எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 8 அக்டோபர், 2017

கடலுக்கு அப்பால். ஒரு பார்வை.



கடலுக்கு அப்பால். ஒரு பார்வை.

கடலுக்கு அப்பால்

"மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. மனதை இழக்காதவரை  நாம் எதையும் இழப்பதில்லை". இதுதான் சிங்காரம் சொல்லும் செய்தி என்கிறார் முருகேச பாண்டியன். அது உண்மைதான் ஆனால் எதையும் தோற்றுவிடுவோமோ அதிலும் காதலில் என்ற ஈகோதான் இக்கதையைச் செலுத்துகிறது.  புயலிலே ஒரு தோணியின் நாயகன் பாண்டியன் கவர்ந்ததைவிட இதின் நாயகன்  செல்லையா நம்மை மிகவும் கவர்கிறார்.

ஆரம்பத்திலும் நடுவிலும் புலம்பெயர் வாழ்வின் துயரங்களும் உலகப்போரின் கொடுமைகளும் வந்தாலும் இதில் செல்லையா மரகதத்தின் பால் கொண்ட மென்மையான காதல் சித்தரிக்கப்படுகிறது. எங்குமே எல்லை மீறாத காவியக் காதல்.

காதல் என்பது கூட நான் என்ற அகந்தைதான். அந்த அகங்காரத்தை அடுத்தவர்மேல் திணித்து அதையும் காதல் என்று எண்ணி திரும்ப அவரிடமிருந்து வலுக்கட்டாயமாக நாம் விரும்பும் பதிலை செய்கையை. விளைவுகளை எதிர்பார்க்கிறோம், பிடிக்குள் வைத்துக்கொள்ள விரும்புகிறோம்  என்று தோன்றுகிறது.

இதில் முடிவில் தாய் தந்தை சொல்கேட்டுத் தன்  கடமைப்படி ஒழுகிவாழும் மரகத்தை எண்ணி எண்ணிக் கசியும் செல்லையா மனதை உருக்குகிறார். அந்தக் காதல் ஜெயிக்காதா என்று நம்மையும் வருந்த  வைக்கிறார்.  ஆனால் முடிவில் நமக்கும் சேர்த்து ஒரு பொளேர் கிடைக்கிறது. காதல் என்று எண்ணிக் கொண்டிருப்பதெல்லாம் ஒருவர் அடுத்தவரை ஆக்கிரமித்து அனைவரிடமிருந்தும் பிரித்துத் தான் மட்டுமே உலகம் என்று தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் செயல்தான் என்ற உண்மைதான் அது.   

பினாங்கிலும் மைடானிலும் வட்டித் தொழில் நடத்திவந்த தமிழர்கள் தமக்கான மேலாள் , அடுத்தாள் , சமையல் ஆள், பெட்டியடிப் பையன் ஆகியோரையும் இங்கிருந்தே அழைத்துச்சென்று தொழில் பழக்கி அவர்களுக்கும் பெட்டியடி அமைத்துக் கொடுக்கிறார்கள். அது போல் அழைத்து வரப்பட்ட அனைவருமே செட்டி என்று குறிப்பிடப்பட்டு அவர்கள் லேவாதேவித் தொழில் செய்யும் இடம் கிட்டங்கி என்றும் செட்டித்தெரு என்றும் அழைக்கப்படுகிறது.  

லெப்டினென்ட் ஆக அறிமுகப்படுத்தப்படும் செல்லையா இரண்டரை ஆண்டுகளாக இந்திய தேசிய ராணுவத்துக்காகப் பணியாற்றித் திரும்பி இருக்கிறான். அவன் முன்பு வயிரமுத்துப் பிள்ளையிடம் வட்டித் தொழிலில் கை பழகியவன். யுத்தம் முடிந்து திரும்பி வந்ததும் அவன் உடம்பில் யுத்த ரத்த ஓட்டமே நீடிக்கும் அவன் வட்டித் தொழிலை சரிவர செய்யமாட்டான் என்று கணித்து அவனுக்குத் தன் பெண்  மரகதத்தைத் திருமணம் செய்து தர மறுக்கிறார் வயிரமுத்துப் பிள்ளை.

திருப்புகழ் பாடுவது, எச்சிப்பணிக்கம் சுத்தம் செய்வது, சமையலாள் இல்லாதபோது மேலாளுக்கு வேட்டி துவைப்பது, கால் பிடிப்பது என்று கடமைகள் கொண்ட பெட்டியடிப் பையனாயிருந்து அடுத்தாள் , மேலாளாக உயர்ந்து தனிக்கடை போட்டு செழித்து வரும் வானாயீனா முதல் மகனை ஊரில் நோவிலும்  இரண்டாவது மகனை உலகப்போரில் விழுந்த குண்டிற்கும் பலி கொடுக்கிறார். 

தன் மகள் மரகதத்துக்கு அவர் தனக்குப் பின் வியாபாரத்தைக் கவனிக்கக் கூடிய நல்ல பையனை மட்டுமே தேர்ந்தெடுக்க நினைக்கிறார். அந்த சமயம் எல்லாத் தகுதியும் இருந்து ஆனால் யுத்தத்தில் போரிட போய்விட்ட செல்லையா தட்டுப்படுகிறான். ஆனால் அவர் தன்னை ஒரு அளவுகோலாகக் கொண்டு செயல்படுவதால் எல்லா முறையிலும் வட்டித் தொழிலில் கவனம் செலுத்தி  தட்டிக்கிட்டி உருண்டு பிரண்டு முன்னேறி மேலேறி வந்த ஒருவனாக செல்லையாவை ஏற்க மறுக்கிறார்.

இதற்கிடையில் இரண்டாம் உலக யுத்தத்தில் பங்கேற்ற செல்லையாவின் நண்பர்கள் பற்றி விவரிக்கப்படுகிறது. அதில் ஈடுபட்ட கேப்டன்களும், கமாண்டர்களும் , இரட்டைக்கை மாணிக்கம்,நெல்சன், கோபால், முத்துலிங்கம், கே கே ரேசன் , புல்லுத்தின்னி மணி, ஆகியோரும் இன்னும் அங்கே இவர்கள் சரளமாக சந்திக்கும் மலேயா விலைப்பெண்கள் பற்றிய விவரங்களும் ஊடே வருகின்றன.  நேத்தாச்சி ( நேதாஜி ) இறந்துவிடுவதால் போர் தற்காலிகமாக நின்றுவிடுகிறது. பிரிட்டிஷ், ஜப்பானிய, சீனப் படைகளிடமிருந்து தங்கள் ஆயுதங்களைப்  பாதுகாத்துத் தப்பும் இடம் எல்லாம் ரொம்பவே விறுவிறுப்பு. யுத்தத்தின் காரணமாக மூடப்படும் வங்கிகளும்  கரன்சி பற்றாக்குறைகளும்,  சித்தரிக்கப்படுகின்றன.

பெரிய மார்க்கா, பூவராகன் ( மூன்றரை ரூபாய் ), கொண்டு விக்கப் போதல், பெட்டியடி,  ( மலாய் டாப்பு,மூவார் ,கோலா மூடா, தைப்பிங், சிம்பாங் தீகா பாலம், சின்பெங் சைகோன் ), திருப்புகழ், தேவாரம், மாச்சான் முகாம், சபுரோவின் பட்டாளம். சாமுராய், ஜெனரல் தொமயூக்கி யாமஷித்தா, டாய் நிப்பன், ஜாத்தி மரங்களுக்கிடையே களப்பலியானவர்களின் ஈமக்கிரியை, ஐ. என். ஏ. ஆட்கள், யூனியன் ஜாக், கோலக்கங்சார் முகாம், டத்தோ கிராமட் சாலை, சூலியா தெரு, செட்டித் தெரு, சுதந்திரவிலாஸ் ஹோட்டல், ஜெலுத்தொங், கூதரபய, சவாப், பச்சை குண்டஞ்சுக்கரை வேட்டி, கிராணி, வெள்ளி, வேல் மயிலம் என்று அவ்வப்போது முதலாளிகள் சொல்வது, சாட்டர்வங்கி , பெரிய துரை , பிட் தெரு, பட்டாணி ரோடு, பேரேட்டுப் புத்தகம், ஐந்தொகை, ஏடுகள், பெட்டகம் , குறிப்புப் புத்தகம், தவணைக் கிஸ்தி, அண்டிமென் சீட்டு , ரிங்கி, வட்டிச்சிட்டை, சமையல் சிட்டை,தண்டாயுதபாணி கோயில், ஆஸ்டின் கார், லங்சா மரங்கள் , ரம்புத்தான், டொரியான் பழங்கள், மாணிக்கம் நிகழ்த்தும் தமிழ் ஆராய்ச்சி உரையாடல்கள்,  ஆகியவற்றைப் பற்றிய சித்தரிப்புகள் வருகின்றன.

 பட்டாளத்துக்குப் போனவனுக்கு வட்டித் தொழில் கைகூடாது என்று நிர்த்தாட்சண்யமாக  வானாயீனா  மறுக்கும் இடத்திலும் எளிமையும் எழிலும் பொங்கும் மரகதம் செல்லையாவை விரும்பினாலும் பெற்றோர் சொல்லுக்கு அடங்கி மனசடக்கி ஓடும் இடமும் துயரம் பொங்க வைத்தன. இருப்புக்கும் இருப்பின்மைக்கும் பணம் ஒன்றே ஆதாரம் மற்ற விஷயங்கள் எதுவுமே சிலரை அசைக்காது என்பதற்கு உதாரணமாய் படைக்கப்பட்டிருப்பவர் வானாயீனா.

கணவன் சொல்லைத் தட்டாதவர் காமாட்சி அம்மா, இருவருக்கும் அடங்கிய தன் உணர்வுகளை அடக்கிய மகள் மரகதம். வேட்டி கட்டாமல் வெள்ளைக்காரர்கள் போல சட்டை பாண்ட் போடும் செல்லையா வானாயீனாவின் நம்பிக்கைகளை அசைத்துப் பார்க்கிறான். தம்முடைய அனுபவ அறிவின்படி அவன் எவ்வளவுதான் ஒப்புக் கொண்டாலும் அவனால் திரும்ப லேவாதேவிக்குத் திரும்ப முடியாது என வாழ்வியல் அனுபவம் கொண்ட அவர் கணிக்கிறார். இந்தப் பாத்திர படைப்பு மிகச்சிக்கலானதும் மிக இறுக்கமானதும் கூட. வாழ்வியலில் இருப்பின் தேவைகளே முக்கியம், வட்டிக்கு கணக்கே முக்கியம் எனவும் வாழ்வியல் கனவுகள் முக்கியமற்றவை எனவும், எதையும் சாதிக்கும் சிந்திக்கும் அறிவுப்பூர்வமான மனிதனின் தேவையில்லை என்பதும்  பழமையை இறுக்கப் பிடித்திருக்கும். பாரம்பரியங்களில் நம்பிக்கை வைத்திருக்கும் பூர்ஷ்வாக்களின் கோட்பாடுகளின்படி சரி என்று எண்ணப்படுகிறது. 

மரகதமும் செல்லையாவும் தனித்துச் சந்திக்கும் அந்த நிமிடங்களும் அவர்களின் உரையாடலும் அமரகாவியம் போன்றவை. மரபு, பண்பாடு, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றில் அடிமைகளாக  இருப்பதால்தான் வயிரமுத்துபிள்ளையால் நெஞ்சை நிமிர்த்திப் பேசுவது, மீசை வைத்துக்கொள்வது, நாகரீகமாக உடுத்துவது, சுய கருத்துக்களை உடனடியாகச்சொல்லுவது என்றிருக்கும் செல்லையாவைப் பிடிப்பதில்லை., இவர்களின் அன்பை அங்கீகரிக்க முடிவதில்லை. தானே எல்லாவற்றுக்கும் பொறுப்பு என்று அவர் எண்ணித் தட்டிவிடுவதை போல நண்பன் மாணிக்கமும் கண்ணகிவகைப் பெண் ஆகாது. அதனால் அழிவுதான் . நம்மைப் போன்றோருக்கு மாதவி போன்ற பெண்களே ஏற்றவர்கள் என்கிறான். 

மலாய் மொழியையும் மலாய்ப் பெண்களையும் சிங்காரம் சிலாகிக்கும் விதம் அற்புதம். "பச்சை கெமேஜா அணிந்தவளின் மலாய் நாதம் குமுகுமுத்தது " இதேபோல் பல இடங்களிலும் மலாய் மொழி பற்றி ரசனையோடு குறிப்பிடுகிறார். 

தன்னை எவ்வளவு வளைத்துக் கொடுத்து  இந்த இடத்தைத் தான் அடைந்திருக்கிறேன் என பெட்டியடிப்பையனாக கடை நிலைவேலைகளையும் , அடுத்தாள்களாக வசூலுக்குப் போன இடத்தில் பர்மாக்காரன்  அடிகளையும் வாய்திறக்காமல் வாங்கி சமாளித்து , அரும்பாடுபட்டு காணி கரைவாங்கி கல்யாணம் முடிச்சு தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறோம் என வயிரமுத்துப் பிள்ளை விவரிக்கும் இடங்கள் உணர்வுப்பூர்வமானவை. அத்துடன் இது பொட்டச்சி தொழில் என்றும் அது செல்லையாவுக்கு ஏற்றதில்லை என்றும் சொல்லி மருமகனாக அல்ல மகனாக வேறு வேலைக்கு ஏற்பாடு செய்வதாக தீர்வளிக்கிறார்.

அதை ஏற்காத போதிலும் அவரை வெறுத்தபோதிலும் செல்லையா நியாயமான தர்ம வட்டி அளிக்கும் வட்டித் தொழிலால் பரஸ்பரம் பயனடைந்த சீனர்கள் செட்டிமார்கள் பற்றியும் ( இவர்கள் பிறந்தநாட்டிலேயே இருந்திருந்தால் தீராத வறுமையிலேயே இருந்திருப்பார்கள், இது கொடுமையான தொழில் அல்ல, இதில் இருக்கும் பையன்கள் கூட சலவை உடுப்பு உடுத்தியும் சுவையான உணவும் பெற்று ஊருக்கும் பணம் அனுப்பிக் குடும்பத்தையும் காப்பாற்றுகிறார்கள். வட்டிக்கு வாங்கும் சீனர்களும் தொழில் நடத்திப் பன்மடங்கு சம்பாதிக்கிறார்களே என்று ) தொழில் தர்மம் பற்றியும் சிந்திக்கிறான்.

அதேசமயம் இத்தொழிலின் படி நிலைகளும் விவரிக்கப்படுகின்றன. வல்லவட்டாகத் தோள் துண்டணிந்த முதலாளியும் மேலாளும் நாற்காலியில் அமர ( இவரின் துண்டு சேரில் கிடைக்க ) இவர்கள் பின்னே இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்ட அடுத்தாட்கள் நிற்க , பெட்டியடிப் பையன்கள் முன்வரிசையில் வாய்மூடி இறுக்கச்சம்மணம் கொட்டி அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றே அக்காலகட்டத்தில் நிலவிய ட்ரஸ் கோடு பற்றியும் , ஆண்டான் அடிமை, பேதத்தையும்  நிறுவுகிறது. 

முடிவில்  மகளாக மட்டும் நிறைவாகத் தன் கடமையை நிறைவேற்றி மரகதம் சொல்லிக் கொள்ளும்போது செல்லையா போலவே நமக்கும் எதிர்பார்ப்பு வருகிறது ஆனால் ஆசிரியர் அவளை கடமை தவறாத மகளாகவே படைத்துவிடுவதால் செல்லையாவின் ஈகோவில்  மட்டுமல்ல நமது ஆவலிலும் மண் அடித்துவிடுகிறது. முடிவில் இத்துயர் தாங்க ஒண்ணாததாக இல்லை என்று அவன் கண்டுபிடிப்பதே நமக்கான ஆசுவாசமும். ஏனெனில் வாழ்வில் மாற்ற இயலாத ஒன்றை ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும் என்ற ஞானமும்.

மரகதத்துக்கும் தனக்கும் உள்ள பிணைப்பு எவ்வகைப்பட்டது ? அது பிறப்பால் தோன்றியதா ? நெருக்கத்தால் உண்டானதா ? அறிந்ததால் விளைந்ததா ? அது குளிப்பித்து மூழ்கடிக்கும் நீரா? எரித்து நீறாக்கும் நெருப்பா ? வருடி வீழ்த்தும் காற்றா ? புதைந்து மறைக்கும் நிலமா ? பிறப்பித்து அழிக்கும் வானமா ? எல்லாம் அகந்தை அகந்தை. அகந்தை. அப்போது மாணிக்கம் சொல்வதுதான் இது. மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று ஒன்று இல்லவே இல்லை. மனதை இழக்காதவரை எதையும் இழப்பதில்லை.

சிங்காரம் அருமையான இரு நாவல்கள் படைத்துள்ளார். பாண்டியன் ஒரு வகையில் சுயநலமி. வாழ்க்கையை வளைத்து வாழ்ந்து பார்ப்பவன். அரிதான சில சமயங்களில் மனிதநேயத்தை வெளிப்படுத்துபவன். அவன் வெற்றிவான், வீரவான்தான் ஆனால் முன் பின் விளைவுகளை யோசிக்காமல் சாகசம் ஒன்றே குறி கொண்டவன் . அதனால் விளையும் விளைவுகளுக்கும் பொறுப்பேற்காதவன். அனைத்தையும் , ஏன் சுய இருப்பையே கூட பகடிக்குள்ளாக்குபவன். வெற்றி ஒன்றே அவனது குறிக்கோள்.  

ஆனால் பாண்டியனை விட எனக்கு செல்லையாவையே பிடித்தது. ஏனெனில் அவன் தன்மையாக நடந்ததும் தன்னை உணர்ந்ததும்தானோ என்னவோ. அருமையான இக்கதையை அச்சில் கொணர்ந்திருக்கும் டிஸ்கவரி பதிப்பகத்துக்கு நன்றி. பலமுறை படித்து ரசித்தேன் இந்நாவலை. நீங்களும் படித்துப் பாருங்கள்.

நூல் :- கடலுக்கு அப்பால்.

ஆசிரியர் :- ப. சிங்காரம்.

பதிப்பகம்.:- டிஸ்கவரி புக் பேலஸ்

விலை :- ரூ 120.   

3 கருத்துகள்:

  1. nandri Jayakumar sago

    nandri Nagendra Bharathi sago

    Nandri Kumar sago

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...