எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 16 மார்ச், 2018

இந்திய ஆஷியான் கவிஞர்கள் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஆரம்பமும் நிறைவும்.

காரைக்குடியில் நடைபெற்ற இந்திய ஆஷியான் பன்னாட்டுக் கருத்தரங்கில் கவிஞராகப் பங்கேற்று என் கவிதைகளை வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது. என்னுடைய ஒரு கவிதை மலாயில் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்பட்டது.


முதல் நாளில் துணைவேந்தர், குன்றக்குடி அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டு வள்ளல் அழகப்பர் அருங்காட்சியகத்தின் தமிழ்ப் பிரிவைத் திறப்புவிழா செய்துவிட்டு கருத்தரங்கிற்கு வந்தார்கள்.



முத்துநிலவன் சகோ ஔவையாரைப் பாட்டி என்று பலர் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள் எனக் கலகலப்பூட்டினார். தென்றல் சாய் தங்கம் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கவிதைகளினைப் படித்துப் புகழ்ந்தார். பத்ரிக்கையாளரும் கவிஞருமான நாச்சியாள் சுகந்தி சிறப்பாகப் பேசினார். 
மலேஷியக் கவிஞர்கள், இந்தியக் கவிஞர்களுக்கு முனைவர் திரு கிருஷ்ணன் மணியம் அவர்களும், பேராசிரியர் ஆதிரா அவர்களும் அறிமுகம் வழங்க அதன் பின் அவர்கள் கவிதை வாசிக்கப்பட்டு அதன் மொழிபெயர்ப்பும் வாசிக்கப்பட்டது.
அன்றைக்குப் பாதிப்பேர்தான் கவிதைப் பங்களிப்புச் செய்ய முடிந்ததால் மற்றவர்கள் மறுநாள் தங்கள் கவிதைகளை வாசித்தார்கள். இடையில் தமிழகத்தின் மற்ற தமிழ்ச் சான்றோர், காரைக்குடியின் கல்வி நிலையங்களின் கலாச்சாரப் பரிவர்த்தனையாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


நிறைய நிகழ்வுகள் அடுத்தடுத்து நடைபெற்ற இந்நிகழ்வு முதல்நாள் ஒரு அரங்கிலும் மறுநாள் இன்னொரு அரங்கிலும் நிகழ்ந்தது. அனைவரும் ஓரளவு பரஸ்பரம் பேர் தெரிந்த கவிதாயினிகள்தான். தமிழக ஆசியக் கவிஞர்கள் சந்திப்பு அது தொடர்பான நிகழ்வுகள் மட்டுமே நடக்கும் என நினைத்து வந்திருந்தவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறப்போவது தெரியாது
வெவ்வேறு ஊர்களில் இருந்து அங்கே வந்தவர்கள் சிலர் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த உமையாள் ஹாஸ்டல் , வி கே என் விடுதி போக தனிப்பட்ட முறையில் வெவ்வேறு ஹோட்டல்களிலும் தங்கி இருந்தார்கள்.  உணவு மூன்று வேளையும் வழங்கப்பட்டது.


நான் வீட்டிலிருந்து சென்றதால் முதல்நாள் மதியம் & இரவு உணவும் மறுநாள் மதிய உணவும் அங்கே வழங்கப்பட்டதை எடுத்துக் கொண்டேன். உணவு, டீ, தங்குமிடம் போன்றவைகளில் சிற்சில இடர்பாடுகள் நேர்ந்திருக்கலாம். மேலும் கவிஞர்கள் பங்களிப்பு செய்வதிலும் நேர மேலாண்மையைக் கடைப்பிடிக்கமுடிவதில்லை என்பது யதார்த்தம்.




உள்ளூரில் இருந்த எனக்கு மறுநாள் மாலை கடைசியாகப் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அனைவரும் வெளியூரிலிருந்து வந்திருப்பதால் நான் அதைப் பொருட்படுத்தவில்லை. மறந்து விடப்பட்டுவிட்டோமே என்று தோன்றி கடைசியாக நான் வாசிக்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினேன். அதன் பின்னர் மேடை கிடைத்தாலும் கொடுத்த ஓரிரு மணித்துளிகளில் சொல்ல நினைத்ததைக் கோர்வையில்லாமல் சொல்லி முடித்தேன்.


ஒவ்வொரு நிகழ்விலும் பல்வேறு நிறைகளும் சிற்சில குறைபாடுகளும் இருக்கத்தான் செய்யும். எல்லா இடர்பாடுகளையும் களைந்து ஒரு நிகழ்ச்சி நடத்துவது என்பது இயலவே இயலாது.



தமிழ்ப் பிரிவின் இயக்குநர் செந்தமிழ்ப் பாவை அவர்கள் இயன்றவரை சிறப்பாகப் பணியாற்றி அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். கலைஞன் பதிப்பகமும் சொல்லியபடி புத்தகங்கள் வடிவமைத்து வெளியிட்டுச் சிறப்புச் செய்து கணக்கில் ரூபாய் இரண்டாயிரத்தைச் செலுத்தி இருக்கிறார்கள். 

முபின் ஸாதிகா அவர்களும் மெயிலில் பலமுறை தொடர்பு கொண்டு எல்லாவற்றையும் தொகுத்தார். ஒரு புத்தகம் போடும்போது கூட பல்வேறு தவறுகள், எழுத்துப்பிழைகள், கருத்துப் பிழைகள் நிகழ்வதுண்டு. ஆனால் முடிந்தவரை கவிதாயினிகளின் ஒப்புதலோடுதான் அதைத் தொகுத்திருக்கிறார் என நினைக்கிறேன். 40 பேர் என்பதால் ஒன்றிரண்டு தகவல்கள் அவரைச் சென்றடையாமல் இருந்திருக்கலாம்.


புத்தகத்தைப் பார்த்தபின் நானே அடடா அந்தத் தகவலை அப்படிச் சொல்லி இருக்கலாமே, இதை இப்படி எழுதி இருக்கலாமே என எண்ணினேன். எல்லா எழுத்தாளர்களுக்கும் இப்படிப்பட்ட நிறைவற்ற மனநிலை ஏற்படுவது இயற்கை. அதனால்தானே முழுமையானதைத் தரவேண்டும் என்று தொடர்ந்து படைத்துக் கொண்டிருக்கிறோம். 

எல்லா நிறைவுகளையும் மனதில் கொண்டு குற்றங்குறைகளைப் பொருட்படுத்தாமல் செல்லவேண்டும் என்பது எனது கொள்கை. முடிந்தவரை அதை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறேன். ’கடவுள் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது. கடவுள் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது ’என்பதில் நம்பிக்கை உண்டு. கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பும் கடவுள் யார் மூலமோ செயல்பட்டு எனக்களித்த அங்கீகாரமாகவே கருதுகிறேன்.

இந்திய ஆசியான் பன்னாட்டுக் கருத்தரங்கம் நன்கு நிறைவுற்றது. தொடர்ந்து பயணிப்போம். இருக்கும்வரை நல்வாய்ப்புக்களைப் பயன்படுத்தி இன்னும் நிறைய நல்ல விஷயங்களைப் படைப்போம். 
இந்திய ஆசியான் கவிஞர்கள் சந்திப்பில் மலேஷியக் கவிதாயினி ஒருவர் அங்கே இருந்த அனைத்துக் கவிஞர்களுக்கும் வழங்கிய அன்புப் பரிசு. அவர் அன்புக்குத் தலைவணங்குகிறேன். 

4 கருத்துகள்:

  1. மனம் நிறைந்த வாழ்த்துகள் சகோ.

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள். நீங்கள் கவிதை வாசிக்கும் புகைப்படம் இல்லையே...

    பதிலளிநீக்கு
  3. காரைக்குடியில் நடைபெற்ற இந்திய ஆஷியான் பன்னாட்டுக் கருத்தரங்கம் பற்றிய சிறப்பான பதிவு. கவிதைகள் வழங்கிய கவிஞர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. நன்றி கில்லர்ஜி சகோ

    நன்றி ஸ்ரீராம் . இணைத்துள்ளேன். :)

    நன்றி முத்துசாமி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...