எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 5 ஜூலை, 2019

கல்லும் கனிந்து தாயானது. தினமலர் சிறுவர்மலர் - 21.

கல்லும் கனிந்து தாயானது
தவறு செய்பவர்கள் பலரகம். தெரிந்தே தவறு செய்பவர்கள்,தெரியாமல் தவறு செய்பவர்கள் என்று. சிலர் தவறே செய்யாமல் சந்தர்ப்ப சூழ்நிலையால் தவறானவர்களாகக் கருதப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். கம்பராமாயணத்தில் நிரபராதியான ஒரு பெண் அப்படித் தண்டிக்கப்பட்டு மனதால் கல்லான கதையைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
ஒரு முறை ப்ரம்மா குறையே இல்லாத ஒரு பெண்ணைப் படைக்க எண்ணினார். அவள் பூரணத்துவம் மிகுந்தவள். அவள் முன் மோகினி கூட நிற்க முடியாது. அவ்வளவு எழில், அவ்வளவு அழகு, அவ்வளவு சாந்தம். தன்மையா குணம் கொண்ட அவளை விண்மீன்களும் சூரியனும் சந்திரனும் கூட ஆராட்டிப் பாராட்டி வளர்த்தார்கள். குறையே இல்லாமல் படைக்கப்பட்ட அவள் பெயர் அகல்யை.
அந்தப் பெண்ணரசி திருமணப் பருவம் எட்டினாள். அவளை மணந்துகொள்ள இந்திரனும் மற்ற தேவர்களும் கூட போட்டி போட்டனர். அங்கே வந்தார் துறவியான கௌதம மகரிஷி.

தன் மகளை மணந்துகொள்ள வந்த கூட்டத்தைப் பார்த்த பிரம்மா உடனே ஒரு போட்டியை அறிவித்தார். ”யார் உலகை மூன்று முறை சுற்றி வருகிறார்களோ அவர்களே அகல்யையை மணம் செய்யத் தகுதி பெற்றவர் ”என்று.
உடனே இந்திரன் தனது உச்சைசிரவஸ் என்னும் குதிரையில் ஏறி உலகை வலம் வரத் தொடங்கினான். மற்றவர்கள் செய்வதறியாது நிற்க மகரிஷி கௌதமரோ புத்திசாலித்தனமான காரியம் ஒன்றைச் செய்தார். அப்போது காமதேனு தன் குட்டியான நந்தினியை ஈன்று கொண்டிருந்தது.
குட்டி ஈனும் பசுவைச் சுற்றினால் ஈரேழு பதினாலு லோகமும் சுற்றியதற்குச் சமம் என்பதை உணர்ந்த கௌதமர் காமதேனுப் பசுவைச் சுற்றி வந்து அகல்யையின் கரம் பற்றினார்.
அஹா அந்த அழகு மயில் ஒரு முனிவரின் மனைவியாக அவரது காலடியைப் பின்தொடர்ந்து செல்ல வேகவேகமாக மூச்சிறைக்க உலகைச் சுற்றி வந்த இந்திரனோ ஏமாந்து போய் கோபமடைந்தான்.
தன் கணவரின் அடி ஒற்றி நடந்த அகல்யையோ அவருக்கு தினசரி பூஜை புனஸ்காரங்களுக்கு உதவி இல்லறக் கடமை ஆற்றி வந்தாள். சதானந்தன் சிரகாரி ஆகிய இரு குழந்தைகள் பிறந்து அவர்களும் தந்தையைப் போல ரிஷிகளாகி விட்டார்கள். பெற்றோரைப் பிரிந்து வேறு தபோவனங்களுக்கு தவமியற்றச் சென்றுவிட்டார்கள். இவர்களில் சதானந்தன் ஜனகனின் அவையில் இடம் பெற்றிருந்தான்.
இந்த சமயத்தில் கௌதம முனிவரின் தவமும் வேள்வியும் உச்ச நிலையை எட்டியது. அதைக் கண்டு பயந்த இந்திரன்  தனது இடத்துக்குப் போட்டியாக அவர் வந்துவிடுவாரோ என்று மிரண்டான். அவரது தவ வலிமையைக் குலைத்தால் அவரால் இந்திரன் ஆக முடியாது. எனவே அவரைக் கோபப்படுத்தினால் அவர் சாபம் அளிப்பார். எனவே அவரது தவப்பலன் எல்லாம் அழிந்துவிடும் என்ற துர்ப்புத்தியோடு குறுக்கு வேலை செய்தான்
அகல்யை முனிவரின் தினப்படி பூஜைக்காக பூக்கள் பறிக்கும் நந்தவனத்துக்குச் சென்று ”அகல்யா, நீ இந்திராணி ஆகி இருக்க வேண்டியவள். ஒரு மகரிஷிக்கு வாழ்க்கைப்பட்டு இந்தக் கானகத்தில் கொடுமையான வெய்யிலில் கஷ்டப்படுகிறாயே “ என்று நடித்தான்.
அவனது பேச்சைக் கேட்டுக் கோபமுற்ற அகல்யை அவனை பொருட்படுத்தாமல் தனது பர்ணசாலைக்கு வந்து சேர்கிறாள். அங்கேயும் தொடர்ந்து வாயிலில் நின்றபடி அவன் அவளைக் குழப்பிக் கொண்டிருக்க, அதே நேரம் அங்கே வரும் கௌதம ரிஷி ’இந்திரன் எப்படித் தன் இல்லம் வந்தான். அகல்யையின் சம்மதம் இல்லாமல் வந்திருக்கமாட்டான்’ என்று தவறாகக் கருதிக் கோபமடைகிறார்.
மனைவியிடம் எதுவும் கேட்காமல் சூழ்நிலையை வைத்து அவர் கோபமாக அவளைக் கல்லாகும்படி சபிக்கிறார். தன் மனைவியைக் காண வந்த இந்திரன் உடலெல்லாம் கண்ணாகும்படி சபிக்கிறார். இந்திரன் வெட்கப்பட்டு ஓடி ஒளிகிறான்.
சந்தர்ப்ப வசத்தால் குற்றமிழைத்தவளாக ஆக்கப்பட்ட அகல்யையின் மனம் குமுறுகிறது. அவள் தன் தவறல்ல என்று வேண்ட இராமனின் வருகையால் அவள் திரும்ப சாபவிமோசனம் பெறுவாள் எனக் கூறிச் செல்கிறார். அவள் உடலும் மனமும் கல்லாகிறது. பிரமை பிடித்தவள் போல் அவள் அங்கே உறைகிறாள்.
கௌதமமுனிவரோ சாபமிட்டதால் தன் தவ வலிமையை இழந்து விடுகிறார். இந்திரன் எதிர்பார்த்ததும் இதைத்தானே. எனவே அவர் தன் தவ வலிமையைத் திரும்பப் பெற கங்கையை நோக்கி நடக்கிறார்.
பல்லாண்டுகள் கடக்கின்றன. விசுவாமித்திரரும் இரு வாலிபர்களும் வனத்தின் வழியே மிதிலைக்குச் செல்லும்போது  சிதிலமடைந்த பர்ணசாலை ஒன்று குறுக்கிடுகிறது. அங்கே அவர்கள் அடி எடுத்து வைக்கிறார்கள். அந்த இளைஞர்கள்தான் இராமனும் இலக்குவனும்.
அவர்களின் பாதம் பட்டதும் பட்டுப் போன புற்கள் துளிர்க்கின்றன. புள்ளினங்கள் பாடுகின்றன. காற்று சாமரம் வீச சிலிர்க்கிறது உறைந்து கல்லாய் இறுகிப் போன அகல்யைக்கு. யாரோ வரும் சத்தம் தன்னுணர்வு ஏற்படுகிறது அவளுக்கு . நிமிர்ந்து பார்க்கிறாள். சூரிய ஒளியில் தகதகக்கும் இரு இளைஞர்கள். அவர்கள் தங்கள் முன் பாசம் பிடித்து நைந்த உள்ளத்தோடு மடிந்து கிடக்கும் அகல்யையைப் பார்க்கிறார்கள். தங்கள் அன்னையைக் கண்டதுபோல் அன்பு பெருக ”தாயே” என்றழைக்கிறான் இராமன். அவ்வளவுதான் கோடி சூர்யப் ப்ரகாசம் பெற்றதுபோல் கல்லில் இருந்து உயிர்க்கிறாள் அகல்யை. கல் கனிந்து தாயானது. அவளது மீட்சியைக் கண்டு வெய்யிலும் மகிழ்ந்து மின்னொளி வீச எங்கிருந்தோ வருகிறார் கௌதம ரிஷி.
”மனதால் மாசற்ற இவளை ஏற்றுக் கொள்” என விசுவாமித்திரர் கூற கௌதமர் ஏற்றுக்கொள்கிறார். தவறு செய்வது மனித இயல்பு, மன்னிப்பது தெய்வ இயல்பல்லவா. இருவரும் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்கிறார்கள். எனவே யாரையுமே தவறாக எண்ணி  நாம் தண்டித்து விடாமல் இருப்போம் குழந்தைகளே.

டிஸ்கி 1 :-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 14. 6. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.


டிஸ்கி 2 :- அரும்புகள் கடிதத்தில் முக்கனிகளும் முத்தமிழ்ப் பாட்டியும் என்ற புராண இதிகாசக் கதையைப் பாராட்டிய ஆறுபாதி வாசகி ஆ. மகாலட்சுமி அவர்களுக்கும், ஸ்ரீரங்கம் வாசகர் ப. சரவணன் அவர்களுக்கும் நன்றிகள். 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...