க்ளிக் கிளிக் என்று ஒரு சத்தம். பக்கத்திலிருந்த பெண் செல்ஃபோனால் பஞ்சுப் பொதியாய்க்
குவிந்திருக்கும் மேகங்களை விமானத்தின் கண்ணாடி வழி சுட்டுக்கொண்டிருந்தாள். லேசாகக்
கண்ணயர்ந்த மங்கையர்க்கரசிக்கு இந்தச் சத்தம் விழிப்பைக் கொடுக்கவே திரும்பிப் பார்த்தார்.
அவள் திரும்பிப் புன்னகைத்து ஃபேஸ்புக்கில்
போஸ்ட் பண்ணுவதற்காகப் புகைப்படம் பிடிப்பதாகக் கூறினாள். வாழ்க்கை வாழ்வதற்கே என்று
எண்ணும் இளையதலைமுறையினர்.
மங்கையர்க்கரசி மதுரைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியை. ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களின் அழைப்பின்
பேரில் அங்கே உரையாற்றச் செல்வதற்காக இந்தப் பயணம் மேற்கொண்டிருந்தார். முதல்நாள் கனடாவில்
சந்தித்து விட்டு வந்த பத்மகலாவின் சாயல் இவளிடம் லேசாக இருந்தது. பத்மகலாவை முதன்
முதலாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு சிறப்பு அழைப்பாளராகப் பேசச் சென்றபோது சந்தித்தது
நினைவுக்கு வந்தது. ”தமிழரும் மூலிகை மருத்துவமும்” என்ற தலைப்பில் உரையாற்றச் சென்ற
அவரை விமான நிலையத்திலிருந்து வரவேற்று பின் வழியனுப்பும் பொறுப்பை நிகழ்ச்சிப் பொறுப்பாளர்கள்
பத்மகலாவும் தரும சீலனும் ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.
ஈழத்தின் பெரும்பாலான உணவுகளில் கருவாடு சேர்க்கப்பட்டிருந்ததால்
அங்கே தங்கியிருந்த ஒரு வாரத்துக்கு உணவு ஒத்துக்கொள்ளாமையால் பத்மகலாதான் தன் வீட்டிலிருந்து
தங்குமிடத்துக்கு தினம் அவள் அம்மாவின் கைப்பக்குவத்தில் செய்யப்பட்ட ஆப்பம் , போல்
சம்பல், போல் ரொட்டி, பிட்டு சம்பல், இடியாப்பம், கிரிபத், மரக்கறிக்காய் குழம்பு மசியல்
எல்லாம் கொண்டுவந்து கொடுத்து பேராசிரியையின் உடல் நலம் கெடாமல் பார்த்துக்கொண்டாள்.
பத்மகலாவும் தருமசீலனும் ஒவ்வொரு வேளையும் தவறாமல் அவரைக்
கவனித்துக்கொண்டதோடு மட்டுமல்ல அவர் ஆசைப்பட்ட யாழ்ப்பாணப் பொது நூலகமும் கூட்டிச் சென்று
காண்பித்தனர். அப்போது அவர் பேசுவதை எல்லாம் கேட்பதில் அவர்களுக்கு அலாதிப் பிரியம்.
எப்பேர்ப்பட்ட நூலகம். இன்றைக்கெல்லாம் கிடைக்குமா அப்பேர்ப்பட்ட ஓலைச்சுவடிகள். அவர்
கல்லூரிக்காலத்தில் படிக்கும்போது அங்கே எரியூட்டப்பட்ட செய்தி கேட்டறிந்து பரிதவித்தது
பற்றி ஆதங்கத்துடன் பகிர்ந்துகொண்டார். ஒருவர் மொழியைப் புத்தகங்களை எரிப்பதன் மூலம்
அவர்களை வேரோடு அழித்துவிடமுடியும் என்று எண்ணுவது எவ்வளவு கொடுங்கனவு. பேராயர் ஜெபநேசனும்,
நூலகர் செல்வராஜாவும்,வி எஸ் துரைராஜாவும் எழுதி இருந்ததைப் படிக்கும்போது தன் ரத்தம்
எவ்வாறு கொதித்தது என்று அவர் சொல்லும்போது முகம் எல்லாம் சிவந்து விட்டிருந்தது. உணர்ச்சிப்
பெருக்கில் அதனைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார். இன்றைக்குத் திரும்ப நெடிதுயர்ந்து
நின்றாலும் சில மூலிகை மருத்துவக் குறிப்புகள் கொண்ட ஓலைச்சுவடிகளும் அதில் எரியூட்டப்பட்டிருக்கலாம்
என்பது அவர் அனுமானம். வெளியே வந்து ஒரு பூங்காவில் அமர்ந்தனர்.
“இன்றைய ஆங்கில மருத்துவம் நோய்வந்தபின் மருந்து கொடுத்துக்
குணமாக்குவது. நோய் மூலத்தை ஆராய்வதல்ல. தமிழர் சித்தமருத்துவம் நோய் நாடி நோய் முதல்
நாடி மருத்துவம் அளிப்பது. ஆங்கில மருந்துகள் விற்பனைக்காக நோயை உருவாக்கிப் பின் அதற்கான
மருந்தை விற்பனைக்குக் கொண்டுவந்து கொள்ளை லாபம் பார்க்கும் ஒரு கும்பல் சர்வதேச அளவில்
பெருகி வருகிறது. அப்படித்தான் சமீபகாலங்களில் பெருகி வரும் சிக்கன் குனியா காய்ச்சல்
போன்றவை.
நம் முன்னோர்களின் மூலிகை குறிப்புகளில் எய்ட்ஸிலிருந்து
எல்லா வியாதிக்கும் மருந்து இருக்கிறது. சிலவற்றின் வேர், சிலவற்றின் பட்டை. சிலவற்றின்
இலைகள் இப்படி. அவற்றை எல்லாம் பேடண்ட் வாங்கி வைத்துக்கொண்டு ஒவ்வொரு நாட்டினரையும்
நவீன முறையில் அடிமைப்படுத்துதல் நடக்கிறது. நில வேம்பின் பட்டையைக் காய்ச்சிக் குடித்தால்
காய்ச்சல் மட்டுப்படும். இதைக்கூட தங்கள் நாட்டு மரம் என்று பேடண்ட் வாங்கி வைத்துக்கொள்ள
முயற்சி நடக்கிறது. அதன் பின் நாம் நம்முடைய வேரையும் மூலிகைகளைப் பயன்படுத்தவே அவர்களுக்குக்
கப்பம் கட்ட வேண்டிவரும். “
ஓம் மேடம் , ஓம் மேடம் என்பதைத் தவிர இருவரும் ஒன்றும் சொல்லவில்லை.
பத்மகலா, தருமசீலன் முகத்தை பார்த்தார் பேராசிரியை. இளம்
பிஞ்சுப் பிள்ளைகள். இருவருக்கும் ஈர்ப்பு இருப்பது போல் தெரிகிறது. கண்களில் ஆவலும்
பருவ வயதிற்கான காதலும் துளிர்விடுவதை உணர்ந்தார். தன் வயதினர் போல அவர்களிடம் பேசாமல்
சற்று வேறு ஏதும் பேசலாம் என்று பேச்சை மாற்ற எண்ணினார்.
பி ஹெச் அப்துல் ஹமீது, கே எஸ் ராஜா, இராஜேஸ்வரி சண்முகம்
இவர்களது பாணியில் வானொலி நிகழ்ச்சிகளைத் தொகுப்பது போல் பேசிக் காட்டினார்.
”மேலூர்தான் எங்கள் ஊர். பள்ளி விட்டு வந்ததும் மாலை
5.30 லிருந்து 6 மணி வரைக்கும் எங்கள் அம்மா பாட்டுக் கேட்பார்கள். நாடாக்கட்டிலில்
அமர்ந்தும் விளையாடியபடியும் அந்தப் பாடல்களைக் கேட்போம். அந்த வளமை மிக்க சொற்கள்
தமிழ்நாட்டில் கூடக் கேட்கக் கிடைக்காது. நாங்கள் எல்லாரும் சிலோன் வானொலிப் பைத்தியங்கள்.
தொலைக்காட்சி வருவதற்கு முன் அதில் சில கதைகளை அந்தப் பாத்திரங்கள் போலப் பேசி நடிப்பார்கள்.
அதன் பின்னணியில் இசையும் ஒலிக்கும். எத்தனை இன்பம் நிரம்பிய காலகட்டம் அது. நான் கல்லூரி
வருவதற்குள் எல்லாம் திசைமாறி எங்களுக்குப் பித்துப் பிடித்தது போலாயிற்று. 71 களிலேயே
மணல்தேரியில் காத்துக்கிடந்து கிடைத்த படகில் வந்ததாகச் சொன்ன நீலாக்கா எங்கள் வீட்டில்
பலவருடம் வேலை பார்த்தார். 83 ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஞாபகம் இருக்கு. கல்லூரியில் இருந்து ரிட்ட்ரீட்
ஹாலிடேசுக்காக வீட்டுக்கு வந்த நாங்கள் 20 நாட்கள் ஈழ யுத்தத்தால் கல்லூரி செல்லவில்லை. கலவரம் பற்றிக்
கேள்விப்பட்ட அக்கா தான் வந்தபோது தன்னைப் படகில் ஏற்றிவிட்டு இடம் இல்லாமல் அங்கேயே தங்கிவிட்ட
அப்பாவின் ஞாபகம் வந்து கதறிக் கதறி அழுதார் “ என்றார். அவர் கண்கள் லேசாகக் கசிந்திருந்தன.
மீண்டும் அவர்கள் முகம் தீவிரமாவதைக் கண்டு போர்த்துக்கிசியர்
விட்டுச் சென்ற பைலாப் பாடல் மெட்டில் “ சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே பள்ளிக்குச்
சென்றாளோ படிக்கச் சென்றாளோ “ எனப் பாடவும்
புன்னகை புரிந்தார்கள்.
“கள்ளுக்கடைப் பக்கம் போகாதே. உன் காலைப் பிடித்துக் கெஞ்சுகிறேன்
“ என்று அவர் சிலோன் பொப்பிசைப் பாடலை அபிநயம் பிடித்துப் பாடவும். குபுக்கென்று சிரித்தார்கள்.
“அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே கேள்வி ஒன்று கேட்கலாமா
உனைத்தானே இருமனம் ஒரு மனம் ஆகும் திருமணம்
அப்போது ஆகும் செலவுக்கு வழி யாது என்கிறாய் கேள்வி அதுதானே.” என்று சொல்லி சேமிப்புப்
பற்றிப் பாடும் பாடலைச் சொல்லும்போது அவர்கள் இருவரும் நாணத்தோடும் சங்கோசமாகவும் சிரித்த
முகத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதை உணர்ந்தார்.
இந்தக் காதல்தான் மனிதர்களை எப்படி ஆட்டிப் படைக்கிறது. ஒருவரை
ஒருவர் கண்ணாலேயே விழுங்கச் செய்கிறது. ஒருவருக்காக ஒருவரைத் துடிக்கச் செய்கிறது.
மாயக்காரன் கோல்போல உலகில் எங்கிருந்தாலும் தொட்டுவிட்டு வருகிறது. உணர்வுகளால் ஒன்றியவர்களை
கண்டங்கள் பிரிக்க ஏலுமா. காதல் போயின் காதல் போயின் சாதல் என்று எழுதி வைத்தானே முண்டாசுக்
கவிஞன். காதல் மனிதரைத் தோல் போலாக்குமா .. ஆக்கி இருந்ததே அந்தப் பிரிவுத் துயர்.
பசலை படிந்த தோற்றத்தில் பத்மகலா. அவருக்கே நம்ப முடியவில்லை. மூன்று வருடங்களுக்கு
முன் பார்த்தவளா அவள். இங்கே எப்படி..
நேற்று கனடாவில் தமிழ்ச்சங்கத்தின் அழைப்பின் பேரில் சென்றிந்த
அவர் ”தமிழ்ச்சித்தர்களும் மூலிகை மருத்துவமும்
“என்ற தலைப்பில் அகத்தியரின் செங்கடுக்காய் கற்பம், கருவூராரின் நாறுகிரந்தைக் கற்பம்
ஆகியவற்றைப் பற்றி விரிவுரையாற்றிக் கொண்டிருந்தார். கனடாவில் பிறந்த வில்லியம் ஆஸ்லே
என்ற ஆங்கில மருத்துவர் கூட நம் தமிழ் சித்த வைத்திய பாணியில் நோய் நாடி நோய் முதல்
நாடி என்பது போல எப்படிப்பட்ட வியாதியை நாம் குணப்படுத்துகிறோம் என்பதை விட நோயாளிகள்
எப்படிப்பட்டவர்கள் என்பதை முடிவு செய்து மருந்து கொடுப்பதே சாலச் சிறந்தது என்று கூறியதையும்
மேற்கோளாகக் கூறினார். அப்போது ஆவலூறும் இரு விழிகள் அவரை மொய்த்துக் கொண்டிருந்தன.
சில நிமிட நினைவு மீட்டலுக்குப் பின் அவருக்கு ஞாபகம் வந்தது
அவள்
அவள்
பத்ம கலா. !
யாழ்
பல்கலைக் கழகத்தில் பார்த்த துடிப்பான பெண்.
நிகழ்வு முடிந்ததும் ஓடி வந்து கைகொடுத்துச் சிரித்தாள்.
“இங்கே மருத்துவப் பயிற்சி செய்கிறாயா பத்மகலா.. வாழ்த்துகள். “ கேட்டதும் கண்கள் இடுங்கி
கண்ணீர் வழிய ஆரம்பித்தது பத்மகலாவுக்கு.
“மேடம் மேடம்” என்று தடுமாறினாள். ”அங்கை எங்களால தொடர்ந்து
சீவிக்க ஏலல. எங்கட கனவுகளைக் காடையர்கள் கலச்சுப் போட்டாங்கள் மேடம். சீலனை புரட்சிக்குத்
தூண்டினார் என்று கைது பண்ணிப் போட்டாங்கள். என் பாதி உயிர் அங்கேயே போய்விட்டது. சிறையில்
அவரைச் சந்தித்தேன். குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை பொறாமைக்காரர்களால். தொடர்ந்து
கல்லூரியையும் சிதைத்துப் போட்டார்கள். பெருமைமிகு மருத்துவமாணவராக இருந்த நாங்கள்
இருவரும் இப்பம் இருவேறு நாடுகளில் அகதிகள். அவர் சுவிஸிலும் நான் இங்கயும் இருக்கம்.
நான் இப்பம் இங்கை எண்ட அக்காவீட்டில் இருக்கிறன். மேற்கிந்தியத் தீவுகளில் இருக்கும்
அமெரிக்க வைத்தியக் கல்லூரியில் படிக்க விண்ணப்பம் அனுப்பி இருக்கிறன். அவர் சுவிஸ்
வந்து மெக் றொனால்ட்ஸில் பணி புரிகிறார். இருவரும் உயிரோடு இருக்கிறம். வீட்டில் முரளி
என்ற உறவினரைத் திருமணம் செய்ய வற்புறுத்துகிறனம். என்ன செய்வதெண்டு புரியல “ என்றாள்
கரகரத்த குரலோடு. கொழுகொம்பில் இல்லாத கொடி துவண்டு நிற்பதைப் பார்த்தது போல மங்கையர்க்கரசிக்கு
வருத்தமாக இருந்தது.
”சீட் பெல்ட்களை அணிந்து கொள்ளுங்கள்” விமானத்தில் அறிவுப்பு
வந்ததும் சிந்தனைகளில் இருந்து வெளிவந்த மங்கையர்ககரசி பக்கத்திலிருந்த பெண்ணைப் பார்த்து
முறுவலித்தார். விமானம் தரை இறங்கியது. அவள் குடும்பத்தாரைச் சந்திக்கப்போகும் பரபரப்பில்
இருந்தாள். மங்கையர்க்கரசிக்கும் தருமசீலனைச் சந்திக்கும் ஆவல் ஏற்பட்டது. பத்மகலாவிடம்
தொலைபேசி எண் வாங்கி தரும சீலனிடம் தொடர்பு கொண்டு பேசி மறுநாள் சந்திப்பதாகச் சொல்லி
இருந்தார். அவர் தங்கியிருந்த இடத்துக்கு தரும சீலன் மாலை நேரத்தில் வந்தான். ஒரு மருத்துவனாக
வேண்டியவன் மெக்டொனாலாடில் சிப்பந்தியாக இருப்பதைக் கண்டு துணுக்குற்ற அவர் மனம் ஒரு
இனம் மற்றொரு இனத்தை யுத்தத்தின் மூலம் வேரறுப்பதை மறுதலித்துக் கொண்டிருந்தது.
“உங்கள எதிர்பார்க்கலை மேடம். நீங்கள் பத்ம கலாவைப் பார்த்தது
மிக்க சந்தோஷம் “ தன்னை நோக்கும் கண்களில் அவன் தன் கண்ணுக்குள் பத்மகலாவைத் தேடுவது
புரிந்தது.
இருவரும் திறமைசாலிகள். உயிரையும் மானத்தையும் காப்பாற்றிக்கொள்ள கண்டம்
கண்டமாக ஓடும் ஓட்டத்தில் எத்தனை விஷயங்கள் முக்கியமானதாக இல்லாமல் போகின்றன. முதலில்
வெட்டு விழுவது கல்வியின்மேல்தான். திருமணம் செய்தால் தொல்லை போச்சு . சீரழிவில் இருந்து
காப்பாறினாற்போல் ஆச்சு என்று திருமணம் செய்து அனுப்பி விடுகிறார்கள். ஆணுக்கு மட்டுமல்ல
பெண்ணுக்கும் படிப்பு முக்கியம். சொந்தக் காலில் நிற்பதும், சுயமான சிந்தனையும் சுய
விடுதலை என்பதும் இருபாலாருக்கும் கல்வியும் பதவியும்தான் தரும்.இதைப் பெண்ணுக்கு மட்டும்
மறுப்பதேன்.
“ தரும சீலன் பார்த்தேன் அவளை. பாதியாக இருக்கிறாள். இங்கே
நீ மறுபாதியாக இருக்கிறாய். காதல் ஒரு நோய்தான். ஒருவரை மட்டுமல்ல இருவரை ஒரே நேரத்தில்
எப்படிப் பீடித்து வாட்டுகிறது. இந்தக் காதல் நிறைவேற ஒரே ஒரு வழிதான் இருக்கிறது.
“
“சொல்லுங்கோ மேடம். என்ன வழியெண்டு. எதானாலும் உடன்படுகிறோம்
“ ஆவல் ஒளிவிட்டது தருமசீலன் கண்களில் . தங்களை ரட்சிக்க வந்த தேவதை போல மங்கையர்க்கரசியைப்
பார்த்தான் அவன்.
“பத்ம கலா அங்கே மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள அமெரிக்க வைத்தியக்
கல்லூரிக்குப் படிக்க விண்ணப்பம் அனுப்பி இருக்கிறாள். நானும் அவளிடம் முதலில் படிப்பை
முடிக்கச் சொன்னேன். தற்போது இங்கே வேலை செய்யுங்கள். நான் திறமையான வெளிநாட்டு மாணவருக்கான
கோட்டாவில் உதவித் தொகையுடன் கூடிய மருத்துவப் படிப்புக்கு என்னுடைய பேராசிரியைக் கோட்டாவில்
தமிழகத்தில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் முயற்சி செய்கிறேன். படிப்புத்தான்
உண்மையான சுதந்திரத்தைக் கொடுக்கும். அதன் பின் கிடைக்கும் உத்யோகம் பதவிதான் முடிவெடுக்கும்
தைரியத்தைக் கொடுக்கும். உங்கள் படிப்பில் இருவரும் முதலில் கவனம் செலுத்துங்கள். பத்ம
கலாவின் அக்காவிடமும் திருமணம் செய்வதை சில ஆண்டுகள் ஒத்திப்போடும்படியும் அவளை மருத்துவராக்குவது
குடும்பத்துக்கு மட்டுமல்ல மனிதகுலத்துக்கே செய்யும் நன்மை என்றும் கூறியுள்ளேன். எனவே
அவள் இடையூறு இல்லாமல் படிப்பாள். நீங்களும் படிக்கலாம். இன்னும் மனித குலத்துக்கு
நீங்கள் இருவரும் இணைந்து ஆற்ற வேண்டிய தொண்டு இருக்கிறது. மருத்துவர்களை மட்டும் எந்த
தேசமும் வேண்டாம் என்று சொல்வதில்லை. இருகரம்
கூப்பி வரவேற்கும். இனி எந்த அசம்பாவிதமும் உங்கள் வாழ்வில் தொடராது. இந்த விழுதல்
இனி எப்படி மீண்டு எழப்போகிறோம் என்பதை எதிர்நோக்கி இருக்கிறது. நம்பிக்கையுடன் இருங்கள்
. நான் தமிழகம் சென்றதும் தொடர்பு கொள்கிறேன் என்றார்.
டிஸ்கி:- பண்ணாகம். காம் இந்த இணைப்பில் 28.11.2014, 28 - 29 ஆம் பாகம் வெளியாகி உள்ளது.
//’விழுதல் என்பது எழுகையே.’ ( உலகத் தமிழ் எழுத்தாளர்கள் எழுதும் தொடரில் என் பங்களிப்பு ) - பண்ணாகம்.//
பதிலளிநீக்குபாராட்டுக்கள். வாழ்த்துகள்.
மகிழ்ச்சியான முடிவு...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
நன்றி கோபால் சார்
பதிலளிநீக்குநன்றி தனபாலன் சகோ
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!