எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 20 அக்டோபர், 2017

வீரமங்கை ராணி வேலுநாச்சியார்.

வீரமங்கை ராணி வேலுநாச்சியார்.

இந்தியாவின் ”ஜோன் ஆஃப் ஆர்க்” என்று சரித்திர ஆய்வாளர் வேங்கடத்தால் புகழப்பட்டவர், தனது ஐம்பதாவது வயதில் வாளேந்திப் போராடி சிவகங்கைச் சீமையை மீட்டு அரசோச்சியவர் வீரமங்கை ராணி வேலுநாச்சியார்.  

வீரமங்கை ராணி வேலுநாச்சியார்

ந்தியாவின்ஜோன் ஆஃப் ஆர்க்என்று சரித்திர ஆய்வாளர் வேங்கடத்தால் புகழப்பட்டவர், தனது ஐம்பதாவது வயதில் வாளேந்திப் போராடி சிவகங்கைச் சீமையை மீட்டு அரசோச்சியவர் வீரமங்கை ராணி வேலுநாச்சியார்.  

  ”பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட ராணி லெக்ஷ்மிபாயின் வீரம் பேசப்பட்ட அளவு தென்னிந்திய ராணி வேலுநாச்சியாரின் வீரம் பேசப்படவில்லை. ஆனால் லெக்ஷ்மிபாயின் போராட்டத்துக்கு 85 ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவர் வேலுநாச்சியார்என்று கூறுகிறார் சரித்திரப் பேராசிரியர் சஞ்சீவி.

  இவர் 1730இல் ராமநாதபுர ராஜா செல்லமுத்து சேதுபதிக்கும் ராணி சக்கந்தி முத்தாளுக்கும் மகளாகப் பிறந்தார். தங்கள் ஒரே மகளுக்கு உரியவர்களைக் கொண்டு வளரி, சிலம்பம், வாள் வீச்சு, வில் வித்தை,  குதிரையேற்றம், ஆகிய பயிற்சிகளைக் கற்பித்தார்கள்.  மேலும் ஃப்ரெஞ்ச், ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளையும் உரிய ஆசிரியரைக்கொண்டு பயிற்றுவித்தார்கள். அவருக்குப் பதினாறு வயது ஆனதும் சிவகங்கைமன்னர் முத்துவடுகநாதருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள்.

  1772இல் ஆங்கிலேயர்கள் நாடுபிடிக்கும் ஆசையில் சிவகங்கையை ஆக்கிரமித்தார்கள். காளையார் கோயிலில் வழிபாடு செய்துகொண்டிருந்த ராணியின் கணவர் ராஜா முத்துவடுகநாதரும்  மகள் இளவரசி கௌரி நாச்சியாரும் ஆற்காடுநவாப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டுக் கொல்லப்பட்டதை அறிந்து ராணி துயரில் ஆழ்ந்தார்.

  கணவரின் உடலைக் காணச்சென்ற வேலுநாச்சியாரை நவாபின் படைகள் தாக்க, மருதிருவர் தீரத்துடன் போரிட்டு அவரைத் தப்ப வைத்தனர். நவாபிற்கு உதவியாக பிரிட்டிஷ் துருப்புகள் லெஃப்டினெண்ட் கொலோனல் பான்ஜோரின் தலைமையில் இந்த அக்கிரமத்தை நிகழ்த்தியிருந்தன. 

 தளபதி தாண்டவராயப்பிள்ளை மற்றும் மருதிருவர் சகோதரர்கள் அந்தப்போரில் பெருங் காயமுற்றார்கள். இம்மூவரும் சிவகங்கை சமஸ்தானத்தை எப்படியும் ஆங்கிலேயரிடமிருந்து மீட்டு ராணி வேலுநாச்சியாரை அரியணையில் அமர்த்தியே தீர்வதென சபதம் போட்டார்கள். பிரிட்டிஷாரிடம் அகப்படாமல் இருக்க  எட்டு ஆண்டுகள் ராணி மறைந்து வாழ்ந்தார்.  

  பிரிட்டிஷாரை எதிர்க்க 5000 வீரர்கள் கொண்ட காலாட்படையும் 5000 வீரர்கள் கொண்ட குதிரைப்படையும் கொடுத்து உதவுமாறு வேலுநாச்சியாரின் சார்பாக தாண்டவராயப்பிள்ளை ஹைதர்அலிக்குக் கடிதம் எழுதினார்.  முதுமையின் காரணத்தால் தளபதி தாண்டவராயப்பிள்ளை இறந்துவிட ராணி நேரடியாக ஹைதர்அலியைச் சந்தித்து உதவி கேட்டார்.

 ராணியின் உருதுப்புலமையைக் கண்டு வியந்த ஹைதர்அலி உதவ ஒப்புக் கொண்டு திண்டுக்கல் கோட்டைக் காவல் அதிகாரியான சையத் கார்கிக்கு படைகளை அனுப்புமாறு ஆணையிட்டார். 1780ஆம் ஆண்டு கேட்ட படைபலத்தைப் பெற்ற ராணி  சேனாதிபதிகள் மருதிருவருடன் புறப்பட்டுக் காளையார்கோவிலைக் கைப்பற்றினார்.

 அங்கிருந்தபடி சிவகங்கையைப் பிடிக்க ராணி படைகளை மூன்று பிரிவாகப் பிரித்தார். ஒரு பிரிவுக்கு சின்ன மருதுவைத் தலைமை தாங்கச் செய்து 3000 வீரர்களோடும் 8 பீரங்கிகளோடும்  திருப்பத்தூர் செல்ல ஆணையிட்டார். 

  இன்னொரு பிரிவுக்குப் பெரிய மருதுவைத் தலைமை தாங்கச் செய்து 4 பீரங்கிகளோடு சிவகங்கையில் உள்ள உமராதுல் உபராகானையும் அவரது படைகளையும் தாக்கச் சொன்னார்.  

  மூன்றாவது பிரிவுக்குத் தானே தலைமை ஏற்றுப் பெண்கள் படையுடன் சென்று சின்னமருது துணையுடன் சிவகங்கைக் கோட்டையில் போரிடுவதாக முடிவு செய்தார்.  

  விஜயதசமி அன்று சிவகங்கைக் கோட்டையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் வைக்கப்படும் கொலுவைப் பார்க்கப் பெண்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு என்பதால் அதைப் பயன்படுத்திப் பெண்கள் படையுடன் கோட்டைக்குள் நுழைவது ராணியின் திட்டம். 

 குறித்தபடி படைகள் புறப்பட மாறுவேடத்தில் சென்ற ராணியின் தலைமையில் பெண்கள் படை கையில் அம்மனுக்குச் சாத்தி வழிபடப் பூமாலையுடனும் அதனுள் மறைக்கப்பட்ட கத்தி, வளரி, வாள், வேல் ஆகிய ஆயுதங்களுடனும் சென்றது.  பூஜை முடியும் நேரம் ராணிவெற்றிவேல் வீரவேல்என்று முழங்க அனைத்துப் பெண்களின் கரங்களிலும் ஆயுதம் முளைக்க அவர்கள் வெள்ளையரை வெட்டிச் சாய்த்தனர். 

  ராணியுடன் சென்ற குயிலி என்ற வீராங்கனை நெய்யை உடலில் ஊற்றித் தீப்பற்ற வைத்துக் கொண்டு மாடியிலிருந்து கோட்டையின் முற்றத்தில் பூஜைக்காகக் குவித்திருந்த பீரங்கி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களின் மேல் பாய்ந்தாள். குயிலியின் தியாகத்தால் ஆங்கிலேயர்கள் ஆயுதமிழந்தார்கள் தனது ஐம்பதாவது வயதில் தன் கணவரைக் கொன்ற ஜோசப்ஸ்மித்தையும் தளபதி பான்ஜோரையும்  ராணியின் வாள் வளைத்துப் பிடித்தது. 

  சிவகங்கையில் மீண்டும் அவரது அனுமன் கொடி ஏற்றப்பட்டது. சமஸ்தானத்தைத் திரும்பக் கைப்பற்றி அரசியாக முடிசூட்டி 1780முதல் 1789வரை ஆட்சி புரிந்தார் ராணி. முன்னர் வெள்ளையரிடம் தம்மைக் காட்டிக்கொடுக்காமல் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல்நட்டு தனது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாக அளித்து வீரஅஞ்சலி செலுத்தினார். அது இன்று வெட்டுடைய காளியம்மாள் கோயில் என்று அழைக்கப்படுகிறது.  

  டிசம்பர் 25, 1796இல் வீரமங்கை வேலுநாச்சியார் தனது விருப்பாட்சி அரண்மனையில் உயிர்நீத்தார். அவரது சுதந்திரப் போராட்டத் தியாகத்தைக் கௌரவிக்கும்பொருட்டு 2008இல் அஞ்சல்தலை வெளியிட்டுக் கௌரவித்துள்ளது அரசு. ராணி, குயிலி வெட்டுண்ட உடையாள் ஆகியோருக்கு நம் வீரவணக்கத்தைச் சமர்ப்பிப்போம்.

**1796  டிசம்பர் 25, வேலுநாச்சியார் உயிர்நீத்த நாள்.



டிஸ்கி:- முகம்மது யூசுப்கான் கட்டுரையைப் பாராட்டிய திசையன்விளை ஆர். ஜி. காயத்ரிக்கு நன்றி. 

3 கருத்துகள்:

  1. பலருடைய தளங்களில் வந்தவரின் கதை வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஜெயக்குமார் சகோ

    தகவலுக்கு நன்றி பாலா சார்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...