார்.
ஜனகரின் அரண்மனைக்கு வரும் சுகப்பிரம்மர் அங்கே வாயிற்காப்போனிடம் “ சுகப் பிரம்ம மகரிஷி அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று மன்னரிடம் தெரிவி “ எனச் சொல்கிறார்.
அவனோ மன்னனிடம் அதைத் தெரிவிக்க ஜனகரோ “ அவருடன் வந்திருக்கும் நான்கைந்து ஆட்களை விட்டுவிட்டு அவரை மட்டும் வரச் சொல் “ என்கிறார்.
இதை வாயிற்காப்போன் சுகரிடம் ”உங்களுடன் வந்துள்ள நான்கைந்து பேரை விட்டு விட்டு வரச் சொல்கிறார் மகாராஜா “ என்று தெரிவிக்க சுகரோ குழம்புகிறார். பின்னர் தான் சொன்னதை யோசித்துப் பார்த்துவிட்டு வாயிற்காப்போனிடம் ”சுகப் பிரம்ம ரிஷி வந்திருக்கிறார் “ என்று சொல்லச் சொல்கிறார்.
அதையும் கேட்டுவிட்டு அரசர் ”இன்னும் இரண்டு மூன்று பேர் இருக்கிறார்களே அவர்களையும் விடச்சொல்” என்று கூறி அனுப்புகிறார். இதையும் காவலன் வந்து சொல்ல சுகர் கேட்டு விட்டு “ சுகப் பிரம்மம் வந்திருக்கிறேன் என்று சொல்” என்று கூறித் திரும்ப வாயிற்காப்போனை அனுப்புகிறார்.
மன்னரோ பின்னரும் “இன்னும் ஒருவர் இருக்கிறார். அவரையும் விட்டுவிட்டு வரச் சொல் “ என்க அதைக் கேட்டுச் சுதாரித்த சுகர் “சுகன் வந்திருக்கிறேன் “ என்று சொல் எனச் சொல்லி அனுப்புகிறார். அப்போதே சுகருக்கு சுய செருக்கு கொஞ்சம் அழிகிறது.
இப்போது மன்னன் உள்ளே வரச் சொல்ல சுகரும் அரசவைக்குச் செல்கிறார். அங்கே ஜனக மன்னன் சுகருக்குத் தகுந்த ஆசனம் அளித்து அமரச் சொல்கிறார். வேறு ஏதும் பேசவில்லை. உபதேசிக்கவும் இல்லை.
அங்கே ஒரு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. அதில் மரணதண்டனைத் தீர்ப்பு விதிக்கப்பட்டவன் அங்கே நின்று கொண்டிருக்கிறான். இந்த வழக்கை உற்றுக் கவனிக்கிறார் சுகர். அந்தக் கைதியிடம் மன்னன் ஜனகர் கூறுகிறார். “ உன் மரணதண்டனையில் இருந்து தப்ப ஒரு வாய்ப்பு அளிக்கிறேன்”
என்ன வாய்ப்பு, சொல்லுங்கள் என்று கேட்க நினைத்து வாய்மூடிப் பயந்தபடி அந்த மரணதண்டனைக் கைதி நிற்கிறான். அதிலிருந்து தப்பித்தால் போதும் என்றிருக்கிறது அவனது பார்வை.
“ உன் தலையை மொட்டையடித்து அதன் மீது ஒரு தட்டை வைத்து அது நிரம்ப எண்ணெய் ஊற்றச் சொல்வேன். அந்த எண்ணெய் ஒரு சொட்டுக்கூடச் சிந்தாமல் சிதறாமல் நீ இந்த ஊரைச் சுற்றி வர வேண்டும். ஒரு சொட்டுச் சிதறினாலும் உன் தலை சிதறும். ஒரு சொட்டுக் கூடச் சிந்தாமல் வந்தால் உன் மரணதண்டனையை ரத்து செய்கிறேன். செய்கிறாயா ?” எனக் கேட்கிறார். அவனும் ஆமோதிக்க அவன் தலை மொட்டையடிக்கப்பட்டுத் தட்டு வைத்து எண்ணெய் ஊற்றப்படுகிறது.
ஊரெங்கும் கோலாகலம், வண்ண வண்ணப் பெண்கள், நடனக் கச்சேரிகள், இசை நிகழ்ச்சிகள், வண்ணக் கோலங்கள், வாண வேடிக்கைகள், நாவூறச் செய்யும் விருந்துக் கூடங்கள், இவை எவையும் அவன் சிந்தைக்குள் ஏறவில்லை. எண்ணெய் சிந்திவிட்டால் தன் தலை சிதறிவிடும் என்பதால் சிந்தையைக் குவித்து ஒரே மனதோடு கட்டுப்பாடாக ஊரைச் சுற்றி வந்து ஆசுவாசப் பெருமூச்சு விட்டான்.
மன்னன் ஜனகரும் அந்தக் கைதியின் தண்டனையை ரத்து செய்தார். பிரம்ம ஞானம் என்றால் என்ன என்று அவர் எந்தப் பாடமும் சுகருக்கு எடுக்கவில்லை. ஆனால் இந்த நிகழ்வைக் கண்டதன் மூலம் சுகர் பிரம்ம ஞானத்தை அடைந்ததோடு தன் செருக்கும் துறந்து மேன்மகனானார்.
நாமும் நம்மை அழிக்கும் செருக்கைத் துறந்து மேன்மக்களாவோம் குழந்தைகளே.
டிஸ்கி :- இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 27 .12. 2019 தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர்கள் அஷோக் & ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.
டிஸ்கி :- இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 27 .12. 2019 தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர்கள் அஷோக் & ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.
இதுவரை அறியாத அற்புதமான கதை
பதிலளிநீக்குபகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
வழக்கம் ோல சிறப்பு. மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகள்
பதிலளிநீக்குநல்லதொரு கதை. இங்கேயும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சகோ.
பதிலளிநீக்குநன்றி ரமணி சார்
பதிலளிநீக்குநன்றி ஜம்பு சார்
நன்றி வெங்கட் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!