எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 26 ஜனவரி, 2013

நாட்டின் சுதந்திரமும் நமது சுதந்திரமும்.

சுதந்திரத் திருநாளில் (15.8.2012) மயிலாடுதுறை ஏவிசி பொறியியல் கல்லூரியில் சிறப்பு விருந்தினராய்ப் பங்கேற்று சுதந்திரதின சிறப்பு உரையாற்ற அழைப்பு வந்தது. சுதந்திரப் போராட்டத்துக்கான வேர் பாய்ந்த சம்பவம், சுதந்திரத்தை இன்னும் பாதுகாக்கும் எல்லைக் காவல் படையினர், ஜவான்கள் பற்றி மற்றும் மாணவ மாணவியருக்கான சுதந்திரத்தின் அளவுகோல் பற்றி உரையாற்றினேன்.

முதன் முதலில் தென்னாப்பிரிக்காவில் 1906 இல் ஏசியாடிக் பதிவு சட்டத்தை அப்போது அங்கிருந்த ட்ரான்சுவால் காலனி அரசாங்கம் கொண்டு வந்தது. அதன்படி வாக்குரிமை மற்றும் இந்தியத் திருமணங்கள் சட்டப்படி செல்லாது , இதுபோல இன்னும் இதுபோல பல ஷரத்துக்கள் அடங்கிய இச்சட்டம் செல்லாது என சத்யாக்கிரக முறையில் காந்தி போராட அழைப்பு விடுத்தபோது மயிலாடுதுறையிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு வேலைக்காகச் சென்றிருந்த சாமி நாகப்பன் படையாட்சி, நாராயணசாமி மற்றும் வள்ளியம்மை முனுசாமி முதலியார் போன்றோர் காந்திஜியின் அழைப்பை ஏற்று இந்தச் சட்டத்தில் பதிவு செய்து கொள்ள மறுத்து சிறை சென்றனர்.


கடுங்காவல் தண்டனைக்கு உட்பட்டு சாமி நாகப்பன் படையாட்சி நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார். நாடு கடத்தப்பட்டு கப்பலில் நாராயணசாமி உயிர்துறந்தார். வள்ளியம்மையும் சட்டம் அமலாக்கம் செய்யப்படும் வரையில் சிறையில் இருந்து வாடி உயிர்துறந்தார். மூவருக்கும் வயது முறையே 18, 19, 16 தான். அந்த இளம் வயதிலேயே சத்யாக்கிரக முறையில் போராடி உயிர்துறந்த தியாகிகள் அவர்கள். இவர்களில் வள்ளியம்மை முனுசாமி முதலியாரை நாம் அறிந்திருக்கிறோம். அவர்தான் தில்லையாடி வள்ளியம்மை.

சுதந்திரப் போரில் இரண்டு கண்டங்களுக்கிடையேயான இரு நாடுகளின் விடுதலைப் போராட்டத்தின் வேர் இங்குதான் தொடங்கியது. இன்றும் நம் நாட்டில் சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் எல்லைப் படையினருடனும் யுத்தகளத்திலும் பணியாற்றும் செவிலியரின் பங்கும் அளவிடற்கரியது. நம் தமிழ்நாட்டைப் போலில்லாமல் மிகக் குளிரும் மிக வெய்யிலும் கொண்டது வட இந்தியா. கடுமையான பயிற்சிகள் மற்றும் குடும்பத்தைப் பிரிந்து வாழும் அவர்கள் நாம் சுதந்திரமாக வாழ நம்மைக் காவல் காக்கும் எல்லைத் தெய்வங்கள். அவர்கள் அனைவரும் போற்றுதலுக்குரியவர்கள்.

ப்ரிகேடியர் துர்காபாய்., ப்ரிகேடியர் முத்துலெக்ஷ்மி. ருக்மணி சேஷசாயி இந்த மூன்று பேரும் தேசம் காக்கப் போராடியவர்கள். ஒருவர் சிறு வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் மற்ற இருவரும் ராணுவ சேவையில் ஈடுபட்டு மருத்துவ சேவை செய்த பெண் வீராங்கனைகள். எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி என்று பாரதி பாடிச் சென்றது இவர்கள் பற்றி இருக்கலாம். இந்தக்காலத்தில் கூட சாதாரண குடும்பங்களில் ராணுவத்தில் பணியாற்றுவதோ., காவல்துறை உத்யோகத்தில் சேர்வதோ அவ்வளவாக இல்லாத நிலையில் சுதந்திரப் போராட்டக்காலத்தில் சுதந்திரத்துக்காகவும். பின் இந்தியாவுக்காகவும் பாடுபட்ட வீரம் செறிந்த எழுச்சிப் பெண்களைப் பார்த்தபோது நாம் இந்தியர் எனப் பெருமித உணர்ச்சி பொங்கியது.

முதலில் ருக்மணி சேஷசாயி. இவருக்கு எட்டு வயதாயிருக்கும் போதே ( 1938 இல் பிறந்தவர்) அறியாத வயதிலேயே., சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். 1945 இல் தேனியில் காங்கிரஸ் சார்பில் ஒரு பொதுக்கூட்டம். எல்லாத் தொண்டர்களும் கதராடை அணிந்து காந்தி குல்லாய் போட்டு ஊர்வலமாக சென்றார்கள். அப்போது 8 வயதான இவர் வீட்டில் காலண்டரில் இருந்த காந்திஜி படத்தை வெட்டி அட்டையில் ஒட்டி கதர் மாலை அணிவித்து ( அப்போதெல்லாம் பள்ளிகளில் நூல் நூற்கும் வகுப்பு உண்டு. கைராட்டினத்தில் நூல் சுற்றுவார்கள்.கைராட்டை மாலை செய்வார்கள்.) ஊர்வலமாக ,” மஹாத்மா காந்திக்கு ஜே “ எனக் கூடியபடி சில சிறுவர் சிறுமியருடன் சென்றாராம். அப்போது கூட்டத்துக்காக ஊர்வலமாக வந்தவர்கள் இந்தச் சிறுவர்களை முன்னே விட்டு பின்னே நடந்து வந்தார்களாம். கூட்டம் ஆரம்பிக்கும் இடத்திலும் இவர்களை முன்னே அமர வைத்து கூட்டம் இரவு 12 மணி வரை நடந்தது. அனைவர் வீட்டிலும் குழந்தைகளைக் காணோம் என்று தேடிவந்து அழைத்துச் சென்றார்களாம். யார் யார் கலந்து கொண்டு பேசினார்கள் என்று சரியாக சொல்லத்தெரியாத வயதிலும் இந்திய விடுதலை முக்கியம்., அதற்காக போராடிய அண்ணல் காந்தியடிகள் மிக முக்கியமானவர் என உணர்ந்திருந்தது .,. அந்த எழுச்சியிலேயே செயல்பட்டது அதிசயம். தற்போது 73 வயதாகும் இவர் அந்த நிகழ்ச்சியைப் பற்றிச்சொல்லும் போது அந்த வார்த்தைகளில் அந்த நேரத்து உறுதியும் சத்தியமும் மிளிர்கிறது.

அடுத்து கர்னல் துர்காபாய். 1930 இல் பிறந்த இவருக்கு தற்போது 82 வயதாகிறது. பிறந்தது கோலார் தங்க வயல். அப்பா பள்ளித்தலைமை ஆசிரியர். 1942 இல் இவரது சித்தப்பா தண்டபாணி திண்டிவனத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கைதாகி சிறைக்குச் சென்றபோது அவரது நெல் மண்டியைப் பார்த்துக் கொள்ள இவரது தந்தை அருணாசலம் திண்டிவனம் வந்தார். டாக்டராக வேண்டும் என ஆசைப்பட்ட இவர் பொருளாதாரக் காரணங்களால் நர்சிங் படித்து நர்சானார்.

இவர் சிறுவயதில் சித்தப்பாவைப் பார்த்தும்., மேலும் காந்தியடிகள் 1946 இல் திண்டிவனம் வந்தபோது பார்த்தும் தேசத்துக்காகப் பணியாற்றும் ஆவல் ஏற்பட்டிருக்கிறது.தேசப் பாதுகாப்புக்காகாப் போராடும் வீரார்களுடன் அவர்களின் முதலுதவிக்காக அவர்களோடு ரண களத்துக்குச் சென்று துணிவாக இருந்து சிகிச்சையளித்துப் பலரைக் காப்பாற்றி இரு்க்கிறார். 1953 இல் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். முதல் போஸ்டிங் பெங்களூர். அடுத்த ஒரு மாதத்தில் பூனா கட்கி ( KIRKEE) . 35 வருடம் சர்வீஸ். 1988 இல் 58 வயதில் பணி ஓய்வு பெற்றிருக்கிறார். அந்த சமயத்தில் 1968 வரை ராணுவத்தில் பணியாற்றும் பெண்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பது சட்டமாம். இவருக்கும் அப்போது 38 வயது ஆகிவிட்டதால் திருமணம் செய்து கொள்ளவில்லை. தேச சேவைக்காகவே தன்னை அர்ப்பணித்திருக்கிறார்.

1962 இல் சீன யுத்தம். 1965 இல் இந்திய பாகிஸ்தான் யுத்தம்., அப்போது காஷ்மீரில் இருந்திருக்கிறார். 1971 இல் பங்களாதேஷ் யுத்தத்திலும் கலந்து கொண்டிருக்கிறார். 1962-63 இல் INDIAN PEACE KEEPING FORCE - UNITED NATIONS ஐக்கிய நாட்டு அமைதிப்படையில் ஒரு வருடம் ஆப்பிரிக்கா நாட்டின் காங்கோவில் பணியாற்றி இருக்கிறார்.பங்களாதேஷில் டாக்கா., கோமில்லா., சிட்டகாங்க்., ஆப்ரிக்காவில் காங்கோ., லூலூ., சண்டிகரில் சியாச்சின்., லே எல்லா இடங்களிலும் பணியாற்றி இருக்கிறார். சில இடங்களில் பனி அதிகமாகி ஹார்ட்டில் பல்மனரி ஒடிமா என்ற வியாதியால் நுரையீரல் வீங்கி விடும். வெள்ளைப் பனியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் கண் பார்வை போய்விடும். மேலும் கை கால் விரைத்துப் போய் விடும் என்றார். விடுமுறை கிடைத்தால் குடும்பத்தாரைப் பார்க்க ட்ரான்சிட் காம்ப் வந்து ரயில்வே ஸ்டேஷன் வரவே லீவில் 5 நாட்கள் போய் விடும். பின் வீரர்கள் எல்லாருக்கும் மொத்தமாக ஒதுக்கப்பட்டிருக்கும் ஒரு காரேஜிலேயே பயணம் செய்ய வேண்டும் என கூறினார்.

ஒரு முறை காஷ்மீர் ஏர்போர்ட்டில் பாகிஸ்தான் குண்டு போட்ட போது இவர் அங்கே ஹாஸ்பிட்டலில் சேவையில் இருந்திருக்கிறார். மிக முக்கியமாக பங்களாதேஷில் கோமில்லா என்ற இடத்தில் ஹாஸ்பிட்டலில் கீழே 10 அடி ஆழத்தில் குழி தோண்டி உள்ளூர் மக்களை கை காலைக் கட்டி ., சுட்டுப் போட்டு குவியலாக வைத்திருந்தார்களாம். பல நாட்களுக்கு இவருக்கு எங்கு சென்றாலும் பிணவாடை அடித்ததாம். பொதுவாக இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டார்கள் என கூறுகிறார். பங்களாதேஷ் பாகிஸ்தான் பிரிவினையின் போது பாலியல் பலாத்காரம்., மேலும் பங்களாதேஷ் பெண்கள் தங்கள் நீளமான முடியினால் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என அவர்கள் முடியை கத்திரித்தது. என கொடுமைகள் நடந்ததாக சொன்னார். 55 வயதில் லெஃப்டினெண்ட் கர்னல்., 57 வயதில் கர்னல் என ஆகி ரிட்டயர் ஆகி இருக்கிறார்.

அடுத்து ப்ரிகேடியர் முத்துலெட்சுமி., இவர் தூத்துக்குடியைச் சேர்ந்த அயன் கரிசல்குளத்தைச் சேர்ந்தவர். இவருடைய ஊரிலேயே முதன் முதலில் எஸ் எஸ் எல் சி முடித்தவர் இவர்தான். இவருக்கு 15 வயதான போது இவருடைய அம்மாவுக்கு ஒரு கர்ப்பம் கர்ப்பக்குழாயிலேயே தங்கி விட்டதால் அதை ஆபரேஷன் செய்யாவிட்டால் உயிர் போய்விடும் என்ற நிலைமை . அப்போது மதுரைக்கு 60 கிமீ துரத்துக்கு மாட்டுவண்டி கட்டி வந்தார்கள். வந்து அறுவை சிகிச்சை செய்தபின் பிழைத்த இவரின் அம்மா ., ”பார் நம் ஊரில் ஒரு மருத்துவமனை அல்லது மருத்துவர் இருந்திருந்தால் எனக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது எனவே நீ மருத்துவம் படி” என்று சொன்னார்களாம்.

ஆனால் இவர் காம்போசிட் மாத்ஸ் என்ற பாடத்தை எடுத்திருந்ததால் காமர்ஸ்தான் படிக்க முடியும். மருத்துவர் படிப்பு படிக்க முடியாது என்பதால் நர்சிங் எடுத்துப் படித்தார். சென்னை ஜி ஹெச்சில் படித்து 60 இல் ட்ரெயினிங்கை முடித்தார். .அப்போது ஜவஹர்லால் நேரு பெண்கள் தங்களை ராணுவ சேவைக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று பேசிய பேச்சைக் கேட்டாராம். அதில் தூண்டப்பட்டு ராணுவத்தில் சேர்ந்தார். ஒரு மாதம் ட்ரெயினிங்க வழங்கப்படும். ரைஃபிள் ஷூட்டிங். , பரேட்., லைஃப்சேவிங் பயிற்சி அளிக்கப்பட்டது. INOC -- INITIAL NURSING OFFICERS COUNCIL. என 2 நாட்கள் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

1965 இல் பாகிஸ்தான் யுத்தம். அப்போது அம்ரிஸ்டர் அனுப்பப்பட்டார். சண்டை நடக்கும் இடத்துக்கும் இதற்கும் 10 கிமீ தூரம்தான். மிலிட்டரிக்காக தனியாக ட்ரெயின் முழுவதும் மில்ட்டரிக்காரர்களே அழைத்துச் செல்லப்பட்டார்களாம். அங்கு இருக்கும்போது பாகிஸ்தான் விமானம் வந்தால் சைரன் ஒலி கேட்கும். ரேடார் சத்தமும் கேட்கும். உடனே அனவரும் பதுங்கு குழியில் ஒளிந்து கொள்வார்களாம்.

காயம்பட்டோர் ( காஷுவாலிட்டி) நிறைய வருவார்கள். அவர்களுக்கு இரவு பகல் பாராமல் சிகிச்சையளிக்க வேண்டும். அந்த இடத்துக்கு ஒரு முறை காமராஜர் வந்தாராம். இவரைப் பார்த்தபோது ரொம்பப் பாராட்டி இருக்கிறார் . தமிழகம் வந்ததும் இவர்கள் ஊர் கலெக்டரிடம் சொல்லி கலெக்டர் ஆஃபீசிலிருந்து சென்று இவரின் தாய் தந்தையரை ஹானர் செய்தார்களாம்.

பணிக்காலத்தில் இவரும் நிறைய சோக நிகழ்வுகளைப் பார்த்து மனம் பதைத்திருக்கிறார். அம்ரிஸ்டரில் ஒரு ஜவான் வயிற்றில் குண்டுபட்டு வந்தபோது தன்னுடைய வாட்சைக் கழட்டிக் கொடுத்து தன் மகனிடம் சேர்ப்பிக்கச் சொல்லிவிட்டு உயிரிழந்தாராம். இன்னொரு தமிழ் ஜவான் தனக்கு முதல் குழந்தை பிறந்த சேதி கேட்டு விடுமுறைக்கு விண்ணப்பித்திருந்தார். அப்போது யுத்தம் வரவே சண்டையில் தன் முதல் குழந்தை முகத்தைப் பாராமலே இறந்துவிட்டாராம்.

1965 இல் வாகா பார்டரில் ஒரு சண்டையின் போது ஊர் மக்கள் அடுப்பில் சமைத்த உணவுவகைகளை அப்படியே விட்டு விட்டு ஊரை விட்டு ஓடி இருந்தது மனதை உலுக்கியதாம். எல்லா வீடுகளும் திறந்து கிடந்ததாம். அம்ரிஸ்டரில் ஒரு முறை பாகிஸ்தான் குண்டு போட்ட போது ஹாஸ்பிட்டல் கட்டடம் பொலபொலவென உதிர்ந்ததாம். பொற்கோயில் இருந்ததால் தப்பிக்க முடிந்தது என சொன்னார்.

1971 இல் டாக்காவில் ஜெசூரில் ஒரு பங்கரில் ( பதுங்குகுழி) பங்களாதேஷ் பெண்களின் ஹாண்ட் பாக்., தலைமுடி.,லிப்ஸ்டிக்., ப்ரா., உடைகள் எல்லாம் கிடந்ததாம். பெண்களை கெடுத்து உயிரோடு அதில் போட்டு இருந்தார்களாம். அநேக பாகிஸ்தான் வீரர்கள் பங்களாதேஷ் பெண்களைக் கற்பழித்து கர்ப்பமாக்கிய கொடுமை என பெண்கள் மீதான வன்முறைகள் அதிகம் என சொன்னார். அந்தக்குழந்தைகளை எல்லாம் மதர் தெரசா எடுத்து வளர்த்தார் எனச் சொன்னார்.

1985 ஸ்ரீலங்கன் யுத்தத்தின் போது சென்னை மிலிட்டரி ஹாஸ்பிட்டலில் இருந்தார். அமைதிப்படையில் பணியாற்றியவர்கள் மிகுந்த காயம் பட்டு மூன்று நாட்களுக்குப் பின் கண்டுபிடிக்கபட்டு சென்னைக்கு விமானத்தில் ( முக்கால் மணி நேரம்தான் பிரயாணமாம்) கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளித்த போது அவர்கள் கை எல்லாம் புண் வைத்து புழுக்கள் உண்டாகி இருந்தது ., மண்ணிலேயே கிடந்ததால்.. என்றார். அவர்களுக்கு கொண்டைக்கடலை மட்டுமே சாப்பிடத் தரப்பட்டதால் மிகுந்த பசியோடு அவர்கள் உணவு கேட்டதாக சொன்னார்.

1985 இல் சீஃப் ஆஃப் ஆர்மி ஸ்டாஃப் கமெண்டேஷன் என்ற விருது கிடைத்தது எனக் கூறினார். பின்பு ப்ரமொஷனில் அம்பாலா சென்றார். பின் ஏர் ஃபோர்ஸ் ஹாஸ்பிட்டல் ஜோர்ஹோட்டில் ( அஸாம்) பணிபுரிந்தார். அங்கு எல்லாம் 200 மணி நேரம் ஸ்ட்ரைக் நடக்குமாம். கரெண்ட் ., ட்ரெயின் எதுவும் கிடையாதாம். உல்ஃபா தீவிரவாதிகள் அதிகமாம். கோஹிமா எல்லாம் சென்று பணிபுரிந்திருக்கிறார்.

எந்த ஊருக்கு சென்றாலும் அங்கு உணவோ ., தண்ணீரோ அருந்தக் கூடாதாம்.ஏனெனில் உணவில் விஷம் வைத்து இருக்கலாம் என வாங்கக்கூடாதாம். மேலும் எந்த ஊரிலும் இருக்கும் தண்ணீரிலும் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என அருந்த விட மாட்டார்களாம்.இவர் பணி செய்த போது திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டதால் 1972 இல் திருமணம் முடிந்து இரண்டு பையன்கள்.

மிக முக்கியமான விஷயம் இவர் தன் பணிக்காலம் முடிந்து 1986 இல் LLB ராஞ்சி யூனிவர்சிட்டியில் முடித்து இப்போது அட்வகேட்டாக பணி புரிகிறார். ராணுவத்தினரின் ப்ரச்சனைகளுக்காக .,வழக்காடுகிறார். பொதுவாக ராணுவத்தில் இறந்த கணவரின் பென்ஷன் மனைவிக்கு முறையாகக் கிடைக்க பாடுபடுகிறார். இந்த மூவருக்கும் உள்ள ஒற்றுமையான அம்சம் இவர்கள் மூவரும் உரத்த சிந்தனை அமைப்பைச் சேர்ந்தவர்கள்.. மிக அருமையான பொக்கிஷங்கள் இவர்கள்.

இன்று மாணவ மாணவியர் சமுதாயத்துக்கு எப்படிச் சுதந்திரம் பெற்றோம் அதற்காக எப்படிப் பாடுபட்டோம் எனத் தெரியாது. நமக்குக் கிடைத்த சுதந்திரத்தை மாணவ மாணவியராக, எப்படிப் பேணிக் காப்பது எனத் தெரிந்து கொள்ள வேண்டும். இன்று எல்லாக் கல்லூரிகளிலும் படிக்கும் இவர்கள் தாய் தந்தையர் இவர்கள் படிப்புக்காக எவ்வளவு கஷ்டப்பட்டுப் பணம் அனுப்புகின்றார்கள் எனத் தெரியாது. இவர்கள் கல்லூரிகளில் உல்லாசப் பறவைகளாகப் பறந்தபடி இருக்கிறார்கள். பைக், பப், ஃபாஸ்ட் ஃபுட் , செல்ஃபோன், இணையம் இதுதான் இப்போதைய ஃபேஷன். சில மாணவர்கள் போதைப் பழக்கத்துக்கும் அடிமையாகி இருக்கிறார்கள்.

சாஃப்ட்வேரில் பணிபுரியும் பெண்கள் சிலரை பெங்களூருவில் சந்தித்தேன். அவர்கள் அங்கு பணிபுரியும் சில பெண்கள் பற்றிக் கூறினார்கள். பெண்களும் சிகரெட் புகைப்பதும், போதைப் பொருளுக்கு அடிமையாய் இருப்பதும். குடிப்பதும்., லிவிங் டுகெதர் கலாசாரத்தில் ஈடுபடுவதுமாக இருப்பதைப் பதைப்புடன் பகிர்ந்தனர். நாம் எங்கே செல்கிறோம். இந்தியா எங்கே செல்கிறது. பெண்கள் தங்கள் சுதந்திரம் என எதை நினைக்கிறார்கள் எனப் புரியவில்லை. ஆண்களுக்கு சரிநிகர் சமானமாக இதெல்லாம் செய்தால் ஏதோ சாதித்ததாக நினைக்கிறார்கள் எனத் தோன்றியது.

ஆணானாலும் சரி பெண்ணானாலும் சரி. தன்னைச் சுற்றி இருக்கும் சமூகத்தை உற்று நோக்க வேண்டும். அன்றாடம் ரேஷன் கடைகளில் நிற்கும் மக்கள், தண்ணீர்க்குடம் சுமக்கும் பெண்கள். வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் பொதுஜனம் , பெண் சிசுக் கொலை, கருக் கொலை, குழந்தைத் தொழிலாளிகள், கொத்தடிமைகள், படிக்க ஆசைப்பட்டும் வாய்ப்புக் கிடைக்காமல் அடிமட்ட வேலை செய்பவர்கள் , இவர்களில் தான் எந்த அளவுக்கு வசதி வாய்ப்புக்களோடும், பெற்றவர்களின் தன்னம்பிக்கையோடும். ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடும் வாழ அருளப்பட்டவர்கள் , ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என உணர வேண்டும். இதெல்லாம் விட்டு குடிப்பதும். புகைப்பதும். முறையற்ற செயல்களில் ஈடுபடுவதும் சுதந்திரம் என்ற தவறான மனப்போக்கை மாற்ற வேண்டும்.

பெண்குழந்தைகளுக்கான இன்னொரு அச்சுறுத்தல். இணையப் பயன்பாடு. இங்கு பெண்களுக்கு சுதந்திரம் முக்கியம்தான். ஆண் நண்பர்களும் முக்கியம்தான். ஆனால் அவர்கள் நல்ல நண்பர்களாய் இருத்தலும் முக்கியம். தான் எந்த நேரத்திலும் என்ன செய்கிறோம். யாருடம் பழகுகிறோம் என்ற தன்னுணர்வு முக்கியம். பொறுப்புணர்வோடு கூடிய சுதந்திரம் முக்கியம். தங்கள் சுதந்திரத்தில் யாரும் தலையிடாத அளவு அது சரியாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது முக்கியம்.

ஒருவர் தன் தாய் தந்தையரை மகிழ்வித்து தன் குடும்பம் கல்வி, தன் வாழ்வு மேம்பட முயற்சிகள் மேற்கொள்ளும் அதே சமயம் சமூகத்துக்காகவும் தான் பயன்படும் விதத்தில் வாழ்வது முக்கியம். ஆற்று மணல், மின்சாரம், வாகன எரிபொருள் ஆகியவற்றுக்காக மாற்று தயாரிக்க முயற்சிகள் எடுக்கப்படவேண்டும். செயற்கை மணல், சூரியசக்தி மின்சாரம் சேமிக்கும் வழிமுறைகள், ஜட்ரோப்பா கார்க்கஸ் என்ற செடியிலிருந்து டீசலுக்கு மாற்று என . அரசுத்துறையில் பொறியாளராக பணியில் சேர்ந்தால் ஊழல், லஞ்சம் எல்லாவற்றையும் ஒழித்து தான் ஒரு முன் மாதிரியாகத் திகழவேண்டும்.

சுதந்திரம் என்பது பிறர் தலையிடாத அளவு தன் எல்லைகளை நிர்ணயித்ததாக இருப்பது எல்லாருக்கும் முக்கியம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...